கங்கை அமரன்
பாடலாசிரியர், இசையமைப்பாளர், இயக்குநர் எனப் பன்முகத் திறமையுடன் திரையில் இயங்கியவர்தான் கங்கை அமரன். அவர் எழுதி வெளிவந்த கட்டுரைத் தொடராக வெளிவந்தது பின்னர் புத்தகமாக ஆக்கம் பெற்ற ‘பண்ணைப்புரம் எக்ஸ்பிரஸ் பாகம் 2’ வாசிக்கத் தொடங்கினேன். ஒரே ஓட்டம்.. விறுவிறுப்பாக நகர்ந்தது.
இந்தப் புத்தகம் அவரது பால்யக் கால நினைவுகளை எண்ணிப் பார்க்கும் விதமாகவும், தனது சினிமா வாழ்வின் அடித்தளத்தை எடுத்துரைக்கும் வகையிலும் அமைந்துள்ளது. யதார்த்தமான, தோழமையான மொழியில் அமைந்த இந்தப் புத்தகம் வாசகர்களிடையே அவரே நேரடியாக உரையாடுவது போன்ற தோன்றத்தினை ஏற்படுத்துகிறது. தனது வாழ்க்கையில் நடந்த பல சுவாரஸ்யமான நிகழ்வுகளையும், பிரபலங்களுடன் தனக்கு ஏற்பட்ட நெருக்கத்தையும் இதில் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.
பாவலர் பிரதர்ஸின் ஆரம்பக்கால இசைக் கச்சேரிகளையும் அவர்கள் சந்தித்த வெற்றிகள், தோல்விகள், சினிமா உலகில் அவர்கள் எடுத்து வைத்த கால் தடம் என ஒவ்வொன்றாய் விவரிக்கிறார். மேலும் இந்தப் புத்தகத்தில் அவரது காதல், திருமணம், நட்பு என அவரது இளமைக் காலங்களை நினைவுகூர்ந்திருக்கிறார்.
எம்.ஜி.ஆர் உடன் நெருக்கம்: புத்தகத்தின் ஆரம்பத்தில் எம்.ஜி.ஆருடன் தனக்கு ஏற்பட்ட நெருக்கத்தைச் சொல்வதிலிருந்து இந்தப் புத்தகம் தொடங்குகிறது. “பாரதிராஜாவின் படத்தினைப் பார்க்க வந்த தலைவர், படம் நன்றாக இருந்தால் தலைவர் பரிசு தருவார். சில சமயம் அவர் தன் விலையுயர்ந்த கைக்கடிகாரத்தைக் கழற்றித் தருவார் எனத் தலைவருடன் வந்தவர்கள் அண்ணன் பாரதிராஜாவிடம் கூறினர். ஆனால் அந்தப் பரிசு அவருக்குக் கிடைக்கவில்லை. அண்ணன் பாரதிராஜாவிற்கு கிடைக்காத பரிசு எனக்குக் கிடைத்தது” என்கிறார்.
திருமண நிகழ்ச்சி ஒன்றில் எனது தலைமையிலான இசைக் கச்சேரி ஒன்று அரங்கேறியது. அதற்குத் தலைமை தலைவர்தான், அவர் வந்த உடனே செல்வதாக இருந்தது. நான் அவரிடம் சென்று கச்சேரியைப் பார்த்துவிட்டுச் செல்லுமாறு கேட்டேன். அப்போது தலைவர் மணி என்ன என்று என்னிடம் கேட்டார். எனது கையில் கடிகாரம் இல்லாததைக் கவனித்த தலைவர் அவரின் கையில் இருந்த கடிகாரத்தை எனக்கு அளித்தார். எம்.ஜி.ஆர். மீது அவர்கொண்ட பற்று, அவரிடம் இருந்து பெற்ற பரிசு, என எழுத்தாளர் விவரிப்பது மீண்டும் எம்.ஜி.ஆர் ரசிகர்களிடமும், வாசகர்களிடமும் கடந்த கால நிகழ்வுகளை நினைவூட்டும் விதமாக அமைகிறது.
கோழி கூவியது! தனது ஆரம்பக் காலத்தில் கிட்டார் கலைஞராகப் பணிபுரிந்தவர் கங்கை அமரனின் அண்ணன் இசைஞானி இளையராஜா. தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலத்தின் அறிவுரையை ஏற்றுக் ‘கோழி கூவுது’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானர் கங்கை அமரன். “‘கோழி கூவுது’ படம் எனக்கு வெற்றிப் படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து நான் இயக்கி அண்ணன் இளையராஜா இசையில், ராமராஜன், கனகா இவர்களின் நடிப்பில் வெளியான ‘கரகாட்டக்காரன்’ எவ்வளவு பெரிய வெற்றிப் படம் என்பது நீங்கள் அறிந்ததுதான்” என ஓர் இயக்குநராகத் தனது பயணத்தை விவரிக்கிறார்.
பிரபலங்களுடன் கங்கை அமரன்: பாரதிராஜா, மலேசியா வாசுதேவன், எஸ்.பி.பாலசுப்ரமணியம் போன்ற பல பிரபலங்களின் யதார்த்த வாழ்வியலையும் திரையுலகில் அவர்களின் தொடக்கப் பயணத்தினையும் இதில் விரிவாகத் தெரிவித்துள்ளார். ‘பதினாறு வயதினிலே’ பாரதிராஜாவின் முதல் படம் என அனைவருக்கும் தெரியும்.
அதில் வரும் சப்பாணி என்ற கதாபாத்திரத்தை அவர் எழுத, ஊரில் ஓர் ஊமையன் என்பவர்தான் உயிருள்ள அசல் கதாபாத்திரம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும். இப்படிப் பல புதிய தகவல்களையும் சினிமா ரசிகர்கள் யாரும் அறியாத பல சுவாரஸ்யங்களையும், பல பிரபலங்களுடன் உருவான நட்பு பற்றிய பயணங்களையும் அவர்கள் சந்தித்த தோல்விகள், என அனைத்தும் வாசகர்களிடம் மிகுந்த கவனத்தைப் பெறும் வகையில் இந்தப் புத்தகம் அமைந்துள்ளது.
- கொ. தீனேஷ்வர், பயிற்சி இதழாளர்