இந்து டாக்கீஸ்

ஹாலிவுட் ஜன்னல்: இன்னொரு தீபாவளி

எஸ்.எஸ்.லெனின்

ஹா

லிவுட்டின் காமிக்ஸ் காவியங்களைப் படமாக்கும் போட்டி நிறுவனங்கள், நவம்பரில் தங்கள் படங்களைக் களமிறக்குகின்றன. மார்வல் ஸ்டுடியோவின் ‘தோர்:ரங்னாரக்’ மற்றும் டி.சி காமிக்ஸ் நிறுவனத்தின் ‘ஜஸ்டிஸ் லீக்’ என இரண்டு படங்கள் நவம்பர் தொடக்கத்தில் வெளியாகின்றன. காமிக்ஸ் ரசிகர்களுக்கு இந்தப் படங்கள் இன்னொரு தீபாவளியை கொண்டாடிய உணர்வைக் கொடுக்கலாம்.

‘நன்மைக்கும் தீமைக்குமான சண்டையின் இறுதியில் தீயவர்களை அழித்து நல்லவர்கள் உலகைக் காப்பாற்றுவார்கள்’. இதுதான் சாகச நாயகர்களை மையமாகக் கொண்ட படங்கள் காலங் காலமாய் சொல்லிவருவது. தீமையின் உருவாக வரும் வில்லாதி வில்லன்களை சூப்பர் ஹீரோக்கள் அழிக்கும் கதைகள் ஒரு கட்டத்தில் ரசிகர்களுக்கு அலுக்கத் தொடங்கின. அதன் பிறகுதான் சூப்பர் ஹீரோக்கள் குழுவாக இயங்குவது, அவர்கள் வாழ்க்கையிலும் மனிதர்களைப் போன்று நட்பு, துரோகம், காதல், மரணம் ஆகியவற்றைப் புகுத்துவது என ஹாலிவுட்டின் சாகசப் படங்கள் புதிய பாணியில் அவதாரம் எடுத்தன. இந்த வகையில் வெளியாகவிருக்கும் எதிர்பார்ப்புக்குரிய இரண்டு படங்கள் இங்கே:

கென்னத் பிரனாக் இயக்கி கிறிஸ் ஹோம்ஸ்வர்த், நடாலி ஃபோர்ட்மென் உள்ளிட்டோர் நடிப்பில் 2011-ல் வெளியான ‘தோர்’ திரைப்படம் வசூலில் சாதனை படைத்தது. ‘தோர்’ என்ற ஐரோப்பிய ஆதி கடவுளரின் சாகசக் குணாதிசயங்களை ஒரு சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் உருவேற்றி உலவ விடும் காமிக்ஸ் கதைகள் அங்கு வெகுவாகப் பிரபலம். அவ்வாறாக உருவான கதைப்படி, பிரபஞ்ச வெளியில் பூமியைவிட ஆதிக்கம் மிகுந்த அஸ்கார்டு கிரகத்தின் மன்னர் ஒடின். அவரது மூத்த மகன் தோர், பனி பூதங்களுக்கு எதிரான போர் ஒன்றில் தனது பிரத்யேக ஆயுதமான ‘மயோல்நிர்’ என்ற மகா சுத்தியலுடன் துவம்சம் செய்கிறார். பேரழிவை ஏற்படுத்தியதாக வருந்தும் தந்தை ஒடின், மகன் தோரை பூமிக்குக் கடத்துகிறார். பூமியில் தோர் தனது சக்திகளை திரும்பப் பெற்று அஸ்கார்டுக்கு திரும்புவதுவரையிலான சுவாரசியமே ‘தோர்’ படத்தின் முதல் பாகம்.

இப்படத்தின் தொடர்ச்சியாக 2013-ல் ‘தோர்: த டார்க் வேர்ல்டு’ வெளியானது. ஆலன் டெய்லர் இயக்கத்தில் அதே பிரதான நடிகர்கள் பங்கேற்பில் வெளியான இப்படத்தில் அஸ்கார்டு, பூமி உட்பட அனைத்து கிரகங்களையும் கைப்பற்ற, போர் தொடுக்கும் ‘மேல்கித்’ என்ற இனத்தைத் தோர்த் தீரத்துடன் எதிர்கொள்வார். இந்த வரிசையில் தற்போது 3-வது படமாக நவம்பர் 3 அன்று வெளியாகிறது ‘தோர்: ரக்னாரக்’. டைகா வாய்டிடி (Taika waititi) இயக்கத்தில் கிறிஸ் ஹேம்ஸ்வொர்த், கேத் பிளான்செட், இட்ரிஸ் எல்பா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மார்வல் காமிக்ஸ் தயாரிக்க டிஸ்னி இப்படத்தை வெளியிடுகிறது. ‘அவெஞ்சர்ஸ்’ பட வரிசை நாயகர்களில் ஒருவரான ‘தோர்’ மற்றொரு சகாவான ‘ஹல்க்’ உடன் மோதுவது, இவர்களுடன் தோரின் தம்பி லோகி இணைந்துகொண்டதும் அஸ்கார்டினை காக்க மரண ராணியான ஹெலாவுடன் போரிடுவது என ஆக்‌ஷன் விருந்தளிக்க உள்ளது ‘தோர்: ரங்னாராக்’.

அமெரிக்க காமிக்ஸ் கதையுலகில் மார்வல் காமிக்ஸுக்கு மூத்த நிறுவனம் டி.சி காமிக்ஸ். 60 ஆண்டுகளாக காமிக்ஸ், தொலைக்காட்சி தொடர், திரைப்படங்கள் என சூப்பர் ஹீரோக்கள் அடங்கிய ‘ஜஸ்டிஸ் லீக்’ குழுவை வைத்து தனக்கென தனி ரசிகர்களைத் தக்க வைத்திருக்கிறது டி.சி. இந்நிறுவனம் தயாரித்து வார்னர் பிரதர்ஸ் வெளியிடும் ’ஜஸ்டிஸ் லீக்’ திரைப்படம், பாகுபலி போன்று இரு பாகங்களாக உருவாகிறது. முதல் பாகம் நவம்பர் 17-ல் வெளியாக, அடுத்த பாகத்தை 2019, ஜூனில் வெளியிட இருக்கிறார்கள்.

பூமியை ஏலியன்களிடமிருந்து காப்பாற்ற, காமிக்ஸ் கதைகளின் ஹீரோக்கள் சிரமமேற்கொள்ளும் வழக்கமான போராட்டமே இந்த ’ஜஸ்டிஸ் லீக்’ படத்திலும் இடம்பெறுகிறது. மார்வல் காமிக்ஸ் பதிப்புகளில் அவெஞ்சர்ஸ் நாயகர்கள் கலக்குவது போல, ஜஸ்டிஸ் லீக்கில் பேட்மேனும் வொண்டர் வுமனும் சேர்ந்து ஃபிளாஷ், அக்வாமேன், சைபார்க் உள்ளிட்டோர் அடங்கிய குழுவை அமைக்கின்றனர். பேட்மேனாக பென் அப்லெக், சூப்பர் மேனாக ஹென்றி கேவில், வொண்டர் வுமனாக கல் கதோட் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தை ஜாக் ஸ்னைடர் இயக்கி உள்ளார். தனது முந்தைய படத்தில் இறந்துவிடுவதாகக் காட்டப்படும் சூப்பர்மேன் இப்படத்தில் தோன்றுவது, ‘வொண்டர் வுமன்’ வெற்றிப் படத்தினை அடுத்து அதே வேடத்தில் கல் கதோட் கலக்குவது போன்றவையும் படத்திற்கு எதிர்பார்ப்பைக் கூட்டி உள்ளன.

SCROLL FOR NEXT