இ
ன்று கேமரா இல்லாதவர்களே கிடையாது என்ற நிலை உருவாகிவிட்டது. கையில் கேமரா மொபைல் போன் வைத்திருப்பதால், எந்த நிகழ்வு நடந்தாலும் உடனே ஒளிப்படங்களை எடுத்து சமூக ஊடகங்களில் உலவவிட்டு விடுகிறார்கள் இளைஞர்கள். தொழில்முறை கேமரா இல்லாமலேயே கேமரா மொபைல் போன் மூலமே ஒளிப்படங்களை எடுத்துத் தள்ளுகிறார்கள்.
ஒளிப்படங்கள் எடுக்க பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என்ற அவசியமே இன்று இல்லாமல் போய்விட்டது. அதன் நுட்பங்களைப் பற்றியோ லென்ஸ்களைப் பற்றியோ தெரிந்திருக்கத் தேவையில்லை. ஒரு விஷயத்தைப் படம் பிடிக்க வேண்டும் என்று நினைத்தாலே போன் உதவிவிடுகிறது. 3 ஆண்டுகளுக்கு முன்பு தினமும் 50 கோடி படங்கள் இணையத்தில் பதிவேற்றப் படுவதாகப் புள்ளிவிவரங்கள் வெளியாயின. இன்று அந்த எண்ணிக்கை இன்னும் கூடியிருக்கிறது. இந்தப் படங்கள் பெரும்பாலும் கேமரா மொபைல் போன் மூலமாகவே எடுக்கப்பட்டவை.
சமூக ஊடகங்களில் ஒளிப்படங்களைப் பகிரும் போக்கு தொடர்ந்து அதிகரித்துவருவதால், ஒளிப்படங்களை மெருகேற்றும் செயலிகளும் நூற்றுக்கணக்கில் வந்துவிட்டன. போனில் எடுக்கும் படங்களை உடனடியாக எடிட் செய்யும் சேவைகளை செயலிகளும் வழங்குகின்றன. எனவே, ஒளிப்படங்களை அழகாக்கி சமூக ஊடகங்களில் உடனுக்குடன் பதிவிடவும் முடிகிறது. பெரும்பாலான செயலிகளில் அழகுப்படுத்தும் ஃபில்ட்டர்கள் இருக்கின்றன. இந்தச் செயலிகள் பொழுதுபோக்காக மட்டுமல்லாமல், சாதாரண படங்களைச் சிறந்த கலைப் படைப்பாக மாற்றும் திறன் படைத்திருக்கின்றன.
அதோடு சேர்ந்து மொபைல் போட்டோகிராஃபியும் பிரபலமாகிவருவதால், சமூக ஊடகங்களில் ஒளிப்படங்களின் எண்ணிக்கை வருங்காலத்தில் எக்குத்தப்பாக எகிறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.