கடற்கரையில் நின்றுகொண்டு வானத்தையும் கடலையும் அலைகளையும் கரையில் இயங்கும் மனிதர்களையும் வேடிக்கை பார்ப்பது ஒரு வகை தியானம். ஆறுகாட்டுத் துறையில் இதை நான் உணர்ந்திருக்கிறேன்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள ஆறுகாட்டுத் துறை கடற்கரை எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். மீன்கள் முட்டையிடும், குஞ்சு பொரிக்கும் கோடைக் காலத்தில் மீன்பிடிக்க 45 நாட்கள் தடை இருக்கும். படகுகளைச் சீரமைப்பது, வண்ணம் பூசுவது, வலை பின்னுவது, வலைகளைச் சீரமைப்பது போன்ற வேலைகளுக்கு அந்தக் காலத்தை மீனவர்கள் பயன்படுத்துவதால், ஆண்டு முழுவதும் ஆறுகாட்டுத்துறை உயிரோட்டத்துடன் இருக்கும்.
கடல்சீற்றம் அதிகமிருக்கும் நாட்களிலும் மீன்வளம் குறையும் காலத்திலும் கோடியக்கரைக்கோ நாகைக்கோ அந்த ஊர் மீனவர்கள் படகைச் செலுத்துவார்கள். அந்தக் காலகட்டத்தில் மட்டுமே ஆறுகாட்டுத்துறை வெறிச்சோடிக் கிடக்கும்.
அவர்களுடைய இயல்பை உயிரோவியமாகப் பதிவுசெய்ய கேமராவை நான் கையிலெடுக்கும்போது, சிநேகத்துடன் சிறு புன்னகையை வீசி என்னைப் பார்த்துவிட்டு, மீண்டும் தங்கள் வேலைகளில் ஆழ்ந்துவிடுவது அவர்களுடைய இயல்பு. இப்போதுவரை நான் படமெடுப்பதற்கு யாரும் மறுப்புத் தெரிவித்ததோ தடுத்ததோ இல்லை. நான் மீண்டும் மீண்டும் அவர்களை நோக்கிச் செல்வதற்கான காரணம் இதுதான்.
ஏதேனும் ஓர் ஆண்டில் ஆறுகாட்டுத் துறை கடற்கரையில் நான் கால் நனைக்க முடியாமல் போயிருந்தால், அடுத்த சந்திப்பில் ஏன் வரவில்லை என அக்கறையுடன் விசாரிக்கும் அளவுக்கு அந்த ஊர் மக்களுடனான நட்பு தொடர்கிறது.
அருகில் குடியிருப்புகள் இருந்தாலும்கூட மீனவர்களுக்குக் கடற்கரையே நிரந்தர வீடு. எந்நேரமும் கடலுடன் உறவாடுவது, உழைப்பது, ஓய்வெடுப்பது, பொழுதைப்போக்குவது என அவர்களது வாழ்க்கை கடலையும் கரையையும் முழுமையாகச் சார்ந்த ஒன்று.
சூரிய உதயத்துக்கு முன்னும் அந்தி சாய்ந்த பின்னும் நீள்கிறது அவர்களுடைய உழைக்கும் உலகம்.
கட்டுரையாளர், ஓவியர் மற்றும் ஒளிப்படக் கலைஞர்
தொடர்புக்கு: selvan.natesan@gmail.com