இந்து டாக்கீஸ்

Official Secrets: மானுடப் பேரழிவைத் தடுக்கத் துடித்தவள் | சினிமாவும் அரசியலும் 38

ஜோசப் ராஜா

பெரிய மாற்றங்களை நிகழ்த்திக் காட்டுவதற்குப் பெருந்திரளான மக்கள் தேவைப்படுவார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? இல்லை, அதில் முழுமையான உண்மை இல்லை. ஒரு தனிமனிதனின் அசாத்திய துணிச்சல் மிகப்பெரிய மாற்றங்களுக்குக் காரணமாக இருந்திருக்கிறது.

மாற்றத்திற்கான சிந்தனையால் நிறைந்திருக்கும் ஒரு தனிமனிதன் மெய்யாகவே மாற்றங்களுக்குத் தொடக்கமாக இருந்திருக்கிறான். உயிருக்குப் பயப்படாமல், உண்மையைச் சொல்ல வேண்டும் என்கிற உறுதியோடு எத்தனையோ பேர் வரலாற்றின் பக்கங்களில் தங்களுடைய பெயர்களைப் பதித்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

இந்தத் திரைப்படம் உருவாவதற்குக் காரணமாக இருந்த கேத்தரின் கன், அளவுகடந்த தன்னுடைய துணிச்சலாலும், மானுட நேசத்தாலும் வரலாற்றில் தன்னுடைய பெயரைப் பதித்தவர். அவருடைய வாழ்க்கைதான் இந்தத் திரைப்படம். திரைப்படமாக எடுப்பதற்கு முன்னால் கேத்தரின் கன்னின் வாழ்க்கை புத்தகமாக வந்திருக்கிறது.

புத்தகத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய வரவேற்புதான், திரைப்படத்தை நோக்கிப் படைப்பாளர்களை உந்தித் தள்ளியிருக்கிறது. புத்தகமாக எழுதுவதற்கும், திரைப்படமாக எடுப்பதற்கும் என்ன செய்துவிட்டார் கேத்தரின் கன்?

அவர் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தாரா? அவர் குடும்பத்தை மட்டும் கவனித்துக் கொண்டிருந்தாரா? அவருடைய தேவைகளை மட்டும் நிறைவேற்றிக் கொள்ளத் துடித்துக் கொண்டிருந்தாரா? இல்லை, தன்னைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல், ஒரு போர் நடந்துவிடக் கூடாது என்பதற்காகத் தனக்குத் தெரிந்த உண்மையை வெளிப்படுத்தியவர்.

ஒரு பேரழிவு நிகழ்ந்துவிடக் கூடாது என்று நினைத்து, என்ன நடக்கும் என்று தெரிந்திருந்தும், யாரை எதிர்க்கிறோம் என்று அறிந்திருந்தும், பயங்கரவாதத்தை நிகழ்த்த துடித்துக் கொண்டிருக்கும் அரசை எதிர்த்து உண்மையை உரக்கச் சொன்னவர். அதனால்தான் அவர் பேசப்படுகிறார்.

அப்பா பிரிட்டனைச் சேர்ந்தவர், அம்மா தைவானைச் சேர்ந்தவர். சிறுவயதை தைவானில் கழித்த கேத்தரின் பிறகு பிரிட்டனுக்கு இடம்பெயர்ந்தார். பல மொழிகளில் தேர்ச்சிப் பெற்ற கேத்தரின் பிரிட்டிஷ் உளவுத்துறையில் மொழிபெயர்ப்பாளராக வேலைக்குச் சேர்ந்தார்.

இந்த உளவு அமைப்பின் வேலையானது, உலகம் முழுவதிலும் இருந்து தகவல்களைச் சேகரித்தல், தேவையான தகவல்களைக் குறுக்கீடு செய்தல், மின்னணு உளவு வேலையைக் கச்சிதமாகச் செய்து முடிப்பது, தேசியப் பாதுகாப்பு என்கிற பெயரில் எல்லாவற்றையும் செய்வது.

2003இல் ஈராக் போருக்கு முன்பாக அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய இரண்டு நாடுகளும் சேர்ந்து ஐக்கிய நாடுகளின் சபையை எப்படிக் கட்டுப்படுத்த முயன்றன என்பதை உலகத்திற்குச் சொன்னவர். 2003இல் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷும் பிரிட்டன் பிரதமர் டோனி பிளேரும் சேர்ந்து ஈராக் மீது போர் நடத்தத் திட்டமிட்டனர்.

அதற்கு முன்பு ஐக்கிய நாடுகள் சபையில் இருக்கும் பாதுகாப்பு கவுன்சிலின் அனுமதி தேவைப்பட்டது. அந்த கவுன்சிலில் உறுப்பினராக இருக்கும் சிலி, மெக்சிகோ, பாகிஸ்தான், அங்கோலா போன்ற நாடுகளில் வாக்குகள் முக்கியமானவையாக இருந்தன.

இந்தக் காலக்கட்டத்தில் வழக்கமாக அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் கேத்தரின் ஒரு மின்னஞ்சலைப் பார்க்கிறார். ‘ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இருக்கும் சில நாடுகளைச் சேர்ந்த தூதர்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களைச் சேமிக்க வேண்டும்.’

அதாவது தொலைபேசி உரையாடல்கள், மின்னஞ்சல்கள், தனிப்பட்ட பலவீனங்கள், அழுத்தம் கொடுக்கப் பயன்படும் தகவல்கள் போன்றவற்றைச் சேகரித்து, அதை வைத்துக்கொண்டு அவர்களைப் போருக்கு ஆதரவாக வாக்களிக்கச் செய்ய வேண்டும் என்கிற பயங்கரவாத அரசுகளின் திட்டத்தைப் புரிந்துகொள்கிறார் கேத்தரின்.

முதலில் அதிர்ச்சியடைந்த கேத்தரின், எல்லாரையும்போலப் பார்த்தும் பார்க்காமல் அமைதியாக இருந்துவிடலாமா? அல்லது மானுடத் திரளின் நலன் கருதி உண்மையை உலகுக்குச் சொல்லலாமா என்று யோசித்து, இறுதியில் இரண்டாவதைத் தேர்ந்தெடுக்கிறார்.

ஆவணங்களைச் சேகரித்து ரகசியமாகப் பத்திரிகைக்கு அனுப்புகிறார். 2003, மார்ச் 2 அன்று தி அப்சர்வர் பத்திரிகையில் அந்தச் செய்தி வெளிவருகிறது. உலகம் முழுவதும் பரபரப்பு தொற்றிக்கொள்கிறது. சும்மா இருக்குமா எல்லாம் செய்த அரசாங்கம். சில வாரங்கள் கழித்து கைது செய்யப்படுகிறார் கேத்தரின்.

அரசாங்கத்தின் ரகசிய ஆவணங்களை வெளியிட்ட குற்றத்திற்காக அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்பு இருந்தது. ‘நாட்டைக் காக்கவே இதைச் செய்தேன், சட்ட விரோதப் போரைத் தடுக்கவே இப்படி முயற்சித்தேன்.

மக்களுக்கு உண்மையை அறிந்து கொள்ளும் உரிமை இருக்கிறதல்லவா!’ என்று நீதிமன்றத்தில் வாதிட்டார் கேத்தரின். ஆனால் 2004இல் விசாரணை தொடங்குவதற்கு முன்பே வழக்கை வாபஸ் பெற்றது பிரிட்டிஷ் அரசாங்கம்.

ஒருவேளை வழக்கு நடந்திருந்தால் ஈராக் போர் சட்டபூர்வமானதா? அரசாங்கம் உண்மையை மறைத்ததா? உளவுத்துறை தவறாகப் பயன்படுத்தப்பட்டதா என்கிற கேள்விகளுக்கு விடை கிடைத்திருக்கும். அதைத் தவிர்க்கவே அரசுத்தரப்பில் வழக்கை வாபஸ் பெற்றதாகவும் கருத்து நிலவுகிறது.

வழக்கிற்குப் பிறகு உளவுத்துறையின் மொழிபெயர்ப்பாளர் வேலையைப் புறக்கணித்த கேத்தரின், மனித உரிமை மற்றும் போர் எதிர்ப்பு நிகழ்வுகளில் உரையாற்றத் தொடங்கினார். உலகம் முழுவதும் அரசுக்கு எதிரான தகவல் தெரிவிப்பாளர்களின் உரிமைகளைக் குறித்துத் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்.

கேத்தரினின் நடவடிக்கை, அதற்கு முன்னால் பெண்டகன் ரகசியங்களை வெளிப்படுத்திய டேனியல் எல்ஸ்பர்க்கைக் காட்டிலும், அமெரிக்காவை அதிரச் செய்த எட்வர்ட் ஸ்னோடனைக் காட்டிலும் வேறுபடுவது எப்படியென்றால், ஒரு போர் தொடங்குவதற்கு முன்பாகவே, அதற்கான அரசியல் மற்றும் தூதரகச் செயல்பாடுகளைப் போரைத் தடுக்கும் நோக்கத்தில் வெளியிட்டதால் முக்கியமானதாகவும், மானுட அன்பு நிறைந்த செயலாகவும் பார்க்கப்படுகிறது.

இந்தத் திரைப்படத்திற்கான திரைக்கதையை சாரா பெர்ன்ஸ்டீன் மற்றும் கிரெகரி பெர்ன்ஸ்டீன் ஆகியோர் 2008ஆம் ஆண்டிலேயே எழுதி முடித்திருந்தனர். ஹாலிவுட்டில் அதிகம் பாராட்டப்பட்ட திரைக்கதைகளின் பட்டியலில் இருந்தும் தயாரிப்பாளர் கிடைக்காமல் தள்ளிச் சென்று கொண்டே இருந்தது.

இயக்குநர் மற்றும் நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டு முறையாக அறிவிக்கப்பட்டு, படமாக்கல் தொடங்கப்படாமல் இருந்தது. பிறகு 2005இல் வெளிவந்த தன்னுடைய படத்திற்காக ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் கெவின் ஹீட் நியமிக்கப்பட்டார். நடிகர்களும் தொழிநுட்பக் கலைஞர்களும் மாற்றப்பட்டனர். படப்பிடிப்பு தொடங்கியது.

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட கதைகளை, அரசியல் அதிகாரத்தின் பொறுப்புணர்வைக் கேள்விக்குட்படுத்தும் கதைகளை, மனித உரிமைகள் மற்றும் நீதிக்கான போராட்டங்களை வலியுறுத்தும் கதைகளை, சாதாரண மனிதர்கள் கடினமான ஒழுக்கத் தீர்மானங்களை எடுக்க வேண்டிய சூழல்களைத் தொடர்ந்து திரைப்படமாக உருவாக்கிக் கொண்டிருக்கும் இயக்குநர், இந்தத் திரைப்படத்தையும் அந்தப் பாணியிலேயே உருவாக்கியிருக்கிறார்.

இந்தத் திரைப்படத்தை உருவாக்கும்போது ’கேத்தரின் கன்னை ஒரு நாயகியாக மட்டுமல்லாமல், தனது மனசாட்சியைப் பின்பற்றிய ஒரு சாதாரண அரசு ஊழியராகச் சித்தரிக்க வேண்டும்’ என்கிற நோக்கம் இருந்ததாகக் குறிப்பிடுகிறார் இயக்குநர்.

‘இந்தப் படம் ஈராக் போரைப் பற்றிய விவாதம் மட்டுமல்ல; ஜனநாயகம், உண்மை, ஊடகச் சுதந்திரம் மற்றும் அதிகாரத்தைப் பொறுப்புக் கூறச்செய்வதன் அவசியத்தைப் பற்றிய திரைப்படம்’ என்றும் சொல்கிறார் இயக்குநர். திரைப்படத்தின் பல இடங்களில் நெஞ்சை உலுக்கும் உரையாடல்கள் நிறைந்திருக்கின்றன.

‘உண்மையே போராடத் தகுதியான ஒரே விஷயம்’ என்கிற வார்த்தைகளாகட்டும், ‘யாருமே எதுவும் பேசவில்லையென்றால், அவர்களும் அந்தத் தவறில் பங்காளியாக மாறிவிடுவார்கள்’ என்கிற வார்த்தைகளாகட்டும், ‘அப்பாவி மக்கள் உயிரிழக்கப் போகிறார்கள் என்பதை அறிந்த பின்னால் என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை’ என்கிற கேத்தரின் கதாபாத்திரத்தின் வார்த்தைகளாகட்டும் எல்லாரையும் கேள்விக்குட்படுத்தக்கூடிய வார்த்தைகளே!

‘மக்களை மெளனமாக வைத்திருக்க அரசுகள் பயன்படுத்தும் ஆயுதம் பயம்’ என்று சொல்லும் நாயகி, ‘சில நேரத்தில் உண்மையாக இருப்பதென்பது அரசாங்கத்தை எதிர்த்து நிற்பதுதான்’ என்று உறுதிபடச் சொல்கிறார்.

இறுதியாகத் திரைப்படம் எடுக்கப்பட்டதன் நோக்கமாகவும், திரைப்படம் முழுவதும் வலியுறுத்தப்படும் செய்தியாகவும் ‘ஓர் அரசின் ரகசியத்தைப் பாதுகாப்பது முக்கியமா? அல்லது ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றும் ரகசியத்தை வெளிப்படுத்துவது முக்கியமா?’ என்கிற கேள்விக்கான பதில்தான் இந்தத் திரைப்படத்தின் ஆன்மாவாக இருக்கிறது.

கேத்தரின் கன் கதாபாத்திரத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் கீரா நைட்லி பல நேர்காணல்களில், ‘இந்தத் திரைப்படம் அதிகாரத்தைப் பொறுப்புக் கூறச்செய்யும் முக்கியமான அரசியல் திரைப்படம்’ என்று சொல்லியிருக்கிறார்.

‘உண்மையைப் பேசுவது ஒருவேளை வாழ்க்கையில் உள்ள அனைத்தையும் இழக்கச் செய்யக்கூடும் என்று தெரிந்திருந்தும் உண்மையைப் பேசியதால் இந்தக் கதாபாத்திரத்தை வெளிப்படுத்த விரும்பினேன்’ என்றும் சொல்லியிருக்கிறார் மானுட நேயம் கொண்ட அற்புதமான அந்த நடிகை.

கடைசியில் கேத்தரின் எது நடக்கக் கூடாது என்று நினைத்தாரோ அந்த ஈராக் போர் நடந்தது. அணு ஆயுதங்கள் இருப்பதாகச் சொல்லி தொடங்கப்பட்ட போரில், லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்து, அதிபர் சதாம் உசைனையும் கொன்றுவிட்டு, கடைசியில் சர்வ சாதாரணமாக அணு ஆயுதம் இல்லை என்று சொன்னார்கள்.

இந்த மானுட விரோதிகளுக்கு ஒரு கேத்தரின் கன் போதாது. ஒவ்வொருவரும் சூரியனாக மாறினால், பூமியை அழிக்கத் துடிக்கும் போர் என்கிற காரிருளையும், அதற்குக் காரணமானவர்களையும் ஒழிக்க முடியும்.

கட்டுரையாளர் : ஜோசப் ராஜா | கவிஞர் / திரைக்கதை ஆசிரியர்

தொடர்புக்கு: writer.josephraja@gmail.com

SCROLL FOR NEXT