இந்து டாக்கீஸ்

Reds: காலத்தின் சாட்சியான பத்திரிகையாளன் | சினிமாவும் அரசியலும் 39

ஜோசப் ராஜா

காலத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாத எந்தக் கலை வடிவத்தையும், காலமும் கணக்கில் வைத்துக் கொள்வது கிடையாது. கழித்துவிட்டு முன்னகர்ந்து கொண்டே இருக்கும். ஆதியிலிருந்தே காலம் அப்படித்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. வியாபாரம் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு உருவாக்கப்படும் கலைவடிவங்கள் வியாபாரம் முடிந்தவுடன் முடிந்து போகிறது. அதற்குப்பிறகு அந்த வடிவத்திற்கு வாழ்க்கை கிடையாது.

அதேநேரத்தில் ஒருசில கலைவடிவங்கள் காலத்தின் சாட்சியாக நிற்க வேண்டும் என்கின்ற உறுதியான நிலைப்பாட்டோடு உருவாக்கப்பட்டிருக்கின்றன. இன்றும் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. காலத்தின் சாட்சியான அந்தக் கலைகள், காலத்தைத் தாண்டியும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அமெரிக்காவின் மிகச்சிறந்த இயக்குநர் வாரன் பீட்டி இயக்கத்தில் 1981இல் வெளிவந்த ரெட்ஸ் (Reds) திரைப்படம் காலத்தைத் தாண்டி வாழும் கலைக்கு உயிரோட்டமான எடுத்துக்காட்டு.

இந்த மானுட வரலாற்றில், உலகத்தின் ஒட்டுமொத்த கண்களும் ஒரேநேரத்தில் வியந்து பார்த்த நிகழ்வுகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். அதில் தவிர்க்கவே முடியாத நிகழ்வு 1917இல் ரஷ்யாவில் நடந்தது. நடக்கும் என்று கனவில்கூட யாரும் நினைத்துப் பார்க்காத நிகழ்வு.

நடந்த பிறகும்கூட நிஜத்தில் யாரும் அவ்வளவு எளிதாக நம்பிவிட முடியாத நிகழ்வு. உலகம் முழுவதும் சுரண்டிக் கொழுத்துக் கொண்டிருந்த பெருமுதலாளிகளின் அடிவயிற்றில் நெருப்பைக் கொட்டிய நிகழ்வு. உழைத்து உழைத்தே உருகிப்போயிருந்த உழைக்கும் மக்களின் இதயங்களில், இன்னும் இருக்கிறதோ வாழ்க்கை என்கிற நம்பிக்கையை நிறைத்த நிகழ்வு.

அந்த நிகழ்வு தோழர் லெனின் தலைமையில், போல்ஷ்விக் கம்யூனிஸ்ட் கட்சியும், ரஷ்ய மக்களும் சேர்ந்து தேசத்தின் வரலாற்றைத் தலைகீழாகத் திருப்பிப் போட்ட அக்டோபர் புரட்சிதான். ஆக, அக்டோபர் புரட்சிக்கும் இந்தத் திரைப்படத்திற்கும் என்ன சம்பந்தம் என்று நினைக்கிறீர்களா?

ஒரு பேச்சுக்கு நேரடிச் சம்பந்தம் இல்லையென்று சொல்லிவிடலாம். ஆனால், அக்டோபர் புரட்சியோடு ரத்தமும் சதையுமாகச் சம்பந்தப்பட்ட உன்னதமான மனிதனின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் என்பதால் சம்பந்தம் இருக்கிறது என்று உறுதியாகச் சொல்லலாம்.

‘ஆஹாவென்று எழுந்தது பார் யுகப்புரட்சி’ என்று நம் மண்ணில் இருந்து பாரதி பாடியதுபோல, மற்ற நாடுகளின் கலைஞர்களும் வியந்து பாடினார்கள். மாற்றத்தை விரும்பியவர்கள் மனப்பூர்வமாக வரவேற்றார்கள். ஆனால், அமெரிக்கப் பத்திரிகையாளரான ஜான் ரீட் எல்லாரையும்விட ஒருபடி மேலே சென்று, புரட்சியின் தருணங்களில் ரஷ்யாவில் தங்கியிருக்க நினைத்து, ஓடோடிச் சென்றவர். தலைவர் லெனின் உள்பட, ரஷ்யாவின் புரட்சிகரத் தோழர்களைச் சந்தித்தவர். அந்த அற்புதத்தை நேரில் பார்த்தவர். பார்த்தது மட்டுமல்லாமல், அந்த அனுபவத்தை ’உலகைக் குலுக்கிய பத்து நாள்கள்’ என்கிற புத்தகமாகவும் எழுதியவர்.

1919இல் வெளியிடப்பட்ட அந்தப் புத்தகம், புரட்சியின் முக்கியமான ஆவணமாகவும், அழிக்க முடியாத சாட்சியாகவும் மாறிப்போனது. அப்படிப்பட்ட அற்புதமான பத்திரிகையாளர் ஜான் ரீடின் வாழ்க்கையைத் திரைப்படத்தில் பார்க்கக் கசக்குமா என்ன!

பத்திரிகையாளர், எழுத்தாளர், போர்ச் செய்தியாளர், புரட்சிகர அரசியல் செயற்பாட்டாளர் என்கிற பல முகங்கள் கொண்டவர் ஜான் ரீட். அமெரிக்காவின் வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தாலும், தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வாழ்வெல்லாம் உழைத்தவர்.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்த காலத்திலேயே கவிதை எழுதுவதிலும், அரசியல் விவாதங்களிலும் ஆர்வமாகக் கலந்துகொண்டவர். நியூயார்க்கில் பத்திரிகையாளராகப் பணியைத் தொடங்கிய ஜான் ரீடின் சிறப்பு என்னவென்றால், சம்பவங்களை அலுவலகத்தில் இருந்து எழுதாமல், போர்க்களமாகட்டும், போராட்டக்களமாகட்டும் நேரில் சென்று பார்த்து பதிவு செய்வது.

மெக்சிகோ புரட்சியை நேரில் பார்த்து, புரட்சிப் படையுடன் பயணம் செய்து அந்த அனுபவத்தை நூலாக வெளியிட்டார் ரீட். தொழிலாளர்களின் வேலை நிறுத்தங்கள் மற்றும் சுரங்கத் தொழிலாளர்களின் போராட்டங்களை அப்படியே பதிவு செய்தவர். முதல் உலகப்போரையும் ஒரு பத்திரிகையாளனாகப் பதிவு செய்யத் தவறவில்லை. இறுதியாக ரஷ்யப் புரட்சியை அதன் சூடு குறையாமல் பதிவு செய்ததுதான் ரீடை உலகம் உள்ளங்கையில் ஏந்திக்கொள்ளக் காரணமாக அமைந்தது.

பத்திரிகைத்துறையில் நேரடிக் களப்பதிவு என்கிற மரபின் சிறந்த எடுத்துக்காட்டாக இன்றளவும் இருக்கிறார் ஜான் ரீட். ‘உலகத்தைப் புரிந்து கொள்வது மட்டும் போதாது,அதை மாற்றும் மக்களின் போராட்டங்களையும் பதிவுசெய்ய வேண்டும்’ என்கிற எண்ணத்தில் உறுதியாக இருந்தவர் ரீட்.

1960களின் நடுப்பகுதியில் அமெரிக்காவின் பிரபலமான இயக்குநரும், நடிகருமான வாரன் பீட்டி ஜான் ரீடைப் பற்றியும், அவருடைய முக்கியமான நூலான உலகைக் குலுக்கிய பத்து நாள்கள் பற்றியும் அறிந்துகொள்கிறார். வார்த்தைகள் அவர் மனதில் காட்சிகளாக விரியத் தொடங்குகின்றன. ஆரம்பத்தில் காம்ரேட்ஸ் என்கிற தலைப்பில் திரைக்கதையை எழுதி முடிக்கிறார் வாரன் பீட்டி. ஆனால் நீண்டகாலமாக அடுத்த கட்டத்திற்கு நகராமல் இருந்தது.

1973இல் சோவியத் இயக்குநர் செர்கெய் பொண்டார்சுக் இயக்கவிருந்த ஒரு திரைப்படத்தில் ஜான் ரீட் கதாபாத்திரத்தில் நடிக்க பீட்டிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதை நிராகரித்த பீட்டி, ஜான் ரீடைப் பற்றிப் படமெடுத்தே தீரவேண்டும் என்கிற உறுதியை வலுவாக்கிக் கொண்டார்.

“ஜான் ரீட் ஒரு செய்தியாளர் மட்டுமல்ல; அவர் வரலாற்றின் நடுவில் நின்ற மனிதர்” என்கிற கருத்துத் திரைப்படத்தை உருவாக்கிவிட வேண்டும் என்று பீட்டியை உந்தித் தள்ளிக் கொண்டிருந்தது. திரைக்கதையைக் கச்சிதமாக எழுத வேண்டும் என்பதற்காகப் பல ஆண்டுகளைச் செலவு செய்தார் பீட்டி என்கிற உண்மையை இங்கிருக்கும் திரைப்பட ஆர்வலர்கள் புரிந்துகொள்வது, திரைக்கதை என்றால் என்னவென்று புரிந்துகொள்வதற்கு உதவியாக இருக்கும்.

மேலும், இந்தத் திரைப்படம் கம்யூனிசத்தை மையமாகக் கொண்ட கதையென்பதால் தயாரிப்பாளர் கிடைக்க சவாலாக இருந்ததாகச் சொல்கிறார் பீட்டி. தளரவில்லை, வேறு ஒரு படத்தில் முழு உழைப்பையும் கொட்டி, பணம் திரட்டி படமெடுக்கத் தயாராகிறார் பீட்டி. ஜான் ரீட் கதாபாத்திரத்தில் தானே நடிக்கவும் முடிவு செய்கிறார்.

ஜான் ரீட் மற்றும் அவரது காதலியான லூயிஸ் பிரையன்ட் ஆகியோரின் வாழ்க்கையை வரலாற்றுப் பார்வையில் உண்மையாகப் பதிவுசெய்ய நினைத்த பீட்டி, அவருடைய சமகாலத்தில் வாழ்ந்த, 80 முதல் 100 வயதை எட்டியிருக்கும் பலரை நேர்காணல் செய்திருக்கிறார்.

காலத்தின் சாட்சியாக அவர்களின் வார்த்தைகள் ஒலிக்கின்றன இந்தத் திரைப்படத்தில். இதனால் இந்தத் திரைப்படம் ஒரு வரலாற்றுத் திரைப்படமாக மட்டுமல்லாமல், அந்தக் காலத்தின் சாட்சியாக இருப்பவர்களின் நினைவுகளுடன் இணைக்கப்பட்ட அரை ஆவணப்படத் தன்மையைப் பெற்றது. இதுவே இந்தத் திரைப்படத்தின் தனித்துவமான அம்சங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

சிறப்பான விஷயங்கள் என்று வரிசைப்படுத்த திரைப்படத்தில் நிறைய இருந்தாலும் லூயிஸ் பிரையன்ட் கதாபாத்திரத்தில் நடித்த டயான் கீட்டன் மற்றும் வாரன் பீட்டியின் நடிப்பைச் சொல்லித்தான் ஆகவேண்டும். புரட்சியை நேசித்தவனை, சதா அலைந்து திரிந்தவனை, அமெரிக்காவில் மிகப்பெரிய மாற்றத்தை நடத்திட வேண்டுமென்று துடித்தவை, மானுட அன்பு நிறைந்த மகத்தானவனின் வாழ்க்கையை, காதலை, நோக்கத்தை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள் இருவரும்.

கடைசிக் காட்சியில் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையின் படுக்கையில் கிடப்பார் ரீட். தண்ணீர் பிடித்து வருகிறேன் என்று வெளியே செல்வார் லூயிஸ். திரும்பி வரும்போது இறந்திருப்பார் ரீட். உடைந்து அழுது மெல்ல நடந்து சென்று, ரீடின் பக்கத்தில் உட்கார்ந்து, அவர் கைகளைப் பற்றிக்கொள்ளும் காட்சி யாரையும் கலங்கச் செய்யக் கூடியது.

இப்படித்தான் தொடங்குகிறது இந்தக் கதை. 1915இல் ஒரு சொற்பொழிவில் சந்தித்துக் கொள்கிறார்கள் ரீடும் லூயிஸும். ஜான் ரீடின் உயரிய லட்சியங்களால் கவரப்பட்ட லூயிஸ் அவரை நேர்காணல் செய்ய நினைக்கிறார். உலக அரசியல் நிலைமை குறித்த அந்த நேர்காணல் இரவு முழுவதும் நீள்கிறது.

எழுத்தை வாழ்க்கையாகத் தரித்துக் கொள்ள வேண்டும் என்கிற முடிவிற்கு லூயிஸும் வருகிறார். ஜான் ரீடும் ரெட்ஸ் என அழைக்கப்பட்ட அமெரிக்காவின் தீவிர தொழிலாளர் இயக்கத்தினருடன் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். சில ஆண்டுகள் கழித்து, ரீடும் லூயிஸும் திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள்.

இருவரும் சேர்ந்து சமூக மாற்றத்திற்காக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். ரீடிற்கு உடல்நிலை சரியில்லாமல் போக, பயணத்தைத் தவிர்க்க மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள். ரஷ்யப் புரட்சியை நேரில் காணும் ஆவலில் ரஷ்யாவிற்குச் செல்கிறார்கள் இருவரும். ரஷ்யாவில் கண்ட கம்யூனிசக் கொள்கையை அமெரிக்காவிலும் பரப்ப முயற்சி செய்கிறார் ரீட். அரசியல் உள்கட்சி மோதல்கள் தீவிரமடைகின்றன.

மீண்டும் ரஷ்யா செல்கிறார். திரும்பி வரும்போது பின்லாந்து எல்லையில் கைது செய்யப்படுகிறார் ரீட். அரசின் உதவியைக் கேட்கச் சென்ற லூயிஸின் மீது தேசத்துரோக குற்றச்சாட்டைப் பதிவு செய்கிறது அரசாங்கம். சட்டவிரோதமாக பின்லாந்து செல்கிறார் லூயிஸ். கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தப்படி ரீட் ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்டிருக்கிறார். அலைந்து திரிந்து ஒருவழியாக ரஷ்யாவில் ரீடைக் கண்டறிகிறார் லூயிஸ். நோய்வாய்ப்பட்டிருந்த ரீடை உள்ளங்கையில் வைத்துத் தாங்கிக் கொண்டாலும், லூயிஸின் அருகாமையில் உயிர்விடுகிறார் ரீட்.

”இது புரட்சியின் வரலாறு மட்டுமல்ல, உலகத்தை மாற்ற முடியும் என்று நம்பிய இரண்டு மனிதர்களின் வாழ்க்கைக் கதை” என்கிற வாரன் பீட்டியின் வார்த்தைகள் அந்தக் கடைசிக் காட்சியின் பின்னணியில் ஒலித்துக் கொண்டிருப்பது எனக்கு மட்டுமா கேட்கிறது? ஒரு நல்ல திரைப்படம் நல்ல நினைவுகளால் இதயத்தை நிறைக்கக்கூடியது என்பதற்கு இந்தத் திரைப்படம் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு என்று உறுதியாகச் சொல்லலாம்.

மிகச்சிறிய வயதில் இறந்து போனாலும்கூட ஜான் ரீடின் வாழ்க்கை என்பது சாதாரணமானதல்ல. சமூக மாற்றத்தை விரும்பிய புரட்சிக்காரர்களை நேசித்தவர். சமூக மாற்றத்திற்காக உழைத்த புரட்சிக்காரர்களால் நேசிக்கப்பட்டவர். நீங்களும்கூட ஜான் ரீடை அறிந்து கொண்டால் சமூக மாற்றத்தை விரும்பத் தொடங்குவீர்கள்!

கட்டுரையாளர் : ஜோசப் ராஜா | கவிஞர் / திரைக்கதை ஆசிரியர்

தொடர்புக்கு: writer.josephraja@gmail.com

SCROLL FOR NEXT