ஒரு நல்ல கலைஞனிடம் கலைக்கான தோற்றுவாயைச் சொல்லச்சொல்லிக் கேட்பதென்பது உண்மையிலேயே ஆர்வமூட்டக்கூடியது. ஓவியம், கவிதை, இசை, திரைப்படம் என எல்லாக் கலைகளுக்கும் இது பொருந்தக்கூடியது என்றாலும், எல்லாரையும் ஈர்க்கக்கூடிய ஒரு திரைப்படம் எந்தப் புள்ளியில் உருவானது என்று சொல்லக் கேட்பது சுகம்தானே!
திரைப்படங்களில் இருந்து திரைப்படங்களை எடுப்பவர்கள் உண்மையான கலைஞர்களை விடவும் அதிகம் பேசுவார்கள். அதுதான் அவர்களுடைய அடையாளம். கலைஞர்களல்ல, அவர்கள் வியாபாரிகள்.
கண்ட காட்சிகளில், கேட்ட கதைகளில், வாழ்வின் அனுபவங்களில் என எங்கிருந்தோ ஒரு கதைக்கான விதை மனதில் விழத் தொடங்கும். அதை அறிந்துகொள்வது அந்தத் திரைப்படத்தை இன்னும் கொஞ்சம் நெருங்கிச்செல்ல உதவக்கூடியது. ஒரு கவிதையிலிருந்து திரைப்படம் உருவாகியிருக்கிறது.
சிறுகதைகளிலிருந்து எத்தனை திரைப்படங்கள் உருவாகியிருக்கின்றன என்பதை நீங்களும் அறிந்திருப்பீர்கள். ஆனால், வார்த்தைகள் அல்லாது, ஒலியால் மட்டுமே உருவாக்கப்படும் ஓர் இசையிலிருந்து ஒரு திரைக்கதை உருவாகிவிட முடியுமா? முடியும் என்கிறது இந்தத் திரைப்படம்.
ஜெர்மனியின் மிக முக்கியமான இயக்குநரான ஃப்ளோரியன் ஹென்கெல் வான் டோன்னர்ஸ்மார்க் திரைப்படக் கல்லூரியில் மாணவராக இருக்கும்போது, இசை கேட்டபடி ஒரு கதைக்கான யோசனையில் மூழ்கி இருந்திருக்கிறார். தோழர் லெனினைப் பற்றி, மக்சீம் கார்க்கி சொன்னது அவருக்கு ஞாபகம் வருகிறது. மாஸ்கோவில் ஒருநாள் மாலைவேளையில் தோழர் ஒருவரின் வீட்டில் பீத்தோவன் இசையைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் லெனின், கார்க்கி மற்றும் சில தோழர்கள்.
அப்போது லெனின் சொல்கிறார், “பீத்தோவனின் அப்பேஷனோட்டாவைவிடச் சிறந்த இசை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அந்த இசையை ஒவ்வொரு நாளும் என்னால் கேட்க முடியும். பிரமாதமான அமானுஷிய இசை.” ஆனால், “இசை என்னை பலவீனப்படுத்துகிறது. இந்த நரக வாழ்க்கையில் கூட இத்தனை அழகை உருவாக்கும் மனிதர்களின் தலையைத் தடவ வேண்டும் போலத் தோன்றுகிறது.
ஆனால், இப்போது நாங்கள் அவர்களைத் தாக்க வேண்டிய காலத்தில் இருக்கிறோம்.” என்று. இங்கிருந்துதான் இந்த முரணிலிருந்துதான் இந்தப் படத்திற்கான கதை வளரத் தொடங்கியதாகக் கூறுகிறார்.
மேற்கண்ட மேற்கோளைப் பற்றிய சிந்தனையில் இருக்கும்போது, இயக்குநரின் மனதில் இருந்து ஒரு காட்சி மேலெழுந்து வருகிறது. ‘இருண்ட அறை ஒன்றில் காதில் கருவி அணிந்து அமர்ந்திருக்கிறார் ஓர் அதிகாரி. அரசின் எதிரியை ஒட்டுக் கேட்கிறார். ஆனால் அவன் காதில் விழுகிறது உன்னதமான இசை’ என்கிற இந்த எண்ணம் தோன்றிய உடனே திரைக்கதையின் உள்ளடக்கத்தை எழுதிமுடிக்கிறார்.
பல குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்கள் எடுத்திருக்கும் அனுபவத்தோடு தன்னுடைய முதல் முழுநீளத் திரைப்படமாக இந்தத் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்தத் திரைப்படத்திற்காக மூன்று ஆண்டுகள் ஆய்வு செய்து, பெர்லின் சுவருக்குப் பின்னால் தீவிர கண்காணிப்பிற்குக் கீழ் கிழக்கு ஜெர்மனியில் வாழ்ந்து கொண்டிருந்த மக்களின் வாழ்க்கையை நேர்மையாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
”எவ்வளவு கெட்டவனாகக்கூட இருக்கட்டுமே! ஒரு மனிதன் உண்மையான கலையையும் உண்மையான அன்பையும் உண்மையான கருணையையும் எதிர்கொள்ளும் போது மாறாமல் இருக்க முடியுமா” என்கிற கேள்விதான் இந்தத் திரைப்படத்தின் வழியாக இயக்குநர் டோன்னர்ஸ்மார்க் கேட்க நினைத்திருக்கிறார். அதிகாரத்தின் பக்கம் அசையாமல் இருக்கும் ஒரு மனிதனை மாற்றுவதன் வழியாக இசை இந்தத் திரைப்படத்தில் ஒரு மாயாஜாலத்தை நிகழ்த்திக் காட்டுகிறது.
முதலில் இந்தத் திரைப்படத்தின் பெயரை ’நல்ல மனிதனுக்கான சொனாட்டா’ என்றுதான் வைக்க நினைத்திருக்கிறார். ஆனாலும் அந்த உன்னத இசைக்கலைஞர் கேப்ரியல் யாரெட் தன்னுடைய இசையால் இந்தத் திரைப்படத்தை இன்னும் மெருகேற்றியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். "படத்தின் மையக் காட்சிக்குத் தேவையான இசையை உருவாக்கக்கூடியவர் கேப்ரியல் யாரெட் மட்டுமே என்று நான் நம்பினேன்" என்கிற இயக்குநரின் வார்த்தைகளை நீங்கள் ஒருவேளை சந்தேகித்தால் Sonata for a Good Man என்கிற அந்த இசைத்துணுக்கைக் கேட்டுப்பாருங்கள்.
அற்புதமான பின்னணி இசையில், மிக அற்புதமான ஒளிப்பதிவில், பரபரப்பான திரைக்கதையால், அற்புதமான நடிகர்களால் கச்சிதமாகத் தன்னுடைய முதல் திரைப்படத்தைக் கொடுத்த இயக்குநர் டோன்னர்ஸ்மார்க்கை எவ்வளவு பாராட்டினாலும் தகும். சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளை வாங்கியிருக்கிறது இந்தத் திரைப்படம்.
அதுமட்டுமல்லாமல் சிறந்த வெளிநாட்டுத் திரைப்பட பிரிவில் ஆஸ்கர் விருதையும் பெற்றிருக்கிறது. உலகம் முழுவதிலும் இருக்கும் திரைப்பட விமர்சகர்களும் பார்வையாளர்களும் இந்தத் திரைப்படத்தை நல்ல திரைப்படம் என்று வாரி அணைத்துக்கொண்டார்கள்.
1984ஆம் ஆண்டு பெர்லின் சுவரால் பிரிக்கப்பட்டிருக்கும் கிழக்கு ஜெர்மனியில் நடக்கிறது கதை. ஸ்டாசி என்றழைக்கப்படும் ரகசிய காவல்துறையின் திறமையான அதிகாரியான கெர்ட் வீஸ்லர் (அவருடைய எண் HGW XX/7), தன்னுடைய மேலதிகாரியும், நண்பருமான ஆண்டன் க்ருபிட்ஸின் உத்தரவின்படி, புகழ்பெற்ற நாடக ஆசிரியர் ஜியோர்க் ட்ரைமனைக் கண்காணிக்க நியமிக்கப்படுகிறார்.
ட்ரைமன் புகழ்பெற்ற எழுத்தாளர். கம்யூனிச ஆட்சியை ஆதரிப்பவர். சர்வதேச அளவில் அறியப்பட்ட மதிப்புமிக்கவர், அரசுக்கு எதிரான நடவடிக்கைகள் இல்லாதவர் ஆகையால் ஏன் கண்காணிக்கச் சொல்கிறார்கள் என்பது வீஸ்லருக்குப் புரியாமல் இருக்கிறது.
ட்ரைமன் தன்னுடைய காதலியும் மிகச்சிறந்த மேடைக் கலைஞருமான கிறிஸ்டா மரியா சியலாந்துடன் வாழ்ந்துவருகிறார். கலாச்சார அமைச்சர் ப்ரூனோ ஹெம்ப் கிறிஸ்டாவை அடைய நினைக்க, அது நிறைவேறாமல் போகவே அவரும் தன் பங்கிற்கு உளவு அமைப்பை ஏவிவிடுகிறார். ட்ரைமனிற்குத் தெரியாமல் வீடெங்கும் ஒட்டுகேட்கும் கருவிகள் பொருத்தப்படுகின்றன. அந்தரங்கம் என்று எதுவும் மிச்சமில்லாமல், எல்லாமும் ஒட்டுக் கேட்கப்படுகின்றன.
ட்ரைமனின் நண்பரும் அரசின் கறுப்புப் பட்டியலில் இருப்பவருமான நாடக இயக்குநர் யெர்ஸ்கா அவருக்கு ’ஒரு நல்ல மனிதனுக்கான சொனாட்டா’ என்கிற இசைத்தொகுப்பின் எழுத்து வடிவத்தைப் பரிசாகக் கொடுக்கிறார். சில நாள்கள் கழித்து அவர் தற்கொலை செய்துகொண்டதாகச் செய்தி வர அதிர்ச்சியடைகிறார் ட்ரைமன். துயரத்தின் வெளிப்பாடாக அந்த இசையைத் தன்னுடைய பியானோவில் வாசிக்கத் தொடங்குகிறார்.
பக்கத்திலிருக்கும் கிறிஸ்டா மட்டுமல்ல, தூரத்தில் ஒட்டுக் கேட்டுக் கொண்டிருக்கும் வீஸ்லரும் அந்த இசையைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். அந்த இசை அவருடைய இதயத்தைத் துளைக்கிறது. உளவுபார்க்கும் அந்த இதயத்தில் மானுட அன்பு பெருக்கெடுக்கிறது. ட்ரைமனிற்கு மறைமுகமாக உதவத் தொடங்குகிறார் வீஸ்லர்.
நண்பரின் தற்கொலை வழியாக கிழக்கு ஜெர்மனியில் நடந்து கொண்டிருக்கும் எண்ணிலடங்கா தற்கொலைகளை அறிந்துகொள்கிறார் ட்ரைமன். அது சம்பந்தமாக மேற்கு ஜெர்மனியின் புகழ்பெற்ற ஒரு செய்தி இதழில் கட்டுரை எழுதத் தொடங்குகிறார். அதற்காக உளவு அமைப்பால் கண்டறிய முடியாத சிறப்புத் தட்டச்சு இயந்திரம் ரகசியமாக அவருக்குக் கொடுக்கப்படுகிறது.
அத்தனையையும் அறிந்த வீஸ்லர் அரசுக்குத் தெரியாமல் மறைத்து ட்ரைமனிற்கு உதவி செய்கிறார். வீஸ்லரையும் மீறி அரசுக்குச் செய்தி கிடைக்க, ட்ரைமனின் வீட்டைச் சல்லடை போட்டுத் தேடுகிறார்கள். தட்டச்சு இயந்திரத்தைக் கண்டறிய முடியவில்லை. ட்ரைமனின் பெயர் குறிப்பிடாமல் கட்டுரையும் வெளிவருகிறது. கிழக்கு ஜெர்மனியின் உண்மையான தற்கொலை விகிதம், அரசின் தகவல் மறைப்பு போன்ற குற்றச்சாட்டுகளால் அதிகாரம் கோபம் கொள்கிறது.
கிறிஸ்டா மரியா கைது செய்யப்பட்டு வீஸ்லரால் விசாரணை செய்யப்படுகிறார். தட்டச்சு இயந்திரம் இருக்குமிடத்தைச் சொல்லிவிடுகிறார். கிறிஸ்டா விடுதலை செய்யப்பட, மீண்டும் தேடுதலுக்காக உளவுத்துறையினர் ட்ரைமனின் வீட்டிற்கு வருகிறார்கள். குற்றவுணர்வில் சாலையில் வேகமாக வரும் வண்டியில் விழுந்து தற்கொலை செய்கிறாள் கிறிஸ்டா. ஆனால் தட்டச்சு இயந்திரம் கிடைக்காமல் உளவுத்துறையினர் திரும்புகிறார்கள்.
சில ஆண்டுகள் கழித்து தனக்கு எதிரான உளவு அமைப்பின் செயல்களை அறிந்துகொள்கிறார். அந்த ஆவணங்களை வாசித்துப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது. வீஸ்லர் செய்த உதவியை நினைத்து இதயம் கனிந்து போகிறது.
வீஸ்லரின் குறியீட்டு எண் HGW XX/7 மட்டும் கிடைக்கிறது, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ட்ரைமன் ஒரு நல்ல மனிதனுக்கான சொனாட்டா என்கிற புத்தகத்தை எழுதுகிறார். ஒரு கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் புத்தகத்தை அந்த வழியாகச் செல்லும் வீஸ்லர் பார்க்கிறார். உள்ளே சென்று அந்தப் புத்தகத்தை வாங்கிப் பார்க்கிறார். அந்தப் புத்தகத்தின் முதல் பக்கத்தில் HGW XX/7க்கு நன்றியுடன் என்று எழுதப்பட்டிருக்கிறது. விற்பனையாளர் ”பரிசளிக்கும்படி தயார் செய்து தரவா” என்று கேட்க, ”வேண்டாம் இது எனக்கானது” என்று பதில் சொல்கிறார் வீஸ்லர்.
இந்தப் படத்தைப் பார்ப்பதற்கு இசை ஒளிப்பதிவு, நடிகர்கள் இயக்கம் என எண்ணற்ற காரணங்கள் இருந்தாலும் உலக சினிமாவின் உன்னதமான கடைசிக் காட்சியான இந்தக் காட்சிக்காகவே கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய திரைப்படம்!
கட்டுரையாளர்: ஜோசப் ராஜா | கவிஞர் / திரைக்கதை ஆசிரியர்
தொடர்புக்கு: writer.josephraja@gmail.com