யெல்லோ
ரம்மியமான சூழ்நிலையில் தோன்றும் வானவில் உடனே மறைந்துவிடுகிறது. மனித வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கும் மகிழ்ச்சியும் வானவில் போன்றதுதான். வானவில் தோன்றும் முன் எப்படி எந்த ஆராவாரமும் செய்வதில்லையோ அப்படித்தான் ‘யெல்லோ’ போன்ற படங்களும் ஆராவாரம் இல்லாமல் வந்து மனதையும் கண்களையும் நிறைத்துச் சென்றுவிடுகின்றன.
40 வருடங்கள் இடைவேளையில்லாமல் உழைத்து பக்கவாதத்தில் படுத்துவிடும் அப்பாவின் குடும்பப் பொறுப்புகளை ஏற்றுச் சுமக்கிறாள் ஆதி என்கிற ஆதிரை (பூர்ணிமா ரவி). உயர்கல்வி, அதற்கேற்ற உயரத்துடன் வேலை என வேறொரு உலகைத் தேடி நகரும் சந்தோஷுக்கும் (சாய் பிரசன்னா) ஆதிக்குமான காதல், கையில் சூடு தாங்காமல் கீழே விழுந்து சில்லு சில்லாக உடைந்து சிதறிவிடும் அழகிய காபி மக் போல உடைந்து விடுகிறது. அந்தத் தருணத்தில் அப்பாவின் அனுபவ வார்த்தைகள் ஆதியை ஒரு தோழனைப்போல் தாங்கிப் பிடிக்கின்றன. “அடுத்தவங்கள கஷ்டப்படுத்தாத சின்னச் சின்ன தப்புதான் நம்மள நாமளா இருக்க விடுது” என்கிறார்.
அப்போது ஆதி அலுவலக விடுமுறை எடுத்துக்கொண்டு தன்னுடைய ஆன்மத் தேடல் பயணத்தைத் தொடங்குகிறாள். கன்னியாகுமரியின் மலைகள் சூழ் மார்த்தாண்டத்தில் ஆதி தன்னுடைய பால்யத்தைக் கழித்த காலத்தில், மேரி பெர்னாண்டஸ் என்கிற கன்னியாஸ்திரி காட்டிய அன்பும் அவர் கூறிய கதைகளும் அவளின் மனதில் அகலாத நினைவின் அலைகளாக மீண்டு எழுகின்றன.
மார்த்தாண்டத்தில் தன்னுடன் பழகிய பால்யத் தோழர்கள் ஜென்னி, சோட்டு ஆகிய இருவரையும் சந்தித்துத் திரும்புவதுதான் அவளது பயண நோக்கம். அந்தப் பயணத்தில் அவள் சந்தித்த மனிதர்கள் யார்? உண்மையில் காதல் தோல்வி, பணி அழுத்தம் ஆகியவற்றிலிருந்து விடுபடுவதுதான் அவளது பயணத்தின் நோக்கமா? அந்தப் பயணத்தில் அவள் கண்டறிந்தது என்ன என்பதுதான் ‘யெல்லோ’ படத்தின் கதை.
முதன்மைக் கதாபாத்திரங்கள் மேற்கொள்ளும் பயணத்தை மையமாகக் கொள்ளும் ‘அட்வஞ்சர்’ வகைப் படங்கள், வாழ்க்கை அடுத்த நிமிடத்தில் ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியத்தைப் போலித்தனமின்றிக் காட்டினால், அந்தப் பயணத்துக்குள் நாமும் தொலைந்துவிடுவோம்.
ஆதியின் பயணத்தில் நாமும் அப்படித்தான் தொலைந்துவிடுகிறோம். பயணத்தில் அவள் தேடியலையும் பால்ய நண்பன் ‘சோட்டு’ கிடைக்கிறானோ இல்லையோ, தன்னைத் தொலைத்துவிட்டதாக எண்ணி அலைக்கழியும் ஆதிக்கு ஏதும் ஆகிவிடக்கூடாது, அவளுக்கு நல்லதே நடக்க வேண்டும் என ஏங்க வைத்துவிடுகிறார் இப்படத்தை எழுதி, இயக்கியிருக்கும் ஹரி மகாதேவன்.
நோயின் பிடிலிருந்து மீண்டு, ஆனால், அதன் தாக்கத்தால் வீட்டில் முடங்கிய ஒரு முதிய அப்பாவின் கதாபாத்திரத்தில் வரும் டெல்லி கணேஷ் என்கிற மகா கலைஞன் இன்னும் பல ஆண்டுகள் இருந்து தமிழ் சினிமாவுக்குப் பங்களித்திருக்கக் கூடாதா எனத் தன்னுடைய நடிப்பால் எண்ண வைத்துவிடுகிறார்.
நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கையை, “நாம சம்பாரிச்சு செலவு பண்ணல; இருக்கிற செலவுக்குத்தான் சம்பாதிக்கிறோம். நமக்கான பொறுப்பு, வேல எல்லாமே கூடிகிட்டேதான் போகும்... ஆனா உனக்கான சந்தோஷத்தை நீதான் தேடிக்கணும். ஒருநாள் திரும்பிப் பார்த்தா நம்ம வாழ்க்கையில நாமலே இருந்திருக்க மாட்டோம்; நமக்குன்னு எதுவுமே இருந்திருக்காது” எனச் சுருக்கமான சொற்களால், போராட்ட வாழ்க்கை அடிமனதில் ஏற்படுத்திய வடுக்களின் வலியோடு மகளிடம் சொல்லும் அந்த தருணம்தான், ஆதி மேற்கொள்ளும் ஆத்மத் தேடலுக்கான பயணத்தின் விதை. அந்தக் காட்சியை அவ்வளவு எளிமை கூடிய அழுத்தத்துடன் சித்தரித்திருக்கிறார் இயக்குநர். அவருடைய ‘திருட்டு சுருட்டு’ சாமானிய மனிதர்களின் புகை மூடிய மனதின் ரகசியங்களில் ஒன்று.
ஆதி தன்னுடைய பயண வழியில், கண்டறிவது கடினமாக இருக்கும் என்று நினைத்த ஜென்னியை எளிதாகக் கண்டுபிடித்துவிடுகிறாள். வாழ்க்கையும் கூட அப்படித்தான்! எவையெல்லாம் கடினம் என்று மலைக்கிறோமோ அவையெல்லாம் நம் காலடியில் வந்து நாய்க்குட்டியைப் போலக் குலைந்துகொண்டிருக்கும்.
‘சோட்டு’வைத் தேடுவதில் உதவும் சாய் (வைபவ் முருகேசன்) “நம்ம வாழ்க்கையில நடக்கிற பாதி அழகான விஷயங்கள், நாம யோசிக்காம எடுக்கும் முடிவுகளால்தான் நடக்கிறது” என்று உத்வேகம் கொடுப்பது, பல நேரங்களில் அவசரப்பட்டுவிடும் ஆதியின் நடவடிக்கைகளைப் பொறுத்துக் கடந்துபோவது என நட்பெனும் தோள் தரும் தருணங்கள் இப்படத்தை அடுத்த முக்கியமான இடத்துக்கு நகர்த்துகின்றன.
அதி - சாய் இடையில் ஊற்றெடுக்கும் நட்பு அதன் அடுத்த பரிமாணத்தில் வண்ணம் காட்டியதா என்பதையெல்லாம் அபி அத்விக்கின் அற்புதமான ஒளிப்பதிவுடன் பெரிய திரையில் காணும்போதுதான், நிலப்பரப்பு கதாபாத்திரமாக விரியும் ஒரு கதைக் களத்தின் கதாபாத்திரங்களை ரத்தமும் சதையுமாக உணர முடியும். கதைக் களத்தின் நிலக்காட்சிகள் உருவாக்கும் உணர்வு, கதாபாத்திரங்கள் சந்திக்கும் சூழ்நிலைகளின் உணர்வு இரண்டையும் ஆனந்த் காசிநாத் பின்னணி இசையில் பிழிந்து கொடுத்திருக்கிறார்.
“ஆதியைப் பார்க்கும்போதெல்லாம் கடந்த காலம் கூட நிகழ்காலத்தில் நிகழ்காலத்தில் நடக்கிற மாதிரி இருக்கு” என்கிற ஹாஸ்டர் உரிமையாளர் கல்யாணி, ‘இந்த மாதிரி ஆளுங்க எல்லா இடத்துலயும் இருப்பாங்க.. நாமதான் கவமாக இருக்கணும்’ என்று ஆதி - சாய் இருவருக்கும் உதவும் அந்த மலையாளச் சேட்டன், திரையில் முகம் காட்டாமல் குரல் வழியாகவே அந்த முகம் இப்படி இருக்குமோ என எண்ண வைத்துவிடும் சாயின் நண்பன், ஒவ்வொரு முறையும் ‘இது என் கடைசி பயணம்’ என கப்சா விடும் சாய்க்கு கதகதபான கட்டச் சாயாவில் அன்பைப் பருகக் கொடுக்கும் மணி அண்ணா என துணைக் கதாபாத்திரங்கள், முதன்மைக் கதாபாத்திரங்களின் பயணத்தை முழுமையை எட்டும்படி செய்திருப்பது திரைக்கதைக்கு யதார்த்தத்தைக் கூட்டியிருக்கிறது.
ஆதியாக வரும் பூர்ணிமா ரவிக்கு நல்வரவு கூறலாம். வைபவ் முருகேசன் மிகச் சிக்கலான கதாபாத்திரத்தை வெகு எளிதாக வெளிப்படுத்தியிருக்கிறார். மணி அண்ணனாக வரும் பிரபு சாலமன் ஒரு காட்சியில் வந்தாலும் நிறைவு.
நீங்கள் ‘மனம் சொல்வதைக் கேட்பவர்’ எனில் இந்தப் படம் உங்களுக்கானது தான். கட்டுண்ட வாழ்க்கையின் மகிழ்ச்சிகரமான வண்ணம் இந்த ‘யெல்லோ’.