இந்து டாக்கீஸ்

The Official Story: உண்மையைத் தேடும் பெண்ணின் கதை | சினிமாவும் அரசியலும் 35

ஜோசப் ராஜா

சமூகம் அச்சத்தில் உறைந்திருக்கும் போது, கலைஞன் மட்டும்தான் ஒரு கொரில்லா வீரனைப் போல பதுங்கியிருந்தும் தேவைப்பட்டால் வெளிப்படையாக இருந்தும் அதிகாரத்தின் கோரமுகத்தைத் தயங்காமல் தோலுரித்துக் காட்டுகிறான். எதையும் எதிர்பார்க்காத ஒரு கலைஞனே வரலாற்றின் எதிர்பார்ப்பைத் தன்னுடைய கலையால் நிறைவேற்றி வைக்கிறான்.

ஒரு கலைஞன் மட்டும்தான் மக்களுக்கு எதிரான அதிகாரத்தின் பெருங்குற்றங்களைக் எந்தப் பாரபட்சமும் இல்லாமல் காலப்புத்தகத்தில் குறித்துவைக்கிறான். அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாத அர்ஜெண்டினாவின் தீராத வலியைத் திரையில் வெளிப்படுத்தி இருக்கிறது இந்தத் திரைப்படம்.

உலகம் முழுவதும் கலைஞர்கள் எப்படி இருந்திருக்கிறார்கள் என்று அறிந்துகொள்ள கிடைத்த நல்ல வாய்ப்பு இந்தத் தொடர். நல்ல கலைஞர்கள் வெறும் பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமே கலையைப் பயன்படுத்தவில்லை என்பது நம்பிக்கைக்குரியதாக இருக்கிறது. உண்மையைப் பேச வேண்டும் என்கிற உறுதிகொண்ட கலைஞர்கள்தான் என்றென்றும் எல்லாருக்கும் உதாரணமாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரு ராணுவ ஆட்சி நடந்து கொண்டிருக்கும்போதே, அந்த ராணுவ ஆட்சியின் கொடூரங்களைத் திரைப்படமாக எடுக்க நினைப்பதென்பது உண்மையிலேயே ஆச்சரியமானது. இந்தத் திரைப்படத்தின் இயக்குநர் அந்த ஆச்சரியத்தைச் செய்து காட்டியிருக்கிறார்.

அதனால்தான் அர்ஜெண்டினாவின் அற்புதமான இயக்குநர் லூயிஸ் புவென்சோ உலகெங்குமுள்ள திரைக்காதலர்களுக்கு உந்துசக்தியாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறார். தன்னுடைய தேசத்தின் வலியை எந்தத் தயக்கமும் இல்லாமல் திரையில் வெளிப்படுத்தினார். அதென்ன வலி அர்ஜெண்டினாவிற்கு என்கிற கேள்வி எழுமல்லவா!

1976 மார்ச் 24 அன்று ஜார்க் ரபேஃல் விதேலா என்கிற ராணுவ அதிகாரியின் தலைமையிலான பிற்போக்குவாதக் கொள்கைகள் கொண்ட ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. ஜனநாயகம் என்று சொல்லிக்கொண்டு ஆட்சியில் இருப்பவர்களே படுகொலைகளைச் செய்து கொண்டும், வெறுப்பின் விதைகளை வேகமாகப் பரப்பிக்கொண்டும் இருக்கும்போது ஒரு ராணுவ ஆட்சியைப் புரிந்துகொள்வதில் சிரமம் இருக்காதென்றே நம்புகிறேன்.

நாடாளுமன்றம் கலைக்கப்படுகிறது, அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் தடைசெய்யப்படுகின்றன. எல்லாவற்றையும்விட பெருங் கொடுமையாக ’அசிங்கமான யுத்தம்’ என்றழைக்கப்பட்ட அந்தக் காலத்தில் ஆயிரக்கணக்கான அரச எதிர்ப்பாளர்கள் கடத்தப்பட்டனர். பலர் கடுமையான சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். பலர் படுகொலை செய்யப்பட்டனர் அல்லது காணாமல் ஆக்கப்பட்டனர்.

கர்ப்பிணிப் பெண்கள் சிறைப்படுத்தப்பட்டு, குழந்தை பெற்ற பிறகு கொல்லப்பட்டனர். அந்தக் குழந்தைகள் ராணுவ ஆட்சியை ஆதரித்த வசதியான குடும்பங்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்த மாபெரும் மானுட சோகத்தை பொதுமக்களின் பார்வைக்குக் கொண்டுவந்த முதல் முக்கியமான திரைப்படம் இதுதான்.

கலைஞர்கள் எல்லாருக்குமான பாதுகாப்பு குறித்த சிறிது அச்சத்தில் ஆரம்பத்தில் ரகசியமாகத் திரைப்படத்தை எடுக்கத் திட்டமிடுகிறார் இயக்குநர் லூயிஸ் புவென்சோ. திரைக்கதை எழுதி முடித்த சமயத்தில் ராணுவ ஆட்சி முடிவிற்கு வரவே வெளிப்படையாக எடுக்கலாம் என்கிற முடிவிற்கு வருகிறார். திரைப்படம் முழுவதும் அர்ஜெண்டினாவின் தலைநகரமான பியூனஸ் அரைஸிலேயே எடுக்கப்பட்டிருக்கிறது.

மிக முக்கியமாக இந்தத் திரைப்படத்தில் பிளாஸா டி மாயோ சதுக்கமும் இடம்பெறுகிறது. ராணுவ ஆட்சிக் காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் தொடங்கப்பட்ட இயக்கமான மதர் ஆப் தி பிளாஸா டி மாயோ என்றழைக்கப்பட்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள் நியாயம் கேட்கக் கூடிப் போராடும் இடமாக அந்தச் சதுக்கம் இருந்தது, இன்றளவும் இருந்து வருகிறது.

அர்ஜெண்டினாவின் வரலாற்றில் மனித உரிமைக்கான மிகப்பெரிய போராட்ட வடிவமாக இன்றளவும் சொல்லப்படுகிறது. ராணுவ ஆட்சியில் காணாமல் ஆக்கப்பட்ட தங்களுடைய மகன், மகள், உறவினர்களின் பெயர்கள் எழுதப்பட்ட பதாகைகள், ஒளிப்படங்களை ஏந்திக்கொண்டு நீதிகேட்டு அந்த மக்கள் நடத்தும் பேரணியின் காட்சிகள் படத்தின் பின்னணியில் இடம்பெறுகின்றன.

இன்றும்கூட ஒவ்வொரு வியாழக்கிழமையும் மாலை 3.30க்கு அந்தச் சதுக்கத்தில் கூடும் உறவுகளை இழந்த மக்கள் நீதிக்கான குரலை, உண்மையை அறிய வேண்டும் என்கிற ஆவலை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆம், சர்வாதிகாரிகளால் காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடும் துயரம் ஜனநாயகத்திலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

“1982இல் நான் வாழ்ந்து கொண்டிருந்த முக்கியமான காலத்தைப் பற்றி ஒரு திரைக்கதை எழுத வேண்டுமென்று தோன்றியது. அதுதான் இந்தத் திரைப்படம்” என்று சொல்லும் இயக்குநர் லூயிஸ் புவென்சோ, “வெற்று அரசியல் கோஷமாக இல்லாமல், உண்மையாகவே அரசியல் எப்படி மனிதர்களின் வாழ்க்கையைப் பாதிக்கிறது என்று சொல்ல நினைத்தேன்” என்கிறார்.

திரைப்படத்தைப் பார்க்கும்போது திரையில் அதை மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறார் என்பதை நீங்களும் புரிந்துகொள்வீர்கள். அர்ஜெண்டினாவின், ஏன் தென்னமெரிக்காவின் முதல் ஆஸ்கர் விருதைப் பெற்றபின், “ஒரு சமூகம் தன் கடந்த காலத்தை மறந்துவிட்டால், அது தன்னுடைய தவறுகளை மீண்டும் செய்யக்கூடிய அபாயம் இருக்கிறது” என்று சொல்லும் இயக்குநரின் வார்த்தைகள் அர்ஜெண்டினாவிற்கு மட்டுமல்ல, எல்லாத் தேசங்களுக்கும் பொருந்தக்கூடியதுதான்.

கதை, திரைக்கதை, இயக்கம் எல்லாவற்றையும் தாண்டி இந்தத் திரைப்படத்தில் எல்லாராலும் பாராட்டப்பட்டது அலீசியா கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருந்த நார்மா அலேயாண்ட்ரோதான். நார்மா வெறும் நடிகை மட்டுமல்ல, அர்ஜெண்டினாவின் கலாச்சார அடையாளங்களில் ஒருவர். முற்போக்குச் சிந்தனையாளர்.

நாடக அரங்கில் அவரை அச்சுறுத்துவதற்காகக் குண்டுவீச்செல்லாம் நடந்திருக்கிறது என்றால், எவ்வளவு தைரியமான நடிகையாக இருந்திருப்பார்! ராணுவ ஆட்சியில் ஒரு கட்டத்தில் நாட்டைவிட்டு வெளியேறும் சூழல் வர, முதலில் உருகுவே, அப்புறம் ஸ்பெயினில் அகதி வாழ்க்கை. ராணுவ ஆட்சி முடியும் தருவாயில் திரும்பி வந்து இந்தத் திரைப்படத்தில் நடித்தார்.

“ஒரு நடிகையாக அல்ல; ஒரு சிறந்த குடிமகளாக இந்தத் திரைப்படத்தில் நடிக்க முடிவு செய்தேன்” என்று சொன்ன நார்மா, கான் திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார். உரத்த குரலில் உறுதியாகச் சொன்னார் நார்மா, “உண்மையைச் சொல்வதென்பது ஒரு கலைச்செயல் மட்டுமல்ல, அது ஒரு குடிமகளின் பொறுப்பு” என்று. அந்தத் திரைப்படத்தின் கதையைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா?

1983. அர்ஜெண்டினாவில் ராணுவ சர்வாதிகார ஆட்சியின் இறுதிக்காலம். நாயகி அலீசியா தலைநகரமான பியூனஸ் ஐரஸில் இருக்கும் உயர்நிலைப் பள்ளியில் வரலாற்று ஆசிரியராக இருக்கிறார். அவரது கணவர் அரசு அதிகாரியாக இருக்கிறார். ஐந்து வயதாகும் தத்தெடுக்கப்பட்ட மகள் கேபியோடு வாழ்ந்து வருகிறார்கள். அலீசியா மேல்தட்டு வர்க்கத்தினரைப்போல ராணுவ ஆட்சியின் கொடுமைகளை அறியாதவளாக இருக்கிறாள். கைதுசெய்யப்படுகிறவர்கள் குற்றவாளிகள் என்று நம்புகிறாள்.

சக ஆசிரியரும், மாணவர்களும் அவளுடைய கருத்தை விமர்சிக்கிறார்கள். கோஸ்டா என்கிற மாணவன், ”அரசு வெளியிடும் வரலாற்றுப் பாடப் புத்தகங்கள் கொலைகாரர்களால் எழுதப்படுகிறது” என்று சொல்கிறான். மெல்ல அவளுக்குள் ராணுவ ஆட்சியைப் பற்றிய சந்தேகம் துளிர்விடுகிறது.

நாடு கடத்தப்பட்ட அவளுடைய தோழி அனா திரும்பி வருகிறாள். ராணுவ ஆட்சியின் கொடுமைகளை அவளிடம் விவரிக்கிறாள். சிறையில் கர்ப்பிணிப் பெண்கள் குழந்தை பெற அழைத்துச் செல்லப்பட்டு குழந்தை இல்லாமல் திரும்பி வந்தனர். அந்தக் குழந்தைகள் செல்வந்தர்களுக்குத் தத்துக் கொடுக்கப்பட்டன என்று சொல்கிறாள்.

கேபியின் பிறப்புப் பற்றி அலீசியாவிற்குச் சந்தேகம் எழத் தொடங்குகிறது. கேபியின் பிறந்தநாளைக் கொண்டாடாமல், அழைத்து வந்த நாளை ஏன் கொண்டாடுகிறோம் என்று கணவரைக் கேட்க, அவர் புறக்கணித்துவிட்டுச் செல்கிறார்.

கோஸ்டா போன்ற மாணவர்களின் மூலமாக, சக ஆசிரியரான பெனிட்டஸ் மூலமாகக் காணாமல் ஆக்கப்பட்டவர்களைப் பற்றித் தெரிந்துகொள்கிறாள். கேபியின் பிறப்புச் சான்றிதழைத் தேடும்போது, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குழந்தைகளைத் தேடும் அமைப்பைப் பற்றி அறிந்துகொள்கிறாள்.

அந்த அமைப்பில் சாரா என்கிற வயதான பெண்மணியைச் சந்திக்கிறாள். சாராவின் கர்ப்பிணி மகள் ராணுவத்தினரால் கடத்தப்பட்டதைச் சொல்லி, கேபி தன்னுடைய பேத்தியாக இருக்கலாம் என்று மகளின் புகைப்படத்தைக் காட்டுகிறாள். அது கேபியின் முக அமைப்போடு ஒத்திருக்கிறது. என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறாள் அலீசியா.

ஒரு நாள் சாராவை வீட்டிற்கு அழைத்து வருகிறாள் அலீசியா. கணவர் கோபமடைந்து அவளை வெளியேற்றச் சொல்கிறார். சில நாள்கள் கழித்து வீடு திரும்பும் கணவரிடம், கேபி வீட்டில் இல்லையென்று சொல்லி, உன் குழந்தை எங்கே இருக்கிறது என்று தெரியாமல் இருப்பது எப்படி இருக்கிறது என்று கேட்கிறாள் அலீசியா.

கோபத்தில் அவளைக் கண்மூடித்தனமாக அடிக்கிறான். கேபியிடமிருந்து அழைப்பு வருகிறது, வேகமாக போனை எடுக்கிறான், “எனக்கு நினைவில்லாத நாட்டிலிருந்து” என்கிற பாடலை அம்மாவிற்குப் பாடிக்காட்ட வேண்டும் என்கிறாள் கேபி, அலீசியா மெல்ல வீட்டை விட்டு வெளியேறுகிறாள். “எனக்கு நினைவில்லாத நாட்டிலிருந்து” என்கிற பாடலை ஊஞ்சலில் ஆடியபடி பாடிக் கொண்டிருக்கிறாள் கேபி.

சர்வாதிகாரிகளால், மானுட விரோதிகளால் இந்தப் பூமியின் மீது நிகழ்த்தப்படும் வன்முறைக்கும் பேரழிவுகளுக்கும் இந்தத் திரைப்படமும், இதுபோன்ற எண்ணற்ற கலைகளும் சாட்சியாக இருக்கின்றன. பெருந்துயரங்களுக்குக் காரணமானவர்கள் காணாமல் போய்விடுகிறார்கள். இதோ பதினைந்தாயிரம் கிலோமீட்டர் தொலைவிலிருந்து துடித்துக் கொண்டிருக்கிறேன்.

கட்டுரையாளர் : ஜோசப் ராஜா | கவிஞர் / திரைக்கதை ஆசிரியர்

தொடர்புக்கு: writer.josephraja@gmail.com

SCROLL FOR NEXT