இந்து டாக்கீஸ்

The Camp Thiaroye: காலனி ஆதிக்கத்துக்கு எதிரான திரைப்படம் | சினிமாவும் அரசியலும் 23

ஜோசப் ராஜா

”கலை என்பதே அரசியல்தான், கலை இல்லாமல் சுதந்திர மனிதர்கள் இல்லை” என்று உரத்துச் சொன்னவர், ஆப்ரிக்க சினிமாவின் தந்தை என்றழைக்கப்பட்ட இயக்குநர் ஆஸ்மேன் செம்பேன். அவருடைய இயக்கத்தில் 1988இல் வெளிவந்தது கேம்ப் தியரோயே திரைப்படம்.

காலனி ஆதிக்கத்திற்கு எதிரான இந்தத் திரைப்படத்தை, காலனி ஆதிக்கத்தின் நயவஞ்சகமான இன்னொரு முகத்தைத் தோலுரித்துக் காட்டிய இந்தத் திரைப்படத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், ஆப்ரிக்க நாடுகள், ஐரோப்பிய நாடுகளின் காலனி ஆதிக்கத்தின் கீழ் கசங்கிக் கொண்டிருந்த வரலாற்றைக் கொஞ்சம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

19, 20 ஆம் நூற்றாண்டுகளில் வறுமையில் கிடந்த ஆப்ரிக்க நாடுகளின் மண்ணின் வளங்களையும், மனித வளங்களையும் கொள்ளையடிப்பதற்காக, ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே கடும் போட்டி இருந்து வந்தது. வரலாறு அதை ஆப்ரிக்காவைப் பங்கிட்டுக்கொள்ள நடந்த போராட்டம் (Scramble for Africa) என்று குறித்துக்கொண்டது.

          

செனகல், மாலி, ஐவரி கோஸ்ட் போன்ற நாடுகளோடு இன்னும் சில நாடுகளைத் தன்னுடைய காலனி நாடுகளாக மாற்றிக்கொண்டு, சுரண்டலைத் தொடங்கியது பிரான்ஸ். ஆப்ரிக்காவின் வளங்களைச் சுரண்டியதோடு மட்டுமல்லாமல், நாகரிகமாக, நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்த ஆப்ரிக்க மக்களிடையே வெள்ளை – கறுப்பு இனவாதத்தை அநாகரிகமாக வளர்த்துவிட்டது. அதுவரை அவர்கள் பார்க்காத இனவாதம், ஆன்மாவைச் சீண்டிப்பார்த்தது.

அந்தக் காலக்கட்டத்தில் (1923) செனகல் நாட்டில் பிறந்த செம்பேனுக்கு, அன்றைக்கு இருந்த ஆப்ரிக்கச் சூழலில் கல்வி கற்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. துறைமுகத் தொழிலாளியாகச் சிலகாலம் கடுமையான வேலையைச் செய்ய வேண்டிய சூழல் வாய்த்தது. தங்களுக்குச் சம்பந்தமே இல்லாத இரண்டாம் உலகப்போரில், காலனி நாடாக இருக்கிறோம் என்கிற ஒரே காரணத்திற்காக பிரான்ஸ் நாட்டிற்காக ராணுவப் பணி செய்த லட்சோபலட்சம் ஆப்ரிக்கர்களில் ஆஸ்மேன் செம்பேனும் ஒருவர்.

சினிமா என்கிற அற்புதமான கலையைக் கற்றுக்கொள்ள வேண்டும், அதன் வழியாக ஆப்பிரிக்க மண்ணின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும், வலிமையையும் உலகிற்குக் காட்ட வேண்டும் என்று நினைத்தார் செம்பேன். தங்களுடைய வலி நிறைந்த வரலாறையும் போராட்டக் குணத்தையும் தன்னுடைய மக்களுக்கே சினிமாவின் மூலமாகச் சொல்லிக்கொடுக்க நினைத்தார். “என் மக்கள் பலருக்குப் படிக்கத் தெரியாது, ஆனால் திரைப்படங்கள் மூலமாகப் பார்க்கத் தெரியும். அதற்காகத்தான் சினிமா எடுக்க நினைக்கிறேன்” என்றார்.

உலகம் எங்குமுள்ள அடிமைகளுக்கும் அடக்குமுறைகளுக்கு உள்ளானவர்களுக்கும் நம்பிக்கை கொடுக்க சோவியத் யூனியன் இருந்தது. ஆஸ்மேன் செம்பேனுக்கும் அசைக்க முடியாத நம்பிக்கை கொடுத்தது. சோவியத்தின் திரைப்படப் பள்ளிகளில் புதிய பார்வையில், புதிய பரிணாமத்தில் திரைப்படத்தை உலகிற்குச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ஐசென்ஸ்டீன் போன்றவர்கள் திரைக்கலையில் மிகப்பெரிய உயரத்தை நிர்ணயம் செய்து வைத்திருந்தார்கள். ஆஸ்மேன் செம்பேனுக்குப் புகழ்பெற்ற கார்க்கி திரைப்படப் பள்ளியில் சினிமா கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

1960களில் சோவியத்தில் இயக்கம், திரைக்கதை எழுதுதல், படத் தொகுப்பு, அரசியல் சினிமா மொழி போன்ற பிரிவுகளில் சினிமாவைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். சோவியத்தில் சினிமா கற்றுக் கொண்டதாலும், அவருடைய ஆப்ரிக்கா, பிரான்ஸின் காலனி நாடாகக் கசக்கிப் பிழியப்பட்டுக் கொண்டிருந்ததாலும், இயல்பாகவே அவருடைய கலைமனம் அரசியலை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியது. இன்னொரு பக்கம் ஆஸ்மேன் செம்பேன் மாதிரியான இயக்குநர்கள் உருவாவது என்பது, ஆப்ரிக்காவின் அன்றைய தேவையுமாக இருந்தது.

தேவையிலிருந்து பிறப்பதுதான் எல்லாமும் என்பதைப்போல, செம்பேனின் திரைப்படங்களும் தேவையிலிருந்தே பிறந்தன. முக்கியமாக தி காம்ப் தியரோயே என்கிற இந்தத் திரைப்படத்தை அவ்வளவு எளிதாகத் தொடங்க முடியவில்லை. தயாரிப்பாளர்கள் தயங்கினார்கள், உண்மையைச் சொன்னால் பயந்தார்கள். ஆனால் உலகத்தால் மறக்கப்பட்ட அந்த ரத்த வரலாற்றை, அந்தத் துரோக வரலாற்றை, அதிகாலைப் படுகொலையைச் சொல்லியே ஆகவேண்டும் என்று உறுதியாக இருந்தார் செம்பேன். திரைமொழியில் உலகத்தின் இதயங்கள் உறைந்துபோகும்படி சொன்னார். எப்படி என்கிறீர்களா?

இரண்டாம் உலகப்போரில் பிரான்ஸிற்காக ஜெர்மனியோடு போர் புரிந்துவிட்டு, தங்கள் தாயகமான ஆப்ரிக்காவிற்குத் திரும்புகிறார்கள் படைவீரர்கள். பாலைவனத்தின் நடுவில் அமைக்கப்பட்ட தற்காலிக ராணுவ முகாமில் தங்கவைக்கப்படுகிறார்கள். சுற்றிலும் முள்வேலிகள் அமைக்கப்பட்டு, உயரமான காவல் கோபுரங்கள் கட்டப்பட்டு, கடுமையான கட்டுப்பாடுகளுடன் இருக்கிறது அந்த முகாம். “இந்தக் குடிசைகளிலா தங்க வைக்கப் போகிறீர்கள்?” என்று ஒரு பிரெஞ்சு அதிகாரி கேட்க, “அவர்களின் கிராமங்களைவிட இது வசதியானதுதான்” என்று கிண்டலாகச் சொல்கிறான் இன்னோர் அதிகாரி. கறுப்பினத்தவர்கள் மீதான இனவெறியின் தொடக்கமாகக் இந்தக் காட்சியைப் புரிந்துகொள்ளலாம்.

அந்த முகாமில் வசதிகள் குறைவாக இருந்தாலும் ஆப்ரிக்க வீரர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும், இசைத்துக் கொண்டும் கிராமத்தைப் பற்றியும், தங்களுக்காகக் காத்திருக்கும் உறவுகளைப் பற்றியும் நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள். அவர்களுக்குக் கொடுக்கப்படும் உணவின் தரம் மிக மோசமாக இருப்பதால், அதிகாரிகளுடன் சண்டை போடுகிறார்கள். வெள்ளையர்களுக்குத் தனி உணவும், தங்களுக்குத் தனி உணவும் தயாரிக்கப்படுவது தெரிந்து மேலும் கோபமடைகிறார்கள். “போர்க்களத்தில் எல்லாரும் ஒன்றாகச் சேர்ந்துதானே போரிட்டோம். உணவில் மட்டும் என்ன பாகுபாடு?” என்று கேட்கிறார்கள். ஆனால், அதிகாரிகள் இனவாதச் சிந்தையிலிருந்து இறங்கிவர மறுக்கிறார்கள்.

இன்னொரு நாள் ஆப்ரிக்கப் படையின் தலைவர், பக்கத்திலிருக்கும் நகரத்தின் மதுபான விடுதி ஒன்றிற்குச் செல்கிறார். உள்ளே சென்று அமர்ந்த பிறகு, கறுப்பினத்தவர் என்கிற ஒரே காரணத்திற்காக அங்கிருந்து வெளியேற்றப்படுகிறார். தொடர்ந்து அமெரிக்கச் சிப்பாய்கள் அவரைத் தாக்கி, கைதுசெய்து அழைத்துச் செல்கிறார்கள். முகாமில் இருக்கும் வீரர்கள் இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டுக் கோபம் கொள்கிறார்கள். அவரைத் தேடுவதற்காக வந்தவர்கள் பதிலுக்கு ஓர் அமெரிக்கச் சிப்பாயை அடித்து அவன் வண்டியிலேயே முகாமிற்கு கடத்திச் சென்று, தங்கள் தலைவரின் அறையிலேயே வைத்துப் பூட்டிவிடுகிறார்கள்.

வேறு வழியில்லாமல் கறுப்பின அதிகாரி டியாட்டாவைக் கொண்டுவந்து முகாமில் விட்டு, அமெரிக்க வீரரை அழைத்துச் செல்கிறார்கள். தன்னுடைய சகாக்களை நினைத்துப் பெருமை கொள்கிறான் டியாட்டா. வீரர்களில் ஒருவர் நன்றாகத் துணி தைக்கக் கூடியவர். மனைவிக்காகத் துணி தைத்துத் தரச் சொல்கிறான் இன்னொருவன். “எப்படி இருப்பாள் உன் மனைவி?” என்று அவர் கேட்க, “என்னைப் பார்க்காமல் ரொம்ப மெலிஞ்சிட்டா, நான் ஊருக்குப் போனதும் திரும்பவும் குண்டாயிடுவா, அதுனால இரண்டு துணியா தைச்சுக் கொடு” என்று கேட்கும் காட்சி இதயத்தை வருடக்கூடியது.

அவர்களுக்கான சம்பளம் கொடுக்கும் நாள் வருகிறது. பேரதிர்ச்சியை ஏற்படுத்துகிறார்கள் பிரெஞ்சுக்காரர்கள். பிரான்ஸின் பணத்திலிருந்து ஆப்ரிக்கப் பணத்திற்கு மாற்றித் தருகிறேன் என்று சொல்லி கால்வாசிப் பணமே கொடுக்க முன்வருகிறார்கள்.

உழைத்தவர்கள் கொதித்துப் போகிறார்கள். முடியவே முடியாது என்கிறார்கள். உங்களுக்கெல்லாம் இதுவே அதிகம் என்று ஏளனம் செய்கிறார்கள். பிரெஞ்ச் அதிகாரியைக் கடத்திச் சென்று அறையில் வைத்து மிரட்டுகிறார்கள். வேறு வழியில்லாமல் அவர்கள் கோரிக்கை ஏற்கப்படுகிறது.

சாதித்த மகிழ்ச்சியில் இரவெல்லாம் ஆடிப்பாடிக் கொண்டாடிவிட்டு, அதிகாலையில் தூங்கச் செல்கிறார்கள். அப்படி விடிந்திருக்கக் கூடாதுதான். என்னசெய்ய ஆதிக்கவெறி. இனவெறி. பூனையைப்போல நகர்ந்து வருகின்றன பீரங்கிகள். முகாம் சுற்றிவளைக்கப்படுகிறது.

நியாயமான கூலி கேட்ட அந்த ஆப்க்க வீரர்களை, பிரான்ஸின் ஆதிக்கக் கரங்கள் சுட்டுப் பொசுக்கின்றன. நூற்றுக்கணக்கான வீரர்கள் கொல்லப்படுகிறார்கள். விடிந்ததும் அங்கேயே ஓர் ஓரத்தில் குழிதோண்டிப் புதைக்கப்படுகிறார்கள். புதைக்கப்பட்ட அந்த உண்மையை உலகிற்குச் சொல்லவே இந்தத் திரைப்படத்தை எடுத்திருக்கிறார் ஆஸ்மேன் செம்பேன்.

காலனி நாடுகளெல்லாம் விடுதலை அடைந்துவிட்டதென நீங்கள் நினைக்கலாம். அது உண்மையல்ல. வடிவங்கள் மாறியிருக்கிறது அவ்வளவுதான். நடந்து கொண்டிருக்கும் போர்கள் காலனி ஆதிக்கத்தின் வேறொரு வடிவத்தைத்தான் நமக்குக் காட்டிக் கொண்டிருக்கின்றன. கலைஞர்கள் இந்நேரத்தில் இதற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும் என்பதே நியாயம். ஆஸ்மேன் செம்பேனைப்போல நீங்களும் கலையை அரசியலாக்குங்கள், மக்களுக்கானதாக மாற்றுங்கள்!

கட்டுரையாளர்: ஜோசப் ராஜா | கவிஞர் / திரைக்கதை ஆசிரியர் | தொடர்புக்கு: writer.josephraja@gmail.com

SCROLL FOR NEXT