விஷுவல் எஃபெக்ட்ஸ் மூலம் மனதில் ஏற்படும் கற்பனையைத் தான் நினைத்தவாறே மற்றவர்களுக்கும் சித்திரித்துக் காட்டுவது சாத்தியமா? சாத்தியம்தான் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார் அந்த இளைஞர். நமக்குத் தெரிந்த பொழுதுபோக்கு அம்சங்களின் மத்தியில் பதினாறு வயது நிரம்பிய அவரின் இந்தப் பொழுதுபோக்கு வித்தியாசமானது.
சிறுவயது முதலே விஷுவல் எஃபெக்ட்ஸில் ஆர்வம் கொண்டிருந்த கௌதம் ரவி தன் பதினைந்தாம் வயதில் ‘பெட்ரிஃபைட்’ (petrified) என்ற பத்து நிமிடக் குறும்படத்தை இயக்கித் தன் எண்ண ஓட்டங்களுக்கு ஒரு புது வடிவம் கொடுத்திருக்கிறார்.
புதிய கோணத்தில் நட்பு
நட்பை மையமாகக் கொண்டு ஆயிரக்கணக்காண குறும்படங்கள் ஏற்கனவே வெளிவந்திருக்கும் நிலையில், வித்தியாசமான முறையில் நட்பை அணுகி, வளர்ப்பு நாய்க்கும், சிறுவனுக்கும் உள்ள நட்பைப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார். “நாய்கள் அல்லது பூனைகளால் மனிதர்களைப் போன்ற நடவடிக்கைகளைச் செய்ய முடிந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து நான் வியந்ததுண்டு, என் கதையில் அதனைக் கொண்டு வந்தால் புதுமையாக இருக்கும் என்று தோன்றியது” என்கிறார் கௌதம். பெட்ரிஃபைட் கதையை இரண்டு நாள்களில் முடித்த இவருக்கு அதனை உருவகப்படுத்துவது எவ்வளவு கடினம் என்பது அடுத்த பதினான்கு மாதத்தில்தான் தெரிந்திருக்கிறது.
வளர்ப்பு நாயான ‘பக்’ இனத்தைச் சேர்ந்த டோபிக்கும், அதன் எஜமான் ஒன்பது வயது கோபேஷுக்கும் நடக்கும் சிறு சிறு ஊடல்கள் எப்படி ஒரு பெரிய பிரச்சினையாக உருவெடுக்கிறது, கடைசியில் யார் இந்தச் சண்டையில் ஜெயிக்கிறார் என்பதே பெட்ரிஃபைட்யின் கதை. டோபியை அசாதாரணமான திறமைசாலியாகவும் அதற்கு மனித உணர்வுகள் இருப்பதைப் போல் காட்டவும் விஷூவல் எஃபெக்ட்ஸைப் பயன்படுத்தியுள்ளார்.
டோபியின் சாகசங்கள்
டோபியின் கதாபாத்திரத்தைப் படம்பிடிப்பது மிகவும் கடினமாக இருந்ததாகவும் ஒரு காட்சியைச் சரியாக எடுப்பதற்கு 30 நிமிடம் வரையில் ஆனதால், சில முக்கியமான காட்சிகளைப் படம்பிடிப்பதற்கு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பச்சை ஆடையைப் பயன்படுத்தியதாகவும் கௌதம் சொல்கிறார். பச்சை ஆடை அணிந்து அந்த ‘பக்’கின் பாகங்களை அசைத்தும் கூட நடிக்க வைத்ததாகவும், அதன் பிறகு விஷுவல் எஃபெக்ட்ஸ் மூலம் பச்சை ஆடையை மறைத்து நாய் கார் ஓட்டுவதுபோல், ஸ்மார்ட் போனில் மெஸேஜ் செய்வது போல் எல்லாம் காட்சி அமைத்ததாகவும் தெரிவிக்கிறார் அவர். கோபேஷாக நடித்த இவரது தம்பி 8 வயதிலேயே கதையின் கருத்தை உள்வாங்கி தன் நடிப்புத் திறமையை வெளிகாட்டியுள்ளார்.
ஆன்லைன் வழி பயிற்சி
சிறு வயது முதலே ‘ஸ்டாப் மோஷன்’ படங்களின் மீது கொண்ட ஆர்வ மிகுதியால் இந்தத் தொழில்நுட்பத்தை எந்த ஒரு பயிற்சி வகுப்புக்கும் செல்லாமல் ஆன்லைன் வழியாகவே கற்றுக்கொண்டிருக்கிறார். “படங்களைவிட, படம் உருவான விதத்தைப் பார்த்துதான் நான் அதிகம் கற்றுக்கொண்டேன்” என்கிறார் கௌதம்.