இளமை புதுமை

துயர் சொல்லும் கீதம்!

ஆர்.கார்த்திகா

மா

நிலத்தின் கடைக்கோடியான கன்னியாகுமரியில் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவ மக்களின் துயரங்களுக்காகக் குரல் கொடுத்திருக்கிறார்கள் தலைநகர் சென்னையைச் சேர்ந்த இளைஞர்கள். ‘வாடகை சைக்கிள் இசைக் குழு’ என்ற பெயரில் அமைப்பை நடத்தி வருகிறார்கள் இவர்கள். அரசிடமிருந்து போதுமான உதவி கிடைக்கப் பெறாமல், பிரச்சினைகளைச் சந்தித்தப்படி இருக்கும் மீனவ மக்களுக்காக ‘செதில் பய’ எனும் பாடலை இக்குழு சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

சென்னையில் மீனவர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஒன்றான பட்டினம்பாக்கத்தில் அண்மையில் இந்தப் பாடல் வெளியிடப்பட்டது. வழக்கமான காணொலி பாடலாக இல்லாமல், பாடல் வரிகள் திரையில் தோன்ற, வரிகளுக்கு ஏற்ப ஒளிப்படங்கள் கதை சொல்லும் விதமாக அமைத்திருக்கிறார்கள்.

மீனவ மக்களை நேரில் சந்தித்து களப்பணி மேற்கொண்ட பிறகே இவர்கள் இந்தப் பாடலை அமைத்துள்ளனர். பாடலில் தோன்றும் ஒளிப்படங்களை சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் நித்தின் எடுத்திருக்கிறார். மீனவ மக்களின் அன்றாட வாழ்க்கைத் துயரை வெளிபடுத்தும் விதமாக, இது காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. ‘வஞ்சிக்கப்படும் நெய்தல் குடிக்களுக்கு’ எனத் தொடங்கும் இப்பாடல், மீனவர்களின் அதிருப்தியை வெளிபடுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

“மீனவப் பிரச்சினைகளுக்குக் குரல் கொடுக்கும் முயற்சியில், ‘செதில் பய’ பாடலை உருவாக்கினோம். மீனவர் அல்லாத அனைவரும் மீனவர்களின் வலியை, வேதனையை உணர வேண்டும், ஆதரவு தர வேண்டும் என்ற எண்ணத்தில்தான் ஒளிப்படக் கதையாக இதை உருவாக்கினோம்” என்கிறார் முத்து ராசா.

muthu rasa முத்து ராசா

சில நேரம் கோபமும் ஏமாற்றமும் அதிருப்தியும் கலை வடிவில் உருவாகும்போது, அந்தப் படைப்பு கண்டிப்பாக மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த தவறுவதில்லை. அந்த வகையில் இந்தப் பாடலும் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் உள்ளனர் இந்த இளைஞர்கள். சமூக வலைத்தளங்களிலும் இந்தப் பாடல் குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்திருக்கிறது.

‘செதில் பய’னை காண: goo.gl/XiYtZu

SCROLL FOR NEXT