இந்து டாக்கீஸ்

ரிவால்வர் ரீட்டா: திரைப் பார்வை - இது யாருக்கு வைக்கப்பட்ட குறி?

ஆர்.சி.ஜெயந்தன்

‘எதிர்பாராதது’, ‘அந்த நாள்’ தொடங்கி, எல்லாக் காலத்திலும் க்ரைம் மற்றும் சஸ்பென்ஸ் த்ரில்லர்கள் படங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வந்துகொண்டுதான் இருந்தன. புத்தாயிரத்துக்குப் பிறகுதான் இவ்வகைப் படங்கள் பெரும் படையெடுப்பாக வந்து, பார்வையாளர்களின் மனதில் இடம் பிடித்தன.

ஆனால், கமல்ஹாசன் ‘2002-ல் ‘பஞ்ச தந்திரம்’ என்கிற படத்தின் மூலம் ‘டார்க் ஹ்யூமர்’ என்கிற புதிய வகையை அறிமுகப்படுத்தினர். அதன் பின்னர், நலன் குமாரசாமி தந்த ‘சூது கவ்வும்’, தியாகராஜன் குமாரராஜா இயக்கிய ‘சூப்பர் டீலக்ஸ்’ என்கிற ஹைப்பர்லிங் டார்க் ஹ்யூமர் என்று இந்த வகை, தன்னுடைய அடுத்த கட்டத்தை நோக்கியும் பயணப்பட்டது.

இந்த ‘டார்க் ஹ்யூமர்’ என்கிற வகையின் அடிப்படையான அம்சம் என்பது, ‘எதிர்பாராமல் நிகழ்ந்துவிடும் ஒரு மோசமான நிகழ்வில் தொடர்புடைய முதன்மைக் கதாபாத்திரங்கள், அந்த சூழ்நிலையிலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ளச் செய்யும் நடவடிக்கைகளை அவர்கள் எவ்வளவு நகைச்சுவை உணர்வுடன் (குற்றவுணர்ச்சியைத் துடைத்துப்போட்டுவிட்டு) கையாள்கிறார்கள் என்பதே.

இதுபோன்ற வகைமை படத்தில், முக்கிய சம்பவம் என்பது தொடக்கத்திலேயே நிகழ்ந்துவிடும். அதன் தொடர்ச்சியான விளைவுகளில் கதாபாத்திரங்களின் நடவடிக்கைகளையொட்டி வெடிக்கும் அவல நகைச்சுவைதான் பார்வையாளர்களுக்குப் பெரும் தீனி. குறிப்பாக, தாமே அந்த இக்கட்டான சூழ்நிலையில் இருப்பதாக எண்ண வைத்து, தாம் நினைப்பதைவிடக் கதாபாத்திரங்கள் புத்திசாலித்தனமாக அதேநேரம் முட்டாள்தனமும் கலந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ளச் செய்யும் செயல்களுடன் பொருத்திப் பார்த்துக் கொள்ளும்போது திரை அனுபவம் ஏமாற்றம் அளிக்காத ஒன்றாக மாறிவிடுகிறது. இப்போது ‘ரிவால்வர் ரீட்டா’ இந்த அனுபவத்தைக் கொடுத்ததா என்று பார்க்கலாம்.

பாண்டிச்சேரியில் வசிக்கும் ரீட்டாவின் (கீர்த்தி சுரேஷ்) குடும்பம், 18 வருடங்களுக்கு முன் அப்பாவை இழந்தது. அம்மா (ராதிகா), ஒரு மணமான தங்கை, டாக்டருக்குப் படிக்கும் ஒரு தங்கை சகிதம் வசிக்கிறார்கள். பாண்டிச்சேரியின் முக்கிய, முதிய தாதாவான டிராகுலா பாண்டியன் (சூப்பர் சுப்பராயன்), தான் தேடிச் செல்லும் பாலியல் தொழிலாளியின் வீடு என நினைத்து ரீட்டாவின் வீட்டுக்குள் நுழைந்துவிடுகிறார். முன்பின் அறிமுகமில்லாத அவரை வீட்டை விட்டு வெளியே துரத்தும் முயற்சியில் பாண்டியன் எதிர்பாராமல் இறந்துவிடுகிறார். தவிர, அச்சமயத்தில் தனது தங்கையின் குழந்தைக்கு முதல் பிறந்த நாள் கொண்டாடும் ஏற்பாடுகளில் கீர்த்தியின் குடும்பம் ஈட்டுப்பட்டிருந்தது.

இறந்த பாண்டியனின் உடலை வீட்டிலிருந்து அப்புறப்படுத்தும்முன் பிறந்த நாளைக் கொண்டாட முயல்கிறது அக்குடும்பம். அதேநேரம், பாண்டியனைக் கொன்று அவரது சடலத்தின் முக்கியமான பகுதியை வைத்து பணம் பண்ணப்பார்க்கும் கூலிப்படை கும்பல் ஒன்று பாண்டியனைக் கண்காணிக்கிறது. இதற்கிடையில் பாண்டியனின் மகன் பாபி (சுனில்) அப்பாவைக் காணவில்லை எனத் தேடத் தொடங்குகிறான். இதுவொருபுறம் இருக்க, ரீட்டா பகைத்துக்கொண்ட உள்ளூர் காவல் ஆய்வாளர் ஜான் விஜய் அவளைப் பழிவாங்கக் காத்துக்கொண்டிருக்கிறார். இந்த நான்கு முனை நெருக்குதல்களுக்கு நடுவில் ரீட்டாவும் அவளுடைய குடும்பத்தினரும் இந்த நெருக்கடியான சூழ்நிலையிலிருந்து மீண்டார்களா? அவர்கள் செய்த செயல்கள் என்ன என்பது கதை.

இதே சூழ்நிலை, களம் ஆகியவற்றைப் பல படங்களில் பார்த்திருப்போம். எவ்வளவு பழைய களமாக இருந்தாலும் பிரபலமான நடிகர்கள் நடிக்கும் போது ஒரு தனித்த எதிர்பார்ப்பு மெயின் ஸ்ட்ரீம் பார்வையாளருக்கு ஏற்படுவது இயல்புதான். ஆனால், மொக்கையான, முதிர்ச்சியற்ற ஸ்டேஜிங் அல்லது இது போதும் என்கிற மனநிலையுடன் இயக்குநர் கடந்துபோய்விட்டால், எவ்வளவு பெரிய நட்சத்திரம் நடித்தாலும் எவ்வளவு சிறந்த காட்சியாக இருந்தாலும் எடுபடாமல் போய்விடும்.

இப்படத்தின் முக்கியமான சிக்கல், 50:50 என்கிற அளவில் பாதிக்காட்சிகள் ‘ஸ்டேஜிங்’ தன்மையில் அட்டகாசமான ஈர்ப்புடனும், அந்த ஈர்ப்புக்கு ஆப்பு வைத்து, வேகமெடுத்த உற்சாகத்தை வடியவைக்கும் விதத்தில் பாதி காட்சிகளும் மாறி மாறி வருவதுதான், வயிற்று வலியுடன் படம் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்திவிடுகிறது.

‘ஸ்டேஜிங்’ என்பதை நம் வாசகர்களுக்கு இன்னும் கொஞ்சம் புரியும் விதமாகவே கூறலாம். அதாவது, ஒரு காட்சி எப்படிக் கதை சொல்லும் என்பதை ஸ்டேஜிங் தீர்மானிக்கிறது. அதைத் தீர்மானிப்பவர் இயக்குநர். காட்சியின் சூழ்நிலைக்கு ஏற்ற நடிகர்களின் அசைவுகள் மற்றும் உடல்மொழி, காட்சியில் மையம் கொள்ளும் கதாபாத்திரத்தின் நடத்தைக்கு அந்தக் காட்சிச் சட்டகத்தில் இருக்கும் சக கதாபாத்திரங்களின் எதிர்வினைக் கதை நகர்வையும் அதன் அடுத்த கட்ட விளைவையும் குறிப்பாகக் கதையின் மைய உணர்வைத் தொடர்ந்து வெளிப்படுத்தும் சித்தரித்தல் இது. இதுவே, ‘சீன் மூட்’ (Scene mood) என்கிற காட்சி எழுப்பும் உணர்வைப் பார்வையாளருக்குக் கடத்துகிறது.

‘ஸ்டேஜிங்’ என்கிற இயக்குநரின் எக்ஸிக்யூசனில், காட்சியமைப்பு அல்லது காட்சி வடிவமைப்பு, ஒளிப்பதிவின் முக்கிய உணர்வாகிய லைட்டிங் மற்றும் காட்சிக் கோணம், அங்குள்ள சூழலை உணர்த்தும் கலை இயக்கம், இயக்குநர்களின் நடிப்பைக் கட்டுப்படுத்துதல் அல்லது பார்வையாளர் எதிர்பாராதபடி மிகைப்படுத்தல் என ஒரு காட்சியின் கதை சொல்லலை சினிமா என்கிற உணர்வில்லாமல் நிகழ வைப்பது. இந்தச் செயல்முறை ‘தயாரிப்பு வடிவமைப்பு’ என்கிற அணுகுமுறையில் தொடங்கி வளர்ந்துகொண்டே வந்தால்தான் படப்பிடிப்பில் இன்னும் அது இயக்குநரின் ஆளுமை, தேர்ந்துகொண்ட கதைக்களம், தெரிவு செய்த நடிகர்களின் ஆளுமை ஆகியவற்றைப் பொறுத்து முழுமை பெரும்.

இந்தப் படத்தின் இயக்குநர் ஜே.கே. சந்துரு பல படங்களுக்கு வெற்றித் திரைக்கதைகள் எழுதியவர், ஏற்கெனவே ‘நவீன சரஸ்வதி சபதம்’ என்கிற படத்தை இயக்கியவர். அப்படி இருந்தும் ‘டார்க் ஹ்யூமர்’ படத்தில் மற்ற வகைமையை விட ‘ஸ்டேஜிங்’ மிக மிக முக்கியமானது என்பதை அறிந்திருந்தும் பாதிக் காட்சிகளில் அதை நிகழாமல் இருந்தும் அவற்றை ஓகே செய்திருப்பது ரீட்டாவின் தோட்டா பாதி இலக்குவரை பாயும்படி செய்துவிட்டது.

கீர்த்தி தன் திறன்களை ‘மகாநடி’ தொடங்கிப் பல களன்களில் நிரூபித்தவர். அவருக்கு இது இயல்பாகப் பொருந்தியிருக்கும் கதாபாத்திரம். அவரது உயரம், தோற்றத்தின் வசிகரம் ஆகியவற்றின் கலவையுடன் காட்சியில் தேவைப்படும் உடல்மொழியின் வேகம் ஆகியன ஓகே என்றாலும் பல காட்சிகளில் அவர் தட்டையான நடிப்புடன் கடந்துபோய்விடுகிறார். செல்லம்மாவாக வரும் ராதிகாவின் நடிப்பு பாணியில் குறையில்லை என்றாலும் அக்கதாபாத்திரத்தின் ‘பேக்குத் தன்மை’ அதாவது வெள்ளந்தித்தனம் மிகவும் செயற்கையாக இருக்கிறது.

2கே கிட்களான ரீட்டாவின் தங்கைகள் கச்சிதமாக நடித்திருக்கிறார்கள். மாறாக கீர்த்தியின் தங்கை கணவர் மிகை நடிப்பில் மன்னனாக இருக்கிறார். அவர் வரும் காட்சிகள் அவரது மிகை நடிப்பாலேயே ‘ஸ்டேஜிங்’ கொலாப்ஸ் ஆகிவிடுகிறது. மிகவும் பாராட்டத்தக்கப் பங்களிப்புகளில் கீர்த்தி, ராதிகாவுக்குப் பிறகு சுனிலும் சூப்பர் சுப்பராயனும் எனலாம்.

சுப்பராயன் சடலமாகக் கிடக்கும்போது, அவர் உயிருடன் இருக்கிறாரா என்பதைச் சோதனை செய்ய ஒரு குவளையில் தண்ணீர் எடுத்து வந்து தெளிக்கிறார். ஆனால் முகத்தில் சிறு சலனமும் இல்லாமல் வைத்திருக்கிறார். சடலமாக நீண்ட நேரம் அசைவற்று ஒரு காட்சியில் நடிப்பது பெரும் சவால். அதை அர்ப்பணிப்புடன் செய்திருக்கிறார் சுப்பராயன். ஆந்திரத்தின் ஒரு பிரபலமான நகைச்சுவை நடிகர், வில்லத்தனம் கலந்த நகைச்சுவை குணச்சித்திரமாக வருவதில் ‘மாஸ்டர்’ என்று காட்டியிருக்கிறார்.

ரெடின் கிங்ஸ்லி, ஜான் விஜய் இருவரும் தங்களுடைய பாணிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டத்துக்கு வந்துவிட்டனர். இவர்கள் இருவரையும் தவிர்த்திருந்தால் கூட ‘ரீட்டா’வுக்கு இன்னும் சகாயம் கிடைத்திருக்கும். தொழில்நுட்ப அம்சங்களைப் பொறுத்தவரை, தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவில் ‘ஒளியமைப்பு - கோணங்கள் - நகர்வுகள்’ இந்த ஜானருக்கான பங்களிப்பைப் பாதகம் இல்லாமல் வழங்கியிருக்கின்றன. ஆச்சரியகரமாக ‘டார்க் ஹ்யூமர்’ படங்களின் ‘சேசிங் காட்சிகளுக்குத் தரவேண்டிய அளவான வேகத்தைக் கையாண்டிருக்கிறார்.

ஒளிப்பதிவுக்கு அடுத்த இடத்தில் எம்.கே.டியின் அட்டகாசமான கலை இயக்கம், ரீட்டாவின் வீட்டையும் பாபியின் இருப்பிடத்தையும் தனித்தனியே பகுத்துக் கொடுத்ததில் தொடங்கி காட்சிகள் தோறும் அவரது பணி கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் பங்காற்றியிருக்கிறது. ஸ்டேஜிங் தொல்லையால் துவண்டுபோகும்போதெல்லாம், ஷான் ரோல்டனின் பின்னணி இசையும் பிரவீன் கே.எல்லின் படத்தொகுப்பும்தான் நம்மை உட்கார வைக்கின்றன.

அடுத்தமுறை ‘டார்க் ஹ்யூமர்’ என்கிற வகைமையைத் தேர்வு செய்தால், பழகிய களங்களை உதறுவதில் தொடங்கி, காட்சிகளில் பதற்றத்தைவிட, புத்திசாலித்தனமும் முட்டாள்தனமும் இணையும் நகர்வுகளைச் சம்பவங்களாக்கினால் சாதித்துவிடலாம்.

மொத்தத்தில் ரீட்டா வைத்த குறி, பார்வையாளர்களின் நெற்றிப்பொட்டை நோக்கித்தான். நீங்கள் சுடப்பட்டீர்களா என்பது தனித்தனி சொந்த திரை அனுபவமாக உங்கள் ரசனையைப் பொறுத்து அமையக்கூடும்.

SCROLL FOR NEXT