இந்து டாக்கீஸ்

Two Days One Night: வேலைக்காகவும் மரியாதைக்காகவும் போராடுகிறவள் | சினிமாவும் அரசியலும் 27

ஜோசப் ராஜா

லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருக்கும் முதலாளித்துவப் பொருளுற்பத்தியால் பாதிக்கப்பட்டு, கடுமையான மனநலப் பிரச்சினைக்குள் சிக்கிக் கொண்டாலும், தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக அழுது, கண்ணீரைத் துடைத்து, விழுந்து, எழுந்து போராடும் ஒரு பெண்ணின் கதைதான் இந்தத் திரைப்படம்.

பெல்ஜியத்தின் மிகப் பிரபலமான இயக்குநர் சகோதரர்கள் ஜீன் பியெரே டார்டெனி மற்றும் லூக் டார்டெனியின் இயக்கத்தில் 2014இல் வெளிவந்தது. பார்வையாளர்களால் மிகப்பெரிய அளவில் வரவேற்கப்பட்டது. முக்கியமான விமர்சகர்களால் மிகச் சிறந்த திரைப்படம் என்று வழிமொழியப்பட்டது. முதன்மைக் கதாபாத்திரமாக நடித்திருக்கும் பிரான்ஸைச் சேர்ந்த நடிகை மரியன் காட்டிலார்டின் நடிப்பைப் பாராட்டாதவர்களே இல்லை!

மரியன் காட்டிலார்ட், இந்தத் திரைப்படத்தின் சாண்ட்ரா கதாபாத்திரத்தை வெளிப்படுத்தியிருக்கும் விதம், உலகின் மிகச் சிறந்த நடிகை என்கிற பாராட்டை அவருக்கு வாங்கிக் கொடுத்தது. இந்தப் படம் குறித்து மரியன் காட்டிலார்ட், “இந்தப் படம் பார்க்க எளிமையாகத் தெரியும். ஆனால், மனிதர்களின் வாழ்க்கையை ஆழமாகத் தொடக்கூடியது. நானும்கூட இந்தப் படத்தில் நடிக்கவில்லை. வேலைக்காகவும் சுயமரியாதைக்காகவும் போராடும் சாண்ட்ராவாக வாழ முயற்சி செய்தேன்” என்று. அப்படி என்ன அந்த சாண்ட்ராவின் போராட்டமும் வாழ்க்கையும்?

பெல்ஜியத்தின் தொழிற்சாலை நகரமொன்றில் சிறிய தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த சாண்ட்ரா, உடல்நலப் பிரச்சினைக்காக சிறிதுகாலம் மருத்துவ விடுப்பு எடுக்கிறாள். ஒரு தொழிலாளி விடுமுறை எடுப்பதை எந்த நிறுவனமாவது விரும்புமா? அதுவும் மருத்துவ விடுப்பு எடுப்பதை விரும்புமா? சாண்ட்ரா வேலை செய்துகொண்டிருக்கும் நிறுவனமும் விரும்பவில்லை.

மற்ற தொழிலாளர்கள் சாண்ட்ராவின் வேலையையும் சேர்த்துப் பார்க்கிறார்கள். அப்படியென்றால் சாண்ட்ரா மீண்டும் வேலைக்கு வரவேண்டுமா, இல்லை உங்களுக்கு 1000 யூரோ ஊக்கத்தொகை வேண்டுமா என்று ஓட்டெடுப்பு நடத்துகிறான் மேற்பார்வையாளன் ஜீன் மார்க். இரண்டுபேர் மட்டும் சாண்ட்ராவிற்கு ஆதரவு தெரிவிக்க மற்றவர்கள் ஊக்கத்தொகைக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்.

ஓய்விலிருக்கும் சாண்ட்ராவிற்குத் தோழி ஜீலியட் மூலமாகச் செய்தி வருகிறது. திகைத்துப் போகிறாள். கைவிடப்பட்டவளாகக் கதறி அழுகிறாள். வேலையிலிருந்து ஓடிவருகிறான் கணவன் மனு. ஆறுதல் சொல்கிறான், அணைத்துக் கொள்கிறாள். அடக்க முடியாமல் அழுது கொண்டிருக்கிறாள். ஏற்கெனவே மனநலப் பிரச்சினைக்குச் சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பவள், அதற்காக மாத்திரைகள் சாப்பிட்டுக் கொண்டிருப்பவள். “அழுவதை நிறுத்த ஒரே வழி, உன் வேலைக்காகப் போராடுவதுதான்” என்று அவளுக்குள் தைரியத்தை ஊட்டுகிறான்.

”இந்தச் சம்பளம் இல்லாமல் வீட்டுக்கடன்களை எப்படித் திருப்பிச் செலுத்தப் போகிறோம்?” பதற்றத்தில் புலம்பிக் கொண்டிருக்கிறாள் சாண்ட்ரா. ஜீலியட் அவளை அழைத்துக் கொண்டு நிறுவனத்தின் மேலாளரைச் சென்று சந்திக்கிறாள். திங்கள் கிழமை இன்னொருமுறை ஓட்டெடுப்பு நடத்த அனுமதி வாங்குகிறார்கள். மொத்தம் பதினாறு பேர் ஓட்டுப் போட வேண்டும். ஜீலியட் சாண்ட்ராவை ஆதரிக்கிறாள். மற்றவர்களைச் சனி, ஞாயிறு நேரில் சந்தித்து ஓட்டுப் போடச் சொல்லிக் கேட்க முடிவு செய்கிறார்கள்.

முகவரிகளைத் தேடுகிறார்கள். ஒவ்வொரு முகவரியாகக் குறித்துக்கொள்கிறாள் சாண்ட்ரா. என்னதான் முடிவுசெய்து களத்தில் இறங்கினாலும், “ஒரு பிச்சைக்காரியைப் போல உணர்கிறேன்” என்று மீண்டும் அழத் தொடங்குகிறாள். மனு அவளை ஆற்றுப்படுத்தி கேட்டுப் பார்க்கலாம் என்று நம்பிக்கை கொடுக்கிறான்.

முகவரியைத் தேடிக் கண்டறிந்து முதலாவதாக ஒருவனைச் சந்திக்கிறாள். “நான் உனக்கு எதிராக வாக்களிக்கவில்லை, என் ஊக்கத்தொகைக்குத்தான் வாக்களித்தேன்” என்று சொன்னதோடு மட்டுமல்லாமல், “என் பெரிய மகள் படிப்பிற்காக மாதம் 60 யூரோ தேவைப்படுகிறது” என்று சொல்லி, அவளுக்கு ஆதரவாக வாக்களிக்க முடியாது என்கிறான்.

கொஞ்சம் நம்பிக்கை கொடுக்கும் விதமாக ஜுலியட்டோடு சேர்ந்து இன்னும் இரண்டு பேர் அவளுக்கு ஆதரவு கொடுக்கிறார்கள். மகிழ்ச்சியோடு உடன் வேலை செய்யும் தந்தையையும் மகனையும் சந்திக்கிறாள். “எனக்கு இந்த வேலை முக்கியம், எனக்காக இந்த உதவியைச் செய்யுங்கள்” என்று கேட்க, மகன் கோபமடைந்து தந்தையையும் சாண்டாரவையும் தள்ளிவிட்டுச் செல்கிறான். சாண்ட்ரா அவமானமாக உணர்கிறாள். ஆனாலும் மீதமிருப்பவர்களிடமும் முயற்சிசெய்து பார்த்துவிடலாம் என்று பயணிக்கிறாள்.

உடன் வேலை செய்யும் பெண்ணொருத்தியைச் சந்தித்து ஆதரவு கேட்கிறாள். அவளோ, “என் கணவனைப் பிரிந்து வந்துவிட்டேன், வீட்டிற்குத் தேவையான பொருள்களை எல்லாம் இனிமேல்தான் வாங்க வேண்டும். இந்த நேரத்தில் 1000 யூரோவை என்னால் இழக்க முடியாது” என்று சொல்லிவிட்டு வேகமாகச் சென்றுவிடுகிறாள். தோல்வி துவளச் செய்கிறது சாண்ட்ராவை.

நாடின் என்கிற ஒரு பெண்ணின் வீட்டிற்குச் சென்று அழைப்பு மணியை அழுத்துகிறாள், மெல்லிய குரலில் அம்மா இல்லையென்று சொல்லி குழந்தையைப் பேசச் சொல்கிறாள் நாடின். அவளின் குரல் கேட்ட சாண்ட்ரா, ஏன் நாடின் இப்படிச் செய்கிறாய், என்னிடம் பேசுவதற்கு என்ன என்று கேட்க, அழைப்பைத் துண்டிக்கிறாள் நாடின்.

சாண்ட்ராவின் இடத்தில் உங்களை வைத்து நினைத்துப் பாருங்கள். குழந்தைகள் முன்னால் அழக் கூடாது என்கிற வைராக்கியத்தில் தனியாகச் சென்று கதறியழுகிறாள் சாண்ட்ரா. ஆறுதலாக அவளை அணைத்துக் கொள்கிறான் மனு. ”போதும், இதற்குமேல் நான் யாரையும் சந்திக்க மாட்டேன். நடப்பது நடக்கட்டும்” என்று கோபம்கொள்கிறாள். “இல்லை, நான் உன்னை அழைத்துச் செல்கிறேன்” என்கிறான் மனு.

உடன் வேலை செய்யும் ஒருவனைச் சந்திக்கிறாள். வெள்ளிக்கிழமை ஊக்கத்தொகைக்காக வாக்களித்ததை நினைத்து வெட்கப்பட்டு அழுகிறான். சில நாள்களுக்கு முன்னால் அவனுக்காக அவள் செய்த உதவியைக்கூட மறந்ததற்காக மன்னிப்பு கேட்கிறான். திங்கள்கிழமை அவளுக்காக வாக்களிப்பேன் என்று உறுதி கொடுக்கிறான். இன்னொருவனைச் சந்திக்கிறாள். அவனோ எனக்குத் தேவை இருக்கிறது என்று மறுக்கிறான்.

தொலைதூரத்தில் தங்கியிருக்கும் இன்னொருத்தியைச் சந்திக்கிறாள். “என் கணவன் முடியவே முடியாதென்கிறான். ஆனாலும் இன்னொரு முறை உனக்காகப் பேசிப் பார்க்கிறேன்” என்று சொல்கிறாள். ஒருபாதி நம்பிக்கையோடும், ஒருபாதி அவநம்பிக்கையோடும் வீட்டிற்கு வருகிறாள்.

கணவன், பிள்ளைகள் கூடவே இருந்தும்கூடத் தனித்திருப்பதாக உணர்கிறாள். அவளையறியாமல் கண்ணீர்ப் பீறிட்டுக் கொண்டு வருகிறது. பொருளாதார அச்சம் என்னவென்பதை ரத்தமும் சதையுமாக உணர்ந்து கொண்டிருக்கிறாள். என்னதான் மனு அவளுக்கு ஆதரவாக இருந்தாலும் அவனைப் பார்த்துக் கேட்கிறாள், “நாம் பிரிந்துவிடுவோம் என்று எனக்குத் தோன்றுகிறது. ஏன் சொல்கிறேனென்றால், இப்போது நீ என்னைக் காதலிக்கவில்லை. இரக்கம் காட்டுகிறாய். நாம் நான்கு மாதங்களாக உறவு வைத்துக்கொள்ளவில்லை. அது உன்னைப் பாதிக்கவில்லையா?” என்று கேட்கிறாள். ”ஆம் பாதிக்கிறது. ஆனால் இந்த நிலைமை மாறுமென்று நம்புகிறேன். இப்படியே இருந்துவிடாதல்லவா?” என்கிறான்.

ஆனாலும் அவளை அறியாமல் அவளுக்குள் படர்ந்து கொண்டிருக்கும் அச்சத்தால் மனநலச் சிகிச்சைக்காக எடுத்துக்கொள்ளும் தீவிரமான மாத்திரைகளை மொத்தமாக விழுங்கிவிடுகிறாள். அந்நேரம் கணவனைக் கேட்டுச் சொல்கிறேன் என்று சொன்னவளை வீட்டிற்கு அழைத்து வருகிறான் மனு. “எனக்கு 1000 யூரோ தேவையில்லை, உனக்காக வாக்களிப்பேன்” என்கிறாள்.

மாத்திரைகளைச் சாப்பிட்டதைச் சொல்கிறாள். இருவரும் சாண்ட்ராவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்கள். பாதிப்பில்லாமல் சிகிச்சை எடுத்துக்கொண்டு இரவு வீடு திரும்புகிறாள். தோழியை வீட்டில்விட யோசிக்கும்போது, “உனக்காக நான் கணவனைப் பிரிந்து வந்துட்டேன்” என்கிறாள். கலங்கிப்போகின்றன சாண்ட்ராவின் கண்கள்.

ஓட்டெடுப்பு நடக்கிறது. எட்டுப்பேர் ஆதரவு. எட்டுப்பேர் எதிர்ப்பு. ஆனாலும் ஊக்கத்தொகையும் கொடுக்கிறேன். உனக்கு வேலையும் கொடுக்கிறேன். ஓர் ஒப்பந்த தொழிலாளி உனக்குப் பதிலாக வேலையிலிருந்து நீக்கப்படுவான் என்று சொல்கிறான் மேலாளர். எனக்கு வேலையே வேண்டாம். என்னால் யார் வேலையும் போக வேண்டாம். வேறு வேலை தேடிக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு, கம்பீரமாக வெளியேறுகிறாள். மனுவிற்கு அழைத்து, “நன்றாகப் போராடினோம், எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது” என்கிறாள் சாண்ட்ரா.

இந்த முதலாளித்துவ அமைப்பு மனிதர்களை, அதிலும் தொழிலாளர்களை ஒருவருக்கு இன்னொருவராக எதிராக நிறுத்துகிறது. ஒரு தொழிலாளியை இன்னொரு தொழிலாளியை வைத்து வீழ்த்துகிறது. தொழிலாளர்களுக்குள் போட்டியையும் விரோதத்தையும் வளர்த்துவிடுகிறது. பணத்தை எடுத்து வைத்து அன்பு, மரியாதை எல்லாவற்றையும் அர்த்தமிழக்கச் செய்கிறது. இனிமேல் நீங்கள் அன்பாயிருக்க வேண்டுமென்றால், முதலாளித்துவ சமூகமைப்பை, முதலாளித்துவ பொருளாதாரத்தை எதிர்த்துப் போராடத்தான் செய்ய வேண்டும்.

‘உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்!’

கட்டுரையாளர்: ஜோசப் ராஜா | கவிஞர் / திரைக்கதை ஆசிரியர்

தொடர்புக்கு: writer.josephraja@gmail.com

SCROLL FOR NEXT