வேதாரண்யம் அருகே உள்ளது செம்போடை கிராமம். செம்போடை கடைத்தெருவுக்குப் பின்னால் அமைந்துள்ளது ஓர் அமைதியான, அழகான ஓடை. ஓடையைத் தாண்டி அக்கரைக்குச் செல்ல மரப்பாலம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. 1998-களில் அக்கரையில் இருந்த கிராமங்களுக்குச் செல்ல எனக்கு ஆர்வம் அதிகம்.
ஒரு நாள் பாலத்துக்கு அருகில் சென்றபோது, மேல்சட்டை அணியாத பெரியவர் ஒருவர் கைலியை மடித்துக் கட்டிக்கொண்டு தலையில் கூடை வடிவில் எதையோ சுமந்து அந்தப் பாலம் வழியாக வந்துகொண்டிருந்தார். அதைக் கண்டு எதிர் வெளிச்சத்தில் அவரைப் படமெடுத்தேன்.
அருகே வந்ததும்தான் தெரிந்தது அவர் தலையில் இருந்தது கூடையல்ல, களிமண் என்று! எதற்காக இந்தக் களிமண் என்று கேட்டபோது, எல்லா மண்ணிலும் பானை செய்துவிட முடியாது. இது பானை செய்ய உகந்த களிமண் என்றார். அக்கரைக்குப் போகாமல் அவருடனேயே நடந்துசென்றேன்.
அவர் வாழும் குடியிருப்பு வந்தது. முதலில் தண்ணீரைவிட்டு மண்ணைப் பிசைந்தார். சக்கரத்தின் மீது மண்ணை வைத்து எழுந்து நின்று கோலால் சக்கரத்தைச் சுற்றிவிட்டார். பின் அமர்ந்து பானை வனையும் வேலையைத் தொடங்கினார். இடையிடையே சக்கரத்தின் வேகம் குறைந்த போதெல்லாம் கம்பால் சக்கரத்தைச் சுற்றிவிட்டார்.
சக்கரத்தின் மேலிருந்த மண் அவர் கை பட்டு பானையாக உருவெடுக்கத் தொடங்கியது. பானை உருவம் வந்த பிறகு சுடப்படாத பானையை சக்கரத்திலிருந்து லாகவமாக அறுத்தெடுத்து மின்னல் வேகத்தில் தரையில் வைத்தார். எல்லாமே மிக வேகமாக நடைபெற்று முடிந்தது.
அந்தக் கைவினைஞர்கள் ஒவ்வொரு பானையையும் வடித்தெடுத்து முடிக்கும்போது ஒரு இனம் புரியாத திருப்தி அவர்கள் மனதில் உருவாவதைக் காண முடிந்தது.
அறுத்தெடுக்கப்பட்ட மண் பானை, சட்டிகள் சற்று இறுகியதும் அடிப்பகுதியைச் சீரமைத்துப் பானையும் சட்டியும் வடிவம் பெற்றதையும் கண்டேன். சொந்தப் பயன்பாட்டுக்காக, உறவுகளுக்காக, விற்பனைக்காக, பொங்கல் திருநாளுக்காக இப்பானை, சட்டிகள் தயாராகின்றன.
ஒரு மண் பானை, சட்டி தயாரிப்பதில் உள்ள முன்தயாரிப்பு, உடல் உழைப்பு, செய்நேர்த்தி போன்ற எல்லாமே அன்றைக்குத் தெளிவாகப் புரிந்தது.
இன்றைக்கு செம்போடை மரப்பாலம் சிமெண்ட் பாலமாகிவிட்டது. கையில் சக்கரம் சுற்றிய கைகள் பல இடங்களில் ஒரு பொத்தானின் அழுத்தத்தில் மின்சாரத்தில் சுழலும் சக்கரமாகிவிட்டன. இவை எல்லாம் மாறியும்கூட மண்பாண்டத்தை வடிக்கும் கைகள் மாறவில்லை. அந்தக் கைகள் காலங்களைக் கடந்த நம் கைவினையின் இடையறாத தொடர்ச்சியல்லவா?
கட்டுரையாளர், ஓவியர் மற்றும் ஒளிப்படக் கலைஞர்
தொடர்புக்கு: selvan.natesan@gmail.com