இந்து டாக்கீஸ்

The Old Oak: அன்புக்காக அலைந்து திரியும் அகதிகள் | சினிமாவும் அரசியலும் 24

ஜோசப் ராஜா

போர் மானுட வாழ்க்கையை எப்படித் தலைகீழாகத் திருப்பிப் போடும் என்று தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், போரால் அகதிகளாக்கப்பட்ட மனிதர்களைப் பின்தொடர்ந்து சென்று பாருங்கள். நிர்மூலமாக்கப்பட்ட வலியை நெஞ்செல்லாம் சுமந்துகொண்டு ஒவ்வோர் எல்லையிலும் பசியோடும் தாகத்தோடும் பிழைத்திருக்க ஒரு துண்டு இடம் கிடைக்குமா என்று எதிர்பார்த்துக் காத்திருக்கும் சூழ்நிலை இதயத்தை உடைத்துவிடக்கூடியது.

பிரித்தானிய சினிமாவின் மிக முக்கியமான இயக்குநரான கென் லோச்சின் கடைசித் திரைப்படமான இது, நேரடியான யுத்தம் பற்றிய படமல்ல. ஆனால் யுத்தத்தால் அகதிகளாக்கப்பட்ட மனிதர்களைப் பற்றிய படம். யுத்தத்தைப் புரிந்துகொள்வது எளிது. ஆனால், யுத்தத்தால் அகதிகளாக்கப்படும் மனிதர்களின் வாழ்க்கையை அவ்வளவு எளிதாகப் புரிந்துகொள்ள முடியாது. ஒவ்வொரு நாளும் நூறு முறையாவது யுத்தத்தை நினைத்துக்கொண்டே வாழ்வதெல்லாம் ஒரு வாழ்க்கையா?

சமூக அரசியல் கதைகளைத் தேர்ந்தெடுத்து இயக்கக்கூடிய இயக்குநர் கென் லோச் இந்தத் திரைப்படத்தையும் மானுட நேசம் நிறைய இயக்கிக் கொடுத்திருக்கிறார். தொழிலாளர்களின் வாழ்க்கை, வறுமை, வேலையின்மை, குடியேற்றம், வர்க்கப்போராட்டம், அரசின் அலட்சியம் என எல்லாவற்றையும் மிகுந்த நேர்மையோடும், மனிதநேயத்தோடும் தன்னுடைய திரைப்படங்களில் அணுகியவர். கதை மட்டும் சொல்லாமல், சமூகத்தின் காயங்களையும் சொல்ல வேண்டுமென்று நினைத்தவர், சொன்னவர். கான் திரைப்பட விழாவின் உயரிய விருதை ஒருமுறைக்கு மேல் வென்ற ஒருசில இயக்குநர்களில் கென் லோச்சும் ஒருவர்.

          

இதுவரையிலும் ஏழ்மை பற்றி எத்தனையோ திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால், கென் லோச் மாதிரியான மிகச் சில இயக்குநர்கள்தான், இந்தச் சமூகம் எப்படி ஏழ்மையை உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்று திரைப்படங்களில் காட்டினார்கள். உழைக்கும் வர்க்கத்து மனிதர்களின் குரலை உலக சினிமாவில் பதிவுசெய்யத் துடித்தவர் கென் லோச். பொழுதுபோக்குவதற்காக அல்லாமல் சிந்திக்கவும் கோபப்படவும் வெட்கப்படவும் வைக்க வேண்டும் கலை என்பதில் உறுதியாக இருந்தவர்.

போரில் எல்லாவற்றையும் இழந்து உடுத்தியிருக்கும் துணியோடு, குழந்தைகளை அழைத்துக்கொண்டு, வயதானவர்களை அழைத்துக்கொண்டு சொந்த மண்ணைவிட்டு, தங்களுக்கு எந்த விதத்திலும் சம்பந்தமில்லாத வேறு மொழிபேசுகின்ற ஒரு மண்ணிற்கு, வேறு கலாச்சாரம், பண்பாடு கொண்ட ஒரு மண்ணிற்கு இடம்பெயர்வது என்பது உண்மையிலேயே சவாலானதுதான்.

இன்னொரு பக்கம் ஏற்கெனவே அங்கே வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள் இந்த அகதிகளின் வருகையை எப்படிப் பார்ப்பார்கள்? மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வார்களா இல்லை, தங்களுடைய இடத்தைப் பங்குபோட வந்திருக்கிறார்கள் என்கிற பதட்டத்தோடு பார்ப்பார்களா? இந்தத் திரைப்படம் அந்தப் பதட்டத்தைத்தான் வெளிப்படுத்துகிறது.

இங்கிலாந்தின் வடகிழக்கு கிராமம். ஒரு காலத்தில் சுரங்கத் தொழில் சிறப்பாக நடந்து கொண்டிருந்த இடம். 2016 காலக்கட்டத்தில் சுரங்கங்கள் எல்லாம் மூடப்பட்டு, வாழ்ந்து கெட்ட கிராமம்போல இருக்கிறது. சிரியாவில் நடந்து கொண்டிருக்கும் யுத்தத்தால் அகதிகளாக்கப்பட்ட மனிதர்கள் சிலர் அந்தக் கிராமத்திற்கு வருகிறார்கள்.

உள்ளூர் மக்கள் அவர்களை வெறுப்போடு பார்க்கிறார்கள். ஒருசிலர் அவர்களைத் திட்டத் தொடங்குகிறார்கள். அகதிகளில் ஒருவரும், புகைப்படக் கலைஞருமான யாரா, திட்டுகிற ஒருவனைப் படம் எடுக்க, பிரச்சினை இன்னும் அதிகமாகிறது. கடைசியில் அவன் கேமராவைப் பிடுங்க, அவள் வாங்க முயற்சிக்க கீழே விழுந்து உடைகிறது கேமரா.

தி ஓல்ட் ஓக் என்கிற பெயரில் அந்தக் கிராமத்தில் சிறிய மதுபான விடுதி நடத்திக் கொண்டிருக்கும் டிஜே என்றழைக்கப்படும் பாலண்டைன் அகதிகளுக்கு உதவி செய்கிறார். அகதிகளுக்காக உள்ளூர் மக்களிடம் பேசுகிறார். ஆனால் அவர் பேச்சைக் கேட்காத உள்ளூர் மக்களில் சிலர் அகதிகளை நோக்கிச் சுடும் சொற்களை வீசிக்கொண்டிருக்கிறார்கள். முன்னாள் சுரங்கத் தொழிலாளர்களின் காலி வீடுகளில் தங்க வைக்கப்படுகிறார்கள் அகதிகள்.

கிராமத்தில் எங்கும் எங்கெங்கும் புதிதாகக் குடிவந்திருக்கும் அகதிகள் பற்றிய பேச்சு நிரம்பியிருக்கிறது. மதுபானக்கடையில் சொல்லவே வேண்டாம், கொஞ்சம் குடிக்கத் தொடங்கியவுடன் வெறுப்பின் வார்த்தைகள் நிரம்பி வழியத் தொடங்குகின்றன. மதுபானக் கடைக்கு வரும் யாரா, கேமராவை உடைத்தவனை விசாரிக்கிறாள் டிஜேவிடம். யாரென்று சரியாகத் தெரியவில்லை என்று சொல்லி அனுப்புகிறார் அவர்.

அவளைப் பார்த்துக் கொண்டிருக்கும் உள்ளூர்வாசிகள், உரிமையோடு உள்ளே வருகிறாள், இன்னும் கொஞ்ச நாள் போனால், பள்ளிவாசல் கட்டுவார்கள் பாருங்கள் என்று கிண்டல் செய்கிறார்கள். வழியில் உடைத்தவனைச் சந்திக்கும் யாரா, கேமராவைச் சரிசெய்து தரும்படி சண்டை போடுகிறாள். அவனோ ”உன் நாட்டுக்குத் திரும்பிப் போ” என்று வெறுப்பின் வார்த்தைகளால் அவளைக் காயப்படுத்துகிறான். அங்கு வரும் டீஜே அவளைச் சமாதானம் செய்து அழைத்துச் செல்கிறார்.

அந்தக் கிராமத்தில் சுரங்கத் தொழில் உச்சத்தில் இருந்த நேரம் அங்கு நடந்த எல்லாவற்றையும் பதிவுசெய்த சில கேமராக்கள் டீஜேவிடம் இருக்கின்றன. அதை எடுத்துக்கொள்ளச் சொல்கிறார் யாராவிடம். யோசிக்காமல் நன்றி சொன்ன யாரா, என்னுடைய கேமராதான் எனக்கு வேண்டும், அது எனக்கு முக்கியமானது என்று வலியுறுத்திச் சொல்கிறாள். கேமராவைச் சரிசெய்யக்கூடிய கடைக்கு அழைத்துச் சென்று கொடுக்கிறார் டீஜே. ”என்னிடம் பணமில்லை” என்று சொல்லும் யாராவிடம் ”நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று சொல்கிறார் டீஜே.

உதவி செய்யும் இதயங்கொண்ட உள்ளூர்ப் பெண்மனி ஒருவரும், டீஜேவும் சேர்ந்து அகதிகளின் குடும்பங்களுக்குத் தேவையான பொருள்களையும், உணவு வகைகளையும் நன்கொடையாக உள்ளூரிலும் பக்கத்திலிருக்கும் கிராமங்களிலும் தேவாலயத்திலும் பெற்று, ஒவ்வோர் அகதி குடும்பத்துக்கும் பகிர்ந்தளிக்கிறார்கள். அவர்களோ இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றியை வெளிப்படுத்துகிறார்கள். கேமராவைச் சரிசெய்த டீஜே, யாராவிடம் சென்று கொடுக்க, மகிழ்ச்சியோடு வாங்கிக்கொள்கிறாள். டீஜேவை வீட்டிற்குள் அழைத்து தேநீர் பரிமாறுகிறார்கள் யாராவும் அம்மாவும்.

வீட்டிலிருக்கும் குழந்தைகளோடு பேசுகிறார் டீஜே. யாராவின் தங்கை நான்கைந்து பொம்மைகளை வரிசையாக அடுக்கி வைத்திருக்கிறாள். பொம்மைகளை டீஜேவிடம் எடுத்துக்காட்டி ஒவ்வொரு பொம்மைக்குமான பெயரைச் சொல்கிறாள். அவை வெறும் பொம்மைகளல்ல, சிரியாவில் இருந்த அந்தச் சிறுமியின் தோழிகள் என்பதை அறிந்த டீஜே கண்கள் கலங்குகிறார்.

தன்னுடைய கேமராவால் அந்த ஊரையும் ஊரின் மக்களையும் அழகாகக் காட்சிப்படுத்திக் கொண்டிருக்கிறாள். பள்ளி விளையாட்டு விழாவில் ஒரு சிறுமி மயங்கிவிழ, அவளுக்கு உதவிசெய்து வீட்டிற்கு அழைத்துச் செல்கிறாள் யாரா. அங்குவரும் அந்தச் சிறுமியின் அம்மா, கடுமையான வார்த்தைகளால் திட்டி, கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுகிறார்.

மனைவி, மகனைப் பிரிந்து தனியாக வாழ்ந்துகொண்டிருக்கும் டீஜேவிற்குத் துணையாக இருக்கிறது மாறா என்கிற நாய். அந்த நாய் இறந்துபோக உடைந்து போகிறார் டீஜே. உணவெடுத்துக் கொண்டு அவரைப் பார்க்க வருகிறார்கள் யாராவும் அம்மாவும். வாழ்க்கையில் சிலநேரம் வார்த்தைகளுக்குப் பதிலாக உணவு மட்டும் போதும் என்று சொல்லும் இடம் முக்கியமானது.

இருபது வருடங்களாகப் பயன்படுத்தாமல் இருக்கும் தன்னுடைய உணவகத்தைத் திறக்கலாம் என்று முடிவுசெய்கிறார் டீஜே. உள்ளூர் மக்களையும் அகதிகளையும் ஒன்றுசேர்க்கப் பயன்படலாம் என்று நம்புகிறார். உணவுச் சந்திப்பு உற்சாகமாக நடக்கிறது. அவர் நினைத்தபடியே கொஞ்சம் நெருங்கி வருகின்றன இரு துருவங்களும். இதுவரையிலும் தான் எடுத்த ஒளிப்படங்களைப் போட்டுக் காட்டுகிறாள் யாரா. மகிழ்ச்சியில் கண்கள் கலங்கிய மக்கள் இன்னும் அவர்களோடு நெருங்குகிறார்கள். வெறுப்பு மெல்ல மறையத் தொடங்குகிறது.

ஊருக்கு வெளியே மலையுச்சியில் இருக்கும் தேவாலயத்திற்கு யாராவை அழைத்துச் செல்கிறார் டீஜே. அழகான, பிரம்மாண்டமான அந்தத் தேவாலயத்தைப் பார்த்துக் கண் கலங்குகிறாள் யாரா. சிரியாவில் குண்டுவீச்சில் சேதமாகிக் கிடக்கும் மசூதிகள் எல்லாம் ஞாபகத்திற்கு வருகின்றன. இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் சிரியா எப்படி இருக்கும் என்கிற கேள்விகள் அவளைத் துளைத்தெடுக்கின்றன. தொடர்ந்து சிரியாவில் இருக்கும் அப்பா கொல்லப்பட்டுவிட்டார் என்கிற செய்தி வருகிறது. டீஜேவும் இன்னொரு பெண்மனியும் துயரத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள். அதிசயம் என்னவென்றால் யாராவின் வீட்டை நோக்கி, சாரைச் சாரையாக மக்கள் வரத் தொடங்குகிறார்கள். பெரும் துயரத்தை, அன்பு வெல்லத் தொடங்குகிறது.

ஒரு போரைத் தொடங்குகிறவர்களுக்கும், அந்த மானுடத் தீமையைத் தொடர்கிறவர்களுக்கும் வெறுப்பு தேவைப்படலாம். ஆனால் ஈழமோ, சிரியாவோ, பாலஸ்தீனமோ எங்குமே அகதிகளாக்கப்பட்ட மக்களுக்குத் தேவைப்படுவது அன்புதான். எல்லாவற்றையும் இழந்தவர்கள் கடைசியாக எதிர்பார்ப்பது அன்பு மட்டும்தான். இங்கும் இருக்கின்றன ஈழச் சொந்தங்களின் அகதி முகாம்கள். போய்ப் பாருங்கள், அவர்களின் வாழ்க்கையும் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையும் ஒன்றல்ல என்பதை உணர்வீர்கள்.

கட்டுரையாளர் : ஜோசப் ராஜா | கவிஞர் / திரைக்கதை ஆசிரியர்

தொடர்புக்கு: writer.josephraja@gmail.com

SCROLL FOR NEXT