ம
ண் சார்ந்து படைப்புகளை உருவாக்கும் எழுத்தாளர் கண்மணி குணசேகரனை ஒளிப்படம் வழி ஆவணப்படுத்த கடலூர் மாவட்டம் மணக்கொல்லை கிராமத்தில் வலம்வந்துகொண்டிருந்தபோது, மெலிந்து எலும்புகள் தெரிய, வயிறு ஒட்டிப்போன நாய் தன் குட்டிகளுக்குப் பாலூட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். மெய்மறந்த நிலையில் அது கண்மூடி நின்ற காட்சியைப் பார்த்ததும், ‘தாய்மை’ என்ற ஒற்றைச் சொல்லுக்கான அர்த்தம் புரிந்தது.
ஒளிப்படத் துறையில் முதன்முதலாக அடியெடுத்து வைப்பவர்கள் பெரும்பாலும் எடுக்கும் படங்கள் பூக்கள், சூரிய உதயம், அஸ்தமனம், இயற்கைக் காட்சிகள், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், குழந்தைகள் சார்ந்ததாகவே இருக்கும்.
காலப்போக்கில் தனித்து இயங்க விரும்பும் ஒளிப்படக் கலைஞன் தன் பாதையைத் தேர்ந்தெடுத்து, விரும்பிய கருவைச் சுமந்து தன் தேடலை நோக்கிய திசையில் பயணிக்கிறான்.
எனது தேடல் எப்போதும் மனிதர் குறித்ததாகவே இருந்தது. அவர்களின் இருப்பை, உணர்வுகளை, வாழ்க்கை முறையைச் சூழலுடன் பதிவுசெய்வதே எப்போதும் என் எண்ணம். இத்தேடலின் பாதையில் மறக்க முடியாத காட்சிகள் நம் கண் முன்னே நிகழும்.
மனிதர்களைத் தாண்டி கவனத்தை ஈர்க்கக்கூடிய வேறு எதுவாக இருந்தாலும் அக்காட்சியைப் பதிவுசெய்து, தான் கண்டடைந்ததைச் சக மனிதருடன் பகிர்ந்துகொள்வதுதானே ஒரு ஒளிப்படக் கலைஞனின் வேலையாக இருக்க முடியும்? அப்படித்தான் அந்தத் தாய் நாயின் மெய்மறத்தலை நான் நினைக்கிறேன்.
ஓயாது அலை அடித்துக்கொண்டிருக்கும் சென்னை மெரினா கடற்கரையில் மிகப் பெரிய அலை ஒன்று வீரியத்துடன் நான்கு எருமை மாடுகளின் மீது மோதித் தெறித்தது. எந்தச் சலனமும் இல்லாமல் உறுதியாகவும் அமைதியாகவும் அதை எதிர்கொண்டு நிற்கும் அந்த நான்கு எருமைகளும் வியப்பையே தருகின்றன. இப்படி நம் கவனத்தை ஈர்க்கும் ஏதாவது ஒரு நிகழ்வைப் பார்க்கும்போது மனிதர்களைத் தாண்டி இயற்கையும் உயிரினங்களும் என் கேமராவுக்கும் மட்டுமில்லாமல் மனதுக்கு நெருக்கமாகவே இருந்திருக்கின்றன.
கட்டுரையாளர், ஓவியர் மற்றும் ஒளிப்படக் கலைஞர்
தொடர்புக்கு: selvan.natesan@gmail.com