இந்து டாக்கீஸ்

The Light Thief: மக்களுக்காக மின்சாரத்தைத் திருடும் நாயகன் | சினிமாவும் அரசியலும் 51

ஜோசப் ராஜா

கிரேக்கப் புராணத்தில் ஒரு கதை இருக்கிறது. மனிதர்கள் முழுமையாக அறிவும் நாகரிகமும் பெறாத காலம் அது. இயற்கையின் சக்திக்கு முன்னால் பலவீனமாக, பயந்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள் மனிதர்கள். அவர்களைக் கடுங்குளிர் வாட்டியது, அவர்களைக் காட்டு விலங்குகள் அச்சுறுத்தின. எல்லாவற்றையும்விட அவர்களைக் கடுமையாக அச்சுறுத்தியது என்ன தெரியுமா? இருள். இருள்தான் அவர்களை அச்சத்தில் ஆழ்த்துவதில் முழுமையாக இருந்தது.

கண்களுக்கு முன்னால் துயரத்தில் உழன்று கொண்டிருக்கும் மனிதர்களைப் பார்த்தும் பார்க்காமல் இருக்க முடியவில்லை ஒருவனால். எல்லாக் காலத்திலும் அப்படி ஒருவன் இருக்கத்தான் செய்வான். அவன் பெயர் புரோமத்தியஸ். அவர்களைப் பார்த்து அவனுடைய இதயத்திலிருந்து இரக்கவுணர்வு இறங்கி வந்தது.

இருளை விலக்கும் நெருப்பைப் பற்றி அறிந்திருந்தான் புரோமத்தியஸ். அப்போது நெருப்பு மனிதர்களிடம் இல்லை. ஆம், மனிதர்களுக்கானதாக இல்லை. கடவுள்களின் உலகில் மாபெரும் சக்தியாகக் கருதப்பட்டது நெருப்பு.

நெருப்பிருந்தால் மனிதர்கள் உணவு சமைக்கலாம். குளிரிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். உலோகங்களை உருக்கி ஆயுதங்களும் கருவிகளும் செய்யலாம். இதையெல்லாம் அறிந்திருந்த புரோமத்தியஸ் வெறுமனே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கவில்லை. வெறுமனே வாய்ச்சவடால் பேசிக் கொண்டிருக்கவில்லை. செயலில் இறங்கினான்.

மனிதர்கள் அதிக அறிவையும் சக்தியையும் பெற்றுவிட்டால் அவர்கள் கடவுளின் அதிகாரத்துக்குச் சவாலாக மாறக்கூடும் என்று பயந்து கடவுள்களின் தலைவனான ஜீயஸ் மனிதர்களுக்கு நெருப்பைக் கொடுக்க விரும்பவில்லை. ஆனால், புரோமத்தியஸ் என்ன செய்தான் தெரியுமா? கடவுள்களின் உலகத்திலிருந்து நெருப்பைத் திருடி மனிதர்களின் கைகளில் கொண்டுவந்து கொடுத்தான்.

அவ்வளவுதான் நெருப்பைப் பெற்றுக்கொண்ட மனிதர்களின் வாழ்க்கை தலைகீழாக மாறியது. நெருப்பின் சகல பயன்பாடுகளாலும் மனிதர்கள் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிச் சென்றார்கள். ஆனால், நெருப்பைக் கொண்டு வந்து மனித வாழ்க்கையின் இருளைப் போக்கிய புரோமத்தியஸ் கடவுள்களின் கடுங்கோபத்திற்கு ஆளானான். கடுமையாகத் தண்டிக்கப்பட்டான். பாறையில் சங்கிலியால் கட்டப்பட்டான். கழுகுகள் அவன் உடலைத் தின்று கொண்டிருந்தன. நீண்ட காலம் கழித்து ஹெரக்ளீஸின் கைகளால் விடுவிக்கப்பட்டான் புரோமத்தியஸ்.

அக்தன் அரிம் குபாத்

இது வெறும் புராணக் கதையாக மட்டுமல்லாமல். அறிவு, சுதந்திரம், அதிகாரத்திற்கு எதிரான கிளர்ச்சி மற்றும் மனித முன்னேற்றம் ஆகியவற்றின் குறியீடாகப் பார்க்கப்படுகிறது. கடவுள்கள் தடைசெய்த அறிவை மனிதர்களுக்குக் கொடுத்தவன் என்கிற வகையில் புரோமத்தியஸ் வரலாறு நெடுகிலும் வாழ்த்தப்பட்டுக் கொண்டே இருக்கிறான்.

நெடுங்காலத்துக்கு முன்னால் சொல்லப்பட்ட கிரேக்கப் புராணக் கதைக்கும், 2010ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படத்திற்கும் என்ன தொடர்பிருக்கிறது என்று நினைக்கிறீர்களா? புரோமத்தியஸ் கடவுள்களின் கைகளிலிருந்து நெருப்பைத் திருடி மனிதர்களின் கைகளில் கொடுத்தது போல, இந்தக் கதையின் நாயகன் ஸ்வெட் ஆகே அதிகாரத்தின் கைகளில் இருந்து மின்சாரத்தைத் திருடி மக்களுக்குக் கொடுக்கிறான்.

அக்தன் அரிம் குபாத் (Aktan Arym Kubat) கிர்கிஸ்தானின் முக்கியமான சமகாலத் திரைப்பட இயக்குநர்களில் ஒருவர். அவர் முதலில் ஓவியக் கலைப் பயின்றவர். பிஷ்கெக் நகரிலுள்ள கலைக் கல்வி நிறுவனத்தில் படித்த பிறகு, 1980களில் Kyrgyzfilm திரைப்பட நிறுவனத்தில் கலை இயக்குநர் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பாளராகப் பணியாற்றத் தொடங்கினார். திரைப்பட இயக்கத்திற்கு வருவதற்கு முன்பே காட்சியமைப்பு, ஓவியத்துடன் அவருக்கு ஆழமான தொடர்பு இருந்தது.

1990ஆம் ஆண்டு ஒரு குறும்படத்தின் மூலம் இயக்குநராகத் தொடங்கினார். 1993ஆம் ஆண்டு வெளியான The Swing திரைப்படம் லோகார்னோ திரைப்பட விழாவில் குறிப்பிடத்தக்க விருதைப் பெற்றதன் மூலம் சர்வதேச கவனத்தைப் பெற்றார்.

குபாத் பெரும்பாலும் தன்னுடைய திரைப்படங்களில் கிர்கிஸ்தானின் கிராமப்புற வாழ்க்கை, சாதாரண மனிதர்கள், வறுமை, பாரம்பரியம், சமூக மாற்றம் மற்றும் அதிகாரத்துடனான மனிதனின் மோதல் ஆகியவற்றை அதிகமாகப் பேசுகிறவர். அவரது திரைப்படங்கள் மிகப் பெரிய அரசியல் உரைகளைப் பேசுவதற்குப் பதிலாக, சாதாரண மனிதர்களின் அன்றாட வாழ்க்கைக்குள் அரசியல் எவ்வாறு நுழைகிறது என்பதை வெளிப்படுத்துகின்றன.

The Light Thief (2010), Centaur (2017), Esimde (2022) ஆகிய மூன்று படங்களும் ஒன்றுடன் மற்றொன்று தொடர்புடைய படைப்புகளாகக் கருதப்படுகின்றன. இந்தப் படங்களில் நேர்மை, நீதி பற்றிய அக்கறை கொண்ட சாதாரண மனிதர்கள் மூலம் சோவியத் ஒன்றியம் சிதைந்த பிறகான கிர்கிஸ்தான் சமூகத்தின் மாற்றங்களை அவர் ஆராய்கிறார்.

The Light Thief படத்தில் குபாத் இயக்குநராக மட்டுமல்லாமல், ஸ்வெட்-ஆகே என்கிற கதாபாத்திரத்தில் மின்சாரம் வழங்கும் ஒரு சாதாரண தொழிலாளியாகவும் நடித்திருக்கிறார். கிர்கிஸ்தானின் சாதாரண மனிதர்களின் வாழ்க்கைக்குள் மறைந்திருக்கும் சமூக, அரசியல் மற்றும் பண்பாட்டு முரண்பாடுகளை மிக இயல்பான காட்சிமொழியில் பதிவு செய்யும் இயக்குநர், ‘என்னைச் சுற்றியுள்ள கதாபாத்திரங்கள் மூலமாகத் எனது நாட்டைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன்’ என்றார்.

ஒரு நாட்டின் அரசியலைப் புரிந்துகொள்ள அதன் நாடாளுமன்றத்தைப் பார்த்தால் போதுமா? ஒரு கிராமத்தின் இருண்ட வீட்டுக்குள் சென்று பார்த்தால்கூடப் போதும். அங்கே எரியாமல் இருக்கும் ஒரு மின்விளக்கின் பின்னால் வறுமையும் அதிகாரமும் பொருளாதாரமும் அரசியலும் ஒளிந்திருக்கலாம். அப்படியோர் இருண்ட கிராமத்திற்குள் நம்மை அழைத்துச் செல்கிறது இந்தத் திரைப்படம்.

Centaur (2017)

வெளிப்படையான அரசியல் முழக்கங்களோ, நீண்ட அரசியல் உரைகளோ இல்லாமல், ஒரு சாதாரண மின்சார ஊழியனின் வாழ்க்கையின் வழியாக ஒரு நாட்டின் அரசியல் மாற்றத்தையும் அதிகாரத்தின் இயல்பையும் முதலாளித்துவத்தின் ஊடுருவலையும் பேசுகிறது இத்திரைப்படம்.

திரைப்படத்தின் நாயகன் ஸ்வெட்-ஆகே கிராமத்தில் மின்சாரப் பழுதுகளைச் சரிசெய்யும் தொழிலாளி. ஆனால், அவர் வெறும் மின்சார ஊழியர் அல்ல. மின்சாரக் கட்டணத்தைச் செலுத்த முடியாமல் தவிக்கும் ஏழைகளின் வீடுகளில் விளக்குகள் எரிய வேண்டும் என்பதற்காக, அவர்களின் மின்மீட்டர்களில் முறைகேடு செய்து கட்டணத்தைக் குறைக்கிறார்.

சட்டத்தின் பார்வையில் அவர் ஒரு குற்றவாளி. மனிதநேயத்தின் பார்வையில் அவர் வெளிச்சத்தின் மீட்பர். எல்லாராலும் ‘மிஸ்டர் லைட்’ அதாவது ஒளி என்றே அழைக்கப்படுகிறார். இதிலிருந்தே திரைப்படத்தின் அரசியல் தொடங்குகிறது.

அந்தக் காலம் கிர்கிஸ்தான் அரசியல் மாற்றங்களின் அதிர்வுகளைச் சந்தித்த காலமாக இருந்தது. 2005ஆம் ஆண்டின் துலிப் புரட்சிக்குப் பின்னான அரசியல் சூழல், திரைப்படத்தின் பின்னணியில் நிழல்போலத் தொடர்கிறது. தலைநகரின் அரசியல் மாற்றங்கள் தொலைதூரச் செய்திகளாகத் தோன்றினாலும், அவற்றின் தாக்கம் இறுதியில் கிராமத்தின் அன்றாட வாழ்க்கையையும் சென்றடைகிறது.

கிராமத்திற்குள் புதிய மனிதர்கள், புதிய ஆசைகளோடு நுழைகிறார்கள். ஆம், தொழிலதிபர்கள் வருகின்றனர். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வருகின்றனர். வளர்ச்சி, முதலீடு, நவீனமயமாக்கல் போன்ற சொற்கள் கிராமத்தின் பழைய வாழ்க்கையைச் சுற்றி ஒலிக்கத் தொடங்குகின்றன. வளர்ச்சி என்கிற வார்த்தை கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. ஆனால் அந்த வளர்ச்சியின் பயன் யாருக்குச் செல்கிறது என்பதே முக்கியமான கேள்வி.

இந்தத் திரைப்படம் முதலாளித்துவத்தின் இன்னொரு முகத்தைத் திறந்து காட்டுகிறது. ஒரு கிராமத்தின் நிலம், அதன் இயற்கை வளங்கள், அதன் மனிதர்கள், அதன் அரசியல் அதிகாரம் ஆகியவை மெதுவாக வியாபாரத்தின் மொழியில் அளக்கப்படத் தொடங்குகின்றன. உள்ளூர் அரசியலும் பணக்காரர்களின் நலன்களும் ஒன்றோடு மற்றொன்று பின்னிப் பிணைகின்றன. வெளிநாட்டு முதலீடும், உள்ளூர் அதிகாரமும் சந்திக்கும் இடத்தில் சாதாரண மனிதனின் குரல் யாருக்கும் கேட்காமல் மெளனமாகிப் போகிறது.

ஸ்வெட்-ஆகே காற்றின் மூலம் மின்சாரம் உருவாக்க வேண்டும் என்று கனவு காண்கிறார். இந்தக் கனவு வெறும் தொழில்நுட்பத் திட்டம் மட்டுமல்ல. காற்று யாருக்கும் சொந்தமானதல்ல. அதை சுவாசிக்கப் பணம் செலுத்த வேண்டியதில்லை.

அதுபோல மக்களின் அடிப்படைத் தேவைகளும் சிலரின் அதிகாரத்திற்குள் மட்டும் இருக்கக் கூடாது என்கிற ஒரு மறைமுகமான அரசியல் சிந்தனையை அது பிரதிபலிக்கிறது. இயற்கையிலிருந்து இலவசமாக வரும் காற்றை மின்சாரமாக மாற்றி, அதை மக்களுக்குக் கொடுக்க வேண்டும் என்கிற ஸ்வெட் ஆகேயின் கனவு, அதிகாரம் நிர்ணயிக்கும் பொருளாதார அமைப்புக்கு மாற்றான ஒரு சிறிய கனவாகிறது.

இந்தக் கனவுதான் அவரை அதிகாரத்தின் கண்களில் ஆபத்தான மனிதனாக்குகிறது. அவர் புரட்சியாளர் அல்ல. அவர் அரசியல்வாதியும் அல்ல. அவரிடம் ஆயுதமும் இல்லை. அவருடைய கையில் இருப்பது மின்சாரக் கருவிகள் மட்டுமே. ஆனால் அவர் ஒரு விஷயத்தைச் செய்கிறார். அவர் கேள்வி கேட்கிறார். அதிகாரத்திற்கு எதிரான மிகப் பெரிய ஆயுதம் எப்போதும் அதுதான்.

திரைப்படத்தின் தொடக்கத்தில் நம்மைச் சிரிக்க வைக்கும் கிராமத்து மனிதர், மெல்ல அதிகாரத்துடன் மோதும் மனிதராக மாறுகிறார். நகைச்சுவை மெதுவாக அரசியல் பதற்றமாக மாறுகிறது. அன்றாட வாழ்க்கை, அதிகாரப் போட்டியின் களமாக மாறுகிறது. இறுதியில் அதிகாரத்தின் கரங்களால் ஸ்வெட்-ஆகே எதிர்கொள்ளும் வன்முறை, அமைப்பின் உண்மையான முகத்தை வெளிப்படுத்துகிறது. அதிகாரம் தனது நலன்களுக்கு எதிரான குரலை எவ்வாறு மௌனப்படுத்துகிறது என்பதைத் திரைப்படம் மெல்லிய குரலில் வெளிப்படுத்துகிறது.

ஆனபோதிலும் இந்தத் திரைப்படம் இருளில் முடிவதில்லை. ஒரு சிறிய வெளிச்சத்தோடுதான் முடிகிறது. அந்த வெளிச்சம் ஸ்வெட் ஆகேவின் வெற்றியின் அடையாளமல்ல. அவர் கனவு முற்றிலும் நிறைவேறிவிட்டதற்கான சான்றுமல்ல.

மாறாக, ஒரு மனிதரை அழித்துவிடலாம்; ஆனால் அவர் கனவை முழுமையாக அழித்துவிட முடியாது என்கிற நம்பிக்கையின் குறியீடு. இருளால் சூழப்பட்ட கிராமத்தில் ஒரு மனிதன் ஏற்றிய சிறிய விளக்கு, இறுதியில் நம்மிடம் ஒரு கேள்வியை விட்டுச் செல்கிறது, ‘வெளிச்சம் யாருடையது?’

இந்தக் கேள்வி கிர்கிஸ்தானில் மட்டும் கேட்கப்பட வேண்டிய கேள்வியா? அடிக்கடி தடைபட்டுக் கொண்டிருக்கும் மின்சாரத்தால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் பெரும்பாலான மனிதர்கள் கேள்விகள் கேட்பதில்லை. முறையாகக் கொடுக்கப்படாத மின்சாரத்திற்கு எதற்காகக் கட்டணத்தை உயர்த்திக் கொண்டே போகிறார்கள் என்று கேட்க யாருக்கும் நேரமும் இருப்பதில்லை.

நெருப்பைக் கண்டறிந்தது ஒரு காலத்தின் பாய்ச்சல்; அங்கிருந்து பயணித்து மின்சாரத்தைக் கண்டறிந்தது இன்னொரு காலத்தின் பாய்ச்சல். இந்தக் காலம், மின்சாரம் உள்பட எல்லாவற்றையும் வியாபாரமாக்கியிருக்கும் காலம். வியாபாரிகளை விரட்டாமல் நிம்மதியும் மகிழ்ச்சியும் சாத்தியமென்று நினைக்கிறீர்களா?

கட்டுரையாளர் : ஜோசப் ராஜா | கவிஞர் / திரைக்கதை ஆசிரியர்

தொடர்புக்கு: writer.josephraja@gmail.com

SCROLL FOR NEXT