இந்து டாக்கீஸ்

சிங் கீதம்: திரைப் பார்வை - பாடிப் பாடி பாடம் படி!

ஆர்.சி.ஜெயந்தன்

சிங்கீதம் சீனிவாச ராவ் என்கிற பெயரைக் கேட்டதுமே 80 மற்றும் 90-களில் பிறந்தவர்கள் ‘ராஜ பார்வை’யையும் ‘பேசும் பட’த்தையும் ‘அபூர்வ சகோதரர்க’களையும் ‘மைக்கேல் மதனகாமராச’னையும் மறக்க முடியுமா என்பார்கள். சென்னையின் வடபழனியில் வாழ்ந்துகொண்டு, தெலுங்குத் திரையுலகுக்கு ‘புஷ்பக விமான’த்தில் கடந்த 50 ஆண்டுகளாகப் பறந்துகொண்டிருந்தவர். மரபான கதை சொல்லல் முறையைத் தவிர்த்து, புதிய முயற்சிகளை மேற்கொள்வதில் இப்போதுவரை தனது ஆர்வத்தைத் தனித்துக் கொள்ளாதவர்.

கமல்ஹாசனுடன் இணைந்து இவர் செய்த ‘பேசும் படம்’ என்கிற (உரையாடலே இல்லாத ஒரு முழு நீளத் திரைப்படம்) மாற்றில்லா ‘மேஜிக்’கை நிகழ்த்திக் காட்ட முடியும் என்று நிரூபித்த அவர், கதை மாந்தர்கள் தங்களுடைய உரையாடலைப் பாடல்களாகவே பாடும் நிலை உருவானால் இசை மற்றும் பாடல்களைக் கொண்டு கதை சொல்வது எப்படியிருக்கும் என்கிற சிறு ‘பொறி’யை, ‘சிங் கீதம்’ படத்தின் மூலம் காட்டுத் தீயாக மாற்றிக் காட்டியிருக்கிறார். 95 வயது முதுமையில் பழுத்த பழமாக இருக்கும் இந்தப் பரிசோதனைப் படைப்பாளிக்கு அவருடைய இந்தச் சோதனை முயற்சியில் வெற்றி கிடைத்ததா என்று பார்க்கலாமா?

தன்னை வாழ வைக்கும் இயற்கையை தன்னுடைய பேராசையால் மனிதன் இழந்து நிற்கும் அவல வாழ்க்கையையும் அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு அவனால் இழந்த வாழ்க்கையை மீட்க முடியுமா என்பதையும் ‘குபேர புரம்’ என்கிற ஒரு பழமையான தங்கச் சுரங்கம் இருக்கும் கிராமத்தைக் கதைக் களமாகக் கொண்டு கதை சொல்லியிருக்கிறார், இல்லை இல்லை ‘திரைக் காவியம்’ படைத்திருக்கிறார் சிங்கீதம்.

பண விவகாரத்தில் ஏமாற்றிய குற்றத்துக்காக போபால் சிறையிலிருந்து வெளியே வருகிறான் பிரதாப் (அயான்). அவனுடைய அப்பா குடும்பச் சொத்தாக அவனுக்காக விட்டுச் சென்றிருக்கும் 100 ஏக்கர் நிலத்துக்கான சொத்துப் பத்திரங்கள் அவன் கைகளுக்குக் கிடைத்ததும், அந்த நிலம் இருக்கும் ‘குபேர புர’த்துக்கு வருகிறான். வறண்ட பாலைவனம்போல் காணப்படும் அந்தக் கிராமத்துக்குள் தோண்டப்பட்ட இரண்டு தங்கச் சுரங்களை நம்பி அந்தக் கிராமத்தின் மக்கள் வாழ்கிறார்கள். அந்த ஊருக்குச் சென்ற பிறகுதான் தெரிகிறது, அந்தத் தங்கச் சுரங்கங்களின் இரண்டு உரிமையாளர்களில் ஒருவர் பிரதாப்பின் அப்பா தான் என்பது. மக்கள் பிரதாப்பை வரவேற்றுக் கொண்டாடுகிறார்கள். அவனோ, தனது நிலத்தை வந்தவரை லாபமென்று விற்றுவிட்டு பணத்துடன் அந்த ஊரைவிட்டு கம்பி நீட்டிவிடலாம் என்று நினைக்கிறான்.

ஆனால், அப்படியெல்லாம் அவனால் அங்கிருந்து கிளம்ப முடியாதபடி ஒரு நிகழ்வு நடக்கிறது. அங்கிருக்கும் தங்கச் சுரங்கத்துக்கு மேலே இருக்கும் மலையில் வழிபடும் குபேரக் கடவுளின் சாபம், அந்த ஊரின் மக்களுடைய பேச்சைப் பறித்துவிடுகிறது. வாய் கிழிப் பேசியவர்கள் இப்போது தங்கள் வார்த்தைகளைப் பாடலாகப் பாட மட்டுமே முடிகிறது. ‘சாப்பிட்டாயா? தூங்கினாயா?’ என்பதைக் கூட பாடலாகப் பாடிப் பாடித்தான் கேட்கிறார்கள். களைத்தும் போகிறார்கள். அந்தச் சாபத்திலிருந்து அவர்கள் மீள நினைக்கும்போது அவர்களால் மீள முடிந்ததா? பிரதாப்பால் அந்த ஊரைவிட்டு ஓட முடிந்ததா என்று கதை செல்கிறது.

படத்தின் முதுகெலும்பு உரையாடலுக்குப் பதிலாகப் பாடல் என்கிற ஐடியா என்றாலும், அந்த ஐடியாவைத் திரைமொழியில் சாத்தியப்படுத்தியிருக்கும் திரைக்கதை, ஒளிப்பதிவு, கலை இயக்கம், இசை ஆகிய நான்கும் இயக்குநர் சிங்கீதத்தின் காட்சிக் கற்பனைக்கு உயிர் கொடுத்திருக்கின்றன . ஐந்தாவது இடத்தில் இயக்குநர் சிங்கீதம் ‘தங்கம் கண்டறிந்ததுபோல்’ கண்டு பிடித்து அறிமுகப்படுத்தியிருக்கும் அறிமுக நடிகர்கள். அவர்களின் அபாரமான பங்களிப்பால் ‘சிங் கீதம்’ எவ்வாறு ஒரு காவியமாகத் தங்கம்போல் எவ்வாறு மினு மினுக்குகிறது என்பதை படிப்படியாகப் பார்ப்போம்.

பிரதாப், குபேர புரம் என்கிற அந்த வறண்ட பாலைவனக் கிராமத்துக்குள் நுழையும்போது காட்சி ரீதியாகவே பெரிய ஆச்சரியம்! இந்த நிலப்பரப்பைக் கலை இயக்குநர் அரவிந்த் மூலே எங்கே கண்டுபிடித்தார்!? அந்த நிலப்பரப்புடன் - கலை இயக்கம் என்றே தெரியாதவாறு எவ்வாறு சுரங்களையும் கிராமத்தையும் அங்கிருக்கும் இரண்டு பங்களாக்கள், தொழிலாளர்களின் வீடுகள், மலைக் கோயில், அங்கிருக்கும் குபேரன் சிலை, மலையின் உச்சியில் இருக்கும் அவரது வாகனமான கீரிப்பிள்ளையின் (பௌத்த வழக்கப்படி) சிலை என அனைத்தையும் அவர் எப்படி அவ்வளவு நம்பகமாக உருவாக்கினார் என்று வியக்க வேண்டியிருக்கிறது! அது மட்டுமா, அவரின் இந்தக் கலை இயக்கத்தை வி.எஃப்.எக்ஸுடன் படக்குழு கலந்த விதம் பிரம்மாண்டத்துடன் ஈர்க்கிறது.

குபேர புரத்தை ஒரு கற்பனை கிராமமாக மனம் வரித்துக்கொண்டாலும் கூட, அந்த நிலப்பரப்பு, அங்கே என்ன நிகழ்ந்திருக்கும் என்பதை நோக்கி நம் ‘பிரெண்ட் பென்ச்’ ரசிக மனம் அந்த நிலப்பரப்பின் கடந்த காலக் கதை எப்போது வரும் என ஆவலுடன் அதற்காகக் காத்திருக்கத் தொடங்கிவிடுகிறது.

அந்த கடந்த காலத்தின் பிளாஷ் பேக் கதை, ‘நீ எவ்வளவு ஆசைப்பட்டாலும் உனக்கு வாழ்வளிக்கும் இயற்கையை நீ எவ்வளவு காலில் போட்டுப் புதைத்தாலும் இறுதியில் உன் பேராசையைத் துறந்து அதே இயற்கையிடம்தான் நீ தஞ்சைந்து வாழ வேண்டியிருக்கும்’ என்பதைக் காட்சிகளின் வழியே விரித்துக் காட்டும் இந்த ஃபாண்டஸி சினிமா, நிகழ்காலத்தில் நம் கண் முன்னால் நம் வளங்கள் லாபத்துக்காக அழிக்கப்படுவதையும் அதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு நாம் சும்மா இருப்பதையும் நமக்கு நினைவூட்டுகிறது. ஒரு ஃபாண்டஸி கதையின் வழியாக இவ்வளவு தாக்கம் தரும் சூழிலியல் பிரச்சினையைப் பார்வையாளர் மனதில் பதிய வைக்க முடியுமா என்றால் மறைமுகமாகப் பாடம் எடுத்துப் பதிய வைத்துவிடுகிறார் சிங்கீதம் சீனிவாச ராவ்.

இந்தப் படத்தின் முதன்மை அறிமுக நடிகர்கள் அயான், அகல்யா பம்ரூ தொடங்கி ‘கேமியோ’ கதாபாத்திரங்களில் வரும் மாஸ் நாயன் விஜய் தேவரகொண்டா வரை இவ்வளவு பெரிய நடிகர்கள் கூட்டத்தை அவ்வளவு ஒத்திசைவுடன் நடிக்க வைத்திருக்கிறார்கள். குறிப்பாக இப்படத்தில் வரும் சிறார் நடிகர்களின் அபாரமான நடிப்புடன் நாம் குழந்தையாக மாறி குழைந்துபோய் விடுகிறோம்.

படத்தின் அறிமுக நாயகிகளில் ஒருவராக வரும் அகல்யா பக்ரூவைப் பற்றிக் கூறியே ஆக வேண்டும். அந்த வறண்ட நிலத்தில் ஒண்ணே ஒன்னு கண்ணே கண்ணு என்று இருக்கிறது ஒரு பிரம்மாண்டமான அரச மரம். நாயகன் பிரதாப்பை அழைத்துக்கொண்டு வரும் ஜீப் அந்த மரத்தில் மோதி நிற்க, அந்த மிக வயதான மரத்தின் மிகப்பெரிய பொந்தையே தன்னுடைய ஒரு வசிப்பிடம்போல் அமைத்துக்கொண்டிருக்கும் கௌரியையும் (அகல்யா பம்ரூ) அவரது நடிப்பையும் பார்க்கும்போது, ஐரோப்பியச் சாகசக் கதையான ‘அலிஸ் இன் வொண்டர்லேண்ட்’டில் வரும் அலிஸ் போலவே இருக்கிறாள்.

ஆனால், அந்த மரத்துக்கும் அவளுக்குமான உறவையும் அதன் முக்கியத்துவத்தையும் உணர்ந்தவளாக இருக்கிறாள். கௌரியால் கதையில் ஏற்படும் திருப்பங்களும், அதை அவள் எதிர்கொள்ளும் விதமும் என பிரதாப் - கௌரி கதாபாத்திரங்கள் மட்டுமல்ல; சுரங்கத் தொழிலதிபரின் மகள் ரேணுவாக வரும் ஷாலினி கொண்டேபூடி, சைலாஜம்மாவாக வரும் நிவேதா பெதுராஜ், கர்ப்பிணிப் பெண்ணாக வருபவர், பழங்குடியின முது பெண்ணாக வரும் துளசி என பெண் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் எழுதப்பட்ட விதம் இந்த மண்ணை பெண்களே தாங்கிப் பிடிக்கிறார்கள் என்பதற்குத் தரப்பட்டிருக்கும் முக்கியத்துவம் எனப் புரிந்துகொள்ளலாம்.

இயற்கைக்கும் மனிதனுக்குமான ஆட்டமாக இருக்கும் இப்படத்தின் கதைக் களத்தில் ஒரு சோதனை முயற்சி அம்சம் அந்த ஆட்டத்துக்கு வலிமை சேர்க்க வேண்டும். சேர்த்திருக்கிறது. கதாபாத்திரங்கள் தம் உரையாடல்களைப் பாடல்களாகப் பாடுவதை அலுப்பில்லாமல் கேட்க வைக்க வேண்டும் எனும் அந்த சோதனை முயற்சி சவாலைத் துணிந்து ஏற்று அதில் சாதித்துக் காட்டியிருக்கிறார் தேவி ஸ்ரீ பிரசாத்.

ஒரு கட்டத்தில் உரையாடல்கள் பாடல்களாக ஆகிவிடுவதைத் தொடர்ந்து ரசிக்க முடியாமல் அயர்ச்சி வந்துவிடுமோ என்கிற பயம் சில இடங்களில் எட்டுப் பார்க்கும்போது, தேவி ஸ்ரீ பிரசாத், இனிமையான முழுப் பாடல்களை இனிமையாகத் தனித்து ஒலிக்கவிட்டு தன் இசையின் ஜம்பத்தைக் காட்டியிருக்கிறார். விளைவாக, உரையாடல் இசையாக மாறிவிடுவது குபேர புரத்துக்கு வேண்டுமானால் சாபமாக இருக்கலாம்; ஆனால் பார்வையாளராகிய நமக்கு வரமாக மாறிவிடும் மாயத்தை அவரின் இசை சாத்தியப்படுத்துவிடுகிறது.

பாடிய நடிகர்கள் அவ்வளவு இனிமையாகப் பாடியிருக்கிறார்கள். ஒரு தெலுங்குப் படத்தின் தமிழ் மொழிமாற்று வடிவம் என்கிற உணர்வு வராதபடி வசன ‘டப்பிங்’கை துல்லியத்துடன் கொண்டுவந்தது பெரிய விஷயமல்ல; உரையாடல் பாடலாவதில் இனியமையும் துல்லியமும் கொண்டுவந்ததுதான் இப்படத்தின் தலை சிறந்த சாதனை. உரையாடல் பாடலாக மாறுவதில் இழையோடும் வார்த்தை ஜால நகைச்சுவையும் இணையும்போது அது இன்னும் இனிமையாகிவிடுகிறது. திரையரங்கை விட்டு வெளியே வந்ததும் நாமும் பாடல்கள் வழியாகவே எதிர்படும் எல்லாருக்கும் பதில் சொல்ல வேண்டும் என்கிற ஏக்கம் பிறந்துவிடுகிறது.

இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் அங்கூர் சி, ஒரே நிலத்தின் இரண்டு வெவ்வேறு காலகட்டங்களைக் கொண்டு வந்து காட்டுவதில், இயற்கை தன் சமநிலையை இழந்து மலடாக்கி நிற்பதை அற்புதமான அகண்டக் காட்சிகளின் வழியாகக் காட்டி பிரச்சினையின் தீவிரத்தை உணர வைத்துவிடுகிறார். இருண்ட குகைக் காட்சிகளை இவ்வளவு சிறப்பாகப் பாடமாக்க முடியுமா என்று விழி விரிய வைத்துவிடுகிறார்.

இரண்டாம் பாதித் திரைக்கதை, பழகிய பாதையில் பயணிப்பதுபோல் இருந்தாலும் படத்தின் மிரட்டலான மேக்கிங் நம் கண்களைத் திரையிலிருந்து விலக்க வாய்ப்பே கொடுக்கவில்லை. படத்தில் இருக்கும் குறைகளைத் தாண்டி, காலத்தை மீறிய முயற்சியாக ‘சிங் கீதம்’ மனத்திரையில் இசைத்துக்கொண்டே இருக்கும்.

SCROLL FOR NEXT