எப்படிப் பார்த்தாலும், என்னதான் நியாயங்கள் சொன்னாலும் எந்தவொரு போரும் மக்களுக்கு நன்மை செய்யப் போவதில்லை. உலகத்தின் கண்களுக்கு முன்னால் உருக்குலைந்து கிடக்கும் காஸாவே அதற்குச் சாட்சி. இந்த யுத்தம் மட்டுமல்ல, எந்த யுத்தமும் பேரழிவைத் தவிர எதையும் பிரசவித்தது அல்ல! எந்தத் தேசத்திலும் குண்டுச்சத்தங்கள் ஓய்ந்த கையோடு யுத்தம் முடிவடைந்து விடுவதில்லை.
சிதைந்த நகரத்தை, சிதைந்த வாழ்க்கையைக் கட்டியெழுப்பும் வரையிலும் யுத்தம் நீடிக்கிறது என்றுதான் அர்த்தமாகும். இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரோடு கைகோத்திருந்த இத்தாலியின் நிலைமையும் அப்படித்தான் இருந்தது. போர் முடிந்த பிறகு, அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக நெருக்கடிகளை எதிர்கொள்ள நேர்ந்தது.
பணவீக்கம், அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றம், சேதமடைந்த நகரங்கள், வேலையின்மை, கிராமங்களிலிருந்து நகரத்தை நோக்கிப் படையெடுத்த மக்கள், குழந்தைகள்கூட வேலை செய்ய வேண்டிய சூழல், உணவுப் பற்றாக்குறை, திருட்டு மோசடி போன்ற குற்றச்செயல்கள் அதிகரிப்பு என இத்தாலி நிலைகுலைந்து போயிருந்தது. கலைஞர்கள் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கவில்லை, செயல்படத் தொடங்கினார்கள்.
இத்தாலியின் யதார்த்தம் கலையில் வெளிப்படத் தொடங்கியது. புதிய அலை இயக்குநர்கள் இத்தாலியின் மறுக்க முடியாத யதார்த்தத்தைப் பேரலையாகப் பிரசவிக்கத் தொடங்கினார்கள். அந்தப் பேரலையில் அன்றும் இன்றும் என்றும் முக்கியமான திரைப்படமாக இருந்து கொண்டிருப்பது விட்டோரியா டி சிகாவின் சைக்கிள் திருடர்கள் திரைப்படம்.
இத்தாலிய எழுத்தாளரும் கவிஞரும் ஓவியருமான லூயிஜி பார்டோலினி 1946இல் சைக்கிள் திருடர்கள் என்கிற பெயரில் நாவல் ஒன்றை வெளியிட்டார். இந்த நாவலே 1948 இல் வெளிவந்த இந்தத் திரைப்படத்திற்குத் தூண்டுதலாக இருந்தது.
இந்தத் திரைப்படம் 1950இல் அகாடமி வழங்கிய கெளரவ ஆஸ்கர் விருதைப் பெற்றது. உலகின் மிகச்சிறந்த திரைப்படம் இதுவென்று சொன்னார்கள் விமர்சகர்கள். எல்லாக் காலத்திற்குமான சிறந்த திரைப்படம் இதுதானென்று சொன்னார்கள் திரைப்பட ஆய்வாளர்கள்.
இயக்குநர் டி சிகா இந்தத் திரைப்படத்திற்கு முன்பு ஒரு படத்தை இயக்கியிருந்தாலும்கூட, இந்தப் படத்தைத் தயாரிக்க இத்தாலியின் எந்தத் திரைப்பட நிறுவனமும் முன்வரவில்லை. எல்லாக் கதவுகளையும் தட்டிப் பார்த்த டி சிகா, கடைசியில் தன்னுடைய நண்பர்களிடமிருந்து பணத்தைத் திரட்டி இந்தத் திரைப்படத்தை உருவாக்கினார்.
திரைப்படத்தில் எல்லாவற்றையும் யதார்த்தமாகவும் உண்மையாகவும் காட்ட வேண்டும் என்கிற உறுதியில் அரங்க அமைப்பு எதையும் பயன்படுத்தாமல், உண்மையான இடங்களில் படமாக்கினார் டி சிகா.
உலக சினிமாவின் தலைசிறந்த திரைப்படமாக இன்று வரையிலும் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிற இந்தத் திரைப்படம் இத்தாலியில் வெளியான சமயத்தில் இருகரம் நீட்டி வரவேற்கப்படவில்லை. இத்தாலிய மக்களை, இத்தாலிய சமூகத்தை எதிர்மறையாகச் சித்தரிக்கிறது திரைப்படம் என்று குற்றம் சாட்டப்பட்டது.
அதேநேரத்தில் உலகத்தின் கரங்கள் இந்தத் திரைப்படத்தை வாரியணைத்துக் கொண்டன. அற்புதமான திரைப்படமென்று ஒரே நேரத்தில் ஒரே மாதிரி ஒலிக்கத் தொடங்கின உலகத்தின் குரல்கள்.
அகிரா குரோசாவா தொடங்கி உலகின் உன்னதமான இயக்குநர்களுக்கெல்லாம், நடிகர்களுக்கெல்லாம் பிடித்த படமாகவும், மீண்டும் மீண்டும் பார்க்கப்பட்ட படமாகவும் இந்தத் திரைப்படமே இருக்கிறது. 1950இல் நமது தேசத்தின் அற்புதமான இயக்குநர் சத்யஜித் ரே தனது விளம்பர நிறுவனப் பணிக்காக லண்டன் சென்றிருந்தார்.
அங்கிருந்த 6 மாதங்களில் சுமார் 100 திரைப்படங்களைப் பார்த்தார். அதில் அவரை அதிகமாகக் கவர்ந்தது டி சிகாவின் இந்தத் திரைப்படம்தான். ”திரைப்பட இயக்குநராக ஆகவேண்டும் என்கிற உறுதியுடன் திரையரங்கை விட்டு வெளியே வந்தேன்” என்று சொல்லியிருக்கிறார் ரே.
பெரிய அரங்குகள், பிரபலமான பெரிய நடிகர்கள் என இப்படித்தான் திரைப்படம் எடுக்க வேண்டும் என்கிற எண்ணத்தைச் சுக்குநூறாக உடைக்கிறது பைசைக்கிள் தீவ்ஸ் திரைப்படம். சினிமாவின் அடிப்படையான உண்மையை மீண்டும் கண்டறிந்த திரைப்படம் இதுதானென்று உறுதியாக நம்பினார் ரே.
உள்ளூர் வாழ்க்கையை உண்மையாகச் சொன்னால் அது உலக சினிமாவாக மாறும் என்று முடிவுசெய்த ரே, “பைசைகிள் தீவ்ஸ், ஒரு திரைப்படம் அல்ல! வெளிப்பாடு. சினிமாவை எப்படிச் செய்யவேண்டும் என்று கற்றுக்கொடுத்த பள்ளி” என்று சொன்னதோடு மட்டுமல்லாமல், அந்தப் பாதிப்பைத் தன்னுடைய பதேர் பாஞ்சாலி திரைப்படத்தின் மூலம் உலகத்திற்கு உறுதியாக வெளிப்படுத்தினார்.
டி சிகாவும்கூட தன்னுடைய மிகப்பெரிய முன்னோடியாக சார்லி சாப்ளினைச் சொன்னார். குறிப்பாக சாப்ளினின் ‘தி கிட்’ திரைப்படம் மிகுந்த பாதிப்பை அவருக்குள் ஏற்படுத்தியதாக நிறைய நேர்காணல்களில் சொல்லியிருக்கிறார். சாப்ளினின் நகைச்சுவையும் அதில் சோகத்தைக் கலக்கும் கலைப் பாணியும் டி சிகாவிற்கு ஏற்புடையதாக இருந்தன.
சாப்ளின் வெளிப்படுத்திய எளிய மக்களின் வாழ்க்கை, மனிதநேயச் சித்தரிப்பு ’தி கிட்’ படத்தில் காணப்படும் தந்தை – குழந்தை உறவின் உணர்ச்சி, பைசைகிள் தீவ்ஸ் திரைப்படத்திலும் தந்தை - மகன் உறவாக எதிரொலிக்கிறது என்று திரைப்பட வரலாற்றாசிரியர்கள் எழுதியிருக்கிறார்கள். டிசிகா பற்றி பிரெஞ்சு விமர்சகர்கள் இப்படிச் சொல்கிறார்கள், “சாப்ளினுக்குப் பிறகு நம் காலத்தின் மிகப்பெரிய மனிதநேயச் செய்தி டி சிகாவினுடையதுதான்” என்று.
இந்தத் திரைப்படத்திலும்கூட நடிகர்களுக்குப் பதிலாகச் சாதாரண மனிதர்களையே நடிக்க வைத்தார் டி சிகா. கதாநாயகனாக நடித்த லாம்பர்டோ நிஜமாகவே ஒரு தொழிற்சாலைத் தொழிலாளி. பூ விற்பனையில் தன்னுடைய தந்தைக்கு உதவி செய்து கொண்டிருந்த எட்டு வயதுச் சிறுவன் என்ஸோவைக் கவனித்து புரூனோ கதாபாத்திரத்தில் நடிக்கச் செய்தார். திரைப்பட த்தின் இறுதிக் காட்சியில் தந்தையும் மகனும் கேமராவிலிருந்து தொலைவாக நடந்து செல்வதுபோலக் காட்டப்படுகிறது.
இந்தக் காட்சி டி சிகாவின் விருப்பப்படி சார்லி சாப்ளினுக்குச் செய்யப்பட்ட மரியாதை. ஒரு நேர்காணலில் ஏன் இந்தத் திரைப்படத்தை உருவாக்கினார் என்கிற கேள்விக்கு, “அன்றாட வாழ்க்கையில் மறைந்திருக்கும் நாடகத்தையும், தினசரி நிகழ்வுகளில் இருக்கும் அதிசயத்தையும் வெளிக்கொணர்வதே என் நோக்கம்” என்று பதில் சொல்லியிருக்கிறார் டி சிகா.
இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய ரோம் நகரில், ஆண்டோனியோ ரிச்சி தனது மனைவி மரியா, மகன் புரூனோ மற்றும் கைக்குழந்தையைப் பராமரிக்க வேலை தேடி அலைகிறார். விளம்பரச் சுவரொட்டிகள் ஒட்டும் வேலை கிடைக்கிறது. ஆனால் அந்த வேலைக்கு ஒரு மிதிவண்டி அவசியம். அவரது மிதிவண்டி முன்பே அடகுக் கடையில் வைக்கப்பட்டிருப்பதால், வேலையை ஏற்க முடியாத நிலை ஏற்படுகிறது.
இதைக் கண்ட மரியா, தன் திருமணச் சீதனமாகக் கிடைத்த படுக்கை விரிப்புகளை அடகுக் கடையில் கொடுத்து, கிடைத்த பணத்தில் மிதிவண்டியை மீட்டெடுக்கிறார். வேலையின் முதல் நாளிலேயே, ஒரு கட்டிடத்தின் மேல் ஏறி விளம்பரம் ஒட்டிக்கொண்டிருக்கும் ஆண்டோனியோவின் மிதிவண்டியை ஓர் இளைஞன் திருடிச் செல்கிறான். காவல்துறையில் புகார் அளித்தாலும், "நாங்கள் எதுவும் செய்ய முடியாது" என்கிற பதில்தான் கிடைக்கிறது.
திருடப்பட்ட பொருள்கள் சந்தைகளில் விற்கப்படுகின்றன என்கிற தகவலின் பேரில், ஆண்டோனியோ தனது மகன் புரூனோவுடன் சேர்ந்து பல சந்தைகளில் தேடுகிறார். ஒரு சந்தையில் தனது மிதிவண்டியின் சட்டகம் போல் தோன்றும் ஒன்றைக் காண்கிறார். ஆனால் அதன் வரிசை எண்ணைச் சரிபார்த்தபோது அது அவருடையது அல்ல என்பது தெரியவருகிறது. பின்னர், வேறொரு சந்தையில், திருடன் என்று சந்தேகிக்கும் இளைஞனை ஒரு முதியவருடன் காண்கிறார். இருவரையும் பின்தொடர்ந்தாலும், அவர்கள் தப்பித்துவிடுகின்றனர்.
தேடுதல் தொடர்கிறது. ஒரு கட்டத்தில் ஆண்டோனியோ அந்த இளைஞனை மீண்டும் கண்டறிகிறார். ஆனால், சுற்றியிருந்த அனைவரும் திருடனுக்கே ஆதரவாக நிற்கின்றனர். அந்த இளைஞன் திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டது போல நடித்துக் கீழே விழுகிறான். கூட்டம் ஆண்டோனியோவையே குற்றவாளியாகக் கருதுகிறது.
புரூனோ ஒரு காவலரை அழைத்து வருகிறான். காவலர் அந்த இளைஞனின் வீட்டைச் சோதனை செய்தும் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. சாட்சிகளும் இல்லாததால், வழக்கை நிரூபிக்க முடியாது என்று கூறுகிறார். மனமுடைந்த ஆண்டோனியோவும் புரூனோவும் அவமானங்களுக்கும் கேலிகளுக்கும் மத்தியில் அங்கிருந்து வெளியேறுகிறார்கள்.
வீட்டிற்குத் திரும்பும் வழியில் அவர்கள் ஒரு கால்பந்து மைதானத்தின் அருகே செல்கிறார்கள். அங்கு கண்காணிப்பின்றி நிறுத்தப்பட்டிருக்கும் ஒரு மிதிவண்டியை ஆண்டோனியோ கவனிக்கிறார். வாழ்க்கையின் எல்லாக் கதவுகளும் மூடப்பட்டுவிட்டதாக உணரும் அவர், நீண்ட மனப் போராட்டத்திற்குப் பிறகு ஒரு முடிவெடுக்கிறார்.
புரூனோவை அருகிலுள்ள டிராம் நிறுத்தத்தில் காத்திருக்கச் சொல்லிவிட்டு, அந்த மிதிவண்டியைத் திருட முயல்கிறார். ஆனால் மக்கள் அவரைப் பிடித்துவிடுகின்றனர். அந்தக் காட்சியைப் பார்க்கும் புரூனோ அதிர்ச்சியடைந்து அழுகிறான். ஆண்டோனியோ காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்படும்போது, மிதிவண்டியின் உரிமையாளர் புரூனோவின் கண்ணீரைக் கவனிக்கிறார். அந்த ஏழைத் தந்தையின் அவலத்தை உணர்ந்து, இரக்கத்துடன் அவரை விடுவிக்கச் சொல்கிறார்.
இறுதியில் ஆண்டோனியோவும் புரூனோவும் மக்கள் கூட்டத்திற்குள் மெதுவாக நடந்து செல்கின்றனர். ஆண்டோனியோ கண்ணீரை அடக்கப் போராடுகிறார். அவமானம், தோல்வி, வறுமை, நம்பிக்கையின்மை அனைத்தும் அவரைச் சூழ்ந்திருக்கின்றன. அப்போது புரூனோ அமைதியாகத் தனது தந்தையின் கையைப் பிடிக்கிறான். அந்த ஒரு செயல், படத்தின் முழு உணர்ச்சியையும் சுருக்கமாக வெளிப்படுத்துகிறது:
மனித கண்ணியம் சிதைந்துவிடலாம்; நம்பிக்கைகள் உடைந்து போகலாம்; ஆனால் அன்பும் மனிதநேயமும் இன்னும் உயிருடன் இருக்கின்றன. இதனால்தான் பைசைக்கிள் தீவ்ஸ் திரைப்படத்தின் இறுதிக்காட்சி உலக சினிமாவின் மிகவும் மனதை உருக்கும் மற்றும் மறக்க முடியாத முடிவுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
கட்டுரையாளர் : ஜோசப் ராஜா | கவிஞர் / திரைக்கதை ஆசிரியர்
தொடர்புக்கு: writer.josephraja@gmail.com