உ
ங்கள் செய்திப் பசியைத் தீர்க்க உதவும் வகையில் புதிய செய்திச் செயலி ஒன்று அறிமுகமாகி இருக்கிறது. அது, ‘கிரவுண்ட்.நியூஸ்’ (ground.news). புதிய செய்திகளை வாசிக்கவும், அவற்றின் உண்மைத்தன்மையை உறுதிசெய்துகொள்ளவும் இது வழிசெய்கிறது. களத்தில் இருப்பவர்களிடம் இருந்தே இதற்கான தகவல்களைப் பெறலாம். நீங்களும் இதில் பங்கேற்பதற்கான வாய்ப்பையும் இந்தச் செயலி தருகிறது.
இணையத்திலும் ஸ்மார்ட்போனிலும் உடனடிச் செய்திகளைத் தெரிந்துகொள்ள அநேக வழிகள் இருக்கின்றன. இவற்றின் மூலம், உள்ளூர் செய்திகள் முதல் உலகச் செய்திகள்வரை அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.
அப்படியிருக்க, புதியதொரு செயலிக்கான தேவை என்ன? ‘பிரேக்கிங் நியூஸ்’ எனப்படும் உடனடிச் செய்திகள் தொடர்பான தகவல்களை உறுதிசெய்துகொள்ள இந்தச் செயலி உதவுகிறது. .
ஆண்ட்ராய்டு, ஐபோன்களில் செயல்படக்கூடிய இந்தச் செயலியைத் தரவிறக்கம் செய்து உள்ளே நுழைந்ததும் கூகுள் அல்லது ஃபேஸ்புக் கணக்கு மூலம் உறுப்பினராகப் பதிவுசெய்துகொள்ள வேண்டும்.
உறுப்பினரான பின், செய்திகளைத் தெரிந்துகொள்ள இரண்டு விதமான வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன. ஒன்று, இருப்பிடம் சார்ந்த செய்திகளைத் தெரிந்துகொள்வதற்கானது. அடுத்தது, பொதுவாகச் செய்திகளைத் தெரிந்து கொள்வதற்கானது.
இதில் முன்னணி ஊடகங்கள், செய்தித் தளங்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களிலிருந்து வெளியாகும் செய்திகளைப் பார்க்கலாம். தவிர சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளையும் பார்க்கலாம். இருப்பிடம் சார்ந்த செய்திகள் உலக வரைபடத்தின் மீது சுட்டிக்காட்டப்படுகின்றன. உடனடிச் செய்திகள், முன்னணிச் செய்திகள் எனச் செய்திகள் தனித் தனியே அடையாளம் காட்டப்படுகின்றன. குறிப்பிட்ட செய்தி தொடர்பான தகவல்களையும் எளிதாகத் தெரிந்துகொள்ளலாம்.
இவை எல்லாமே, பொதுவாக அனைத்து செய்திச் செயலிகளிலும் இருக்கும் அம்சங்கள்தான். ஆனால், கிரவுண்ட் செயலியில் குறிப்பிட்ட எந்தச் செய்தி தொடர்பாகவும் பயனாளிகள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து மற்றவர்களுடன் உரையாடலாம். இந்த அம்சமே செய்திகளில் உள்ள தகவல்களைச் சரிபார்த்துக்கொள்ள வசதியாகவும் அமைகிறது.
எந்த ஒரு செய்தியையும் வாசித்தவுடன் பயனாளிகள், அது தொடர்பான தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம். செய்தி ஏமாற்றம் அளிக்கிறது, நல்ல செய்தி, நான் உங்களுடன் இருக்கிறேன், சந்தேகமாக இருக்கிறது என நான்கு விதமான வாய்ப்புகளை ‘கிளிக்’ செய்து கருத்து தெரிவிக்கலாம். இதன் மூலம் குறிப்பிட்ட அந்தச் செய்தி நிகழ்ந்த இடத்தில் இருப்பவர்களோடு உரையாடலை மேற்கொள்ளலாம்.
எந்த ஒரு செய்தியை வாசிக்கும்போதும், செய்தி நிகழ்ந்த இடத்துக்கு அருகே இருக்கும் பயனாளிகளை இந்தச் செயலி அடையாளம் காட்டுகிறது. பரபரப்பான செய்தி எனில், கள நிலவரம் என்ன என்று பயனாளிகளிடமே கேட்கலாம். செய்தி தொடர்பான தகவல்கள் சரிதானா என்றும் கேட்கலாம். இந்த உரையாடல் கூடுதல் தகவல்களை அளிக்கும் வகையிலும் அமையலாம்.
இதுபோலவே நீங்களும் உங்கள் இருப்பிடத்துக்கு அருகே நிகழும் செய்திகளைத் தகவல்களாகப் பகிரலாம். கள நிலவரத்தைத் தெரிவிக்கலாம். ஸ்மார்ட்போனில் ஒளிப்படம் அல்லது காணொலிக் காட்சியைப் பதிவுசெய்து, செய்தியாகவும் பகிர்ந்துகொள்ளலாம்.
மேலும் தகவல்களுக்கு: https://ground.news/