இந்து டாக்கீஸ்

Come and See: வந்து பாருங்கள் போரின் பேரழிவை | சினிமாவும் அரசியலும் 22

ஜோசப் ராஜா

இதுபோன்ற திரைப்படங்களைப் பார்க்கும்போது திரைப்படக் கலையின் மீது மிகுந்த மரியாதை உண்டாகிறது. பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமல்லாமல், புகழ் பெறுவதற்காக மட்டுமல்லாமல், கலை மானுடத் திரளுக்கு ஏதாவது ஒருவகையில் பயன்பட வேண்டும் என்று எத்தனையோ தடைகளைத் தாண்டித் திரைப்படங்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் ஒவ்வோர் இயக்குநரையும் ஆரத் தழுவிக்கொள்ள ஆசைப்படுகிறேன். அந்த வகையில் இந்தத் திரைப்படத்தின் இயக்குநர் எலெம் கிளிமோவ் அடங்காத பிரமிப்பை ஏற்படுத்தியிருக்கிறார்!

1935இல் சோவியத் யூனியனின் ஸ்டாலின்கிராடில் பிறந்த இயக்குநர் கிளிமோவ், 1959இல் தன்னுடைய முதல் திரைப்படத்தை எடுத்தார். சீரான இடைவெளியில் படங்களை இயக்கிக்கொண்டிருந்தார்.

எல்லாக் கலைஞர்களின் இதயத்திற்குள்ளும் எதிர்காலத்திற்கான கனவு ஒன்று இருந்துகொண்டே இருக்கும். கிளிமோவ் இதயத்திலும் அப்படி ஒரு கனவு, ஒரு கதையைப் படமாக்க வேண்டும் என்று இருந்து கொண்டேயிருக்கிறது. அந்தக் கனவைத் தன்னுடைய பத்தாவது படமாக இயக்கினார்.

          

உண்மையைச் சொல்ல வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்துவிட்டால், எதிர்ப்புகளைச் சந்திக்கத் தடைகளைத் தாண்ட தயாராக இருக்க வேண்டும். கிளிமோவ் எதிர்ப்புகளைச் சந்தித்தார், தடைகளைத் தாண்டினார். உண்மையாக இருக்கிறது என்பதற்காகவே அரசாங்கம் அனுமதி கொடுக்காமல் தள்ளிப்போட்டுக் கொண்டே இருந்தது.

1970களில் தொடங்கி முடிக்கப்பட்ட படம், வெளிவந்தது 1985இல். சகிக்கவே முடியாத போரின் உண்மைகளை மக்கள் எப்படி எதிர்கொள்வார்கள் என்கிற பயம் இருக்கத்தான் செய்தது இயக்குநருக்கு. முதலாளிகளைத் தவிர, அரசியல்வாதிகளைத் தவிர போரை யார் விரும்பப் போகிறார்கள்? ஆரத்தழுவிக் கொண்டார்கள் மக்கள். அவசியமான திரைப்படம் என்று எல்லாரும் சொன்னார்கள். ஆனால் கிளிமோவ் வேறொன்று சொன்னார்.

”இனி நான் படங்கள் இயக்கப் போவதில்லை. நான் சொல்ல நினைத்த எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன். இனி சொல்வதற்கு என்னிடம் எதுவுமில்லை. எனவே இதோடு நிறுத்திக்கொள்கிறேன்” என்றார். போதும் என்று முடிவு செய்யும் அளவிற்கு அந்தத் திரைப்படத்தில் என்ன இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? ஒன்றுமில்லை, இந்தத் திரைப்படத்தில் இருப்பது சக மனிதனுக்கு எதிராக இன்னொரு மனிதனிடமிருந்து வெளிப்பட்ட வெறுப்பு. சக மனிதனின் மீது நிகழ்த்தப்பட்ட பேரழிவு. அந்தப் பேரழிவைத்தான் வந்து பாருங்கள் என்று அழைக்கிறார் கிளிமோவ்.

இந்தத் திரைப்படம் ஒரு புத்தகத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது. அந்தப் புத்தகத்தின் ஆசிரியரான அலெஸ் அடமோவிச் திரைக்கதைக்கும் பங்களிப்புச் செய்திருக்கிறார். இந்தப் புத்தகம் ஒரு வாய்மொழி இலக்கிய வகையைச் சார்ந்தது.

ஆம், இரண்டாம் உலகப்போர் காலக்கட்டத்தில் பெலாரஸ் நாஜிகளின் வசமான பின்பு, நாஜிகளால் அங்கு நிகழ்த்தப்பட்ட நினைத்துப் பார்க்கவே முடியாத கொடூரங்களில் இருந்து தப்பித்தவர்கள், தங்களுடைய நினைவின் அடுக்குகளிலிருந்து ரத்த வாடையோடு சொன்ன கதைகள். அந்தக் கதைகளை அடமோவிச்சும் அவரோடு இன்னும் இரண்டு எழுத்தாளர்களும் சேர்ந்து நூலாக்கினார்கள். அந்த நூலை அடிப்படையாகக் கொண்டு திரைப்படத்தை உருவாக்கினார் கிளிமோவ்.

பெலாரஸின் நினைவுகளில் நீங்காமல் நிலைத்திருக்கும் அந்தக் கதைகள் மீண்டும் நினைத்துப் பார்க்கக்கூடிய கதைகள் அல்ல. பெலாரஸின் மீது நெருப்பள்ளிக் கொட்டிய அந்தக் கதைகளை இப்போது நினைத்தாலும் அவர்களுக்குச் சுடத்தான் செய்யும். ஏன் இந்தத் திரைப்படத்தின் வழியாக இப்போது நீங்கள் பார்த்தாலும் அந்தச் சூட்டை உணரத்தான் செய்வீர்கள். 600க்கும் மேற்பட்ட கிராமங்கள் மட்டுமல்லாமல், அந்தக் கிராமங்களைச் சேர்ந்த மக்களும் தீவைத்துக் கொளுத்தப்பட்டார்கள். “வரலாற்றின் மிக மோசமான படுகொலைகள், வருங்காலம் மறந்துவிடக் கூடாது என்பதற்காக அதை ஆவணப்படுத்த நினைத்தேன்” என்கிறார் கிளிமோவ்.

1943 பெலாரஸ். போரின் சூடு பரவத் தொடங்கியிருக்கும் தன்னுடைய கிராமத்தில் 14 வயதான ஃப்ளோரியா தாய், தங்கைகளோடு வாழ்ந்து வருகிறான். ஊர்த்தலைவரின் கண்டிப்பையும் மீறி, ஊருக்கு வெளியே புதைத்து வைக்கப்பட்டிருக்கும் ராணுவத் தளவாடங்களைத் தோண்டி ஒரு துப்பாக்கியை எடுத்துக்கொள்கிறான்.

தலைக்கு மேலே பறந்து கொண்டிருக்கிறது ஜெர்மனியின் உளவு விமானம். 14 வயது சிறுவனுக்கு எதற்குத் துப்பாக்கி என்று கேட்கிறீர்களா? நாஜி ராணுவத்தினருக்கு எதிராகக் காடுகளுக்குள் மறைந்திருந்து கெரில்லா தாக்குதல்களை நிகழ்த்திக்கொண்டிருக்கும் பார்டிசன் என்கிற போராளிக் குழுவில் சேர்வதற்காகத்தான். துப்பாக்கியோடு வீட்டிற்கு வந்தவனை திட்டித்தீர்க்கிறார் அம்மா. தகவல் அறிந்து போராளிக் குழுவினர் வீட்டிற்கு வந்து அழைத்துச் செல்கிறார்கள் அவனை.

காட்டில் போராளிக் குழுவினரோடு வாழ்க்கையைத் தொடங்குகிறான். இரவுக்காவல் மட்டுமல்லாமல் அங்கு தேவைப்படும் சிறிய வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறான். நாஜி படைகள் நெருங்கி வருகிறது என்று கேள்விப்பட்டு இடத்தை மாற்ற முடிவு செய்கிறார்கள். ஒருசில பெண்களையும் ஃப்ளோரியாவையும் அங்கேயே விட்டுச்செல்ல முடிவுசெய்கிறார்கள். போராளிகள் இடம் பெயர்ந்தவுடன் அழுதுகொண்டே துப்பாக்கியோடு அங்கிருந்து நகர்ந்து செல்கிறான். அவனைப்போல விட்டுச் செல்லப்பட்ட க்லாஷா என்கிற பெண்ணோடு சேர்ந்துகொள்கிறான்.

மீண்டும் உளவு விமானங்கள் பறக்க, சிறிது நேரத்தில் காடு முழுக்கக் குண்டுகளைப் போடுகிறார்கள் நாஜிகள். இருவரும் சாகாமல் தப்பிக்கிறார்கள். ஆனால் ஃப்ளோரியாவிற்குக் குண்டுச் சத்தத்தில் காதுகள் கேட்காமல் போகின்றன. ஜெர்மன் ராணுவ வீரர்கள் காட்டிற்குள் இறங்க, அங்கிருந்து தப்பித்து கிராமத்திற்கு ஓடுகிறார்கள்.

ஃப்ளோரியா வெறிச்சோடிக் கிடக்கும் தன்னுடைய கிராமத்திற்கு க்லாஷாவோடு வருகிறான். வீட்டிற்குச் செல்கிறான். அம்மா, தங்கைகள் யாரும் இல்லாமல் இருக்க, மீண்டும் அவர்களைத் தேடி வெளியே ஓடுகிறான். அவன் பின்னால் ஓடும் க்லாஷா வீட்டிற்குப் பின்னால் கொன்று குவிக்கப்பட்டிருக்கும் கிராமவாசிகளைப் பார்த்துவிடுகிறாள்.

ஊருக்கு வெளியே தப்பித்துச் சென்றவர்கள் மறைந்திருக்கிறார்கள். ஊர்த்தலைவர் முழுவதும் எரிக்கப்பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார். வெறுமையின் உச்சத்திற்குச் சென்று விடுகிறான் ஃப்ளோரியா.

ஹிட்லரின் பொம்மையைச் செய்து, அந்தப் பொம்மையின் மீது காறித்துப்பி தங்கள் ஆத்திரத்தைக் கொஞ்சம் தணித்துக் கொள்கிறார்கள் மக்கள். பார்டிசன் போராளிகள் சிலர் அந்தப் பொம்மையைத் தூக்கிக்கொண்டு செல்ல, அவர்களோடு சேர்ந்து ஃப்ளோரியாவும் செல்கிறான்.

அந்தப் பொம்மையை நாஜிகளின் கண்களில் படுமாறு பாதையில் நட்டு வைக்கிறார்கள். மீண்டும் உளவு விமானங்கள் இவர்களைப் பார்க்க, சிறிதுநேரத்தில் குண்டுவெடிக்கிறது. ஏற்கெனவே வைக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடியில் சிக்கி உயிழக்கிறார்கள். ஃப்ளோரியா மட்டும் தப்பித்து வழியில் வந்த பெரியவர் ஒருவருடன் அவரது கிராமத்திற்குச் செல்கிறான்.

அந்தக் கிராமம் ஏற்கெனவே நாஜிகளின் ஆக்கிரமிப்பில் இருக்கிறது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என எல்லாரும் எங்களிடம் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று ஊரின் மைதானத்திற்கு அழைக்கிறார்கள் நாஜிகள். பெயர்களைப் பதிவு செய்வதுபோலச் செய்துவிட்டு எல்லாரையும் நெற்களஞ்சியத்திற்குள் தள்ளி அடைக்கிறார்கள்.

ஃப்ளோரியா வெளியே தப்பித்து வந்து பார்வையாளனாக இருக்கிறான். குடித்துக் களித்திருக்கும் நாஜி வீரர்கள் பெட்ரோலை ஊற்றித் தீ வைக்கிறார்கள். அது போதாதென்று துப்பாக்கிகளால் சுட்டுத் தள்ளுகிறார்கள். மானுட ஓலங்கள் கேட்க முடியாததாக இருக்கிறது. ஆனால் அந்த மானுட வெறுப்பாளர்கள் ஆடிக் கொண்டாடுகிறார்கள்.

அந்த இடத்தில் மொஸார்ட்டின் இசையை உங்களால் நினைத்துப் பார்க்கவே முடியாது. ஆனால், அந்தத் துயரத்தை இன்னும் துயரமாக்க மொஸார்ட்டின் இசையைப் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர். மொஸார்ட்டின் கடைசிப் படைப்பின் ஒரு பகுதி. மரணத்திற்காகவே எழுதப்பட்ட அந்த இசை பேரழிவின் துயரத்தை அதிகமாக்குகிறது.

எரிந்து சாம்பாலாகி இருக்கும் கிராமத்தை வெறுமையோடு பார்த்துக் கொண்டிருக்கிறான் ஃப்ளோரியா. நாஜி ராணுவ அதிகாரிகள் சிலரை பார்டிசன் படைகள் பிடிக்கிறார்கள். மக்களுடைய விருப்பத்திற்கு இணங்க சுட்டுக்கொள்கிறார்கள். பக்கத்திலிருக்கும் சகதியில் ஹிட்லரின் படம் கிடப்பதைப் பார்க்கிறான் ஃப்ளோரியா. வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவன் துப்பாக்கியை எடுத்துச் சுடத் தொடங்குகிறான்.

- கட்டுரையாளர்: ஜோசப் ராஜா | கவிஞர் / திரைக்கதை ஆசிரியர் | தொடர்புக்கு: writer.josephraja@gmail.com

SCROLL FOR NEXT