இளமை புதுமை

சாருகேசியில் ஒரு சரவெடிப் பாடல்!

யுகன்

உறக்கத்திலும் சில பாடல்கள் நம் உள் மனதில் ஒலித்துக் கொண்டேயிருக்கும். அப்படிப்பட்ட பாடலோடு, அதைப் பாடியவரின் குரலும் தீராத இனிமையுடன் நம் மனதில் தங்கிவிடும். அப்படிப்பட்ட ஒரு குரல் பத்மலதாவுடையது. தாமரையின் வரிகளில் ஜிப்ரான் இசையில் ‘மாறா’ படத்தில் இடம்பெற்று பலராலும் முணுமுணுக்கப்பட்ட `தீராநதி.. தீராநதி..’ என்னும் பாடலைப் பாடியவர் பத்மலதா.

தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, துளு எனப் பல இந்திய மொழிகளில் பாடிவரும் இவர், ‘ஒருநாள் கூத்து’ படத்தில் இடம்பெற்ற ‘அடியே அழகே..’ பாடலையும் பாடியவர். இவர் அண்மையில் தீபாவளி திருநாளை சிறப்பிக்கும் பாடலை எழுதி இசையமைத்திருக்கிறார். இது குறித்து பத்மலதா நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

"அண்மையில் டிரெண்ட் பக்தி, டிரெண்ட் தமிழ் போன்ற நிறுவனங்களுக்கு முறையே தேனமுத பக்தி, ஓணம் திருவிழா போன்ற பக்தி இசைப் பாடல்களை எழுதி இசையமைத்துக் கொடுத்தேன். தற்போது ஸ்வரஸ்தன் மீடியாவுக்காக அஜ் அலிமிர்ஸாக் இயக்கத்தில் தீபாவளி திருநாளின் சிறப்புகளைச் சொல்லும் பாடலை எழுதி இசையமைத்துள்ளேன். இந்தப் பாடல் தீபாவளி திருநாளன்று (நவம்பர் 10) பிஸி மியூசிக் வோர்ல்ட் சேனலில் வெளியாகிவிருக்கிறது. இந்தப் பாடலை என்னுடன் இணைந்து சாய்ஷா, ஸ்ரேஷ்டா, வீணா ஸ்ரீதேவி, சுஹாசினி பாலாஜி, ஷபி விஸ்வா உள்ளிட்ட ஏழு பேர் பாடியிருக்கின்றனர்.

கங்கா ஸ்நானம் இட்டு

மங்கா வாழ்வு பெற்று

விளக்குகள் எல்லாம் ஜொலிக்க ஜொலிக்க

இலக்குகள் எல்லாம் ஜெயிக்க ஜெயிக்க

சிறுசிறு நொடிகளும் இனித்திட இனித்திட

கனவுகள் எல்லாம் நனவுகள் ஆக

பரிசுகள் வழங்கிட மனசுகள் மகிழ்ந்திட...

என்று வளரும் பாடலில் நொடிக்கு நொடி, நம்முடைய பாரம்பரியமான கர்னாடக இசையின் செழுமையும் (சாருகேசி ராகத்தில் பாடலை அமைத்திருக்கிறார்) அதை நவீனத்துடன் இன்றைய இளைஞர்களுக்கும் கொண்டு சேர்க்கும் இசையமைப்பாளரின் உத்தியும் இந்த தீபாவளிப் பாடலை எல்லாருக்குமானதாக ஆக்குகிறது.

SCROLL FOR NEXT