இந்து டாக்கீஸ்

Hotel Rwanda: வெறுப்பின் நடுவில் அன்பின் பேரொளி | சினிமாவும் அரசியலும் 48

ஜோசப் ராஜா

சில திரைப்படங்கள் முடிந்த பின்பும் உட்கார்ந்த இடத்திலேயே உங்களை உறையச் செய்துவிடும். இந்தத் திரைப்படத்தைப் பார்த்து முடித்தபின் அப்படித்தான் நீண்டநேரம் அமைதியாக உட்கார்ந்திருந்தேன். அந்த ஆப்ரிக்க நிலத்தில் அங்குமிங்கும் இதயம் அலைந்து கொண்டிருந்தது. மானுட வேதனை முழுவதுமாக என்னை மூடிக்கொண்டிருந்தது. எல்லாரும் தூங்கிப்போன அந்த இரவில் படபடக்கும் இதயத்தோடும், கசிந்த கண்களோடும் நிலவைப் பார்த்துக்கொண்டு நீண்டநேரம் நின்று கொண்டிருந்தேன்.

இனப்படுகொலையின் கொடூரங்களைப் புத்தகங்களில் வாசிப்பதற்கும், காணச் சகிக்காத அந்தக் காட்சிகளைத் திரைப்படங்களில் பார்ப்பதற்கும் சக்தியில்லாமல் நாம் உடைந்து நொறுங்குகிறோமே... அந்தப் பேரழிவில் சிக்கிக் கொண்ட அப்பாவிகளின் இதயம் எப்படித் துடித்திருக்கும்? உயிர்வாழும் ஆசையில் எப்படிப் போராடியிருக்கும்? பெண்களும் குழந்தைகளும் என்ன செய்திருப்பார்கள், எப்படிப் பார்த்திருப்பார்கள் என்று நினைத்தால் நெஞ்சில் நெருப்பள்ளிக் கொட்டியதுபோல கொதிக்கத்தான் செய்கிறது.

மானுடத் திரளுக்கு இடையில் நோய்கொண்ட இதயங்களால் விதைக்கப்படும் வெறுப்பு எப்படி வெளிப்படும் என்பதற்கு எண்ணற்ற உதாரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

மணிப்பூரின் இரண்டு பழங்குடி இனக்குழுக்களான மெய்தி, குக்கிகளுக்கு இடையிலான வெறுப்பு வன்முறையாக எப்படி வெளிப்பட்டது என்பதை ஆட்சியாளர்களோடு சேர்ந்து நாமும்கூடப் பார்த்துக் கொண்டுதானிருந்தோம். அதிகாரத்தைப் பிடிப்பதற்காக, அரசியல் பிழைப்பிற்காகக் குப்பைகளைப் போலக் கொட்டப்பட்டுக் கொண்டிருக்கும் வெறுப்பை நீண்ட காலமாக இந்த நிலத்தில் சகித்துக் கொண்டே பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம்.

இன்னும் தணியாத இனவெறுப்பு பாலஸ்தீனத்தின் நிலங்களைப் பறித்துக் கொண்டதோடு, இன்றுவரையிலும் குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கான உயிர்களைப் பறித்துக் கொண்டிருப்பதை ஐக்கிய நாடுகள் சபையைப் போல, உலகின் வல்லரசுகளைப் போல நாமும் பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம்.

நல்லவிதமாகச் சொல்ல என்ன இருக்கிறது? மானுட வரலாறு முழுக்க வெறுப்புதான் இனப்படுகொலையின் தோற்றுவாயாக இருக்கிறது. வெறுப்புதான் கலவரங்களுக்கும் கண்ணீருக்கும் காரணமாக இருக்கிறது. ஒவ்வொரு பேரழிவிற்குப் பின்னால் இருப்பதெல்லாம் வெறுப்புதான். வெறுப்பைத் தவிர வேறொன்றுமில்லை.

இனப்படுகொலை முதலில் மனிதர்களைக் கொல்வதிலிருந்து தொடங்குவதில்லை; மனிதர்களை மனிதர்களாகப் பார்க்க மறுப்பதிலிருந்துதான் தொடங்குகிறது என்று உறுதியாகச் சொல்கிறது இந்தத் திரைப்படம். விதைக்கப்பட்ட வெறுப்பு வேகவேகமாக எப்படிச் சகமனிதர்களை வெட்டிச் சாய்த்தது என்பதைப் பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது இந்தத் திரைப்படம்.

அதுமட்டுமல்லாமல் வெறுப்பேறிய எல்லாரும் ஆயுதங்கள் ஏந்திக் கொலை செய்து கொண்டிருக்கும் போது, ஒருவன் மட்டும் அன்பை ஏந்தியபடி தன்னுடைய தொடர்புகளை எல்லாம் பயன்படுத்தி, தன்னுடைய உயிரைப் பணயம் வைத்து சக உயிர்களைக் காப்பாற்றுகிறான் என்கிற நம்பிக்கையை நங்கூரமாக நம் இதயத்தில் நிறுத்துகிறது இந்தத் திரைப்படம்.

அயர்லாந்து இயக்குநர் டெர்ரி ஜார்ஜின் இயக்கத்தில் 2004இல் வெளியானது இந்தத் திரைப்படம். அமெரிக்காவைச் சேர்ந்த திரைக்கதை எழுத்தாளர் கெய்ர் பியர்சனோடு இணைந்து திரைக்கதை எழுதியிருக்கிறார் இயக்குநர். ஆப்ரிக்க நிலத்தின் அழிக்க முடியாத கரும்புள்ளியான ருவாண்டா இனப்படுகொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது திரைப்படம்.

மிகப்பெரிய வரலாற்றை ஒரு சாதாரண மனிதனுடைய வாழ்க்கையின் வழியாகச் சொல்வது என்கிற டெர்ரி ஜார்ஜின் திரைப்பட பாணி, இந்தப் படத்திலும் அப்படியே கச்சிதமாக வெளிப்பட்டிருக்கிறது. இனப்படுகொலையின் தோற்றுவாய் என்ன என்று அறிந்துகொள்வது, திரைப்படத்தை இன்னும் கொஞ்சம் நெருங்கிச் செல்ல உங்களுக்கு உதவி செய்யக்கூடும்.

1994இல் ஆப்ரிக்க நாடான ருவாண்டாவில் மனித வரலாற்றில் மிகக் கொடுமையான இனப்படுகொலை நடந்தது. இரண்டு இனக்குழுக்களுக்கு நடுவில் விதைக்கப்பட்ட வெறுப்பின் வெளிப்பாடாக, வெறும் நூறு நாள்களுக்குள் சுமார் 8 லட்சம் முதல் 10 லட்சம் மக்கள் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் டுட்சி இனத்தைச் சேர்ந்தவர்கள்.

அன்பின் மிகுதியால் அமைதியாக விலகியிருந்த ஹுட்டு இனமக்களும்கூடச் சேர்த்தே கொல்லப்பட்டனர். வெறுப்பு இதயத்தில் நிறைந்துவிட்ட பிறகு, விழிகளால் பார்க்க முடியுமா என்ன? பார்க்க முடியவில்லை சாலைகளிலும் மைதானங்களிலும் குவிந்துகிடந்த பிணங்களைப் பார்க்க முடியவில்லை.

இந்த இனப்படுகொலை ஒரே நாளில் வெடித்த வன்முறை அல்ல; பல நூற்றாண்டுகளாக உருவான சமூகப் பிளவுகள், காலனித்துவ அரசியல், அதிகாரப் போட்டி ஆகியவற்றின் விளைவாக அது உருவானது. கிழக்கு ஆப்ரிக்காவில் அமைந்துள்ள ருவாண்டா, ‘ஆயிரம் மலைகளின் நாடு’ என்று அழைக்கப்படுகிறது. பரப்பளவில் சிறிய நாடாக இருந்தாலும், அதன் வரலாறு உலக அரசியலின் முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது. ருவாண்டாவின் மக்கள் தொகையில் பெரும்பான்மையாக ஹுட்டு (Hutu) மக்கள் உள்ளனர்; சிறுபான்மையாக டுட்சி (Tutsi) மக்கள் மற்றும் மிகச் சிறிய அளவில் த்வா (Twa) பழங்குடியினரும் வாழ்கின்றனர்.

15ஆம் நூற்றாண்டிலிருந்து ருவாண்டா ஓர் ஒழுங்கமைந்த முடியாட்சியாக இருந்தது. அரசர் ம்வாமி (Mwami) என அழைக்கப்பட்டார். 1897இல் ஜெர்மனி ருவாண்டாவைத் தனது காலனியாக மாற்றியது. முதல் உலகப் போருக்குப் பிறகு, பெல்ஜியம் ருவாண்டாவை ஆட்சி செய்தது. இதுவே ருவாண்டாவின் வரலாற்றில் மிகப் பெரிய திருப்புமுனை.

பெல்ஜியர்கள் டுட்சிகளை ’இயற்கையான ஆட்சியாளர்கள்’ என்று கருதினர். ஹுட்டுகளைக் கீழ்நிலைச் சமூகமாக வகைப்படுத்தினர். பள்ளி, அரசு வேலை போன்றவற்றில் டுட்சிகளுக்கு முன்னுரிமை அளித்தனர். 1962இல் ருவாண்டா பெல்ஜியத்திலிருந்து சுதந்திரம் பெற்றது. ஹுட்டுத் தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தது.

1994 ஏப்ரல் 6 அன்று ருவாண்டாவின் அதிபர் Juvénal Habyarimana பயணம் செய்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஹுட்டு அமைப்புகள் திட்டமிட்ட தாக்குதல்களைத் தொடங்கின.

அரசு ஆதரவு பெற்ற ஆயுதக்குழு ஒன்று வெறுப்பு பிரச்சாரத்தை முன்னெடுத்து டூட்சி இன மக்களை வீடுவீடாகத் தேடிச்சென்று கொன்று குவித்தது. இத்தனைக்கும் ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த அமைதிப்படை ருவாண்டாவில் இருந்தபோதிலும் இந்தப் படுகொலைகளைப் பார்க்கத்தானே முடிந்ததே தவிர தடுக்க முடியவில்லை. எந்த நாடும் தலையிடத் தயங்கியதால் பேரழிவுகள் எந்தத் தடங்களும் இல்லாமல் தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தன.

ருவாண்டாவின் நட்சத்திர விடுதி ஒன்றின் மேலாளராக இருந்து சிறப்பாக நடத்திக் கொண்டிருந்தார் பால். இனப்படுகொலையின் போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை விடுதியில் வைத்துப் பாதுகாத்தார். இதைக் கேள்விப்பட்ட அமெரிக்கத் திரைக்கதை ஆசிரியர் கெய்ர் பியர்சன் பாலைத் தொடர்பு கொண்டு அனுபவத்தைக் கேட்டுத் தெரிந்து கொண்டார்.

பால் சொல்லக் கேட்ட அனுபவத்தைத் திரைக்கதையாக எழுதி இயக்குநர் டெர்ரி ஜார்ஜிற்கு அனுப்பி வைத்தார். போர், அரசியல் வன்முறை, அரச பயங்கரவாதம், மனித உரிமை போன்ற உள்ளடக்கங்களை வைத்துப் பெரும்பாலும் திரைப்படங்களை உருவாக்குகிறவர் ஜார்ஜ்.

ஆப்ரிக்கப் போர்கள் மற்றும் அரசியல் மோதல்களைப் பற்றி வேறொரு கதைக்குத் தயாராகிக் கொண்டிருந்த போதுதான் பியர்சனின் வாயிலாக இந்தக் கதையை அறிந்துகொள்கிறார். திரைப்பட வேலைகள் அங்கிருந்து ஆரம்பமாகின்றன.

‘இந்தப் படத்தை வெறும் வரலாற்றுத் திரைப்படமாக மட்டும் உருவாக்க விரும்பாமல், ஒரு சாதாரண மனிதன், ஒரு அசாதரணமான சூழ்நிலையில் எவ்வளவு மனிதநேயத்தையும், தைரியத்தையும் வெளிப்படுத்துகிறான் என்பதைச் சொல்ல நினைத்தேன்’ என்கிறார் இயக்குநர் ஜார்ஜ். ஐரோப்பியர்கள் அல்லது அமெரிக்கர்களின் உயிருக்கு இருக்கும் மதிப்பு ஆப்ரிக்கர்களின் உயிருக்கு இருப்பதில்லை என்று வருத்தத்துடன் சொல்கிறார் ஜார்ஜ். கதையைத் தெரிந்து கொண்டால் நீங்களும் அப்படித்தான் நினைப்பீர்கள்.

ருவாண்டாவின் தலைநகரான கிகாலியில், பெல்ஜியத்துக்குச் சொந்தமான நான்கு நட்சத்திர ஹோட்டலை பால் ருசெசபாகினா நிர்வகித்து வருகிறார். அவரின் மனைவி டாட்டியானா டுட்சி இனத்தைச் சேர்ந்தவர். இனப்படுகொலை தொடங்கியவுடன், மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் குடும்பத்தையும், அக்கம் பக்கத்தில் இருப்பவர்களையும் விடுதிக்கு அழைந்து வருகிறான் பால். பாலின் முதலாளியும் ஹோட்டலின் உரிமையாளருமானவர் பெல்ஜியத்தில் இருக்கிறார்.

தொலைபேசியில் பாலிடம் மன்னிப்பு கேட்கும் அவர், பால் மற்றும் அவரது குடும்பத்தினருக்குப் பாதுகாப்பான வெளியேற்றத்தை ஏற்பாடு செய்யத் தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்று வருந்துகிறார். அதேநேரத்தில் வெளிநாட்டவர்கள் மட்டும் பாதுகாப்பாக வெளியேற்றப்படுகிறார்கள். ருவாண்டா மக்கள் அங்கேயே கைவிடப்படுகிறார்கள்.

ஐ.நா. அகதி முகாமில் இடநெருக்கடி ஏற்பட்டிருப்பதால், செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் பல்வேறு ஆதரவற்ற இல்லங்களில் இருந்து மேலும் பலர் ஹோட்டலுக்கு அழைத்து வரப்படுகின்றனர். மொத்தத்தில் சுமார் 800 டுட்சி மற்றும் ஹுட்டு அகதிகள் ஹோட்டலில் தஞ்சம் அடைகின்றனர். டாட்டியானா தனது சகோதரர், அவரின் மனைவி, இரண்டு மருமகள்களைத் தேடி அலைகிறார்.

ஹுட்டு ராணுவத்தினரைச் சமாளிக்க வேண்டும். ஹோட்டலில் இருக்கும் அகதிகளைப் பாதுகாக்க வேண்டும். தனது குடும்பத்தினரைக் காப்பாற்ற வேண்டும். நான்கு நட்சத்திர ஹோட்டல் இயங்கிக் கொண்டிருப்பது போன்ற தோற்றத்தைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும் எனப் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார் பால்.

உணவுப் பொருள்கள் தீர்ந்துவிட உயிரைப் பணயம் வைத்துப் பயணம் செய்து வாங்கி வருகிறார் பால். வழியில் சாலையெங்கும் குவிந்து கிடங்கும் பினங்கள் அவருடைய இதயத்தை உடைத்து கலங்கச் செய்கின்றன. ஐக்கிய நாடுகளின் படைகள் பால் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட அகதிகளின் ஒரு குழுவை வெளியேற்ற முயற்சி செய்கின்றன. அந்த முயற்சி தோல்வியில் முடிகிறது.

சக டூட்சிகள் கொல்லப்படுவதைக் கேள்விப்பட்டு எப்போதும் மரண பயத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார் பாலின் மனைவி. இறுதியில், முற்றுகையிடப்பட்ட ஹோட்டலில் இருந்த பால் குடும்பத்தினரும் அகதிகளும் ஐ.நா. வாகனத் தொடரணி மூலம் வெளியேறுகிறார்கள்.

இவ்வாறு, இந்தத் திரைப்படம் ஒரு மனிதன் தனது அதிகாரத்தையும் தொடர்புகளையும் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்ற முயலும் கதையாகத் தொடங்கி, இனவெறி, அரசியல் அதிகாரம், சர்வதேச சமூகத்தின் செயலற்ற தன்மை, மனிதநேயம் மற்றும் உயிர் பிழைத்தல் ஆகிய மிகப் பெரிய கேள்விகளை முன்வைக்கும் திரைப்படமாக முடிகிறது. ஒரு பேரழிவின் சாட்சியாக, ஒர் இனப்படுகொலையின் சாட்சியாக, காலத்தின் சாட்சியாக ஒரு திரைப்படம் இருக்கமுடியும் என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு இந்தத் திரைப்படம்.

கட்டுரையாளர்: ஜோசப் ராஜா | கவிஞர் / திரைக்கதை ஆசிரியர்

தொடர்புக்கு: writer.josephraja@gmail.com

SCROLL FOR NEXT