இந்து டாக்கீஸ்

Couple Friendly: திரைப் பார்வை - ஒரு நல்ல சினிமாவின் ரசவாதம்!

டோட்டோ

“சந்தோஷம்னா என்னனு அதை அனுபவிக்கையில மனுஷனுக்கு தெரியறதில்ல. அது இல்லாம போவுது பாருங்க.. அதேன் சிரமம்.” இது சிறையிலிருந்து தன் வாழ்வை நினைத்து வருந்தியபடி விருமாண்டி சொல்லும் அற்புதமான வசனம். மனித உறவுகளுக்கும், இடங்களுக்கும், கண்ணெதிரில் நிகழ்ந்து கடக்கும் அத்தனை கணங்களுக்கும் இது பொருந்தும்.

நம் காலத்துப் பெருந்துயரான பெருந்தொற்றுக் காலத்தை எப்படியோ கடந்து மீண்டு வந்த, நம் ஒவ்வொருவருக்கும் இதன் அர்த்தம் சரியாகவே புரியும். இப்படியான மெல்லுணர்வுகளை ஒரு சாதாரண அதுவும் வணிகக் காதல் கதையில் அழுத்தம் திருத்தமாகச் சொல்லி பார்வையாளர்களை ஈர்த்திருக்கும் தெலுங்கு திரைப்படம் தான் ’கப்புள் ஃப்ரெண்ட்லி’ (Couple Friendly).

          

கதை

ஒரு காதல் தோல்விக்குப் பின்னர், நெல்லூரிலிருந்து வேலை தேடி சென்னை வரும் கட்டிட வடிவமைப்பாளர் சிவா ஒருபுறம். கல்யாணப் பந்தத்திற்குள் சிக்கி விடாமல் தனக்கான கனவுகளைத் தேர்ந்தெடுக்கத் தன் பெற்றோருடன் சண்டை போட்டு சித்தூரிலிருந்து சென்னையில் வசிக்கும் கணினிப் பொறியாளர் மித்ரா, இன்னொருபுறம்.

வெவ்வேறு திசை பறவைகளான இவர்களை இணைக்கும் காலம், இவர்களை என்னவாகவெல்லாம் ஆக்கிப் பார்க்கிறது என்பதாய் ரசனையுடன் 121 நிமிடங்களுக்குள் கச்சிதமாகச் சொல்லப்படுவது தான் இத்திரைப்படத்தின் கதை.

வெளிப்பார்வைக்கு வழமையான காதல் படமாகத் தோன்றினாலும் நீரோடை போன்ற தெளிந்த உள்ளடக்கத்திலும், சூழல்களைக் கையாண்ட விதத்திலும், வலுவான கதாபாத்திரங்களாலும், உணர்வின் அடுக்குகளாலும் ரசவாதம் நிகழ்த்தியிருக்கிறார் அறிமுக இயக்குநர் அஸ்வின் சந்திரசேகர்.

சென்னையில் தெலுங்கு குடும்பமொன்றில் பிறந்து வளர்ந்த அஸ்வின் ஏழு வருடம் இயக்குநர் பாண்டிராஜிடம் உதவியாளராக இருந்து, ஒரு குறும்படம் இயக்கி, பின்னர் முயன்றிருக்கும் முதல் திரைப்படம் இது. ஆனால், முதல் படம் என்று நிச்சயமாகச் சொல்ல முடியாத அளவுக்கு எழுத்திலிருந்து இயக்கம் வரை எல்லாத் துறைகளிலும் அடித்து விளையாடியிருக்கிறார்.

உதாரணமாக பைக் டாக்சி, ஐவிஎஃப் சிகிச்சை, பிக்ஸ் மூளை சிதைவு குறைபாடு, பெண்ணுலகத்தின் வலி தெரியாத/புரியாத ஆண்கள், வளர்ப்பு பறவைகள், ஈகோ மோதல்கள், உதவும் நண்பர்கள், மறதி நோய் சார்ந்த குறிப்புக் காட்சிகள் எனப் பல புதிய விஷயங்களைத் தொட்டு எல்லா தேய் வழக்குகளையும் உடைத்திருக்கிறார் இயக்குநர்.

இவருக்குப் பக்க பலமாக இருந்திருப்பது தினேஷ் புருஷோத்தமனின் நேர்த்தியான அழகியல் கூடிய ஒளிப்பதிவு. சென்னை மாநகரத்தை வெகு காலம் கழித்து ஒரு கதாபாத்திரமாகவே வெயிலும் மழையாகக் காட்டியிருப்பது வெகு சிறப்பு. இதைப் போலவே பாடகர், இசையமைப்பாளர் ஆதித்யா ரவீந்திரனின் பின்னணி இசையும், கதையோடு பயணிக்கும் குறும் பாடல்களின் இணைப்பும் படத்திற்குப் பெரும் பலம்.குறிப்பாக பிரதீப் குமாரின் "வராலே பஞ்சே" பாடலும் சக்தி ஸ்ரீகோபாலனின் "நா கள்ளலோ" பாடலும் அவ்வளவு இதம்.

நன்றாக எழுதப்பட்ட கதையே நல்ல சினிமாவாக மாற முடியும் என்பதற்கு இத்திரைப்படத்தில் வரும் வசனங்கள் மிகச் சிறந்த உதாரணம். "கடந்து போகும் இக்கணமே, பின்னாட்களில் நாம் ஏங்கியிருக்கப் போகும் கணமென்று தெரியாமல் வாழ்கிறோம்", "பெண்ணின் கஷ்ட காலங்களில் கூடவே இருக்க வேண்டும் என ஆண்கள் நினைக்கின்றனர்.. ஆனால் வெறுமனே நினைக்க மட்டுமே செய்கிறார்கள்" இப்படி வழி நெடுகிலும் பிரமாதமான, இயல்பான வசனங்கள்.

படத்தின் ஆரம்பத்தை நான்-லீனியராக ஒரு திரில்லர் போலவே வடிவமைப்பு செய்ய முயன்றிருப்பதும் பாராட்டக்கூடியது. படம் ஆரம்பித்ததற்குச் சற்றே தள்ளி இயக்குநர் பெயர் போடப்படும் வழக்கம் இயக்குநர் திரு.பாக்யராஜ் அவர்கள் தொடங்கி வைத்தது. அதே போல இதிலும் , படம் ஆரம்பித்துப் பல நிமிடங்கள் கழித்து படத்தின் தலைப்பு ஒரு வெகு பொருத்தமான இடத்தில், காட்டப்பட்டிருப்பது அதீத அழகு. வெறும் படத்தின் தலைப்பிற்காகவே "ஏ" சான்றிதழும் தைரியமாகப் பெற்றிருக்கின்றனர்.

முழுக்க முழுக்க சென்னையில், அதுவும், நிஜமான இடங்களில் கொரில்லா முறையிலும், ஒரு வீட்டுக்குள்ளும் எனக் கதையோட்டத்தின் எல்லாக் கணங்களையும் பதிவு செய்திருப்பது வெகு நேர்த்தி. அதிலும், குறிப்பாக சென்ட்ரல் ரயில் நிலையத்தின் எதிரே இருக்கும் பாலத்தில் நிகழும் இடைவேளைக் காட்சியைச் சொல்லலாம்.

முக்கிய கதாபாத்திரங்களான சந்தோஷ் ஷோபனும் வெகு இயல்பான நடிப்புடன் கூடிய வசீகரத் தோற்றத்தில் நம்மை ஈர்க்கிறார். இவரையும் விட ஒரு படி தாண்டிப் போகிறார், நிஜ வாழ்வில் மிஸ் இந்தியா பட்டம் வென்று இரண்டாவது படத்திலேயே நடிப்பிற்குப் பெரும் கைத்தட்டல் பெரும் மானசா வாரணாசி.

முதல் முறை தெலுங்கில் அறிமுகமாக இருக்கும் யோகி பாபுவின் முக எதிர்வினைகளும் டைமிங் நகைச்சுவையும் உறுத்தாமல் சரியாகவே அமைந்திருக்கின்றன. . இறுதியில் "A film by " என்பதை வெறும் இயக்குநருக்காக மட்டுமே போடாமல் அதில் இயக்குநர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், இசையமைப்பாளர் எல்லாப் பெயரையும் போட்டிருப்பது படத்திற்குச் செய்யும் நியாயமாகக் கொள்ளலாம்.

"எங்கேயும் எப்போதும்", "the fault in our stars", "even if this love disappears from the world tonight - Korean", ஓகே கண்மணி என ஒரு சில படங்களின் லேசான சாயல்கள் தெரிந்திருந்தாலும், நாம் படம் பார்க்கும்போது அவை யாவையும் நினைவுக்கு வராமல் பார்த்துக் கொண்டது திரைக்கதையின் சாமர்த்தியம். அது வரை படத்துக்குத் தொடர்பில்லாத ஒரு புதிய பொருளை சஸ்பென்சாக இடைவேளையில் காட்டியிருப்பதில் புத்திசாலித்தனம் தெரிகிறது.

படத்தின் தொடக்கத்திலும் முடிவிலும் வரும் பொன்மொழி படத்துக்கு வெகுவாகப் பொருந்திப் போவது அழகு. அதிலும் குறிப்பாக "வாழ்வென்பது திடீர் பிரிவுகளால் ஆனது. எனவே அதைக் கையாள்வதில் கவனம் தேவை" என்னும் வாக்கியம் படத்தோடு பொருந்துவது மட்டுமல்லாமல், படம் முடிந்தும் நீண்ட நேரம் நம்மைத் தொந்தரவு செய்துகொண்டே இருக்கிறது.

மூன்றாம் பிறையின் மொத்த அடிநாதமாகக் கண்ணே கலைமானே பாடலில் வரும் "உனக்கே உயிரானேன் எந்நாளும் என்னை நீ மறவாதே" வரிகள், 44 வருடங்களுக்குப் பிறகு ஒரு தெலுங்கு திரைப்படத்திற்குப் பொருந்திப் போவது நல்ல சினிமாவின் ரசவாதம். இரசாயன இனிப்புகளுக்கு மத்தியில் ஒரு பெயர் தெரியாத காட்டுப் பூவின் ஒற்றைத் தேன் துளி தான் ‘கப்புள் ஃப்ரெண்ட்லி’ திரையரங்கில் தவறவிட்டிருந்தால் ஓடிடியில் வரும்போது பாருங்கள்.

தொடர்புக்கு: tottokv@gmail.com

SCROLL FOR NEXT