உலக அரங்கில் ஒரு காலத்தில் இந்திய சினிமா என்றாலே அது பாலிவுட் சினிமாதான். மாறுபட்ட கதைகள், மறக்கமுடியாத கதாபாத்திரங்கள், பிரம்மாண்டப் படமாக்கம், மாநிலங்களைக் கடந்து புகழ்பெற்ற இந்திப் படங்களின் பாடல்களும் இசையும் என பாலிவுட்டின் பொற்காலம் அது.
அந்தப் பொற்காலத்தின் உச்ச நட்சத்திரம் ராஜ்கபூர். இந்தியாவுக்கு வெளியே சோவியத் ரஷ்யா உள்படப் பல நாடுகளில் கொண்டாடப்பட்டார். 1951இல் வெளிவந்த அவருடைய ‘ஆவாரா’ தொடங்கி, 2023இல் வெளியான ‘12த் ஃபெயில்’ வரை 50 சிறந்த இந்திப் படங்களின் திரைக்கதையைத் தலா 300 வார்த்தைகளில் பழச்சாறுபோல் வடித்துக் கொடுத்திருக்கிறார் அருண் கே.பிரசாத்.
உதவி இயக்குநரான இவர், இந்த எல்லாப் படங்களையும் பார்த்து, திரைக்கதையின் முக்கியத் திருப்பங்களும் முக்கியக் கதாபாத்திரங்களின் ‘கேரக்டர் ஆர்க்’குகளும் விடுபடாத வண்ணம் கதைச் சுருக்கத்தைச் சின்ன சின்ன சொற்றொடர்கள் வழியாக எழுதியிருக்கிறார்.
இந்தக் கச்சிதம் முழு நூலையும் ஒரே மூச்சில் வாசித்து முடிக்கும் ஆவலைத் தூண்டியது. வாசித்து முடித்த பிறகோ, அதுவரை பார்க்காத படங்களைப் பட்டியலிட்டு அவற்றைப் பார்த்துவிட வேண்டும் என்கிற ஆவலைத் தூண்டுகிறது.
ஆகச் சிறந்த 50 பாலிவுட் சினிமா கதைகள்
அருண் கே.பிரசாத் | 192 பக்கங்கள் | விலை : ரூபாய் 240
நாதன் பதிப்பகம் | சென்னை - 92
தொடர்புக்கு: 98840 60274