இளமை புதுமை

101 வயது பொம்மை ஆஸ்பத்திரி

ஷங்கர்

பெரும்பாலான கடைக்காரர்கள் வாடிக்கையாளர் கண்ணீர் விடுவதை விரும்பமாட்டார்கள். ஆனால் சிட்னியைச் சேர்ந்த பொம்மைகள் மருத்துவமனை ஊழியர்களைப் பொறுத்தவரை வாடிக்கையாளர்களின் கண்ணீர்தான் அவர்களது பணிக்கான நற்சான்றிதழ்.

நாள்தோறும் லட்சக்கணக்கில் பொம்மைகள் உற்பத்தி செய்யப்படும் இந்நாட்களில் பொம்மைகளைப் பழுதுபார்க்கும் இடங்கள் குறைந்துவிட்டன.

“பொம்மைகளைப் பொறுத்தவரை நாங்கள் எல்லா ரிப்பேர்களையும் சரிசெய்கிறோம்” என்கிறார் 67 வயது ஜியாஃப் சாப்மன். இவருடைய தந்தை தொடங்கிய டால் ஹாஸ்பிடலில் இவர்தான் தற்போது சீப் சர்ஜன் இன்சார்ஜ்.

கரடி பொம்மைகள், ஆடும் குதிரைகள், கார் பொம்மைகள் என இதுவரை இந்த மருத்துவமனையில் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பொம்மைகள் உயிர்பெற்றுள்ளன. இந்த மருத்துவமனைக்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து குழந்தைகள்தான் வாடிக்கையாளர்கள்.

“ஒரு வளர்ந்த மனிதனின் அளவிலேயே தத்ரூபமாக இருக்கும் பொம்மையை நாங்கள் சரிசெய்துள்ளோம். 12 அடி நீள முதலையும் எங்களிடம் வந்துள்ளது. அதுவும் பொம்மைதான்” என்கிறார் சாப்மன். இவர்களிடம் சிகிச்சைக்கு வரும் பொம்மைகளின் முடி மற்றும் கண்களில்தான் அதிகப் பழுது ஏற்படுவதாகக் கூறுகிறார் சாப்மன்.

சரிசெய்த பொம்மைகளை பொக்கிஷங்களைப் போலக் கருதிப் பிரியத்துடன் பெற்றுச் செல்லும் வாடிக்கையாளர்களின் மனநிறைவில்தான் இந்தப் பொம்மை மருத்துவமனை ஊழியர்களின் மகிழ்ச்சியே அடங்கியிருக்கிறது. சில வாடிக்கையாளர்கள் நெகிழ்ந்து அழுதேவிடுவார்களாம்.

“ஆண்கள், பெண்கள் ரெண்டு பேருமே பொம்மைகளைக் கொண்டுவருவார்கள். டெடி கரடிகளுடன் வரும் ஆண்களும் இருக்கிறார்கள்” என்கிறார் சாப்மேன்.

தெற்கு சிட்னியின் பரபரப்பான புறநகர் தெருவில் உள்ள இந்த பொம்மைக் கடையில் பணியாளர்கள் பொம்மைகளின் உடைந்த விரல்கள், தலைகள், கண் சாக்கெட்டுகள் சரிபார்க்கப்படுகின்றன. குழந்தைகளின் சேட்டை, நாய் தாக்குதல், சகோதர யுத்தங்களால் பாதிக்கப்பட்ட பொம்மைகள் அவை.

சாப்மேனின் தந்தை

முதலில் ஜெனரல் ஸ்டோர் ஒன்றைத்தான் நிர்வகித்து வந்தார். அக்காலத்தில் ஜப்பானிலிருந்து மொத்தமாக வந்த செல்லுலாய்ட் பொம்மைகள் முழுவதும் பழுதுபட்டு இறக்குமதியானதால், அவற்றைப் பழுதுபார்க்கும் வாய்ப்பு அவருக்கு வந்தது. இதைத் தொடர்ந்து அவர் உருவாக்கியதுதான் டால் ஹாஸ்பிட்டல்.

இந்த மருத்துவமனையின் சேவைகளுக்கு இரண்டாம் உலகப்போரில் மிகப்பெரிய மவுசு ஏற்பட்டது. அக்காலகட்டத்தில் பொம்மைகள் இறக்குமதிக்குப் பெரும் தடை இருந்ததால் பழைய பொம்மைகளைச் சரிசெய்து விளையாடுவது தான் குழந்தைகளுக்கான ஒரே வழி.

இரண்டாம் உலகப்போர் காலத்தில் எழுபது பணியாளர்கள் ஆறு அறைகளில் பணிபுரிந்ததாக நினைவுகூர்கிறார் சாப்மேன்.

தற்போதைய டால் மருத்துவமனையில் 12 பேர் ஊழியர்களாக உள்ளனர். ஒரு மாதத்திற்கு 200 பொம்மைகள் பழுதுபார்ப்பதற்காக வருகின்றன.

சமீபகாலமாக இந்த மருத்துவமனைக்கு விஜயம் செய்பவர்கள் குழந்தைகளாக முன்பு இருந்த பெரியவர்கள்தான் என்கிறார் சாப்மேன். நடுத்தர வயது மற்றும் முதியவர்கள் தங்கள் குழந்தைப் பருவ நினைவுகளை மீட்பதற்காக பழைய பொம்மைகளைப் பழுதுபார்க்க வருகிறார்கள்.

“அவர்கள் குழந்தைகளாக இருந்த காலத்தில் அவர்களுக்கு விளையாடுவதற்கு ஒரே ஒரு பொம்மைதான் கிடைத்திருக்கும். ஒவ்வொரு முறை கடைக்குப் போகும்போதும் புதிதுபுதிதாக வாங்கும் வாய்ப்பு இன்றைய குழந்தைகளைப் போல அவர்களுக்கு இருந்திருக்க வாய்ப்பில்லை” என்கிறார் சாப்மேன்.

அதனாலேயே பழைய பொம்மைகளைச் சரிசெய்வது இவர்களுக்கு உணர்வுபூர்வமான அனுபவமாக இருக்கிறது.

SCROLL FOR NEXT