இளமை புதுமை

இந்தியாவில் ஜோலா ஸ்மார்ட்போன்

சைபர் சிம்மன்

புதிய ஸ்மார்ட்போன்கள் மீது ஒரு கண் வைத்திருப்பவர்கள் கவனியுங்கள், பின்லாந்து தயாரிப்பான ஜோலா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகிறது. ஜோலா ஸ்மார்ட்போன் (Jolla) புதிது மட்டும் அல்ல; ஓபன் சோர்ஸ் இயங்குதளமான செயில்பிஷ் (Sailfish OS) ஆபரேட்டிங் சிஸ்டம் அடிப்படையிலானது. அது மட்டும் அல்ல, டச் போன்களுக்கு மத்தியில் இது அசைவுகளை (gesture) புரிந்துகொண்டு செயல்படக்கூடியது.

2011-ம் ஆண்டு நோக்கியா முன்னாள் ஊழியர்களால் தொடங்கப்பட்ட ஜோலா, தனது இந்திய வருகையை ட்விட்டர் மூலம் அறிவித்துள்ளது. ஸ்னேப்டீல்.காம் மூலம் போன்கள் விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

பல வித வண்ணங்களில் வரும் ஜோலா ஸ்மார்ட்போன் 4.5 இன்ச் டிஸ்பிளே கொண்டது. டுயல் கோர் பிராசசர் மற்றும் 1 ஜிபி ராம் கொண்டது. 8 மெகா பிக்சல் பின் கேமரா மற்றும் 2 மெகா பிக்சல் முன் கேமரா கொண்டது. 16 ஜிபி ஸ்டோரேஜ் திறன் கொண்டது.

இதன் பேட்டரி 10 மணி நேரம் நீடிக்கும் என்கிறது ஜோலா. 9.9 மி.மீ அளவுக்கு ஒல்லியாக இருக்கும் ஜோலாவின் எடை 141 கிராம்தான். வண்ணம், எழுத்துரு மற்றும் ரிங்டோன் ஆகியவை பயன்பாட்டிற்கு ஏற்ப தானாக மாறும் திறன் கொண்டவை என்கிறது ஜோலா. இந்த மொபைலுக்கு இவை சிறப்பு சேர்க்கின்றன. இந்த வசதி தி அதர் ஹாஃப் (The other half) எனக் குறிப்பிடப்படுகிறது. மல்டி டாஸ்கிங்குக்கு மிகவும் ஏற்றது; எந்தச் செயல்பாட்டையும் நிறுத்தாமல் சமூக வலைதள அப்டேட்களைப் பார்க்கலாம் என்றெல்லாம் சொல்லப்படுகிறது.

செயில்பிஷ் இயங்கு தளம் ஓபன் சோர்ஸ் பிரியர்களை மகிழ்விக்கும். ஆண்ட்ராய்டு ஆப்ஸ்களைச் செயல்படுத்தும் ஆற்றல் கொண்டது என்பது கூடுதல் சிறப்பு. செயில்பிஷ் ஆப்ஸ்களும் உண்டு. ஆப்ஸ்களைப் பயனாளிகளே தேர்வு செய்து கொள்ளலாம்.

இந்திய ஸ்மார்ட் போன் சந்தை ஏற்கெனவே சூடுபிடித்திருக்கும் நிலையில் ஜோலா போட்டியை மேலும் அதிகமாக்க அடியெடுத்து வைக்கிறது.

ஜோலா இணையதளம்: >http://jolla.com/

ஜோலா ட்விட்டர் முகவரி: >https://twitter.com/jollah

SCROLL FOR NEXT