'தி பேட்டில் ஆஃப் அல்ஜீரியா' படத்தில் இருந்து.

 
இந்து டாக்கீஸ்

The Battle of Algiers: அல்ஜீரிய மக்கள் புரட்சி | சினிமாவும் அரசியலும் 13

ஜோசப் ராஜா

கடந்த 2003-ஆம் ஆண்டு அணு ஆயுதம் இருப்பதாகப் பொய் சொல்லி ஈராக் நாட்டின் மீது போரைத் தொடங்கியது அமெரிக்கா. போர் என்றால் எதிர்ப்பும் இருக்கத்தானே செய்யும்.

அப்படியென்றால், அந்த எதிர்ப்பை எப்படிக் கையாள்வது? எந்தெந்த வழிகளில் யார்மூலமாக எதிர்ப்பு வரும் என்று ஆய்வுசெய்ய, அமெரிக்க ராணுவத் தலைமையகமான பெண்டகன் முடிவு செய்தது. அந்த ஆய்விற்கு அவர்கள் தேர்ந்தெடுத்த திரைப்படம் ’தி பேட்டில் ஆஃப் அல்ஜீரியா!’

ஒரு புரட்சியை எப்படித் தடுப்பது? புரட்சிக்காரர்களை எப்படி ஒடுக்குவது? அவர்களுக்கு உதவிசெய்யும் பொதுமக்களை எப்படிக் கண்டறிவது என்று ராணுவ அதிகாரிகளும் உளவுத்துறையைச் சேர்ந்தவர்களும் இந்தத் திரைப்படத்தைப் பார்த்து ஆய்வு செய்தனர்.

அமெரிக்கா மட்டுமல்ல, அடுத்த நாட்டை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த, ஆக்கிரமிக்க நினைத்துக் கொண்டிருந்த ஒவ்வொரு வல்லரசு நாடும், ஒவ்வொரு பாசிஸ்டும், ஒவ்வொரு வலதுசாரி அமைப்பும் அவர்களின் தேவைக்குத் தகுந்தவாறு திரைப்படத்தைப் பகுப்பாய்வு செய்து, பல்லைக் கடித்துக் கொண்டிருந்தன.

இன்னொரு பக்கம், காலனி ஆட்சியின் கீழ் கசங்கிக் கொண்டிருந்த மக்களும், ஏகாதிபத்தியத்தை எதிர்க்கத் துணிவில்லாத மக்களும் இந்தத் திரைப்படத்தைப் பார்த்து எதிர்ப்பின் ருசியை அறியத் தொடங்கினார்கள். முக்கியமாக, விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருந்த வியட்நாம், சுதந்திர தாகத்திலிருந்த பாலஸ்தீனம், ஏகாதிபத்தியத்தின் கரங்களால் சிதைந்துகொண்டிருந்த தென்னமெரிக்க நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள், அமெரிக்காவில் இயங்கிக்கொண்டிருந்த பிளாக் பேந்தர் போன்ற அமைப்புகள் அத்தனைக்கும் இந்தத் திரைப்படம் புரட்சியின் வழிகாட்டியாக இருந்தது.

ஒரு புரட்சியை எப்படிக் கட்டமைப்பது? கருத்தைப் பெளதீக சக்தியாக எப்படி மாற்றுவது? பொதுமக்களைப் புரட்சிகர நடவடிக்கைகளுக்குள் எப்படிக் கொண்டிருவருவது என்று பகுப்பாய்வு செய்து, புரட்சியைத் திரைப்படத்தின் உதவியோடு பாடத்தைப் போல படித்துக் கொண்டிருந்தார்கள் அடக்குமுறைகளால் பாதிக்கப்பட்டிருந்த மக்கள்.

'தி பேட்டில் ஆஃப் அல்ஜீரியா' படத்தில் இருந்து.

ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடுகிறவர்களுக்கும், சுதந்திரத்திற்காகப் போராடுகிறவர்களுக்கும் இன்றுவரைக்கும் இந்தத் திரைப்படம் காட்சிவடிவக் கையேடாகப் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது.

உலகம் முழுவதிலுமிருந்து இதுவரையிலும் வெளிவந்திருக்கும் அரசியல் திரைப்படங்களில் இந்தத் திரைப்படம் முக்கியமானதும் முதன்மையானதுமாக இருக்கிறது. இயக்குநர் ஐசென்ஸ்டீன் இயக்கிய அக்டோபர் திரைப்படம் சோவியத் புரட்சியைக் காட்சிப்படுத்தியது என்றால், அந்தத் திரைப்படத்தின் தாக்கத்தில் இருந்து இத்தாலிய இயக்குநரான கில்லோ இயக்கிய இந்தத் திரைப்படம் அல்ஜீரியப் புரட்சியின் சகல கூறுகளையும் திரைமொழியில் வெளிப்படுத்தியது. ஆம், வீரம்செறிந்த அந்த அல்ஜீரியப் புரட்சியை நிச்சயமாக நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

இங்கிலாந்தின் காலனி நாடாக இந்தியா இருந்ததைப் போல, 130 ஆண்டுகளாக பிரான்ஸின் காலனி நாடாக இருந்தது அல்ஜீரியா. ஒரு நாட்டின் காலனி நாடாக இருப்பதை எந்த நாடாவது விரும்புமா என்ன? அல்ஜீரியாவும் விரும்பவில்லை. சுதந்திரத்தைப் பற்றிய கனவுகள் அல்ஜீரிய மக்களின் இரவுகளை நிறைத்திருந்தன.

சுதந்திரம் என்னும் நெருப்பு அல்ஜீரிய மக்களின் இதயங்களில் அணையாமல் எரிந்து கொண்டேயிருந்தது. எந்த வழியில் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கையில், அல்ஜீரிய மக்களே, நாங்கள் வாங்கித் தருகிறோம் சுதந்திரம் என்று அங்கே தோன்றியது தேசிய விடுதலை இயக்கம்.

அல்ஜீரிய மக்களே, எங்கள் போராட்டம் காலனிய ஆதிக்கத்திற்கு எதிரானது. எங்கள் குறிக்கோள் சுதந்திரம் மற்றும் அல்ஜீரிய அரசை நிறுவுவது. நம் தேசத்தைக் காப்பதும், தேசத்தின் சுதந்திரத்தை மீட்டெடுப்பதும் மக்களாகிய உங்கள் கடமையல்லவா! தேசத்தின் வெற்றி உங்கள் வெற்றியல்லவா! ஒன்று சேருங்கள், முன்னேறுங்கள் தேசிய விடுதலை இயக்கம் உங்களை ஆயுதப் போருக்கு அழைக்கிறது என்று அல்ஜீரிய மக்களைப் புரட்சிக்கு அழைத்தார்கள் தேசிய விடுதலை இயக்கத்தை வழிநடத்திய தலைவர்கள்.

பெண்கள் உள்பட அல்ஜீரிய மக்கள் விடுதலை இயக்கத்திற்கு ஆதரவளித்தது மட்டுமல்லாமல், ஆயுதப் போராட்டத்தில் இணைந்துகொள்ளவும் செய்தார்கள். பொதுமக்களுக்கும் போராளிகளுக்கும் வித்தியாசம் தெரியாமல் குழம்பிப்போய் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது பிரெஞ்சு ராணுவம்.

அத்தனை கட்டுப்பாடுகளையும் மீறித் தாக்குதல் சம்பவங்களை நடத்திக் கொண்டிருந்தார்கள் போராளிகள். மொத்தப் படமுமே ஏகாதிபத்தியத்தின் அடிவயிற்றைக் கலங்கச் செய்ததென்றால், படத்தின் ஒரு காட்சிக்குப் பதைபதைத்துப் போனார்கள். இத்தனைக்கும் இயக்குநர் கற்பனையாக எதையும் சொல்லிவிடவில்லை. அல்ஜீரிய விடுதலைப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டுதான் திரைக்கதை எழுதப்பட்டிருந்தது. திரைப்படம் இயக்கப்பட்டிருந்தது.

'தி பேட்டில் ஆஃப் அல்ஜீரியா' படத்தில் இருந்து

அந்தக் காட்சி இதுதான். மூன்று பெண்கள் ராணுவத்தின் கடுமையான கட்டுப்பாடுகளை மீறி, தங்கள் ஆடைகளுக்குள் மறைத்து வைத்து வெடுகுண்டுகளை எடுத்துச் சென்று, மூன்று முக்கியமான இடங்களைத் தகர்த்து விடுவார்கள். அந்தக் காட்சியைப் பார்த்துவிட்டு, விக்கித்துப் போனார்கள்.

பிரெஞ்சு ராணுவம் அல்ஜீரிய மக்களின் மீது இன்னும் அதிகமாகப் பிடியை இறுக்குகிறார்கள். புரட்சிகர நடவடிக்கையைக் கட்டுப்படுத்துவதற்காகக் கூடுதல் படைகள் பிரான்ஸில் இருந்து வரவைக்கப்பட்டன. திருமணத்தைக்கூட ரகசியமாக நடத்தும் அல்ஜீரிய மக்கள், என்றாவது ஒருநாள் வெளிப்படையாகத் திருமணத்தை நடத்துவோம் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ராணுவத்திற்கு எதிரான குண்டுவெடிப்புகளும், துப்பாக்கிச் சுடுதலும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்க, ராணுவத்தின் அடக்குமுறை இன்னும் அதிகமாகிறது.

தேசிய விடுதலை முன்னணியின் பேச்சைக் கேட்டு, கடைகளை அடைத்து வைத்திருக்கும் வணிகர்களை ராணுவம் வலுக்கட்டாயமாகக் கடைகளைத் திறக்க வைக்கிறது. இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் கண்ணில் தென்பட்ட ஆண்கள் அத்தனைபேரும் கைது செய்யப்படுகிறார்கள். எதிர்த்து நின்றவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள்.

கைது செய்தவர்களைக் கடுமையான சித்ரவதை செய்து இயக்கத்தின் தலைவர்கள் இருக்குமிடத்தை அறிந்து கொள்கிறார்கள் ராணுவத்தினர். கடைசியாக இயக்கத்தில் தலைமைப் பொறுப்பிலிருக்கும் அலியைக் குண்டுவைத்துக் கொன்றுவிட்டதோடு அல்ஜீரிய விடுதலைக்காக ஆயுதமேந்திப் போராடிய தேசிய விடுதலை முன்னணி அமைப்பு மொத்தமாக அழிக்கப்படுகிறது. பிரெஞ்சு ராணுவத்தினர் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர். ஆனால், சுதந்திரத்திற்காகப் பற்றவைத்த நெருப்பு சுதந்திரம் இல்லாமல் அணைந்துவிடுமா என்ன!

தேசிய விடுதலை முன்னணி பற்றவைத்த நெருப்பை அல்ஜீரியாவின் ஒட்டுமொத்த மக்களும் ஏந்தத் தொடங்குகிறார்கள். காலனியாதிக்கத்திற்கு எதிராக வீட்டிலிருக்கும் பழைய துணிகளால் செய்யப்பட்ட கொடிகளை ஏந்தியபடி வீதிகளில் திரண்டு போராடத் தொடங்குகிறார்கள் அல்ஜீரிய மக்கள். ஆயுதங்கள் அல்ல, மக்கள்தான் புரட்சியின் உண்மையான சக்தி என்பதை மெய்ப்பிக்கும் விதமாக, சுதந்திரம் வேண்டும், எங்களுக்கான மரியாதை வேண்டும் என்று உரத்த சத்தத்தோடு பேரணிகளால் நிறைக்கிறார்கள் ஒவ்வொரு வீதியையும். மக்கள் பங்கெடுத்த எந்தப் புரட்சியும் தோற்றுப்போனதாக சரித்திரமே கிடையாது. 1962இல் சுதந்திர அல்ஜீரியா உதயமானது.

உண்மையாக நடந்த மக்கள் புரட்சியை, திரைக்கதையாக்கியதாக இருக்கட்டும், புரட்சியை நேரில் பார்க்கக்கூடிய வகையில் படம்பிடித்ததாகட்டும், ராணுவ ஒடுக்குமுறைக்கு ஓர் இசையையும், புரட்சிகர நடவடிக்கைக்கு ஓர் இசையையும் என வெகு நேர்த்தியாக இசையமைத்ததாகட்டும், அடிமைத்தனத்திலிருந்து சுதந்திரத்திற்கு மாறிக்கொண்டிருக்கும் அல்ஜீரியாவை அப்படியே காட்டிய விதத்திலாகட்டும், தொழில்முறை நடிகர்கள் அல்லாத பொதுமக்கள் இன்னொரு முறை புரட்சியைச் செய்து காட்டியதாகட்டும் எல்லாமும் வாரியணைத்துக்கொள்ள வேண்டியதுதான். கலைகளின் பங்களிப்பு இப்படியல்லவா இருக்க வேண்டும் என்று நீங்களும் வியந்து போவீர்கள்!

'தி பேட்டில் ஆஃப் அல்ஜீரியா' படத்தில் இருந்து

மக்கள் புரட்சி நடைபெற வாய்ப்புள்ள எல்லா நாடுகளிலும் இந்தத் திரைப்படம் தடைசெய்யப்பட்டது. ஆனால், மாற்றத்தை விரும்பியவர்களால் இன்று வரையிலும் இந்தப் படம் தொடர்ந்து பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனால்தான் ஒரு ராணுவ அதிகாரி, “இது திரைப்படமல்ல; புரட்சிக்கான கையேடு” என்று சொன்னார். படத்தைப் பற்றி இயக்குநர் கில்லோ, “பேரசுகள் போரை ஜெயிக்கலாம், வரலாற்றை ஜெயிக்க முடியாது என்று உலகத்திற்குச் சொன்னவர்கள் இந்தப் படத்தின் நாயகர்களான அல்ஜீரிய மக்கள்தான்.

அல்ஜீரியாவிற்கு மட்டுமல்ல; அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு நாட்டிற்கும் பொருந்தும் இந்தப் படம். ஆவணப்படக் காட்சியமைப்பில், பொதுமக்களை நடிக்க வைத்து, கையடக்க கேமராவில், கறுப்பு வெள்ளையில் காட்சிப்படுத்தியது, பார்வையாளர்கள் இதைப் படம் என்று உணராமல் உண்மை என்று உணர வேண்டும் என்பதற்காகத்தான்” என்று சொன்னார்.

உலகமே கொண்டாடும் இந்தத் திரைப்படத்தை அவ்வளவு எளிதாக எடுத்துவிடவில்லை. எந்தத் தயாரிப்பாளரும் தயாரிக்க முன்வரவில்லை. எல்லாவற்றையும் மீறி வழிகளை உருவாக்கித்தான் திரைப்படத்தை எடுத்திருக்கிறார்கள். திரைக் காதலர்களுக்காக இயக்குநர் கில்லோ சொன்ன வார்த்தைகளோடு இந்தக் கட்டுரையை முடிக்கிறேன்.

“உங்களின் தைரியத்தை தக்கவைத்துக்கொள்ளுங்கள். கடினமாக இருந்தாலும் நீண்டகால அடிப்படையில் நல்ல பலன் தரும். உங்களுக்கு விருப்பமில்லாத திரைப்படத்தை எடுப்பதைவிட, திருப்தியையும் பெருமையையும் கொடுக்கும். அதை நீங்கள் உறுதியாகக் கடைப்பிடியுங்கள். நிச்சயமாக அங்கீகரிக்கப்படுவீர்கள்!”

- கட்டுரையாளர்: ஜோசப் ராஜா | கவிஞர் / திரைக்கதை ஆசிரியர் | தொடர்புக்கு: writer.josephraja@gmail.com

SCROLL FOR NEXT