இந்து டாக்கீஸ்

தமிழ் இஸ்லாமியர்களின் அடையாளம், பண்பாட்டு மரபில் ‘ஹபீபி’

புதுமடம் ஜாபர் அலி

தமிழர்கள் மரபின் அடிப்படையில் திராவிடர்களாகவும், மொழி அடிப்படையில் தமிழர்களாகவும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். அதேவேளையில், இறைநம்பிக்கையின் வழியில் இஸ்லாத்தைப் பின்பற்றுவதால் தமிழ் இஸ்லாமியர்களாகவும் தங்களை உணர்கின்றனர்.

இஸ்லாம் அவர்களின் வாழ்வில் ஒரு கோடாக இருந்தால், இந்த மண்ணின் கலாச்சாரம், பண்பாடு மற்றும் மொழி மற்றொரு கோடாக விளங்குகின்றன. இந்த இரு கோடுகளுக்கும் இடையில் சமநிலையுடன் பயணிப்பவர்களே தமிழ் இஸ்லாமியர்கள். உலகம் முழுவதும் வாழும் தமிழ் பேசும் முஸ்லிம்கள் தங்களை முதன்மையாக தமிழ் மொழியின் வாயிலாக அடையாளப்படுத்திக் கொள்வது சமூக அறிவியல் பார்வையில் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

தமிழ் இஸ்லாமியர்கள் தந்தையை ‘அத்தா’ என்று அழைப்பது வழக்கம். ‘அத்தா’ என்பது பழந்தமிழ்ச் சொல். சிலர் ‘வாப்பா’ என்றும் அழைப்பர். அதுபோல பாத்திரத்தை ‘ஏனம்’ என்றும், குழம்பை ‘ஆணம்’ என்றும், சாதத்தை ‘சோறு’ என்றும் குறிப்பிடும் வழக்குகள் இன்னும் பல தமிழ் இஸ்லாமியக் குடும்பங்களில் உயிரோடு வாழ்கின்றன.

இன்றும் ‘தொழுகை’, ‘நோன்பு’, ‘ஆணம்’, ‘பள்ளிவாசல்’ போன்ற சொற்களை அன்றாட வாழ்வில் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலோர் கடற்கரைப் பகுதிகளில் வாழும் தமிழ் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.

‘பள்ளி’ என்ற சொல் சமண மற்றும் பௌத்த மரபுகளில் வழிபாடு மற்றும் கல்வி மையங்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டதாகவும், பின்னர் ‘பள்ளிவாசல்’ என்ற பெயர் உருவானதாகவும் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அதுபோல ‘தொழுகை’, ‘நோன்பு’ போன்ற சொற்களும் தமிழ்ச் சொற்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் இஸ்லாமியர்களின் மொழிப் பயன்பாட்டில் இன்றளவும் தமிழின் ஆழமான வேர்கள் தென்படுகின்றன.

பதினான்காம் நூற்றாண்டுக்குப் பின்னர் தமிழ் இஸ்லாமிய இலக்கிய வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவில் விரிவடைந்தது. இலக்கணம், இலக்கியம் மற்றும் காப்பியங்கள் இயற்றிய பலரும் கடற்கரைப் பகுதிகளைச் சேர்ந்த முஸ்லிம்களாக இருந்தனர்.

கடல் வணிகம் மற்றும் கடல் வழிப் பயணங்கள் மூலம் உலகின் பல பகுதிகளுக்குச் சென்ற அவர்கள், தமிழ் மொழியையும் பண்பாட்டையும் உலக அரங்கில் பரப்புவதில் முக்கிய பங்காற்றினர். இன்று பல நாடுகளில் இயங்கி வரும் தமிழ் அமைப்புகள் மற்றும் தமிழ் சங்கங்களின் நிறுவுநர்கள், புரவலர்கள் ஆகியோரில் தமிழ் முஸ்லிம்களின் பங்களிப்பு கணிசமானதாக உள்ளது.

தமிழ்த் திரைப்படங்களில் இஸ்லாமிய சமூகத்தின் பிரதிநிதித்துவமும் காலத்திற்கேற்ப மாறியுள்ளது. எம்.ஜி.ஆர். பல திரைப்படங்களில் முஸ்லிம் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். குறிப்பாக 1974-ஆம் ஆண்டு வெளியான ‘சிரித்து வாழ வேண்டும்’ திரைப்படத்தில் ‘ரஹ்மான்’ என்ற கதாபாத்திரத்தின் பேச்சு வட இந்தியர்கள் போல “நம்பள் போறான், நிம்பள் வாறான்” மொழிநடையை ஒத்த வகையில் சித்தரிக்கப்பட்டிருந்தது.

1990-களுக்கு முன்பு வெளியான பல தமிழ்த் திரைப்படங்களில் முஸ்லிம்கள் அமைதியான, மனிதநேயமிக்க, நீதியுணர்வு கொண்டவர்களாக சித்தரிக்கப்பட்டனர். ஆனால் பின்னர் உலக மற்றும் இந்திய அரசியல் சூழல்களின் தாக்கத்தால் மாற்றங்கள் ஏற்பட்டன. 1979-ஆம் ஆண்டு ஈரான் புரட்சி, மேற்கத்திய நாடுகளுக்கும் வளைகுடா நாடுகளுக்கும் இடையிலான அரசியல் முரண்பாடுகள், மேற்கத்திய திரைப்படங்களில் இஸ்லாம் தொடர்பான வெறுப்பு படமாக்கப்பட்டது.

1990-களில் இந்தியாவில் இந்துத்துவ அரசியலின் எழுச்சி, 1992-ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பு மற்றும் அதனைத் தொடர்ந்து உருவான சமூக - அரசியல் மாற்றங்கள் ஆகியவை திரைப்படங்களிலும் எதிரொலித்தன.

இதன் விளைவாக சில திரைப்படங்களில் முஸ்லிம்கள் தேசவிரோதிகளாகவோ அல்லது வன்முறையுடன் தொடர்புபடுத்தப்பட்டவர்களாகவோ சித்தரிக்கப்பட்டனர். இத்தகைய காட்சிப்படுத்தல்கள் பொதுச் சமூகத்தின் பார்வையிலும் தாக்கத்தை ஏற்படுத்தின.

இந்தப் பின்னணியில் ‘ஹபீபி’ திரைப்படம் குறிப்பிடத்தக்க படைப்பாக அமைகிறது. இயக்குநர் மீரா கதிரவன் மற்றும் கதாசிரியர் வி.எஸ்.முஹம்மது ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ள இந்தத் திரைப்படம், 1980-களின் கடையநல்லூர் முஸ்லிம் சமூக வாழ்வியலை இயல்பாகவும் நுட்பமாகவும் பதிவு செய்கிறது.

பிறப்பு முதல் இறப்பு வரை இஸ்லாமிய சமூக மக்களின் அன்றாட வாழ்க்கை முறைகள், உறவுகள், சடங்குகள், மொழிப்பயன்பாடுகள் மற்றும் பண்பாட்டு அடையாளங்களை படம் உயிரோட்டத்துடன் காட்சிப்படுத்துகிறது. அதே நேரத்தில், 1990-க்குப் பிறகு சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்களையும் பதிவு செய்கிறது.

இஸ்லாமிய மக்களின் வாழ்வியலை இவ்வளவு எளிமையாகவும், ஆழமாகவும், இயல்பாகவும் தமிழ்த் திரையில் பதிவு செய்த படைப்புகள் மிகக் குறைவு என்பதில் ஐயமில்லை. அந்த வகையில் ‘ஹபீபி’ ஒரு திரைப்படம் மட்டுமல்ல; தமிழ் இஸ்லாமியர்களின் பண்பாட்டு நினைவகத்தைப் பதிவு செய்யும் ஒரு சமூக ஆவணமாகவும் பார்க்கப்பட வேண்டிய படைப்பாகும்.

‘ஒருவரின் கதை உனக்குப் பிடிக்கவில்லையென்றால், நீயே உன் கதையை எழுது.’
சினுவா அச்செபே
SCROLL FOR NEXT