இந்து டாக்கீஸ்

கொம்புசீவி: திரைப் பார்வை - விஜயகாந்த் மகனின் காமெடி என்டர்டெய்னர் எப்படி?

ஆர்.சி.ஜெயந்தன்

கேப்டன் என்கிற அடைமொழியை விஜயகாந்துக்குப் பெற்றுக் கொடுக்கக் காரணமே அவர் ஏற்ற ஆக்‌ஷன் கதாபாத்திரம் தான். ரஜினியும் கமலும் ஆக்‌ஷன் கதாநாயகர்களாகத் தங்களை நிலை நிறுத்திகொண்ட காலத்தில் தன்னுடைய தனித்த உடல்மொழியால், வசன உச்சரிப்பால் உச்ச நட்சத்திரம் என்கிற உயரத்தைத் தொட்டவர். ரஜினி, கமல் ரசிகர்களையும் தன்னுடைய திரை வெளிக்குள் இழுத்தவர்.

ஆக்‌ஷன் நாயகன் என்கிற அடையாளம் அவருக்கு இருந்தாலும் அவர் ஏற்று நடித்த சீரியஸ் கதைக் களங்களில் கூட அவரது நடிப்பில் நகைச்சுவை நடிப்பு அட்டகாசமாக வெளிப்படும். கதாநாயகி, துணைக் கதாபாத்திரங்கள், நகைச்சுவைக்காக உருவாக்கப்பட்ட துணைக் கதாபாத்திரங்களுடன் இணைந்து அவர் நடித்த காமெடி காட்சிகளைக் கூர்ந்து கவனித்தாலே நகைச்சுவை நடிப்பிலும் விஜயகாந்த் ஒரு கேப்டன் தான் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். குறிப்பாக, ஆச்சி மனோரமா, கவுண்டமணி, செந்தில், வடிவேலு போன்ற முத்திரை பதித்த நகைச்சுவை குணச்சித்திரங்களுடன் கேப்டன் இணைந்தபோது, ரசிகர்கள் சிரிப்பு கடலில் மூழ்கினர்.

சீரியஸான, கடினமான, கெத்தான முகபாவனையுடன் விஜயகாந்த் நகைச்சுவை காட்சிகளில் இணையும்போதெல்லாம் இயற்கையாக நகைச்சுவையை வெளிப்படுத்துவார். சின்ன கவுண்டர், எங்கள் அண்ணா, தவசி, நரசிம்மா போன்ற படங்களில் வடிவேலுவுடன் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் இப்போது மீம்களாகவும் வெளிவந்துகொண்டிருப்பது அந்த இணையின் வெற்றிக்குச் சாட்சி. இன்னும் பல படங்களில் அவரது நகைச்சுவை நடிப்பில் காட்சிகள் சிரிப்புடன் சமூக அக்கறையும் வெளிப்படுவதைப் பார்க்கலாம். ஆக்‌ஷன் கதாநாயகர்களிடம் இந்த அபூர்வமான கலவை அமைவது அரிது.

இந்த அரிய கலவையை ‘கொம்பு சீவி’ படத்தில் அச்சு அசலாகப் பிரதிபலித்திருப்பதன் மூலம், தன்னுடைய அப்பாவை நினைவு கூர வைத்துவிடுகிறார். பல காட்சிகளில் ‘குட்டி விஜயகாந்த்’ ஆகவே சண்முகப் பாண்டியன் தெரிகிறார். அப்படி அவர், படத்தின் காவல் ஆய்வாளர் ‘லைலா’வாக வரும் தார்ணிகாவுடன் ( ‘ஓ போடு’ , நாட்டாமையில் பள்ளி ஆசிரியையாக வரும் நடனக் கலைஞர் ராணியின் மகள் தான் தார்ணிகா) இணைந்து செய்திருக்கும் நகைச்சுவை குறும்புகள் எக்கச்சக்கம். அதேபோல், சரத்குமார், முனீஷ்காந்த், கல்கி ராஜா, காளி வெங்கட் ஆகியோருடன் கூட்டணியில் நிகழ்த்தும் கலகலப்புகள் அனைத்திலும் கேப்டனின் நகைச்சுவை முத்திரை பளிச்சிடுகிறது.

‘கொம்புசீவி’ படத்தின் கதைக் களம் இதுவரை தமிழ் சினிமா மூச்சு விடாத ஒன்று. தேனி அருகில் உள்ள ஆண்டிப்பட்டி வட்டாரத்தில் மேற்கு மலைத் தொடரில் 111 அடி உயரத்துக்கு அணைகட்ட 1955-ல் அடிக்கல் நாட்டினார் அன்றைய முதல்வர் காமராசர். மூன்றே ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்ட அந்த அணையை 1959, ஜனவரில் தன்னுடைய ஆட்சிக்காலத்திலேயே திறந்து வைத்தார். இன்றைக்கு தேனி, பெரியகுளம், திண்டுக்கல், தூத்துக்குடி, விருதுநகர் என ஐந்து மாவட்டங்கள் அந்த அணையால் வேளாண்மையும் குடிநீரும் பெறுகின்றன.

ஐந்து மாவட்ட மக்கள் வைகை அணையால் பயன்பெற்றது போலவே அந்த அணை கட்டப்பட்ட மலையடிவாரப் பகுதியில் இருந்த ஐந்து கிராமங்கள் அங்கிருந்து இடப்பெயர்வு செய்யப்பட்டன. அணைக்குள் மூழ்கிய ஐந்து கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கான விவசாய வாழ்வாதாரம் பாதிக்கப்படும்போது, அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சிலர் கஞ்சா பயிரிட்டு, அதைச் சட்ட விரோதமாக விற்பனை செய்து வாழ்க்கையை அமைத்துக்கொண்டதாகச் செய்திகள் உண்டு. அதைத்தான் இப்படத்தின் இயக்குநர் பொன்ராம் போரடிக்கா பொழுதுபோக்குக் கதைக்கான களமாக மாற்றிக்கொண்டிருக்கிறார்.

நாயகன் சண்முகப்பாண்டியனும் எதிர்பாராத வகையில் அவருக்குத் தாய் மாமனாக மாறும் சரத்குமாரும் கஞ்சா பயிரிட்டுக் கடத்தி சட்ட விரோதத் தொழில் செய்வதாகக் காட்டும்போதே, ‘அடக் கடவுளே.. கேப்டனின் மகனுக்குக் கதைத் தேர்வே செய்யத் தெரியாதா?’ என்று கவலை பிறக்கிறது. ஆனால், எந்தச் சூழ்நிலையில் அவர்கள் அந்த மோசமான தொழிலில் இறங்கினார்கள், நாயகன் என்றாலும் அவன் தவறான தொழில் செய்தால் இறுதி முடிவு என்னவாக இருக்கும் ஆகியவற்றைத் தயவு தாட்சன்யம் இல்லாமல் இயக்குநர் சித்தரித்திருப்பதும் அதை நாட்டார் வழிபாட்டுடன் கச்சிதமாக இணைத்ததும், இதுவரை யாரும் தொடாத கதைக் களத்துக்குள் நம்மை இழுத்துக்கொண்டு போவதுடன், அந்தக் கதைக் கதைக்களத்தைச் சிறப்பான ஒளிப்பதிவாலும் கலை இயக்கத்தாலும் சிறப்புறச் செய்த வகையிலும் இயக்குநர் பொன்ராமின் தொழில் நேர்த்தி பளிச்சிடுகிறது.

ரஜினி முருகன் வெற்றிக்குப் பிறகு, சீமராஜா, எம்.ஜி.ஆர் மகன், டி.எஸ்.பி என மூன்று மிகச் சுமாரான படங்களைக் கொடுத்த பொன்ராம், பழைய ஃபார்முக்குள் வந்து, குடும்ப சென்டிமெண்ட், குறும்பான காதல், நகைச்சுவை உணர்வுமிக்க வில்லன் என்று ‘கொம்புசீவி’யில் நெத்தியடியாகக் கம்பு சுழற்றிக் காட்டியிருக்கிறார். படத்தில் சிறப்பாக எடுபட்ட அம்சங்களில் முதலிடம் கதைக்களம் என்றால், அடுத்த இடத்தில், ஊரின் காட்ஃபாதராக இருந்து மக்களைக் காக்கும் ரொக்க புலிக்கும் (சரத்குமார்), அவரை அண்டிப் பிழைக்கும் பாண்டிக்கும் (சண்முகப் பாண்டியன்) இடையிலான மாமா மச்சான் உறவை மிக அழகாகவும் அழுத்தமாகவும் சித்தரித்திருப்பதைக் கூறலாம்.

மூன்றாவது இடத்தில் காவல் ஆய்வாளர் லைலா - பாண்டி இடையிலான மோதலும் காதலும். பொதுவாக அறிமுகக் கதாநாயகிகளை வெறும் சதைப் பிண்டங்களாகக் காட்சிப்படுத்தும் பொழுதுபோக்கு சினிமாவில், பல காட்சி காட்சிகளில் தார்ணிகாவை கவர்ச்சியாகச் சித்தரித்திருக்கும் இயக்குநர், அவருக்குக் கதையில் கொடுத்திருக்கும் முக்கியத்துவம் அந்தக் கவர்ச்சியான சித்தரிப்புகளைப் பின்னுக்குத் தள்ளிவிடுகிறது. தார்ணிகாவும் தன்னுடைய அறிமுக கதாபாத்திரத்தில் அழகு, வேகம், நடிப்பு, நடனம் என ஊதித் தள்ளியிருப்பதுடன் உயரம், தோற்றமும் உடல்மொழி அனைத்திலும் தானொரு ஹீரோயின் மெட்டீரியல் என்பதைக் காட்டிவிடுகிறார்.

நான்காவதாக ஈர்த்த அம்சம், அம்மா சென்டிமெண்ட். அம்மாவை இழந்து 14 வயது சிறுவனாகப் பாண்டி நிர்க்கதியாக நின்ற தருணத்தில் அடைக்கலம் கொடுத்த ரொக்கப்புலியுடனான உறவைத் தூக்கலாகக் காட்டினாலும் இடையிடையே கொண்டுவந்த அம்மா சென்டிமெண்டை இன்னும் சற்று விரிவாக்கியிருக்கலாம்.

நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து தற்போது படங்களில் சின்னச் சின்ன வேடங்களில் நச்சென்று நடிக்கத் தொடங்கியிருக்கும் ஐஸ்வர்யாவை வைத்து திரைக்கதையில் ஒரு முக்கியமான கட்டத்தை டேக் ஆஃப் செய்திருக்கிறார். அந்தக் காட்சியில் ஐஸ்வர்யாவின் நடிப்பில் அவ்வளவு ஈடுபாடு காட்டியிருக்கிறார். தேனி மாவட்டத்தின் நாட்டார் வழிபாட்டில் தனித்துவமான மக்கள் தெய்வங்களாக இருக்கும் ‘பெத்தண்ணா’ என்கிற பெரியண்ண சாமி - அவரது தங்கையும் இன்றும் வழிப்படப்படுவதைக் காட்டியிருக்கும் முதல் படமும் இதுதான்.

சரத்குமார் அப்படியே தெற்கத்தி மனிதனாக மாறிக்காட்டியிருக்கிறார். போர்த்தொழில் படத்துக்குப் பிறகு ‘3BHK’ ‘ட்யூட்’ படங்கள் பெற்றுக்கொடுத்த பெயரை ‘கோம்புசீவியில் தக்கவைத்துக்கொண்டிருக்கிறார். லாஜிக் பார்க்காமல் ரசிக்க வேண்டிய இந்த நகைச்சுவை பொழுதுபோக்குப் படத்தில், திறமையான நடிகரான சுஜித் சங்கரை இன்னும் புத்திசாலியான காவல் அதிகாரியாகக் காட்டியிருக்கலாம்.

எல்லாம் சரி; படத்தின் கதைச் சுருக்கத்தை இதுவரை சொல்லவில்லையே என்று கேட்கிறீர்களா? கதைச் சுருக்கத்தைச் சொல்லி, அது உங்கள் திரை அனுபவத்தைக் கெடுக்கிற அளவுக்கு ‘கொம்புசீவி’ சோதனை முயற்சி படம் அல்ல; என்றாலும் உங்களைக் கடைசிவரை சோதனை செய்யாத படம்.

SCROLL FOR NEXT