ஒ
க்கி புயல் ஏற்படுத்திய சேதம் ஒவ்வொன்றாகக் கேள்விப்பட்டு வருகிறோம். 26 ஆண்டுகளுக்கு முன்பு, 1991 நவம்பர் 11 அன்று அடித்த புயல் நெய்வேலி நகரைப் புரட்டிப்போட்டது. காலம் காலமாக வளர்ந்த பிரம்மாண்ட மரங்களை வேரோடு சாய்த்துவிட்டுப் போனது.
மின்கம்பங்கள் உடைந்தன, மின்கம்பிகள் அறுந்துன. விடிய விடியப் பெய்த கனமழையால் நிலக்கரிச் சுரங்கங்கள் நீரில் மூழ்கின. அப்போது மின் தடையையும் குடிநீர் பற்றாக்குறையையும் நெய்வேலிவாசிகள் முதன்முதலாகச் சந்தித்தனர்.
விடாது மழை பெய்து இருட்டிக்கொண்டிருந்த அன்று மதியம், இருட்டில் ஃபிலிம் சுருளையும் கேமராவையும் தேடியெடுத்துக்கொண்டு புயலின் விளைவுகளைப் பதிவுசெய்யப் புறப்பட்டேன். வண்டி நகர முடியாதவாறு தெருவெங்கும் மரங்கள் சாய்ந்துகிடந்தன. படம் எடுப்பதற்காக மரங்கள், கிளைகள், மின்கம்பிகளைத் தாண்டிச் சென்றேன். எஸ்.எல்.ஆர்.
கேமராவில் அடுத்தடுத்த படங்களை எடுக்க ‘வைண்டிங் நாப்’-பை மீண்டும் மீண்டும் இயக்கியபோதுதான் ஒரு விஷயம் தெரிந்தது: ஃபிலிம் சுருள் உள்ளே சரியாக இடப்படவில்லை என்பது. வீட்டின் அடர்ந்திருந்த இருட்டுக்கு இடையே படபடப்பிலும் அவசரத்திலும் ஃபிலிம் சுருளை சரியாக லோடு செய்யாததால் புயலில் சிரமப்பட்டு எடுத்த ஒரு படம்கூட கேமராவில் பதிவாகவில்லை. இந்த விஷயம் கடைசியில்தான் எனக்குத் தெரிந்தது. எடுத்த ஒரு படம்கூட பதிவாகவில்லை. எல்லாம் மனக்காட்சிகளாக மட்டும் தங்கின.
20 ஆண்டுகள் கடந்தன. நெய்வேலியைத் தாக்கியது தானே புயல். காலையிலேயே வீசியது ஒரு பெருங்காற்று. முறிந்து விழுந்த மரங்களுக்கிடையே பேரமைதி நிலவியது. அப்போது நெய்வேலி மக்கள் தெருவுக்கு வந்து பார்த்துவிட்டு சேதாரம் குறைவு என்றனர். ஆனால், அப்போது யாருக்கும் தெரியாது, அது புயலுக்கு முன்னே வந்த அமைதியென்று.
அடுத்து வீசிய காற்று முந்தைய காற்றுக்கு எதிர்திசையில் பெரும் இரைச்சலுடனும் வீரியத்துடனும் அடித்து நொறுக்கியது. கடலூரை மையமாகக்கொண்டு கரையைக் கடந்த தானே புயல் நெய்வேலி நகருக்கும் கடலூர் மாவட்டத்துக்கும் பெரும் சேதத்தையும் பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தியது. நெய்வேலி நகரில் 15,000-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஒரு லட்சம் மரங்கள் சேதமடைந்தன.
இந்த இரண்டு புயல்களும் நெய்வேலி நகரின் 50 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பெரும்பாலான மரங்களை மண்ணில் வீழ்த்தின. இந்த முறையும் மின்கம்பிகள் அறுந்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. டிஜிட்டல் கேமரா கையில் இருந்ததால் நெய்வேலி நகரைத் தாக்கிய ‘தானே புயலின்’ சேதத்தை உடனே பதிவுசெய்ய முடிந்தது. இங்கு இடம்பெற்று கறுப்பு-வெள்ளைப் படங்கள் தானே புயலின் தாண்டவத்தைச் சொல்பவை.
கட்டுரையாளர், ஓவியர் மற்றும் ஒளிப்படக் கலைஞர்
தொடர்புக்கு: selvan.natesan@gmail.com