இந்து டாக்கீஸ்

கோடம்பாக்கம் சந்திப்பு: இலவச விளம்பரம்

செய்திப்பிரிவு

நூறு கோடி ரூபாய் வசூல் என்ற ஆச்சரியம் தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ரஜினி நடித்த ‘எந்திரன்’ படத்திலிருந்து தொடங்கியது எனலாம். அதன்பிறகு விஜய் நடித்து வெளிவந்த ‘துப்பாக்கி’ யும் நூறு கோடி வசூல் பார்த்தது. பிறகு கமலின் ‘விஸ்வரூபம்’, அஜித் நடித்த ‘வேதாளம்’, விக்ரம் நடித்த ‘ஐ’, ராகவா லாரன்ஸ் நடித்த ‘காஞ்சனா 2’ ஆகிய படங்கள் மட்டுமே தமிழில் நூறு கோடி ரூபாயை வசூலித்துள்ளன. கடந்த ஆண்டு வெளியான விஜய்-அட்லி கூட்டணியின் ‘தெறி’யும் நூறு கோடியை வசூல் செய்தது. அதே கூட்டணியில் இந்த ஆண்டு வெளியாகியுள்ள ‘மெர்சல்’ படம் மீது எழுந்த அரசியல் சர்ச்சைகள் இலவச விளம்பரமாக மாறி, முதல் வாரத்திலேயே தமிழகத்தில் மட்டுமே ரூ.120 கோடி வசூலை தாண்டிவிட்டதாம் ‘மெர்சல்’. வெளிநாட்டு வசூலையும் சேர்த்தால் 150 கோடியைத் தாண்டி விட்டது என்கிறது பாக்ஸ் ஆபீஸ் வட்டாரம். இந்த வரிசையில் யாரெல்லாம் இணைப்போகிறார்கள் என்பதை ‘2.0’ பட வெளியீட்டுக்குப் பின்னர் பார்க்கவேண்டும்.

சிவகார்த்திகேயன், கதிர், விஜய் சேதுபதி எனப் பல நடிகர்கள் பெண் வேடங்களில் வலம்வரத் தொடங்கியிருக்கிறார்கள். இவர்களோடு பரத்தும் தன்னை இணைத்துக்கொண்டிருக்கிறார். பரத் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பொட்டு’, ‘கடைசி பெஞ்ச் கார்த்தி’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன. இவற்றில் ‘பொட்டு’ படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் பரத், அதில் பெண் வேடத்திலும் வருகிறார். ‘மைனா’ படத்தைத் தயாரித்த ஷாலோம் ஸ்டுடியோஸ் நிறுவனம்தான், வி.சி.வடிவுடையான் இயக்கியுள்ள இந்தப் படத்தையும் தயாரித்திருக்கிறது. ஆதிவாசிப் பெண்ணாக இனியாவும் மந்திரவாதியாக நமீதாவும் நடித்திருக்கும் இந்தப் படம் ரசிகர்கள் மறந்துபோயிருக்கும் பேய்ப் படங்களை நினைவூட்ட வருகிறது.

‘பாகுபலி’யை மிஞ்சும் விதமாகத் தமிழில் ‘சங்கமித்ரா’ படம் தொடங்கப்பட்டது. தேனாண்டாள் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் சுமார் ரூ. 200 கோடியில் உருவாக இருப்பதாகக் கூறப்படும் இந்தப் படத்துக்கு ஜெயம் ரவி, ஆர்யா ஆகிய இருவரும் கதாநாயகர்களாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்கள். நாயகியாக ஸ்ருதி ஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின்னர் அவர், அந்தப் படத்திலிருந்து விலகினார். இதனால் ‘சங்கமித்ரா’ படத்தில் சங்கமித்ராவாக நடிக்க தற்போது ஸ்ருதி ஹாசனுக்கு பதிலாக திஷா பதானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் ‘லோஃபர்’ என்ற தெலுங்குப் படத்தில் நாயகியாக அறிமுகமானவர். அதன் பின், ‘பெஃபிக்ரா’, ‘எம்.எஸ். தோனி’ ஆகிய இந்திப் படங்களிலும், ஜாக்கி சான் நடித்த ‘குங்பூ யோகா’ படத்திலும் நடித்திருக்கிறார். ‘சங்கமித்ரா’வில் நடிப்பது குறித்து , “மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும், இந்த அற்புதமான படத்தின் படப்பிடிப்புக்காகக் காத்திருக்க முடியவில்லை” என்றும் தெரிவித்திருக்கிறார்.

விமல் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் ‘மன்னர் வகையறா’. நகைச்சுவைக்கு உத்தரவாதம் அளிக்கும் படங்களை தந்துவரும் பூபதி பாண்டியன் ஒரு இடைவெளிக்குப் பிறகு இயக்கியிருக்கும் குடும்ப நகைச்சுவை படம் இது. விமல் ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் பிரபு, சரண்யா, ரோபோ சங்கர், நாசர், யோகிபாபு, ஜெயபிரகாஷ் என ஒரு மாபெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. “ரோபோ சங்கருடன் விமல் அமைத்திருக்கும் நகைச்சுவைக் கூட்டணி படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருக்கும். படம் பொங்கலுக்கு வெளியாகிறது” என்கிறார் இயக்குநர்.

ஆர். கண்ணன் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்றது ‘இவன் தந்திரன்'. இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது அதர்வா- ஆர்.கண்ணன் இருவரும் புதிய கூட்டணியை அமைத்திருக்கிறார்கள். அதர்வாவுக்காக முழு நீள ஆக்ஷன் கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கிறாராம் கண்ணன். “இந்தக் கதாபாத்திரத்துக்கு அதர்வா மட்டுமே மிகப் பொருத்தமாக இருப்பார். அவரது சினிமா பயணத்தில் இது ஒரு ஸ்பெஷல் படமாக நிச்சயம் இருக்கும்.” என்று கூறுகிறார் இயக்குநர் தெலுங்கில் வெற்றிபெற்ற ‘அர்ஜுன் ரெட்டி' படத்தின் இசையமைப்பாளர் ரதன் இந்தப் படத்துக்கு இசையமைக்கவுள்ளார்.

SCROLL FOR NEXT