அனுபமா பரமேஸ்வரனுக்கு 2கே மற்றும் ஜென் இசட் தலைமுறை மத்தியில் ஒரு ராணுவமே இருக்கிறது. ‘பிரேமம்’ படத்தின் வழியாகத் தென்னிந்திய ரசிகர்களின் மனதில் குடியேறியவர். அதன்பிறகு ‘கொடி’, ‘டிராகன்’, கடைசியாக ‘பைசன்’ என்று வெற்றிப் படங்களில் இடம்பெற்றிருந்தாலும் தனிக் கதாநாயகியாக எந்தத் தமிழ்ப் படத்திலும் தோன்றவில்லை. ஈர்ப்பான தோற்றம், அழகான சுருள் சுருளான கூந்தல் ஆகியவற்றுடன் ஈடுபாடு மிகுந்த நடிப்பும் அழகும் திறமையும் இணைந்த நட்சத்திரமாக அவரை வலம் வரச் செய்கின்றன.
அதைவிட அவர் மீது மரியாதையை உருவாக்கிய ஒரு காரணமும் உண்டு! அவர், பல திரைப்படங்களில் மிகவும் ஈடுபாட்டுடன், ஓப்பியடிக்காமல் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார் என்பதுதான் அது. உதவி இயக்குநர் என்றால், திரைக்கதை குறித்த புரிதல் இருக்க வேண்டும். ‘ஸ்கிரீன்பிளே எக்ஸ்பர்ட்’ அளவுக்கு இல்லாவிட்டாலும் அடிப்படையான திரைக்கதை அறிவும், ஒரு சிறந்த திரைக்கதைக்கு தர்க்க ரீதியான வலிமை எவ்வளவு முக்கியம் என்பதும் ஓர் உதவி இயக்குநருக்குத் தெரிந்திருக்க வேண்டும், அல்லது தெரிந்திருக்கும். ஆனால், அனுபமாவுக்கு அந்த விஷயத்தில் அறிவுக் குறைபாடு என்பதை, அவர் தனிக் கதாநாயகியாக முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து, தற்போது வெளியாகியுள்ள ‘லாக்டவுன்’ படம் காட்டிவிட்டது. இந்தப் படத்தில் நடிப்பதன் மூலம் பணம் கிடைத்தால் போதும் என்று அவர் தெரிந்தே கூட இப்படத்தில் நடித்திருக்கிறார் என்றும் எண்ணத் தோன்றுகிறது.
அதைவிட ஆச்சர்யம்! திரைக்கதை ரீதியாகவே அடிப்படையான பல முக்கிய சிக்கல்களைக் கொண்ட இந்தப் படத்தை ‘லைகா’ நிறுவனம் தயாரித்திருப்பது. இந்தப் படத் திரைக்கதையின் போதாமையையும் மிகப் பலவீனமான கதாபாத்திர எழுத்தையும் சுட்டிக்காட்ட இந்த விமர்சனத்தில் சில இடங்களில் ‘ஸ்பாய்லர்’கள் இடம்பெறுவது தவிர்க்க முடியாதது. அதை விரும்பாத வாசகர்கள், இத்துடன் இந்த விமர்சனத்தை வாசிப்பதைத் தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன். விரும்புகிறவர்கள் விமர்சனத்தைத் தொடருங்கள்.
நடுத்தரக் குடும்பம் ஒன்றில் கலாச்சாரப் பற்றுதலுடன் வளர்ந்த ஒரு பட்டதாரிப் பெண் அனிதா (அனுபமா). இளங்கலை படித்து முடித்து வேலை தேடிக்கொண்டிருக்கிறாள். அவளுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறும் அனிதாவின் தோழி ஒருத்தி, அவளைக் கிழக்குக் கடற்கரைச் சாலை ரிசார்ட் ஒன்றில் நடக்கும் பார்ட்டி ஒன்றுக்கு அழைக்கிறாள். அங்கே செல்லும் அனிதா, மது அருந்திவிட்டு, இசைக்கப்படும் இசையில் நடனமாடிக் களிக்கும் பெருங் கூட்டத்தைப் பார்க்கிறாள். முதலில் அக்கூட்டத்திலிருந்து விலகி நின்று வேடிக்கை பார்க்கிறாள். ஒரு கட்டத்தில் அனிதாவை அழைத்த அவளின் தோழி, அவளைக் கட்டாயப்படுத்தி மது அருந்த வைக்கிறாள். முதலில் மறுக்கும் அனிதா, வற்புறுத்தல் காரணமாகக் குடித்துவிட்டு தன்னிலை மறந்து ஆடுகிறாள்.
பார்ட்டியின் முடிவில் போதை அதிகமானதால் சுயநினைவை இழந்து துவண்டு கிடக்கும் அனிதாவை, அவளின் தோழி, ரிசார்ட் அறையிலேயே தங்க வைக்கிறாள். அடுத்த நாள் காலை அனிதா வீடு திரும்புகிறாள். ஒரு மாதம் ஓடியே விடுகிறது. இந்தச் சமயத்தில்தான் கோவிட் 19 பெருந்தொற்றுக்கான முதல் 21 நாள் ‘லாக்டவுன்’ தொடங்குகிறது. அப்போது அனிதா மனதளவிலும் உடலளவிலும் தனக்குள் பலவித மாற்றங்கள் உருவாகியிருப்பதை உணர்ந்து ‘பிரகனென்ஸி கிட்’ வாங்கி பரிசோதிக்கிறாள்.
அப்போது தான் கர்ப்பமாகியிருப்பதை அறிந்து துடிக்கிறாள். தான் யாரால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டோம், அது நமக்கே எப்படித் தெரியாமல் போனது என்று நொந்துபோய் துடிக்கும் அவள், தனது கர்ப்பத்தைக் கலைத்துவிட முடிவெடுக்கிறாள். ஆனால், வீட்டுக்குத் தெரியாமல் லாக்டவுனின் சட்ட விரோதமாக இயங்கும் கிளினிக்குகளை தன் தோழியுடன் சேர்ந்து தேடி அலைகிறாள். அவளால் தன் விரும்பாத சுமையிலிருந்து விடுதலை பெற முடிந்ததா என்பதுதான் கதை.
அனிதாவின் அப்பாவும் அம்மாவும் மிகவும் பாசமான, அரவணைப்பான பெற்றோர். ஆனால் அவள் தனக்கு நேர்ந்த விபத்தை அவள் பெற்றோரிடம் சொல்லவில்லை. இங்கேதான் கதாபாத்திர எழுத்தில் சறுக்கி விழுந்திருக்கிறார் இயக்குநர். பெற்றோருக்குத் தெரியாமலேயே கருக்கலைப்பு செய்துவிடலாம் என்று அவள் முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் அவளுக்கு ஏன் வந்தது? கல்சர்டு ஆக வளர்ந்த ஒரு பெண், நவீன ஆடைகளில் பிரபலமானது மற்றும் பெண்களுக்குத் தன்னம்பிக்கை தரும் ஆடை என அவர்களே கூறுவது ஜீன்ஸ். அதைக் கூட அணியாத ஒரு பெண், எந்த வழிமுறையில் வற்புறுத்தினாலும் எப்படி பார்ட்டியில் மது அருந்த ஒப்புக்கொள்வாள்?
இங்கே தான் தமிழ் சினிமாவில் இதுவரை ஆகி வந்திருக்கும் சட்டகம் இயக்குநரைக் கைது செய்து வைத்திருப்பது பட்டவர்த்தனமாகிவிடுகிறது. இதுபோன்ற கதைக் களங்களில் தமிழ் சினிமா, பெண்களை ‘விக்டிம்’ ஆகவே சித்தரித்துப் பழகிவிட்டது. அதனால், இக்கதையின் நாயகி அனிதாவுக்கு இருந்திருக்க வேண்டிய ‘பொறுப்பு’ பற்றி எதுவுமே அவர் பேசவில்லை. இதுபோன்ற பெண் விக்டிம் கதைகள் தமிழ் சினிமாவில் படமாக்கப்படும்போது, பெண் சரியானவள்தான், அவளைச் சுற்றியிருப்பவர்கள்தான் பொறுப்பற்றவர்கள் என்று பெண்களைப் புனிதப் பிம்பத்துக்குள் தள்ளி, அவர்களின் ‘ஸீரோ அக்கவுண்ட்டெபிளிட்டி’யை வசதியாக மறந்து அல்லது மறைத்துவிடுவது படு அயோக்கியத்தனமானது. அதைத்தான் இந்தப் படத்தில் செய்திருக்கிறார் இயக்குநர்.
முரண்பாடான பாத்திரப் படைப்பு
கலாச்சாரப் பற்றுதலுடன் வளர்ந்த ஒரு பெண், வேலையை எப்படியாவது பெற்று, பெற்றோரின் குடும்ப பாரத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்கிற குடும்பப் பொறுப்புடன் செல்லும் ஒரு பெண், சென்ற இடமும் அங்கே நடக்கும் நிகழ்ச்சியும் தன் குடும்பம் நம்பும் கலாச்சார வாழ்வுக்குச் சற்றும் இடம் கொடுக்காது என்று நம்புகிற பட்சத்தில் என்ன செய்திருப்பாள்? தோழி மட்டும் தெரிந்தவளாக இருக்க, பல முன்பின் தெரியாதவர்கள் சேர்ந்து வற்புறுத்தியதும் அனிதா மது அருந்துவதும், பின்னர் தன்னிலை மறப்பதும் எப்படி அவளது ‘அக்கவுண்டபிளிட்டி’யில் வராமல் போகும்? மது அருந்தியதற்கோ, அதன் எதிர்பாராத விளைவுகளுக்கோ அவளது தரப்பில் இருக்கும் பொறுப்பை இயக்குநர் எங்குமே பேசவில்லை.
தமிழ் சினிமாவில் பெண்கள் தடம் மாறும்போது, அதை எப்போதும் ஒரு 'சதி' அல்லது 'சூழ்நிலைக் கைதி' என்கிற போர்வையில் ‘விக்டிம்’ கார்டு போட்டு மூடி மறைப்பார்கள் மசாலா இயக்குநர்கள். அதைத்தான் இந்தப் படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.ஜீவாவும் செய்திருக்கிறார். நூற்றுக்கணக்கானவர்கள் கூடிக் கொண்டாடும் ஒரு நிகழ்ச்சியில் ஒரு பட்டதாரிப் பெண்ணுக்குத் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளத் தெரியும் என்கிற குறைந்தபட்ச முதிர்ச்சியைக் கூடக் காட்டாமல், படித்த, பண்பான அனிதாவை ஒரு பலவீனமான கதாபாத்திரமாகச் சித்தரித்திருப்பது இயக்குநரின் பலவீனமான திரை எழுத்தையே காட்டுகிறது.
தனது தவற்றுக்கான விலை தன்னுடைய பொறுப்பின்மையால் வந்தது என்பதை அனிதா சுயமாக ஏற்றிருந்தால் அவள் தனது கர்ப்பத்தை ரகசியச் சுமையாக வைத்திருக்கமாட்டாள். ஆனால், அப்படி இயக்குநர் மாற்றியிருப்பது கதையின் முக்கியப் பிரச்சினை மீதான நம்பகத் தன்மையைக் குறைத்துவிடுகிறது.
‘லாக்டவுன்’ நாள்கள் தன்னுடைய நாயகியின் போராட்டத்துக்கு வலிமை சேர்க்கும் என்று இயக்குநர் நினைத்திருக்கிறார். ஆனால்,'லாக்டவுன்' என்பது வெறும் ஊரடங்காக மட்டுமல்ல; அது கதாநாயகியின் மனநிலைக்கும் பொருந்துவது இப்படத்துக்கு அதிர்ஷ்டவசமாக அமைந்த ஒரு நல்ல பின்புலம்.
ஒருபுறம் கருக்கலைப்பு செய்ய வேண்டிய கட்டாயம், மறுபுறம் வெளியே வர முடியாத அரசின் கட்டுப்பாடு. இந்த இரண்டுக்கும் நடுவில் அனிதா அனுபவிக்கும் வேதனையை அக்கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் அனுபமா தனது நடிப்பால் ஓரளவுக்கு ஈடுகட்டியிருக்கிறார். ஆனால், ஒரு படித்த பெண் சட்டப்பூர்வமான வழிகளைத் தேடாமல், சட்டவிரோத வழிகளில் செல்வது அவள் கதாபாத்திரத்தின் அறிவார்ந்த தன்மையைச் சந்தேகிக்க வைக்கிறது.
லாக்டவுன் காலத்தில் மற்ற துறைகள் முடங்கினாலும் மருத்துவத் துறை ஒருபோதும் முடங்கவில்லை. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அவசரக் காலச் சிகிச்சைகள் அனைத்தும் தொடர்ந்து செய்யப்பட்டுதான் வந்தன. சட்டப்பூர்வமாக ஒரு பெண்ணுக்குக் கருக்கலைப்பு செய்ய உரிமையிருக்கும்போது, ஒரு படித்த பெண் ஏன் சட்டவிரோத கிளினிக்குகளைத் தேடிச் செல்ல வேண்டும்?
சினிமா தனத்தின் குப்பைத்தொட்டி
இந்தப் படத்தில் வரும் வயது முதிர்ந்த ஒருதலைக் காதலன், அவனுடன் தொடர்பில் இருக்கும் கருக்கலைப்பு மருத்துவர், அவர் அனிதாவிடம் பெற்றுக்கொள்ளும் கட்டணம், அனிதாவுடைய அப்பா வேலை செய்யும் சில்வர் பாத்திரப் பட்டறையின் முதலாளி லிவிங்ஸ்டன் - அவரது மனைவி - மகள் ஆகிய துணைக் கதாபாத்திரங்கள் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட வேண்டிய ‘சினிமா தனத்தின் உச்சபட்சக் குப்பைத் தொட்டி’ என்றால் அது சரியான மதிப்பீடாக இருக்கும்.
பெண்கள் எப்போதும் ஏமாற்றப்படுபவர்கள் அல்லது ஏமாறுகிறவர்கள் என்கிற பழைய சூத்திரத்தை இயக்குநர் கையில் எடுத்திருப்பதைக் கூட அடுத்த படத்தில் அவர் மாற்றிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது என்று கடந்துவிடலாம். ஆனால், ஒரு படித்த அறிவார்ந்த பெண்ணின் சுய முடிவெடுக்கும் திறன் மற்றும் பொறுப்புணர்வு குறித்த காட்சிகளைப் பற்றி இயக்குநர் கிஞ்சிற்றும் சிந்திக்கவில்லை என்பதுதான் துயரம்.
அனிதாவின் அப்பா (சார்லி) வேலை செய்யும் சில்வர் பட்டறை முதலாளியான லிவிங்ஸ்டனின் மகள், அவர்களின் வீட்டுக்குத் தெரியாமல் பதிவுத் திருமணம் செய்துகொள்கிறாள். இதில் மனமுடையும் லிவிங்ஸ்டனும் அவரது மனைவியும் தற்கொலை செய்துகொள்கின்றனர். இது அனிதாவுக்குத் தன் அப்பா மூலம் தெரிய வரும்போது அவள் தன்னுடைய பெற்றோரை நினைத்துப் பயப்படுகிறாள் என்று காட்டுவதால் அனிதாவின் பொறுப்பின்மை ஜஸ்டிபை ஆகிவிடுமா? உண்மையில், இது திரைக்கதையில் வலிந்து புகுத்தப்பட்ட மிகப் பலவீனமான, 'எமோஷனல் பிளாக்மெயில்' உத்தி. ஒரு படைப்பாளி தனது கதையில் இருக்கும் தர்க்கப் பிழைகளை மறைக்க, அதைவிடப் பெரிய ஒரு சோகத்தை துணைக்கு அழைப்பது திரைக்கதையின் தோல்வி தவிர வேறில்லை.
ஆண் மைய பயம்!
தன் அப்பாவின் முதலாளி மகள் செய்த செயலால் ஒரு குடும்பமே தற்கொலை செய்துகொள்கிறது என்ற கிளைக்கதையை அனிதாவின் மனநிலையுடன் பொருத்தியதன் நோக்கம் - அனிதா ஏன் உண்மையைச் சொல்லவில்லை என்பதற்கு ஒரு பலமான காரணத்தைக் கற்பிக்கத்தான். இது பலவீனமான எதிர்மறையான நியாயப்படுத்துதல். இது ஒருவகையான ‘மோரல் பாலிஸிங்’ அல்லது ஆகிவந்த ஆண் மையப் பழமைகளை ‘அடாப்ட்’ செய்துகொள்ளும் இயக்குநரின் போதாமை.
“உண்மையைச் சொன்னால் என் பெற்றோரும் செத்துவிடுவார்கள்” என்கிற பயத்தை ஒரு பெண்ணின் மேல் திணிப்பதன் மூலம், அவளது சுயமான முடிவெடுக்கும் திறனை இயக்குநர் அடியோடு முடக்கிவிடுகிறார். தன் வாழ்வில் நடந்த ஓர் எதிர்பாராத விபத்தைப் பெற்றோரிடம் தெரிவித்துத் தீர்வு காண்பதை விட, அதை அவர்களிடமிருந்து முற்றாக மறைப்பதிலேயே அவள் குறியாக இருக்கிறாள்.
தான் செய்த செயலுக்குப் பொறுப்பேற்பதைத் தவிர்க்க, சுற்றிலும் நடக்கும் விபரீதங்களைச் சாக்குப்போக்காகப் பயன்படுத்தும் அனிதா கதாபாத்திரம், எப்படி ஓர் அசலான 'புரட்டகானிஸ்ட்' ஆக முடியும்? ஒரு கட்டத்தில் பார்வையாளர்களுக்கு அவளின் மேல் பரிதாபத்துக்குப் பதில், அவளது முதிர்ச்சியற்றத் தன்மையின் மீது எரிச்சலே மிஞ்சும்.
இந்த சிலவர் பட்டறை முதலாளியும் அவரது மனைவியும் 'தற்கொலை' என்கிற கிளைக்கதை மூலம் இயக்குநர் என்ன சொல்ல வருகிறார்? ‘பெண்கள் உண்மையைச் சொன்னால் குடும்பமே அழிந்துவிடும்’ என்ற பிற்போக்குத்தனமான கருத்தையா? சினிமாத்தனமான ஒரு ‘அவலத்தை’ வைத்து மெலோடிராமா செய்ய வேண்டும் என்பதற்காக, யதார்த்தமான தீர்வுகளை இயக்குநர் வேண்டுமென்றே தவிர்த்திருப்பது தெளிவாகத் தெரிகிறது.
ஒரு கலாச்சாரப் பற்றுதலுள்ள குடும்பத்தில் வளர்ந்த பெண், தன்னுடைய உடல்சார்ந்த தனிப்பட்ட விஷயங்களைத் தந்தையிடம் சொல்லக் கூச்சம் கலந்த தயக்கம் கொண்டிருக்கலாம் அல்லது மோசமான ஆண் மையத் தந்தை என்றால் அவரது டொமஸ்டிக் வயலென்ஸுக்கு பயந்து மறைக்கலாம். ஆனால், அம்மா என்கிற உறவு அப்படியல்ல; உடல் ரீதியான மாற்றங்கள் மற்றும் சிக்கல்களைத் தாயிடம் பகிர்வதே மகள்களின் இயல்பு. இங்கே தந்தையும் ஒரு தாயைப் போல் இருக்க, தாய், தாய்மையின் சிகரமாகத் திகழ, தாய்க்கும் மகளுக்குமான அந்த அற்புதப் புரிதலை இயக்குநர் தன் இஷ்டத்துக்கு வளைத்திருப்பது கதையை ஒரு தேவையற்ற திசைக்கு இழுத்துச் செல்கிறது.
மிக முக்கியமாக, கருப்பை மற்றும் அது சார்ந்த உடல்நலச் சிக்கல்கள் குறித்து இன்றைய பட்டதாரிப் பெண்களுக்கு இருக்கும் விழிப்புணர்வை இயக்குநர் குறைத்து மதிப்பிட்டுள்ளார். கருக்கலைப்பு என்பது ஓர் உயிரைப் பறிக்கும் விஷயமாக மட்டுமே பார்க்கப்படாமல், பெண்ணின் உடல் நலன் சார்ந்த முடிவாகப் பார்க்கப்பட வேண்டும். ஆனால் படத்தில், அது ஒரு ‘பாவச் செயலாக’ அல்லது ‘மறைக்கப்பட வேண்டிய கறையாக’ மட்டுமே சித்தரிக்கப்படுவது மூர்மார்க்கெட் சிந்தனை (மூர் மார்கெட்டில் கூட பல பொக்கிஷங்கள் கிடைக்கும்).
ஒரு 'சர்வைவல் த்ரில்லர்' எடுக்க வேண்டும் என்கிற ஆசையில், எதார்த்த வாழ்க்கையில் இருக்கும் எளிய தீர்வுகளை இயக்குநர் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டார். தவறு செய்ததற்கோ அல்லது அதற்குத் தீர்வு காண்பதற்கோ எங்கும் கதாநாயகி பொறுப்பேற்கவில்லை. லாக்டவுன் என்பது அவளுக்குத் தடையாக இல்லாமல், அவள் தனது பொறுப்பிலிருந்து தப்பிக்கப் பயன்படுத்திகொள்ளும் ஒரு சாக்காக இயக்குநர் ‘பிளே’ செய்யப் பயன்பட்டிருக்கிறது.
மொத்தத்தில், அனுபமா பரமேஸ்வரனின் உழைப்பு இருந்தும், இந்தப் படம் ஒரு பலவீனமான மற்றும் முதிர்ச்சியற்ற திரைக்கதையால் நம் மனதைச் சிறை வைக்கத் தவறிவிட்டது. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் இயக்குநரே!