உணவு தொடர்பான காணொளிகளும் மீம்ஸ்களும் வைரலாவது வழக்கம்தான். குறிப்பாக சைவ, அசைவப் பிரியர்கள் இடையேயான குசும்புகள் சமூக வலைதளங்களில் அடிக்கடி லைம்லைட்டுக்கு வருபவைதான். அந்த வரிசையில், அண்மையில் விவாத நிகழ்ச்சி ஒன்றில் சைவ உணவுதான் சிறந்தது என்கிற ரீதியில் ‘லொள்ளு சபா’ புகழ் ஜீவா பேசியது சமூக வலைதளங்களில் இன்னும் பேசுபொருளாக நீடிக்கிறது.
“அசைவ உணவைச் சாப்பிடுகிறவர்கள் கோழி, ஆடு என எந்த விலங்கைச் சாப்பிடுகிறார்களோ, அந்த உயிரினத்தின் தன்மையைப் பெற்றுவிடுவார்கள்” என அவர் சொன்ன கருத்துதான் அவரை விடாமல் துரத்திக்கொண்டிருக்கிறது. ‘ஜீவா சொன்னதற்கு அறிவியல் ஆதாரம் இருக்கிறதா?’, ‘இதென்ன புதுப் புரளியா இருக்கு’ என ஜீவாவைக் கலாய்க்கும் வகையில் மீம்ஸ்கள், கேலி, கிண்டல்கள் என நெட்டிசன்கள் பரபரப்பாக்கிவிட்டனர். எனினும் ‘ட்ரோல்’களை கண்டுகொள்ளாத ஜீவா, தான் சொன்ன கருத்தில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்!