இந்தத் திரைப்படத்தைப் பார்க்கத் தொடங்கிய சிறிது நேரத்தில் ஒரு லாரியில் பயணம் செய்யத் தொடங்கிவிடுவீர்கள். ஆம், அடர்ந்த காடுகளின் வழியாக, நீண்ட மலைப்பாதைகளில், ஆற்றின் சலசலப்பைக் கேட்டுக்கொண்டே அந்தப் பயணம் அமையக்கூடும். என்ன, கொஞ்சம் கூடுதலாகப் போர் விமானங்கள் பறப்பதைப் பார்க்கலாம். துப்பாக்கிகளின் சத்தத்தைக் கேட்கலாம். குண்டுவீச்சில் சிதிலமடைந்து கிடக்கும் கட்டிடங்களைக் கடந்து செல்லலாம். ஆனால், ஒன்று மட்டும் உறுதி, இந்தத் திரைப்படம் சிறிது நேரத்தில் உங்களை உள்ளிழுத்துக் கொள்ளும்.
போர் என்பது துப்பாக்கிகளாலும் குண்டுகளாலும், மட்டுமே நிகழ்வதில்லை. போர் முடிந்த பிறகும் மனிதர்களின் மனசாட்சியில், அவர்களின் நினைவுகளில் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கிறது. போர்க்களத்தில் ஆயுதம் ஏந்திப் போராடாத ஒரு சாதாரண மனிதன்கூட, அந்தப் போரின் குற்றங்களையும் அதன் விளைவுகளையும் சுமக்க வேண்டியிருக்கிறது.
செர்பிய இயக்குநர் ஒக்ன்ஜென் கிளாவோனிக் (Ognjen Glavonić) இயக்கிய The Load (Teret) திரைப்படம் பேசுவது அப்படிப்பட்ட ஒரு மனிதனைப் பற்றித்தான். 1999ஆம் ஆண்டு, நேட்டோ படைகள் யுகோஸ்லாவியா மீது நடத்திய வான்வழித் தாக்குதல்களின் பின்னணியில், கொசோவோவிலிருந்து பெல்கிரேடுக்கு ஒரு மர்மமான சரக்கை ஏற்றிச் செல்லும் லாரி ஓட்டுநரின் பயணமே இந்தத் திரைப்படம்.
இது ஒரு போரைப் பற்றிய திரைப்படம் மட்டுமல்ல; போர் உருவாக்கும் குற்ற உணர்வு, அரசின் வன்முறை, மறைக்கப்படும் உண்மைகள், மனிதர்களின் மௌனம் ஆகியவற்றைப் பற்றிய அசலான திரைப்படம்.
1999. யுகோஸ்லாவியா சிதைவுக்குப் பிறகு உருவான செர்பியாவும், கொசோவோவும் மோதலின் இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. கொசோவோவில் செர்பியப் படைகளுக்கும், அல்பேனிய விடுதலைப் போராளிகளுக்கும் இடையே கடுமையான மோதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
1999 மார்ச் 24, நேட்டோ (NATO) படைகள் யுகோஸ்லாவியா மீது வான்வழித் தாக்குதலைத் தொடங்கின. சுமார் 78 நாள்கள் நீடித்த இந்தத் தாக்குதலில் செர்பியாவின் பல நகரங்கள், பாலங்கள், தொழிற்சாலைகள், மின் நிலையங்கள் உள்ளிட்ட முக்கியக் கட்டமைப்புகள் குண்டுவீச்சுக்கு உள்ளாகின.
இந்தப் போர்ச்சூழலில்தான் படத்தின் கதாநாயகன் விளாடா (Vlada) அறிமுகமாகிறார். நடுத்தர வயதைக் கடந்த ஒரு லாரி ஓட்டுநர்.
கொசோவோவிலிருந்து பெல்கிரேடுக்கு ஒரு சரக்கை எடுத்துச் செல்லும் வேலை அவருக்கு வழங்கப்படுகிறது. லாரியில் என்ன இருக்கிறது என்பது அவருக்குத் தெரியாது. சரக்கை ஏற்றிக்கொண்டு குறிப்பிட்ட இடத்திற்குக் கொண்டு சேர்க்க வேண்டும். வழியில் எங்கும் நிறுத்தக் கூடாது என்பதுதான் அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவுரை.
ஏற்கெனவே இதுபோன்ற பலவிதமான பயணங்களைச் செய்திருக்கும் அவருக்கு இது இன்னொரு சாதாரண பயணம்தான். ஆனால், இந்தப் பயணம் அவரது வாழ்க்கையையே மாற்றப் போகிறது என்பது அவருக்குத் தெரியாது. பயணம் தொடங்கியதும் போரின் அடையாளங்கள் ஒவ்வொன்றாகத் தென்படுகின்றன. குண்டுவீச்சில் சேதமடைந்த பாலங்கள், சிதைந்த கட்டிடங்கள், கைவிடப்பட்ட வீடுகள், சாலைகளில் அலைந்து திரியும் மக்கள் என ஒரு நாடு போரினால் எப்படிச் சிதைந்திருக்கிறது என்பதைப் பார்க்க முடிகிறது.
பயணத்தில் ஒரு பாலத்தின் வழியாகச் செல்ல முடியாத சூழல் உருவாகிறது. மாற்றுப் பாதையில் பயணிக்க வேண்டியிருக்கிறது. அந்த வழியில் அகதிகளைச் சந்திக்கிறார். அவர்கள் தங்களது வாழ்விடங்களை விட்டு வெளியேறியவர்கள். அவர்களின் முகங்களில் அச்சமும் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மையும் படிந்திருக்கின்றன.
இந்தப் பயணத்தின்போது பாஜா (Paja) என்கிற இளைஞனைச் சந்திக்கிறார் விளாடா. பெல்கிரேடுக்குச் செல்ல வேண்டும் என்று கூறும் அந்த இளைஞன், லாரியில் பயணிக்க அனுமதி கேட்கிறான். முதலில் மறுக்கும் விளாடா, பின்னர் லாரியின் பின்பகுதியில் ஒளிந்துகொண்டு வந்திருப்பதை அறிகிறார். குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கும் அவனை இறுதியில் தன்னுடன் பயணிக்க அனுமதிக்கிறார்.
இருவருக்குமான உரையாடல்கள், வழியில் அவர்கள் சந்திக்கும் மனிதர்கள், சிறிய சம்பவங்கள் எனப் பயணம் தொடர்கிறது. ஆனால், லாரியின் பின்பகுதியில் இருக்கும் சரக்கு குறித்த மர்மம் மட்டும் பார்வையாளர்களைத் தொடர்ந்து துரத்திக் கொண்டிருக்கிறது. இந்தத் திரைப்படத்தின் மிக முக்கியமான அரசியல் பின்னணி, கொசோவோவில் நடைபெற்ற பொதுமக்கள் படுகொலைகளும் அவற்றை மறைப்பதற்காக செர்பிய அரசின் அதிகார அமைப்புகள் மேற்கொண்ட நடவடிக்கைகளும்தான்.
1998-99 காலக்கட்டத்தில் கொசோவோவில் நடைபெற்ற போரின்போது ஆயிரக்கணக்கான அல்பேனிய இனத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பலர் காணாமல் போனார்கள். போர்க்குற்றங்களுக்கான ஆதாரங்களை அழிப்பதற்கும், கொல்லப்பட்டவர்களின் சடலங்களை மறைப்பதற்கும் திட்டமிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகப் பின்னர் விசாரணைகளில் தெரியவந்தது.
கொசோவோவில் கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் லாரிகள் மூலம் செர்பியாவுக்குக் கொண்டுவரப்பட்டு, அங்குள்ள ரகசிய இடங்களில் புதைக்கப்பட்டன. பெல்கிரேடுக்கு அருகிலுள்ள பத்தாஜ்னிக்கா (Batajnica) உள்ளிட்ட இடங்களில் பின்னாளில் பெருமளவிலான சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.
டான்யூப் நதியிலிருந்து சடலங்கள் நிரப்பப்பட்ட ஒரு குளிரூட்டப்பட்ட லாரியும் மீட்கப்பட்டது. இது ஒரு தனிப்பட்ட குற்றச்செயல் அல்ல. காவல்துறை, ராணுவம் மற்றும் பொதுமக்களில் சிலர் எனப் பல தரப்பினரின் பங்களிப்புடன் நடைபெற்ற திட்டமிட்ட நடவடிக்கையாக இருந்தது.
விளாடா எடுத்துச் செல்லும் சரக்கும் இந்தக் கொடூரமான வரலாற்றுடன் தொடர்புடையது என்பதுதான் படத்தின் முக்கியமான செய்தி. அவர் ஏற்றிச் செல்லும் சரக்கின் உண்மையான தன்மை படிப்படியாக வெளிப்படும்போது, ஒரு சாதாரண லாரி ஓட்டுநர் எப்படிப் பெரிய அரசியல் குற்றத்தின் ஒரு பகுதியாக மாற்றப்படுகிறார் என்பது நமக்குப் புரிகிறது. அவர் அந்தக் குற்றத்தின் முழு விவரங்களையும் அறிந்தவரா? அல்லது, தனது வேலையை மட்டுமே செய்துகொண்டிருந்த ஒருவரா? அதிகாரத்தின் உத்தரவுக்குக் கீழ்ப்படிவதன் மூலம் ஒருவர் எத்தகைய குற்றத்திற்குத் துணைபோகிறார்? இத்தகைய கேள்விகளைப் படம் எழுப்புகிறது.
பொதுவாகப் போரைப் பற்றிய திரைப்படங்கள் என்றால் குண்டுவீச்சு, ராணுவத் தாக்குதல்கள், உயிரிழப்புகள், வீரர்களின் போராட்டங்கள் போன்றவற்றை மையப்படுத்தியிருக்கும். ஆனால் The Load திரைப்படம் போரை நேரடியாகக் காட்சிப்படுத்துவதில்லை. குண்டுவெடிப்புகளின் சத்தம் தொலைவில் கேட்கிறது. சாலைகளில் போரின் அடையாளங்கள் தென்படுகின்றன. மக்கள் அச்சத்துடன் வாழ்கிறார்கள். ஆனால், கேமரா பெரும்பாலும் லாரியின் உள்ளேயே இருக்கிறது. அதன் ஓட்டுநரின் முகத்தையும் அவரது மௌனத்தையும் மனநிலையையும் தொடர்ந்து பதிவு செய்கிறது.
இயக்குநர் இந்தத் திரைப்படத்தை ஒரு வழக்கமான போர்த் திரைப்படமாக உருவாக்க விரும்பவில்லை. மாறாக, போரின் விளைவுகள் ஒரு மனிதனின் மனதிற்குள் எப்படிப் பயணிக்கின்றன என்பதையே காட்ட விரும்பியிருக்கிறார். இதில் ஒரு முக்கியமான அரசியல் பார்வை இருக்கிறது. அரசியல் குற்றங்கள் என்பவை அதிகாரத்தில் இருப்பவர்களால் மட்டுமே நிகழ்த்தப்படுவதில்லை. அவற்றைச் செயல்படுத்துவதற்கும், மறைப்பதற்கும், அவற்றைக் கடந்து செல்வதற்கும் சாதாரண மனிதர்களின் பங்களிப்பும் இருக்கிறது.
'எனக்கு எதுவும் தெரியாது', 'நான் எனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை மட்டுமே செய்தேன்' என்கிற பதில்கள் எப்போதும் ஒருவருடைய பொறுப்பிலிருந்து அவரை விடுவித்துவிடுமா? இந்தக் கேள்வியை விளாடாவின் கதாபாத்திரத்தின் வழியாக இயக்குநர் முன்வைக்கிறார். படத்தில் பாஜா என்கிற இளைஞனின் வருகை மிகவும் முக்கியமானது. விளாடாவுக்கும் பாஜாவுக்கும் இடையிலான உறவு, இரண்டு தலைமுறைகளுக்கு இடையிலான உறவாகவும் பார்க்கப்படுகிறது.
போரின் நடுவே வளர்கிற இளைஞர்கள், தங்களுடைய எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பதை அறியாமல் இருக்கிறார்கள். அவர்கள் பார்க்கும் உலகம் அழிவுகளால் நிரம்பியிருக்கிறது. அவர்களுக்கு முந்தைய தலைமுறை உருவாக்கிய அரசியல் முடிவுகளின் விளைவுகளை இவர்கள் அனுபவிக்க வேண்டியிருக்கிறது.
விளாடாவின் சொந்த வாழ்க்கையிலும் அவரது தந்தை விட்டுச் சென்ற நினைவுகள் முக்கியமான இடத்தைப் பெறுகின்றன. தந்தையிடமிருந்து பெற்ற ஒரு பழைய பொருள், கடந்த காலத்தை நினைவூட்டும் அடையாளமாகப் படத்தில் இடம்பெறுகிறது. அதன் வழியாகப் போர், குடும்பம், நினைவுகள், தலைமுறைகளுக்கு இடையிலான உறவு ஆகியவை இணைக்கப்படுகின்றன.
இயக்குநர் தனது நேர்காணலில், ஒரு தலைமுறை தனது அடுத்த தலைமுறைக்கு எத்தகைய மரபை விட்டுச் செல்கிறது என்பதே படத்தின் முக்கியமான கேள்வி என்கிறார். பெற்றோர் பேச விரும்பாத உண்மைகளையும், அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயங்கிய பொறுப்புகளையும் அடுத்த தலைமுறை சுமக்க வேண்டியிருக்கிறது என்பதையும் அவர் குறிப்பிடுகிறார்.
இது செர்பிய சமூகத்திற்கு மட்டுமான கேள்வி அல்ல. ஈழத்திலும், பாலஸ்தீனத்திலும் என ஒவ்வொரு நாட்டிலும் அதிகாரத்தின் பெயரால் நிகழ்த்தப்பட்ட வன்முறைகளையும், இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் அந்த வன்முறைகளை மறைக்கும் அரசியல் முயற்சிகளையும் எதிர்கொள்ள வேண்டிய அடுத்த தலைமுறைக்கும் பொருந்தக்கூடிய கேள்வி.
Ognjen Glavonić 1985ஆம் ஆண்டு முன்னாள் யுகோஸ்லாவியாவில் உள்ள பான்செவோ (Pančevo) நகரில் பிறந்தவர். குறும்படங்களையும் ஆவணப்படங்களையும் இயக்கிய அனுபவத்திற்குப் பிறகு The Load திரைப்படத்தின் மூலம் தனது முதல் முழுநீளக் திரைப்படத்தை உருவாக்கினார்.
கொசோவோ போர்க்குற்றங்கள் குறித்த தனது ஆய்வுகளின் அடிப்படையில் 2016ஆம் ஆண்டு Depth Two என்கிற ஆவணப்படத்தையும் இயக்கியிருந்தார். கொசோவோவில் நடைபெற்ற படுகொலைகள், அவற்றை மறைப்பதற்கான நடவடிக்கைகள், அவற்றைச் சுற்றியுள்ள மௌனம் ஆகியவற்றை அந்த ஆவணப்படம் ஆராய்கிறது.
The Load திரைப்படம் உருவாவதற்கான ஆய்வுகளின்போதுதான் ஏராளமான தகவல்கள் கிடைத்ததாகவும், அவற்றை ஒரு திரைப்படத்திற்குள் முழுமையாகக் கொண்டுவர முடியாததால் தனியாக ஆவணப்படம் உருவாக்கியதாகவும் இயக்குநர் கூறியிருக்கிறார்.
ஒரு நேர்காணலில், இந்தப் படத்தைப் போர்த் திரைப்படமாகத் தான் கருதவில்லை என்றும், போரின் விளைவுகளைக் கதாநாயகனின் முகத்திலும் மனநிலையிலும் வெளிப்படுத்துவதே தனது நோக்கம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குற்றங்களுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, மற்றவர்கள் மீது பழியைச் சுமத்தி தப்பித்துக்கொள்ளும் மனநிலையை எதிர்கொள்ள வேண்டும் என்றும், தேசியப் பெருமிதத்தின் பெயரால் உருவாக்கப்படும் பொய்யான வரலாற்றுப் பிம்பங்களை உடைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிறார். இயக்குநரின் இந்த வார்த்தைகள் படத்தின் அரசியல் நோக்கத்தைத் தெளிவாக உணர்த்துகின்றன.
The Load திரைப்படத்தின் தலைப்பான 'Teret' என்பதற்கு செர்பிய மொழியில் சரக்கு அல்லது சுமை என்று பொருள். இந்த இரண்டு அர்த்தங்களுமே படத்தின் கதையோடு மிக நெருக்கமாகப் பொருந்துகின்றன.
லாரியின் பின்புறம் ஏற்றப்பட்டிருக்கும் சரக்கு ஒரு நாட்டின் மறைக்கப்பட்ட குற்ற வரலாற்றைச் சுமக்கிறது. அதனை எடுத்துச் செல்லும் விளாடாவோ, தனது அறியாமை, மௌனம், குற்ற உணர்வு ஆகியவற்றின் சுமையைச் சுமக்கிறார்.
படத்தின் இறுதியில் நாம் உணர்வது, ஒரு மனிதன் தனது வேலையை முடித்துவிட்டு வீட்டிற்குத் திரும்பிவிடுவதால் அவனது பொறுப்புகள் முடிந்துவிடுவதில்லை என்பதைத்தான். அவன் கடந்து வந்த பாதையில் புதைக்கப்பட்டிருக்கும் உண்மைகள் ஒருநாள் வெளியில் வந்தே தீரும்.
இந்தத் திரைப்படத்தில் பெரிய வசனங்கள் இல்லை. அரசியல் முழக்கங்கள் இல்லை. வீரதீரச் செயல்கள் இல்லை. ஆனால், ஒரு லாரிப் பயணத்தின் வழியாக ஒரு நாட்டின் குற்ற வரலாற்றையும், அந்தக் குற்றங்களில் சாதாரண மனிதர்களின் பங்களிப்பையும் மிக அழுத்தமாகப் பேசுகிறது.
2018ஆம் ஆண்டு கான் திரைப்பட விழாவின் இயக்குநர்கள் இருவாரப் பிரிவில் (Directors' Fortnight) திரையிடப்பட்ட இப்படம், வரலாற்றை எதிர்கொள்ளத் தயங்கும் சமூகங்களுக்கான முக்கியமான திரைப்பட சாட்சியமாக இருக்கிறது.
போர் என்பது எல்லைகளில் மட்டும் நிகழ்வதில்லை. அது மனிதர்களின் மனசாட்சியிலும் நிகழ்கிறது. சில குற்றங்கள் மண்ணுக்குள் புதைக்கப்படலாம். சில சடலங்கள் ரகசியமாகக் கொண்டு செல்லப்படலாம். சில உண்மைகள் பல ஆண்டுகளுக்கு மறைக்கப்படலாம். ஆனால், வரலாறு அவற்றை என்றாவது ஒருநாள் மீட்டெடுக்கும். ஒரு நாட்டின் கடந்த காலக் குற்றங்களை மறைப்பது அந்த நாட்டின் எதிர்காலத் தலைமுறைக்கு மிகப்பெரிய சுமையை விட்டுச் செல்வதற்குச் சமம். அந்தச் சுமையைப் பற்றிப் பேசும் மிக முக்கியமான அரசியல் திரைப்படம்தான் The Load.
கட்டுரையாளர் : ஜோசப் ராஜா | கவிஞர் / திரைக்கதை ஆசிரியர்
தொடர்புக்கு: writer.josephraja@gmail.com