2004-இல் இயக்குநர் வால்டர் சாலஸ் இயக்கத்தில் வெளிவந்த ஸ்பானிஷ் திரைப்படமான ‘தி மோட்டார் சைக்கிள் டைரிஸ்’ (The Motorcycle Diaries) நேரடியான அரசியல் திரைப்படமல்ல. ஆனாலும் இது அரசியல் திரைப்படம்தான். ஆம், இந்த உலகம் இன்று வரையிலும் கொண்டாடிக் கொண்டிருக்கும் மாபெரும் தலைவர் உருவாகக் காரணமாக இருந்த பயணம்! இந்த உலகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒவ்வோர் இதயமும் நேசிக்கும் ஒரு மனிதர், மாமனிதராக உருமாறக் காரணமாக இருந்த பயணம்!
இந்த உலகத்தில் புரட்சியை விரும்பும் ஒவ்வொரு புரட்சியாளரும் தங்களுடைய ஆதர்சமாக, தங்களுடைய முன்னோடியாக முடிவுசெய்து கொண்ட மாபெரும் புரட்சியாளர் உருவாகக் காரணமாக இருந்த பயணம்! அந்தப் புரட்சியாளர் சே குவேரா! இந்த உலகத்தின் உதடுகள் அதிகமாக உச்சரித்துக் கொண்டிருக்கும் பெயர் சே! இந்த உலகத்தில் அதிகமாக நேசிக்கப்படும் மனிதர் சே!
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜெண்டினாவில் பிறந்த சே, உலகமெல்லாம் சொந்தம் கொண்டாடப்படுவதின் காரணம் என்னவாக இருக்கும்? உலகத்தை நேசித்தவர் சே! உண்மையாக நேசித்தவர். உலகமெங்கிலும் இருக்கும் உழைக்கும் மக்களுக்கு உன்னதமான வாழ்க்கை வேண்டுமென்று விரும்பியவர். விரும்பியது மட்டுமல்லாமல் அதைச் செயல்படுத்த முடிவுசெய்து அதற்கான வேலைகளில் இறங்கியவர். ஆம்! மக்களுக்காக, மாற்றத்திற்காகப் புரட்சி செய்தவர். அதனால்தான் அவர் விரும்பப்படுகிறார்.
அர்ஜெண்டினாவும் கியூபாவும் தென்னமெரிக்காவில் இருக்கும் நாடுகள். அந்த இரண்டு நாடுகளுக்கும் வேறு எந்தத் தொடர்பும் கிடையாது. ஆனால், கியூப விடுதலைக்காகப் போராடிக்கொண்டிருந்த தலைவர் ஃபிடலுடன் சேர்ந்து போராடத் தொடங்கினார் சே.
சிறுவயதிலிருந்தே தீவிர ஆஸ்துமா பிரச்சினையோடு வாழ்ந்துகொண்டிருக்கும் சே, அதையெல்லாம் ஒரு பொருட்டாக மதிக்கவே இல்லை. காடுகளிலும் மலைகளிலும் துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு புரட்சியாளர்களோடு பயணித்துக்கொண்டிருந்தவர்.
புரட்சியில் வெற்றிபெற்று கியூபாவில் ஃபிடலின் தலைமையில் ஆட்சியமைக்கப்படுகிறது. தேசிய வங்கித் தலைவர், தொழிற்துறை அமைச்சர் போன்ற பதவிகள் வழங்கப்பட்டன. ஆனால், சேவின் இதயமோ மாற்றத்திற்காக ஏங்கிக்கொண்டிருக்கும் மற்ற நாடுகளுக்காகத் துடித்துக் கொண்டிருந்தது.
காங்கோவிலும் பொலிவியாவிலும் புரட்சியைத் தூண்டுவதற்காக கியூபாவிலிருந்து வெளியேறினார். இப்படி ஒரு மனிதரால் இருக்க முடியுமா? இருந்தார் சே! இப்படி ஒரு மனிதரால் சிந்திக்க முடியுமா? சிந்தித்தார் சே! அதனால்தால் அவர் இன்றுவரையிலும் நாயகராகக் கொண்டாடப்படுகிறார்.
புரட்சியின் சின்னமாகக் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கும் சே, புரட்சியாளராக எப்படி மாறினார்? எல்லாரையும் போல தானுண்டு தன் வேலையுண்டு என்று சுயநலமாகச் சிந்திக்காமல் பொதுவுடைமை சிந்தனையை எப்படி ஏற்றுக்கொண்டார் சே? இந்தக் கேள்விகளுக்கான பதில்தான் மருத்துவ மாணவராக இருக்கும்போது, அவருடைய மோட்டார் சைக்கிள் பயணத்தைப் பற்றி எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம்.
சாதாரண மனிதராக இருந்த சே குவேராவை, ஒரு புரட்சியாளராக மாற்றியதில் இந்தப் பயணத்திற்குப் பெரும் பங்குண்டு. அந்தப் பயணத்தை அற்புதமாக
எழுதிய திரைக்கதை எழுத்தாளர் ஜோஸ் ரிவெராவையும், வெகு நேர்த்தியாக இயக்கியிருக்கும் வால்டர் சாலெஸையும் அளவில்லாமல் பாராட்டலாம்! நடிகர்களும் அந்தக் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்!
1952-இல் லத்தீன் அமெரிக்காவை ஆராய்வது என்று முடிவுசெய்து இளம் மருத்துவரான சேவும், ஆராய்ச்சியாளரான அவருடைய நண்பர் கிரானடோவும் ஒரு மோட்டார் சைக்கிள் பயணத்திற்குத் தயாராகிறார்கள்.
அம்மாவிற்குக் கண்டிப்பாகக் கடிதங்கள் எழுவதாக உறுதியளித்துவிட்டு, உறவுகளிடம் விடைபெற்றார் சே. காதலியிடம் விடைற்றார். பயணம் தொடங்கியது. அர்ஜெண்டினாவிலிருந்து சிலி தேசத்திற்குள் நுழைந்தார்கள். எளிய, உழைக்கும் மக்களைச் சந்தித்தார்கள். சிலியின் சுரங்கங்களில் வேலை செய்யும் சுரங்கத் தொழிலாளர்கள் மோசமாக நடத்தப்படுவதைப் பார்த்தார் சே.
சிலியின் பெருங்கவிஞரான பாப்லோ நெருடாவின் கவிதைகளில் அதிக ஈடுபாடுகொண்ட சே, சிலியின் நிலங்களில் நெருடாவை நினைத்துக்கொண்டார். பயணம் எளிமையாக இல்லை. சோதனை மிகுந்ததாக இருந்தாலும்கூட நண்பர்கள் பின்வாங்காமல் பயணத்தைத் தொடர்கிறார்கள். சிலியில் இருந்து பெரு நாட்டிற்குள் நுழைந்தார்கள். இன்கா நாகரிகம் என்றழைக்கப்படும், அமெரிக்காவின் மிகப்பெரிய பேரரசு ஒன்றை வழிநடத்திய இன்கா மக்களின் ஆண்டிஸ் மலைத்தொடரையும், பிரமிக்க வைக்கும் மச்சு பிச்சுவையும் பார்த்தார்கள்.
வானியலிலும் மருத்துவத்திலும் கணிதத்திலும் சிறந்து விளங்கிய இன்கா மக்கள் சொந்த நிலத்தை இழந்து துயரத்தில் வாழ்ந்துகொண்டிருப்பதைப் பார்த்தார்கள். ஸ்பானியர்களின் கையில் இருந்த துப்பாக்கி அந்தப் பூர்வகுடிகளின் வாழ்க்கையை நிர்மூலமாக்கியதை அறிந்து கொண்டார்கள்.
இன்கா மக்களின் கையில் துப்பாக்கி இருந்திருந்தால் தென்னமெரிக்காவின் வரலாறு எப்படி மாறியிருக்கும் என்கிற கேள்விகள் சேவுக்கு எழுந்தன. பயணத்தின் ஒரு பகுதியாகச் சில நாள்கள் அமேசான் காடுகளில் செயல்பட்டுக்கொண்டிருந்த தொழுநோயாளிகளுக்கான மருத்துவமனையில் வேலை செய்தார்கள் சேவும் கிரானடோவும்.
ஆற்றிற்கு அந்தப் பக்கம் ஒதுக்குப்புறமாகத் தங்க வைக்கப்பட்டிருக்கும் தொழுநோயாளிகளைப் பார்க்கச் செல்லும்போது, கொடுக்கப்பட்ட கையுறையை அணிய மறுத்து, அந்த நோயாளிகளிடம் கைகுலுக்கும் காட்சி இதயத்தை நெகிழச் செய்யக்கூடியது. அதே இடத்தில் தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாட வேண்டுமென்று முடிவுசெய்து, படகில்லாமல் அந்த இரவில், அந்தக் குளிரில் ஆஸ்துமா நோய்கொண்ட சே ஆற்றில் நீந்திச் செல்வதெல்லாம் அற்புதமல்லாமல் வேறென்ன!
ஒரு மருத்துவராக நோயைப் பற்றி மட்டுமல்லாமல், நோயிற்கான சமூகக் காரணிகளையும் ஆராய்வதில் தவறவில்லை சே! “நான் படித்த புத்தகங்களைவிடவும், நான் சந்தித்த மனிதர்கள்தான் நிறையக் கற்றுக்கொடுத்தார்கள்” என்கிறார் சே.
அர்ஜெண்டினா, சிலி, பெரு, கொலம்பியா, வெனிசுலா என்று நீண்ட பயணம் தோராயமாக 8,000 கிலோ மீட்டர்களை தாண்டிச் சென்றது. மோசமான சாலைகள், பணத்தட்டுப்பாடு, ஆஸ்துமா பிரச்சினை, மோட்டார் சைக்கிள் பழுது, காடுகள், மலைகள் என நடைப்பயணம். கடுங்குளிர், கடுமையான வெப்பம், உதவி செய்த மனிதர்கள், புறக்கணித்தவர்கள் எனப் பயண அனுபவங்கள் சேவை முற்றிலும் வேறுபட்ட மனிதராக உருமாற்றுகின்றன.
ரத்தமும் சதையுமாகப் பார்த்த மனிதர்களின் துயரங்கள் அவரைத் தூங்கவிடவில்லை. லத்தீன் அமெரிக்கப் பயணம் முடிந்துவிட்டது. பயணத்தின் அனுபவங்கள் புரட்சிகரப் பணியைத் தொடங்கி வைத்தது. கியூபாவில் புரட்சிகர நடவடிக்கையில் ஈடுபட்டு நாடுகடத்தப்பட்டிருந்த காஸ்ட்ரோவைச் சந்தித்து, புரட்சி நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் சே.
1960 கியூப புரட்சி வெற்றி பெற்ற பின்பு, கிரானடோவிற்கு ஆராய்ச்சிப் பணிசெய்ய கியூபாவிலிருந்து அழைப்பு வந்தது. அழைத்தது பழைய நண்பர் அல்ல, இப்போது கியூபாவின் கமாண்டர் சே குவேரா. மகிழ்ச்சியாகப் பணியைத் தொடர்ந்தார் கிரானடோ. காங்கோவிலும் பொலியாவிலும் புரட்சிப்பணியைத் தொடரச் சென்ற சே, அமெரிக்காவின் சிஐஏவின் சதியால் பொலியாவில் 1967இல் கொல்லப்பட்டார்.
நண்பர் கிரானடோவோ கியூபாவில் சாண்டியாகோ மருத்துவக் கல்லூரியை நிறுவி, மருத்துவத்தில் கியூபாவை உலகின் முன்னணி சக்தியாக கொண்டுவருதில் தன்னுடைய ஆற்றலைப் பாய்ச்சினார். இப்படித்தான், இரண்டு இளைஞர்கள் சாதாரணமாகத் தொடங்கிய அந்தப் பயணம், வரலாற்றில் மாபெரும் மாற்றங்களுக்குத் தொடக்கமாக இருந்திருக்கிறது.
இலக்கில்லாமல் பயணம் செல்கிறோம் என்று சுற்றிக் கொண்டிருப்பவர்கள், சமூகப் புரிதல் என்கிற தெளிவான இலக்கோடு தொடங்கி முடிக்கப்பட்ட சேவின் இந்தப் பயணத்தை தெரிந்துகொள்ள வேண்டும். தென் அமெரிக்காவின் அழகான நிலக்காட்சிகளின் வழியாக, ஆறுகளையும் மலைகளையும் அமேசான் காடுகளையும் கடந்து சென்ற அந்தப் பயணம், இயற்கையை ரசிப்பதற்கு மட்டுமல்ல, சமூகத்தைப் புரிந்துகொள்வதற்கும், மானுட வாழ்க்கையை அறிந்துகொள்வதற்கும் பயன்பட்டது.
- கட்டுரையாளர்: ஜோசப் ராஜா | கவிஞர் / திரைக்கதை ஆசிரியர் | தொடர்புக்கு: writer.josephraja@gmail.com