இந்து டாக்கீஸ்

ஜென்ஸீ தலைமுறையையும் ‘மின்னலே’ வசீகரிப்பது ஏன்?

ஹேமந்த் முத்துகிருஷ்ணன்

மாதவன், அப்பாஸ், ரீமாசென், அப்பாஸ், விவேக் உள்ளிட்டோர் நடிப்பில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 2001-இல் வெளியான திரைப்படம் ‘மின்னலே’.

’அலைபாயுதே’ வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் மாதவனை ‘ரொமான்டிக் ஹீரோ’வாக ரசிகர்களை உணரவைத்த படைப்பு. ஏறக்குறைய 25 ஆண்டுகள் கடந்த பிறகு, அடுத்த தலைமுறையைச் சேர்ந்த என்னையும் ஈர்க்கும் வகையில் இருப்பதுவே இந்தப் படத்தின் சிறப்பு.

குடும்பத்தினருடன் சேர்ந்து டிவி பார்க்கும்போது அந்தப் படத்தின் சில காட்சிகளை பலமுறை பார்த்திருக்கிறேன். முழுக்கதையும் தெரியாதபோதும், அந்தக் காட்சிகளே என்னை வசீகரித்தன. அது மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவின் சிறந்த காதல் படங்களில் ஒன்றாகப் பலரால் தொடர்ந்து ‘மின்னலே’ குறிப்பிடப்பட்டு வந்ததைக் கண்டபிறகு அந்தப் படத்தை முழுமையாகப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமானது. அதற்கேற்றவாறு, அந்தப் படத்தை முழுமையாகப் பார்க்கிற வாய்ப்பு அண்மையில்தான் கிடைத்தது.

மின்னற்பொழுதில்..

’மின்னலே’ ஓர் இளைஞன் தனக்கு மிகவும் பிடித்த பெண்ணைச் சந்தித்த பிறகு அவன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களைக் கூறுகிறது. ‘காதலிலும் போரிலும் வெற்றிபெற என்ன வேண்டுமானாலும் செய்யலாம்’ என்கிற எண்ணத்தைத் தொடக்கத்தில் ஏற்படுத்தினாலும் உண்மை, நம்பிக்கை, புரிதல் போன்றவை உறவுகளில் எவ்வளவு முக்கியம் என்பதையும் உணர்த்துகிறது.

இனிமையான பாடல்கள், இயல்பான நடிப்பு, சிரிக்க வைக்கும் நகைச்சுவை. மனதைத் தொடும் உணர்வுப்பூர்வமான காட்சிகள் போன்றவை படத்தைத் தொடக்கம் முதல் இறுதி வரை சுவாரஸ்யமாக நகர்த்துகின்றன.

ரீனா (ரீமா சென்) பாத்திரம் முதன்முதலாகத் திரையில் வரும் காட்சி, மின்னலே என்ற தலைப்புக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். ஒரு நொடியில் மின்னல் நம் கவனத்தை ஈர்ப்பது போல, திரையில் ரீனாவின் வருகையும் உடனடியாகக் கவர்ந்துவிட்டது. அந்த ஒரு காட்சியைப் பார்த்தவுடன், இந்தப் படம் நிச்சயம் வித்தியாசமாக இருக்கும் என்று தோன்றியது. அதன்பிறகு, படம் முடியும் வரை என் கவனம் முழுவதும் திரையின் மீதே இருந்தது. சிறந்த படங்கள் மட்டுமே அதனைச் சாதிக்கும்.

ராஜேஷ் (மாதவன்) பாத்திரம் ரீனாவை முதன்முதலாகப் பார்ப்பதும் அவரைப் பற்றித் தெரிந்துகொள்ள முயற்சி செய்வதும், பின்னர் அவரை மீண்டும் மீண்டும் சந்திக்க விரும்புவதும் மிகவும் இயல்பாக இருந்தது. அந்தக் காட்சிகளைப் பார்க்கும்போது, ‘ஒரு திரைப்படம் காண்கிறோம்’ என்கிற உணர்வை விட நிஜ வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களைப் பார்ப்பது போலவே இருந்தது.

ராஜேஷ் தான் செய்த தவறை உணர்ந்து ரீனாவிடம் உண்மையைச் சொல்ல வேண்டும் என்று முடிவு எடுக்கும் காட்சி, இந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்தமானது. ‘ஒரு தவறைச் செய்துவிட்டால், அதை மறைப்பதை விட ஒப்புக்கொள்வதுதான் சரி’ என்பதை அது அழகாக உணர்த்தியது. அதனாலேயே, ‘மின்னலே’ நாயகன் பாத்திரமும் மிக நெருக்கமானதாகத் தெரிந்தது. மகிழ்ச்சி, கவலை, மூர்க்கம், பயம், வருத்தம் என்று எந்த உணர்ச்சியாக இருந்தாலும் மாதவன் வெளிப்படுத்திய முகபாவனைகள் மிகவும் உண்மையாகத் தோன்றியதும் அதற்கான காரணமாக இருக்கலாம்.

அப்பாஸ், தான் ஏற்ற ராஜிவ் பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து மிகவும் அமைதியாகவும் அழகாகவும் நடித்திருந்தார். ரீமா சென்னின் எளிமையான நடிப்பு, அவர் ஏற்ற பாத்திரத்திற்குப் பொருத்தமானதாக அமைந்திருந்தது. அவரது அழகான புன்னகை, அவர் தோன்றும் ஒவ்வொரு காட்சியையும் ரசிக்க வைத்தது.

அனைத்தையும் தாண்டி, இந்தப் படம் ரொம்பவும் பிடிக்க இன்னொரு காரணம், விவேக். அவர் வரும் ஒவ்வொரு காட்சியும் மனம் குளிரச் சிரிக்க வைத்தது. அவரது வசனங்களும் நகைச்சுவையும் மிகவும் இயல்பானதாக இருந்தன. கதை சீரியஸாக செல்லும் நேரங்களில் எல்லாம், அவரது நகைச்சுவையே மீண்டும் இயல்புக்குக் கொண்டுவந்தது.

காதல் கொண்டாட்டம்

காதல் காட்சிகளுக்காகக் கொண்டாடப்பட்ட ‘மின்னலே’ 25 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த பிப்ரவரி 13-இல் மீண்டும் ‘ரீரிலீஸ்’ செய்யப்பட்டது. முதல்முறை இப்படத்தைப் பார்த்தவர்களுக்கு, நிச்சயம் இம்முறை அது நினைவுகளைத் திரும்பிப் பார்ப்பதாக, கொண்டாட்டத் தருணமாக இருந்திருக்கும்.

இந்தப் படத்தில் ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் அனைத்தும் மிகவும் இனிமையானவை. குறிப்பாக ‘வசீகரா’ பாடல் படம் முடிந்த பிறகும் மனதில் நீண்ட நேரம் ஒலித்துக்கொண்டே இருந்தது. மற்ற பாடல்களும் கூட அப்படித்தான் இருந்தன. இசையமைப்பாளர் ஹாரிஸ் மட்டுமல்லாமல் ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் உள்ளிட்ட பல தொழில்நுட்பக் கலைஞர்கள் ‘மின்னலே’வில் பணியாற்றியபோது ஏறக்குறைய புதுமுகங்கள்தான். அந்த வரிசையில் படத்தொகுப்பாளர் சுரேஷ் அர்ஸ் மட்டுமே விதிவிலக்கு என்று இயக்குனர் கௌதம் ஒருமுறை குறிப்பிட்டிருக்கிறார். அதுவும் கூட ‘மின்னலே’வின் சிறப்புதான்.

‘மின்னலே’ பார்த்த பிறகுதான், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் மக்கள் ஏன் இந்தப் படத்தை இன்னும் விரும்புகிறார்கள் என்பது புரிந்தது. நல்ல கதை, இயல்பான நடிப்பு, மறக்க முடியாத பாடல்கள், சிரிக்க வைக்கும் நகைச்சுவை என்று எல்லாம் சேர்ந்த ஒரு அழகான ‘கமர்ஷியல்’ படம் இது. அப்படி ஒரு திரைப்படத்தைக் காணத்தானே நம்மில் பெரும்பாலானோர் விரும்புகிறோம்!

SCROLL FOR NEXT