இந்து டாக்கீஸ்

மக்கள் இயக்குநர்! - அஞ்சலி

செய்திப்பிரிவு

சமத்துவம், சமூக நீதி, குடும்ப உறவுகள் ஆகியவற்றைத் தூக்கிப்பிடித்த எளிய சிறு முதலீட்டுப் படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் வி.சேகர். உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரை பேசும் அவரு டைய சாமானியக் கதா பாத்திரங்கள், நகைச் சுவை உணர்வும் எள்ளலும் நக்கலும் கொண்டவை.

எந்தச் சிக்கலும் இல்லாத எளிய திரைக் கதைகள் மூலம், மார்க்சியம் வழியே தமிழ் தேசியம் என்கிற தனது படைப்புக் கோட்பாட்டைத் தன் படங்களில் நறுக்கென்ற வசனங்கள் மூலம் தூக்கிப்பிடித்தார்.

சிவப்புத் துண்டு அணிந்த கதாபாத்திரங்களை அவரது படங்களில் காணலாம். நட்சத்திரங்களை நாடாமல், நகைச்சுவை, குணச்சித்திர நடிகர்களைக் கொண்டே தொடர் வெற்றிகளைக் கொடுத்தது அவரது கலையாளுமையைச் சொல்லும்.

நுகர்வுக் கலாச்சாரத்தின் சிக்கல்களோடு அறிமுகமாகும் அவருடைய கதாபாத்திரங்கள், பட்டுத் திருந்துவதைத் தனது படங்களில் பாடமாக வைத்தார். அதனாலேயே ‘மக்களின் இயக்குநர்’ என்று பாராட்டப்பட்டார். அவரது அறிமுகப் படம் ‘நீங்களும் ஹீரோதான்’.

அதில், ஊதியம் வாங்கிக்கொண்டு நடிப்பை ஒரு தொழிலாகச் செய்யும் நட்சத்திரக் கதாநாயகர்களைத் தனிமனித வழிபாடு செய்வது சமூகத்துக்குப் பெரும் தீங்காக முடியும் என 35 ஆண்டுகளுக்கு முன்பே வெளிப்படையாக விமர்சித்த துணிச்சல் அவருக்கு உண்டு! 1990இல் தொடங்கி 2010வரை, ஒரு கன்னடப் படம் உள்பட, 18 படங்கள் 2 தொலைக்காட்சித் தொடர்கள் என இரு பத்தாண்டுகள் இயங்கிய வி.சேகர், தன்னுடைய மகனுக்கு கார்ல் மார்க்ஸ் எனப் பெயர் சூட்டியவர்.

‘சரவணப் பொய்கை’ (2013) என்கிற படத்தைத் தயாரித்து அதில் மகனைக் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். படத் தயாரிப்புக்குப் பெற்ற கடனே அவரைத் தடுமாற வைத்தது. உண்மையில் தமிழ் சினிமா அவருக்குத்தான் கடன்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT