உண்மைகளை மறைக்கும் மனிதர்கள் நிம்மதியிழக்கிறார்கள். உண்மைகளைத் தெரிந்துகொண்டே பார்க்காதது போலவும், கேட்காதது போலவும், பேசாதது போலவும் வாழப் பழகிக்கொண்டிருப்பவர்கள் எங்கும் நிறைந்திருக்கிறார்கள். ஆனால், உங்களுக்குத் தெரியுமா, உண்மையை மறைப்பது சில நேரத்தில் பொய் சொல்வதைவிடப் பெரிய குற்றமாகிவிடுகிறது.
துருக்கிய இயக்குநர் Nuri Bilge Ceylan இயக்கிய Three Monkeys திரைப்படம், மனிதர்களின் இந்த மௌன அரசியலை ஆழமாக ஆராய்கிறது. துருக்கிய சமூகத்தின் ஒரு குடும்பத்துக்குள் நிகழும் துரோகம், குற்றவுணர்வு, பொய் ஆகியவற்றின் வழியாக அதிகாரம், வர்க்க வேறுபாடு, சமூக அறம் ஆகியவற்றைப் பேசும் இத்திரைப்படம், பார்வையாளர்களுக்கு அவ்வளவு எளிதான தீர்ப்புகளை வழங்குவதில்லை.
2008ஆம் ஆண்டு வெளியான இந்தத் திரைப்படம், கான் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருதைப் பெற்றது. துருக்கியின் சார்பில் சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படத்துக்கான பிரிவில் ஆஸ்கர் விருதுக்கும் அனுப்பப்பட்டது. மனிதர்களின் உளவியல் சிக்கல்களையும் சமூகத்தின் மறைமுக அதிகார உறவுகளையும் காட்சிமொழியின் மூலம் வெளிப்படுத்துவதில் தனித்துவம் பெற்ற நூரியின் முக்கியமான படைப்புகளில் இதுவும் ஒன்று.
Distant, Climates, Once Upon a Time in Anatolia, Winter Sleep போன்ற படைப்புகளின் வழியாக உலக சினிமாவில் தனக்கென ஓர் இடத்தை உருவாக்கிய இயக்குநர், இத்திரைப்படத்தில் ஒரு குடும்பத்தின் வீழ்ச்சியைத் துருக்கியின் சமூகத்தின் முரண்பாடுகளோடு இணைக்கிறார்.
'மூன்று குரங்குகள்' என்கிற தலைப்பு, எதையும் பார்க்காதது, கேட்காதது, பேசாதது என்கிற அடையாளத்தை நினைவூட்டுகிறது. உண்மையை அறிந்தும் அதை வெளிப்படுத்த மறுக்கும் மனிதர்களின் மனநிலைக்கு இந்த உருவகம் மிகச் சரியாகப் பொருந்துகிறது. ஆனால், நூரி பில்ஜின் திரைப்படத்தில் இது வெறும் பழமொழியின் விளக்கமாக நின்றுவிடுவதில்லை.
ஒவ்வொரு மனிதரும் தங்களுக்குச் சாதகமான உண்மையை மட்டும் ஏற்றுக்கொண்டு, தங்களுக்குச் சிரமம் தரும் உண்மைகளை மறைக்க முயலும் உளவியல் நிலையாக விரிகிறது.
கதையின் மையத்தில் ஓர் அரசியல் பிரமுகரான செர்வெட் இருக்கிறார். தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர் ஓட்டிச் செல்லும் கார் மோதி ஒருவர் இறந்துவிடுகிறார். அந்த விபத்து அவரது அரசியல் வாழ்க்கையைப் பாதிக்கக்கூடும் என்பதால், தண்டனையை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக வேறொருவரை அந்தக் குற்றத்திற்குப் பொறுப்பேற்கச் செய்ய முடிவெடுக்கிறார். தனது கார் ஓட்டுநரான ஐயூப்பிடம் பணம் கொடுத்து, தனக்குப் பதிலாகச் சிறைக்குச் செல்லும்படிக் கேட்கிறார்.
ஐயூப் அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்கிறார். பணத்திற்காகத் தண்டனையை ஏற்றுக்கொள்ளும் அவரது முடிவு, குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளையும் சமூகத்தின் அதிகார ஏற்றத்தாழ்வுகளையும் வெளிப்படுத்துகிறது.
ஐயூப் சிறைக்குச் சென்ற பிறகு, அவரது மனைவி ஹசர், மகன் இஸ்மாயில் ஆகியோர் வீட்டில் தனியாக வாழ்கிறார்கள். சிறையில் இருக்கும் கணவனின் இல்லாமை, குடும்பத்தில் புதிய உறவுச் சிக்கல்களை உருவாக்குகிறது. ஹசருக்கும் செர்வெட்டுக்கும் இடையே உறவு ஏற்படுகிறது. அரசியல் அதிகாரமும் பணமும் கொண்ட செர்வெட், ஐயூப் குடும்பத்தின் தனிப்பட்ட வாழ்க்கைக்குள்ளும் நுழைகிறார்.
மகன் இஸ்மாயில் இந்த உறவை அறிந்துகொள்கிறான். ஆனால், அவனால் அதை எதிர்கொள்ள முடியவில்லை. தந்தையின் சிறைவாசம், தாயின் உறவு, குடும்பத்தின் பொருளாதார நிலை எனப் பல அழுத்தங்களுக்குள் அவன் சிக்கிக்கொள்கிறான்.
இவ்வாறு ஒரு விபத்தை மறைப்பதற்காக உருவாக்கப்பட்ட பொய், இன்னொரு பொய்யையும் அதிலிருந்து புதிய குற்றங்களையும் உருவாக்குகிறது. உண்மையை மறைப்பதற்கான ஒவ்வொரு முயற்சியும் குடும்பத்தின் உறவுகளை மேலும் சிதைக்கிறது. இங்கு குற்றம் என்பது ஒருவரின் செயலால் மட்டும் உருவாவதில்லை; அந்தச் செயலுக்குத் துணைபோகிறவர்களின் மௌனத்தாலும் உருவாகிறது.
இந்தப் படத்தில் முக்கியமானது செர்வெட் என்கிற கதாபாத்திரம். அவர் ஓர் அரசியல்வாதி மட்டுமல்ல; அதிகாரமும் பணமும் எவ்வாறு சட்டத்தின் செயல்பாட்டைத் தங்களுக்குச் சாதகமாக வளைக்கின்றன என்பதன் குறியீடு. ஒரு விபத்தில் மனித உயிர் பறிபோகிறது. ஆனால் அந்த உயிரிழப்புக்கான பொறுப்பை ஏற்க வேண்டியவர், தனது அரசியல் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காகப் பொருளாதார ரீதியாகப் பலவீனமான ஒருவரைத் தண்டனையை ஏற்கச் செய்கிறார்.
குற்றம் செய்தவர் அதிகாரத்தின் பாதுகாப்பில் இருக்கிறார்; அதற்குப் பதிலாகத் தண்டனையைச் சுமப்பவர் தனது குடும்பத்தின் எதிர்காலத்துக்காகச் சிறைக்குச் செல்கிறார். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிற ஜனநாயகக் கோட்பாட்டுக்கும் நடைமுறையில் நிலவும் வர்க்க ஏற்றத்தாழ்வுக்கும் இடையிலான இடைவெளியை இந்தச் சம்பவம் வெளிப்படுத்துகிறது.
இங்கு ஐயூப்பின் முடிவையும் எளிதாக நியாயப்படுத்திவிட முடியாது. அவர் பணத்திற்காகத் தண்டனையை ஏற்றுக்கொள்கிறார். குடும்பத்தின் நலனுக்காகத் தியாகம் செய்கிறேன் என்று நம்புகிறார். ஆனால் அந்த முடிவு அவரின் மனைவியையும் மகனையும் வேறொரு நெருக்கடிக்குள் தள்ளுகிறது.
வறுமை மனிதர்களின் தேர்வுகளை எவ்வாறு குறுக்குகிறது என்பதற்கு ஐயூப் ஓர் எடுத்துக்காட்டு. பொருளாதாரத் தேவையின் அழுத்தத்தில் எடுக்கப்படும் ஒரு முடிவு, அறம் சார்ந்த கேள்விகளிலிருந்து ஒருவரை விடுவித்துவிடுவதில்லை. அதேவேளையில், அந்த முடிவை எடுக்கத் தூண்டிய சமூகப் பொருளாதாரச் சூழலையும் அவ்வளவு எளிதாகப் புறக்கணித்துவிட முடியாது.
ஹசரின் கதாபாத்திரமும் பல அடுக்குகளைக் கொண்டது. கணவன் சிறையில் இருக்கும்போது, தனிமையும் பொருளாதார நெருக்கடியும் அவளைப் பாதிக்கின்றன. செர்வெட்டுடனான உறவில் அவள் அடையும் நெருக்கம் வெறும் பாலியல் துரோகமாக மட்டும் சித்தரிக்கப்படவில்லை. பணமும் அதிகாரமும் கொண்ட ஆணுக்கும், பொருளாதாரப் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவின் அதிகாரச் சமமின்மையையும் கவனிக்க வேண்டியிருக்கிறது.
அவளுடைய விருப்பங்களும் பலவீனங்களும் ஒன்றோடு மற்றொன்று மோதுகின்றன. இஸ்மாயில் இந்த உறவை அறிந்துகொண்ட பிறகு, குடும்பத்தின் மீதான அவனுடைய நம்பிக்கை சிதைகிறது. தந்தையின் குற்றவுணர்வு, தாயின் ரகசியம், அரசியல்வாதியின் அதிகாரம் ஆகியவற்றுக்கிடையே அவன் தனது நிம்மதியை, இளமையை இழக்கிறான்.
இத்திரைப்படத்தின் இயக்குநர் அணுகுமுறையும் தனித்துவமானது. நூரி பில்ஜ் பரபரப்பான சம்பவங்களைக் கொண்டு பார்வையாளர்களைத் தொடர்ந்து ஈர்க்க முயல்வதில்லை. நீண்ட காட்சிகள், அமைதியான உரையாடல்கள், முகபாவனைகளின் நுணுக்கங்கள், கதாபாத்திரங்களுக்கு இடையே நிலவும் மௌனம் ஆகியவற்றின் வழியாக உணர்வுகளை உருவாக்குகிறார்.
ஒரு கதாபாத்திரம் பேசாத தருணத்தில்கூட அதன் மனநிலையைப் புரிந்துகொள்ள முடிகிறது. குறிப்பாக, ஜன்னலுக்கு வெளியே தெரியும் நகரம், மழை, இருள், தனிமையான அறைகள் ஆகியவை கதாபாத்திரங்களின் உளவியல் நிலைகளோடு இணைந்து செயல்படுகின்றன.
இந்தத் திரைப்படத்தில் ஒளிப்பதிவாளர் கோகான் திரியாகியின் (Gökhan Tiryaki) பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. கதாபாத்திரங்களின் முகங்களையும், அவர்கள் வாழும் இடங்களையும் அவர் பதிவு செய்யும் விதம், அந்த வாழ்க்கையின் இருண்ட தன்மையை உணர்த்துகிறது.
படத்தின் பின்னணி இசையைவிடச் சுற்றுப்புற ஒலிகளுக்கே இயக்குநர் அதிக முக்கியத்துவம் அளிக்கிறார். மௌனம், கதவு மூடப்படும் சத்தம்,வெளியிலிருந்து கேட்கும் நகரத்தின் இரைச்சல் என ஒலிகளே பல நேரத்தில் உரையாடல்களின் இடத்தைப் பிடிக்கின்றன. இசை இல்லாத இடத்தில் பார்வையாளரின் மனமே இசையாக மாறுகிறது.
நூரி பில்ஜ் ஒரு நேர்காணலில், இப்படத்தை அரசியல் விமர்சனமாக மட்டுமே சுருக்கிவிட விரும்பவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார். அரசியல் கூட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் படமாக்கியிருந்தாலும், அவற்றைத் திரைக்கதையிலிருந்து விலக்கி, மனிதர்களின் உளவியல் முரண்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்ததாகக் கூறுகிறார்.
இது அவரது படைப்பின் தனித்துவத்தைப் புரிந்துகொள்ள உதவுகிறது. அரசியல் என்பது வெளிப்படையான முழக்கங்களில் மட்டுமல்ல; மனிதர்களின் அன்றாட முடிவுகளிலும், அவர்களுக்கிடையிலான அதிகார உறவுகளிலும், மறைக்கப்படும் உண்மைகளிலும்கூட இயங்கிக் கொண்டிருக்கிறது.
படத்தின் தலைப்புக்கு இயக்குநர் அளிக்கும் விளக்கமும் சிந்திக்கத்தக்கது. உண்மையை மறைப்பதற்காக மனிதர்கள் தங்களுக்குள் உருவாக்கிக்கொள்ளும் மனநிலையைத்தான் மூன்று குரங்குகளின் உருவகம் குறிக்கிறது. கண்ணை மூடிக்கொள்வது என்பது அறியாமை அல்ல; தெரிந்துகொள்ள விரும்பாத மனநிலை.
காதுகளை மூடிக்கொள்வது என்பது கேட்க முடியாமை அல்ல; கேட்க வேண்டிய உண்மையைத் தவிர்ப்பது. வாயை மூடிக்கொள்வது என்பது பேச இயலாமை அல்ல; பேசினால் ஏற்படக்கூடிய விளைவுகளுக்கு அஞ்சித் தன்னைத்தானே மௌனப்படுத்திக்கொள்வது.
இந்த உருவகம் துருக்கிய சமூகத்தின் வரலாற்றையும் நினைவுக்குக் கொண்டுவருகிறது. அரசியல் வன்முறைகள், அதிகாரப் போட்டிகள், சமூக முரண்பாடுகள் ஆகியவற்றை எதிர்கொள்ளும்போது, ஒரு சமூகம் அவற்றை நினைவில் வைத்திருக்கிறதா அல்லது மறக்க நினைக்கிறதா என்கிற கேள்வி முக்கியமானது.
வரலாற்றின் அசௌகரியமான உண்மைகளைப் பேசாமல் இருப்பது தற்காலிக அமைதியை உருவாக்கலாம். ஆனால், அந்த மௌனம் அநீதியை முடிவுக்குக் கொண்டுவருவதில்லை. மாறாக, அடுத்த தலைமுறைக்கும் அதைக் கடத்துகிறது. இந்தக் கோணத்தில் பார்க்கும்போது, ஒரு குடும்பத்தின் ரகசியத்தை, துருக்கிய சமூகத்தின் பரந்த அரசியல் மௌனத்துக்கான உருவகமாகவும் பார்க்கலாம்.
அரசியல் செல்வாக்குக் கொண்டவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துக்கொள்ளும் நிகழ்வுகள், பொருளாதாரத்தில் பலவீனமானவர்கள் பிறருடைய குற்றங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டிய நிலைகள், குடும்பத்தின் கௌரவம் என்கிற பெயரில் மறைக்கப்படும் உண்மைகள் எனப் பலவற்றுடன் இத்திரைப்படத்தை இந்தியாவின் சமூக வாழ்க்கையிலும்கூடப் பொருத்திப் பார்க்கலாம். அதிகாரத்தில் இருப்பவர்கள் தவறு செய்யும்போது அதை எதிர்த்துப் பேச வேண்டியவர்கள் மௌனமாக இருக்கிறார்கள். அந்த மௌனம் சிலருக்கு வசதியாகவும் பலருக்கு வலியாகவும் மாறுகிறது.
Three Monkeys திரைப்படம் இறுதியில் ஒரு குடும்பத்தின் சிதைவைக் காட்டுவதோடு முடிந்துவிடுவதில்லை. உண்மையை மறைப்பதன் மூலம் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துவிடலாம் என்று மனிதர்கள் நம்புகிறார்கள். ஆனால், மறைக்கப்பட்ட உண்மை வேறொரு வடிவத்தில் திரும்பி வருகிறது. ஒரு பொய் இன்னொரு பொய்யை உருவாக்குகிறது; ஒரு மௌனம் இன்னொரு மௌனத்தை பிரசவிக்கிறது. குற்றம் செய்தவர் மட்டும் குற்றவாளி அல்ல; குற்றம் தொடர்வதற்கு வழிவகுக்கும் சமூகச் சூழலும் கேள்விக்குள்ளாக்கப்படத்தான் வேண்டும்.
நீதியைப் பற்றிப் பேசுவதற்கு முன்பாக உண்மையை எதிர்கொள்ளத் துணிவு வேண்டும். அதிகாரம், பணம், குடும்ப உறவு, சமூக அந்தஸ்து ஆகியவற்றின் பெயரால் உண்மையை மறைக்கும் ஒவ்வொரு தருணமும் நீதியின் வாய்ப்பைச் சிதைக்கிறது. மனிதர்கள் தங்கள் தவறுகளை ஒப்புக்கொண்டு வாழ்வதற்குப் பதிலாக, அவற்றை மறைத்துக்கொண்டு வாழ முயற்சிக்கும்போது, அவர்கள் கட்டமைக்கும் உலகம் இறுதியில் அவர்களையே சிறைப்படுத்துகிறது.
நூரி பில்ஜின் Three Monkeys ஒரு குடும்பத்தின் தனிப்பட்ட துயரத்தைப் பேசும் திரைப்படமாகத் தொடங்கி, அதிகாரத்தின் முன்னால் மௌனமாக இருக்கும் சமூகத்தின் அரசியல் மனநிலையைப் பற்றிய ஆழமான விவாதமாக விரிகிறது. உண்மையைப் பார்க்காமல் இருப்பதால் அது மறைந்துவிடுவதில்லை; உண்மையைக் கேட்காமல் இருப்பதால் அதன் சத்தம் அடங்கிவிடுவதில்லை; உண்மையைப் பேசாமல் இருப்பதால் அதன் விளைவுகளிலிருந்து தப்பித்துவிடவும் முடியாது. சில நேரத்தில் ஒரு சமூகத்தின் மிகப்பெரிய குற்றம், செய்த அநீதி அல்ல; அந்த அநீதியைத் தெரிந்துகொண்ட பிறகும் எதுவும் நடக்காதது போல மௌனமாக இருந்ததுதான்!
கட்டுரையாளர் : ஜோசப் ராஜா | கவிஞர் / திரைக்கதை ஆசிரியர்
தொடர்புக்கு: writer.josephraja@gmail.com