தீயவர் குலை நடுங்க

 
இந்து டாக்கீஸ்

தீயவர் குலை நடுங்க: திரைப் பார்வை - அர்ஜுனின் அசாதாரணப் புலன் விசாரணை!

ஆர்.சி.ஜெயந்தன்

’சூது கவ்வும்’, ‘ஜிகர்தண்டா’, ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ தொடங்கி, ‘டார்க் காமெடி’ வகைத் திரைப்படங்களைத் தமிழ் ரசிகர்கள் வயிறுவலிக்க சிரித்தபடி வரவேற்கத் தொடங்கினார்கள். ஆனால், குற்றத் த்ரில்லர் வகைப் படங்களில் புலன் விசாரணை என்பது முற்றிலும் புதிதாகவும் சுவாரசியமாகவும் இருந்தால் தவிர அவற்றை ஆதரிக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கும் அவர்களின் மனப்பாங்கு, ‘ஓடிடியில் ஓட்டி ஓட்டிப் பார்த்துக்கொள்ளலாம்’ என்பதாக மாறிவிட்டது. ‘தீயவர் குலை நடுங்க’ ஒரு குற்றத் த்ரில்லர்.

அர்ஜுன் என்கிற ‘கமிட்டட்’ நடிகரை நம்பி இந்தப் படத்தைப் பெரிய திரையில் பார்க்கலாமா? கதையோட்டத்தின் வேகம், திரை அனுபவத்துக்கான வாசலைத் திறந்ததா? வாருங்கள் சுருக்கமாக அலசுவோம்.

ஜெபா என்கிற எழுத்தாளர் ‘காவிரிக்கரை’ என்கிற நாவலை எழுதி முடித்திருக்கிறார். அவர் அதை பப்ளிஷ் செய்யும் முன்பே கொலையாகிவிடுகிறார். ஓர் எழுத்தாளருக்கு யார் எதிரியாக இருக்க முடியும் என்கிற கோணத்தில் காவல் ஆய்வாளர் மகுடபதி இந்த வழக்கை விசாரணை செய்யத் தொடங்குகிறார். கிடைக்கத் தொடங்கும் சிக்கலான ஆதாரங்கள், மகுடபதியை ஒரு உயர் நடுத்தர வர்க்க அடுக்குமாடிக் குடியிருப்பில் கொண்டுபோய் நிறுத்துகின்றன.

அங்கே வாழும் நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு நடுவே அவர் குற்றவாளியைத் தேடத் தொங்கும்போது, அங்கே நடந்த ஒரு பெருங்குற்றத்தின் பின் கதைகள் விரியத் தொடங்குகின்றன. அதில் தொடர்புடையவர்களுக்கும் எழுத்தாளர் ஜெபாவுக்கு என்ன தொடர்பு? மகுடபதி குற்றவாளியை நெருங்கினாரா இல்லையா என்பது கதை.

வேல.ராமமூர்த்தியிடம் தற்காப்புக் கலைகள் கற்றுக்கொண்ட மீரா - குறட்டை நோயால் அவதிப்படுபவர்களை நன்கு தூங்க வைக்கும் உயிர்க்காற்று கருவியைப் பொறுத்தும் பணியில் இருக்கும் பிரவீன் ராஜா ஆகிய மூன்று கதாபாத்திரங்கள் ஆக்‌ஷன் கிங்கின் விசாரணை வளையத்துக்குள் வரும்போது கதை திரைக்கதை வேகமெடுக்கிறது. ஆனால், எங்கெல்லாம், இக்கதையில் இயக்குநர் போக்குக் காட்டுவார் என்பதை ‘ஸ்மெல்’ செய்துவிடும்படியாக இரண்டாம் பாதியின் திரைக்கதை விரிவதுதான் இப்படத்தின் ஆகப் பெரிய பலகீனம்.

அர்ஜுன் தன் தோளில் தாங்கும் அசாதாரணப் புலன் விசாரணை முறையின் முதல் 30 நிமிடங்கள் நிமிர்ந்து உட்கார வைத்தாலும் அதன் பிறகான விசாரணை கொண்டு செல்லும் இடங்கள் யூகிக்கும் விதமாக இருக்கின்றன. என்றாலும் தன்னுடைய நடிப்பு மற்றும் சண்டைக்காட்சிகளில் காட்டும் வேகம் ஆகியவற்றால் ரசித்துப் பார்க்க வைக்கிறார்.

வேல.ராமமூர்த்தி - ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய இருவரும் பங்குபெற்றிருக்கும் பைக் - கார் சேசிங்ஸ், சண்டைக்காட்சிகள் இரண்டிலும் ஒரு புதிய தலைமுறை சண்டை இயக்குநரின் நேர்த்தியுடன் வடிவமைத்திருக்கிறார் காளி. கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் ஐஸ்வர்யா ராஜேஷ் கொடுத்திருக்கும் அர்ப்பணிப்பைப் பாராட்டலாம்.

படத்தின் முக்கியமான கட்டத்தில் எதிர்மறைக் கதாபாத்திரத்தில் வரும் ராம்குமார் சிவாஜி கணேசன் உண்மையாகவே அதிர்ச்சியை ஏற்படுத்துகிறார். இப்படியொரு கதாபாத்திரத்தைத் துணிந்து ஏற்றிருப்பதுடன் அக்கதாபாத்திரத்துக்கு நடிப்பின் மூலம் முழுமையான நியாயமும் செய்திருப்பது அவர் தொடர்ந்து நடித்திருக்கலாம் என்று எண்ண வைக்கிறது.

அவரும் எழுத்தாளர் ஜெபாவும் உரையாடும் காட்சியில் ஏகப்பட்ட ‘சவுண்ட் கட்’களை பரிந்துரைத்திருக்கிறது தணிக்கை. வெட்டு வாங்குகிற அளவுக்கு ஏன் வசனங்களை எழுத வேண்டும் என இயக்குநரைக் கேட்கத் தோன்றுகிறது. இன்றைய இயக்குநர்கள் தணிக்கை விதிகள் குறித்துத் தெரிந்துகொண்டு படமெடுக்க வந்தால், இதுபோன்ற ‘சவுண்ட் மியூட்’களையும் விஷுவல் பொல்யூசன்களையும் படம் பிடிக்காமலேயே தவிர்த்துவிட முடியும்.

ஐஸ்வர்யா ராஜேஷ் தனது கதாபாத்திரத்தின் இரண்டு பரிமாணங்களைத் தன்னுடைய உணர்வுத் தோரண நடிப்பால் ஒளிரவைத்துவிடுகிறார். கீதாவாக வரும் அபிராமி வெங்கடாசலம் சிறார் நடிகர் அனிகா ஆகியோரின் பங்களிப்பும் மெச்சத்தக்க அளவில் இருக்கின்றன.

சரவணன் அபிமன்யுவின் ஒளிப்பதிவு, 500 குடும்பங்கள் வாழும் அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தின் இருண்ட பக்கங்களை நெருக்கமாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறது. வலுவான கதைசொல்லல் எனக் கருதிய இயக்குநர், அதன் பலகீனமான பகுதிகளைச் சீர்செய்திருந்தால், இந்த மாறுபட்ட நட்சத்திரக் காம்போவுடன் வந்திருக்கும் குற்றத் திரில்லர் அதன் முழுமையான தாக்கத்தைக் கொடுத்திருக்கும்.

SCROLL FOR NEXT