இளமை புதுமை

இசையால் இதயங்களை வென்றவர்கள்!

வா.ரவிக்குமார்

“இந்தக் கால இளைஞர்களுக்கு பொறுமையே இல்லை. எந்த விஷயத்தையும் ஆழமாகக் கற்றுக்கொள்வதற்கு ஆர்வமே இல்லை...” என்று பொத்தாம் பொதுவாகப் பேசுபவர்களை, ஆர்.எஸ்.அத்வைத்தும் ஆர்.எஸ். சிருஷ்டியும் தங்களின் இசை நிகழ்ச்சி மூலம் வாயடைக்கவைத்துவிட்டனர். அதுவும் ஒரு மணிநேரம், இரண்டு மணிநேரம் அல்ல 12 மணி நேரம் இடைவிடாமல் பெய்தது அவர்களின் இசை மழை! இவர்கள் அண்ணன் - தங்கை என்பது இன்னுமொரு சிறப்பு.

இசை நிகழ்ச்சியில் கீபோர்ட், புல்லாங்குழல், கிதார், சாக்ஸபோன் போன்ற வாத்தியங்களை மிகவும் நேர்த்தியாகக் கையாண்ட அத்வைத், கல்லூரியில் முதலாண்டு மாணவர். ரசிகர்களைத் துள்ளி ஆடவைக்கும் வகையில் வயலின், வீணை வாத்தியங்களை வாசித்ததோடு அருமையாகப் பாடிய சிருஷ்டி, பள்ளி மாணவி.

அண்மையில் சென்னை பாரதிய வித்யா பவனில் நடந்த இவர்களின் இசை நிகழ்ச்சியை நான்கு பிரிவாக ஒழுங்கு செய்து நடத்தினர். முதல் பிரிவில், கர்னாடக இசைக்கான பிரிவில் தியாகராஜ சுவாமிகளின் புகழ்பெற்ற ‘சோபிலு சப்தஸ்வர’, பஞ்சரத்ன கீர்த்தனைகளில் ஒன்றான ‘எந்தரோ மகானுபாவலு’ போன்ற கீர்த்தனைகளைப் பாடினர். ‘அலைபாயுதே கண்ணா’ (வாத்திய இசையில்) போன்ற பாடல்கள் வாத்திய இசையாகவும் வாசிக்கப்பட்டன.

இரண்டாவது பிரிவில் மூன்று தலைமுறையைச் சேர்ந்த காலத்தால் மறையாத பாடல்கள் (1960இல் தொடங்கி தற்போது வரை) இசைக்கப்பட்டன. பழைய பாடலையும் புதிய பாடலையும் ஒரே நேர்க்கோட்டில் கொண்டுவரும் ‘மெட்லி’ பாணியிலும் இவர்கள் இசையமைத்தது, ரசிகர்களுக்குப் புதிய அனுபவமாக இருந்தது.

மூன்றாவது பிரிவு, பக்தி இசையைப் பிரதானமாகக் கொண்டு இசைக்கப்பட்டது. இதில் டி.எம். சௌந்தரராஜன், எஸ்.பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி, பி. சுசீலா, வீரமணி ஆகியோர் பாடிய பிரபலமான பாடல்களை வாசித்தனர். இந்தப் பிரிவுக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த வீரமணி ராஜு, பகவான் சரணம் பாடலைப் பாடியது ரசிகர்களை மெய்மறக்க வைத்தது.

நான்காவது பிரிவை, எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு இசை அஞ்சலியாக, அவர் பாடிய திரைப்பாடல்களை மட்டும் வாசித்துச் சிறப்பு செய்தனர். ஆர்.எஸ்.அத்வைத், ஆர்.எஸ்.சிருஷ்டி இருவருமே மத்திய அரசின் கலாச்சார வளங்கள் மற்றும் பயிற்சி மையம் (CCRT) வழங்கும் நிதிநல்கையைப் பெற்றவர்கள். இருவருமே டெல்லி நாடாளுமன்ற அவையில் இசை நிகழ்ச்சி நடத்தியிருப்பவர்கள்.

“இத்தனை சிறிய வயதில் நான்கு பாணிகளில் பன்னிரெண்டு மணிநேரம் இசை நிகழ்ச்சியை வேறு யாரும் நிகழ்த்தியதாகத் தெரியவில்லை. இந்த நிகழ்ச்சி பற்றி ‘இண்டர்நேஷனல் புக் ஆஃப் ரிகார்ட்ஸ்’ அமைப்புக்குத் தெரிவித்துள்ளோம்” என்றார் இசைக் கலைஞரும் அத்வைத், சிருஷ்டியின் தந்தையுமான சுரேஷ்.

SCROLL FOR NEXT