இந்து டாக்கீஸ்

திரை விமர்சனம்: ஸ்பைடர்

இந்து டாக்கீஸ் குழு

உளவுத்துறையில் அதிகாரியாகப் பணியாற்றுபவர் மகேஷ் பாபு. அவசர உதவி கேட்டு அழைக்கும் பொதுமக்களுக்கு ஓடிச்சென்று உதவுவது அவரது பணி. ஒருநாள் எதேச்சையாக 10-ம் வகுப்பு மாணவியைக் காப்பாற்ற தன் காவல்துறை தோழியை அனுப்புகிறார். மாணவியும், தோழியும் கொல்லப்படுகின்றனர். அந்தக் கொலைகள் ஏன் நடந்தது? கொலையாளி யார்? ஏன் அப்படி கொலைகள் செய்கிறார்? அவர் எப்படி தண்டிக்கப்படுகிறார் என்பது கதை.

தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகன் மகேஷ் பாபு, தமிழில் அறிமுகமாகியுள்ள படம். கம்பீரம், துடிப்பு, துள்ளல் என கச்சிதமாக இருக்கிறார். ஆனால் சுகம், சோகம் என எல்லாவற்றுக்கும் ஒரே முகபாவனையை வெளிப்படுத்துகிறார். வேறு யாராவது குரல் கொடுத்திருந்தால், டப்பிங்கிலாவது சற்று ஒப்பேற்றியிருக்கலாம். சிரமப்பட்டு அவரே டப்பிங்கும் பேசிவிட்டதால், அந்த வாய்ப்பும் போய்விட்டது.

சின்ன காதல் காட்சிகள், நாயகனுடன் நடனமாடுவது, பெயருக்கு இறுதிக்காட்சிகளில் நாயகனுக்கு உதவுவது.. இதற்கு மட்டுமே உதவியிருக்கிறார் கதாநாயகி ரகுல் ப்ரீத் சிங். ஆர்.ஜே.பாலாஜி, ஜெயப்பிரகாஷ், தீபா ராமானுஜன், ஷாஜி, சாயாஜி ஷிண்டே ஆகியோர் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர். பெரிதாக பில்டப் கொடுக்கப்பட்ட பரத் பாத்திரம், திடீரென மறைவது பெருங்குறை.

படம் முழுவதும் சைக்கோ வில்லன் எஸ்.ஜே.சூர்யாவைச் சுற்றிதான் நகர்கிறது. இதை உணர்ந்து பிரமாதமாக நடித்திருக்கிறார். கோபம், அழுகை, சண்டை, நாயகனை தொலைபேசியில் மிரட்டுவது என காட்சிக்கு காட்சி இவரது ராஜ்ஜியம்தான். அதிலும், அழும் பெண்களை இமி டேட் செய்யும் காட்சியில் தேர்ந்த நடிக ராக அப்ளாஸ் அள்ளுகிறார். எஸ்.ஜே. சூர்யாவின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்துள்ள சிறுவனும் நடிப்பில் மிரட்டி யிருக்கிறார்.

ஒரு சைக்கோ த்ரில்லர் கதையை தன் முந்தைய படங்களின் பாணியில் எழுதி, இயக்கியுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். ஆனால், ‘கொடூரமான கொலையை செய்தது யார்?’ என்ற தேடல் போய் முடியும் இடம் அபத்தமாக இருக்கிறது.

சுடுகாட்டில் மரண ஓலத்தை கேட்டுக்கொண்டே பிறப்பவன் கொலைக்காரனாகத்தான் வளர்வான். பிணங்களைப் பார்க்காவிட்டால் அவனுக்கு சாப்பாடு இறங்காது. அதற்காக சிறு வயதிலேயே கொலைகளை செய்வான். மரணத்தை ரசிப்பான். மனிதாபிமானமின்றி, குரூர சைக்கோவாக இருப்பான் என முருக தாஸ் காட்சிப்படுத்தியுள்ள அனைத்தும் கண்டனத்துக்கு உரியவை. சமூகத்தின் அனைத்து படிநிலைகளிலும் அழுத்தப்பட்டு, ஊரைவிட்டு விரட்டப்பட்டு, சுடுகாட்டில் ஒடுங்கியிருக்கும் எளிய மனிதர்களை இப்படியா சித்தரிப்பது? தலையில் ஆணி அடித்துக் கொல்வது போன்ற காட்சிகள், தணிக்கையில் எப்படி தப்பின என்பது புரியவில்லை.

உட்கார்ந்த இடத்தில் லேப்டாப் மூலம் அனைவரது தொலைபேசியையும் ஒட்டுக்கேட்பது, நகரின் அனைத்து சிசிடிவி கேமராக்களையும் ஹேக் செய்வது, சேட்டிலைட் சேனலின் ஒளிபரப்பை இடை மறித்து, தான் விரும்பியதை ஒளிபரப்பு வது போன்றவை நம்பும்படி இல்லை.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் ரோலர் கோஸ்டர் சண்டைக் காட்சி பிரமாதம். ஹாரிஸ் ஜெயராஜின் பின்னணி இசை கவனிக்க வைக்கிறது. பாடல்கள் வலிந்து நுழைக்கப்பட்டுள்ளதால், மனதில் நிற்கவில்லை. ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங், கிராஃபிக்ஸ் போன்றவற்றை இன்னும் சிறப்பாக பயன்படுத்தி இருக்கலாம்.

வில்லனுக்கு கொடூரமான தண்டனையைக் கொடுக்கும் கதாநாயகன், இறுதிக் காட்சியில் மனிதாபிமானம் பற்றி லெக்சர் அடிப்பது ஏற்கும்படி இல்லை.

படத்தில் சில பகுதிகள், முருகதாஸின் முந்தைய படங்களை நினைவூட்டினாலும், கொலையாளியைக் கண்டுபிடிக்க சமூக வலைதளத்தில் வலைவீசுவது, அம்மா, தம்பியைக் காப்பாற்ற கால் டாக்ஸி, பீட்சா, ஆம்புலன்ஸை அழைப் பது போன்ற இடங்கள் கவனிக்க வைக்கின்றன.

எஸ்.ஜே.சூர்யாவின் கொலைகாரன் கதாபாத்திரத்தை மிக கவனமாகவும், அவர் ஏன் கொலையாளி யாக மாறினார் என்பதை மிக கச்சிதமாகவும் வடிவமைத்திருக்கிறார். மொத்தத்தில் கந்தல் இல்லாமல் ஓரளவு நன்றாகவே வலை பின்னியிருக்கிறது ஸ்பைடர்.

SCROLL FOR NEXT