இளமை புதுமை

மதுரை பாம்பு சிநேகிதர்கள்!

இரா.கோசிமின்

பா

ம்புகளைக் கண்டால் மட்டுமல்ல; அந்தப் பெயரைக் கேட்டாலே நமக்குள் ஒரு பயம் எட்டிப் பார்க்கும். அதனால்தான் நம் கண்களில் பட்டவுடனேயே அவற்றைக் கொல்வதற்காகக் கல்லையோ கம்பையோ தேடுகிறோம். ஆனால், உண்மையில் பாம்புகள் கொல்லப்பட வேண்டிய உயிரினங்கள் அல்ல. இதை உணர்ந்து, பாம்புகளைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள் மதுரையைச் சேர்ந்த இரு இளைஞர்கள்.

sahadevan சகாதேவன் right

திருநகரைச் சேர்ந்த சகாதேவன், விஷ்வா ஆகியோர்தான் அந்த இளைஞர்கள். பாம்புகளைக் காப்பாற்றுவதற்காக ‘ஊர்வனம்’ என்ற ஓர் அமைப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள் இவர்கள். பாம்புகளை மீட்கவும் பாம்புகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள் இவர்கள். பாம்புக் கடிக்கு மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை குறித்தும் விளக்கிவருகிறார்கள்.

பாம்புகளின் சிநேகிதர்களாக இருப்பது பற்றி சகாதேவனிடம் கேட்டபோது, “என்னுடைய 8 வயதிலிருந்தே பாம்புகளைப் பிடித்துவருகிறேன். ஆரம்பத்தில் வெறும் கையாலேயே பாம்புகளைப் பிடித்தேன். தற்போது வனத் துறையினர் பாம்பு பிடிப்பதற்குத் தேவையான உபகரணங்களை வழங்கியுள்ளனர். வீடுகளுக்குள் பாம்பு புகுந்தால், பொதுமக்கள் எங்களுக்குத் தகவல் தெரிவிப்பார்கள்.

தீயணைப்புத் துறை, வனத் துறை அலுவலர்களும் பாம்பு பிடிப்பதற்காக எங்களை அழைக்கிறார்கள். உடனடியாகச் சென்று பாம்புகளைப் பிடிப்போம். மதுரை மாவட்டத்தில் மட்டும் இதுவரை 5,500-க்கும் மேற்பட்ட பாம்புகளைப் பிடித்துள்ளோம். பார்த்தவுடனேயே விஷமுள்ள பாம்பா விஷமற்றதா எனத் தெரிந்துவிடும். கொடிய விஷமுள்ள பாம்பாக இருந்தால், வனத் துறையிடம் ஒப்படைப்போம். விஷமற்ற பாம்புகளாக இருந்தால், அருகே இருக்கும் வனப் பகுதிக்குள் விட்டுவிடுவோம்” என்கிறார்.

பொதுவாகவே, பாம்புகள் குறித்த மூட நம்பிக்கைகள் பரவலாக உள்ளன. இந்த மூட நம்பிக்கைகளை முதலில் ஒழிக்க வேண்டும். பாம்பு கொல்லப்பட வேண்டிய உயிரினம் அல்ல. ஒவ்வொரு பாம்புக்கும் ஒரு குணநலன் உண்டு. நல்ல பாம்பு, கண்ணாடி விரியன், கட்டு விரியன், சுருட்டை விரியன் ஆகிய பாம்புகள்தான் விஷம் கொண்டவை.

vishwa விஷ்வா

இந்தப் பாம்புகளால்தாம் அதிக மக்கள் உயிரிழக்கின்றனர். மற்றப்படி பாம்புக்கடி என்பதே விபத்துதான் என்று பாம்புகள்மீது கரிசனம் காட்டுகிறார் விஷ்வா.

“எப்போதும் நம் இருப்பிடங்களுக்குப் பாம்புகள் வருவதில்லை. மாறாக, பாம்புகள் இருக்கும் இடத்தைத்தான் நாம் ஆக்கிரமித்துள்ளோம். பாம்புகள் நம்மிடமிருந்து விலகிச் செல்லத்தான் முயலும். பாம்புகள் ஒருபோதும் நம்மைக் கடிக்க நினைப்பதில்லை. தம்மைத் தற்காத்துக்கொள்ளவே நம்மைத் தாக்குகின்றன. பாம்பைக் கண்டால், அதை மொபைலில் படம் எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள்.

அதைப் பார்த்து அது விஷமுள்ள பாம்பா இல்லையா என்று சொல்லிவிடுகிறோம். பார்த்தவுடனே பாம்பைக் கொல்ல நினைக்காதீர்கள். இந்தப் பூமியில் வாழும் உரிமை பாம்புகளுக்கும் உண்டு. உணவுச் சங்கிலியில் பாம்புக்கும் முக்கிய இடம் உண்டு. விவசாயம் அதிகம் நடைபெறும் நம் நாட்டில் எலிகளைக் கொல்லும் பாம்புகளைப் பாதுகாக்க வேண்டியது நம் கடமை” என்கிறார் விஷ்வா.

தொடர்புக்கு: 98650 24456, 98408 32133

SCROLL FOR NEXT