மலைகளின் ராணி எனக் கொண்டாடப்படும் ஊட்டிக்குப் பல பெருமைகள் உண்டு. அதற்கு மேலும் ஒரு கவுரவம் சேர்க்கும் விதமாக, தெற்காசிய அளவில் நடைபெறவிருக்கும் சர்வதேசக் குறும்படத் திருவிழா ஒன்றை ஒருங்கிணைத்து நடத்துகிறது ஊட்டி திரைப்பட விழா (OFF- Otty film festival) அமைப்பு.
தென்னிந்தியாவின் மிக முக்கியமான மலைவாசல் சுற்றுலாத் தலமாக விளங்கும் ஊட்டியில், நவம்பர் முதல் வாரம், குளிர்காலத்தின் தொடக்கத்தை வரவேற்கும் மாபெரும் கலாச்சார நிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்தக் குறும்படத் திருவிழாவின் ஊடக ஆதரவாளராக ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் இணைந்துகொண்டிருக்கிறது.
மூன்று நாட்கள் நடைபெறும் இத்திரைப்பட விழாவில் தமிழ்த் திரையுலகப் பிரமுகர்களுடன் மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய திரைப்படத் துறைகளின் முக்கியப் படைப்பாளிகளும் கலைஞர்களும் பங்கேற்க உள்ளனர்.
இத்திரைப்பட விழா குறித்து முழுமையான தகவல்களைப் பெறும்பொருட்டு இதை ஒருங்கிணைத்து வரும் ஊட்டி பிலிம் சொஸைட்டியின் தலைவரும் ‘மலைச்சொல்’ பதிப்பகத்தை நடத்திவருபவருமான வழக்கறிஞர் பால நந்தகுமாரிடம் பேசினோம்.
“இந்திய அளவில் இன்றும் மிக முக்கியமான வெளிப்புறப் படப்பிடிப்புத் தளமாக இருந்துவருகிறது ஊட்டி. ஆண்டுக்கு ஒருமுறை திரைப்படச் சாதனையாளர்களை இங்கே அழைத்து, சினிமாவின் அழகியலையும் அதன் கலை வெளிப்பாட்டையும் துறைசார்ந்த விமர்சகர்கள், மாணவர்கள், ஆர்வலர்கள் என அனைத்துத் தரப்பினரும் ஒரே இடத்தில் கூடி விவாதிக்கவும், அடுத்த தலைமுறைக்கான திரைப்படங்களை உருவாக்குவது குறித்த ஆரோக்கியமான உரையாடலை முன்னெடுக்கவும் நினைத்தோம். அதற்காகவே ஊட்டி திரைப்படச் சங்கத்தைத் தொடங்கினோம்.
இன்று குறைந்த நேரத்தில் நிறைந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும் குறும்படங்களின் யுகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் நாம், முதலாமாண்டில் அவற்றை முதலில் கொண்டாடி ‘ஊட்டி சர்வதேசத் திரைப்பட விழா’வைத் தொடங்குவது என்று முடிவு செய்தோம். அடுத்தடுத்த ஆண்டுகளில் முழுநீளப் படங்கள் பங்குபெறும் ஒரு சர்வதேச திரைவிழாவாக இது விரிவடையும்.” என்றார் பால நந்தகுமார்.
இந்தச் சங்கம் தொடங்கப்பட்டதற்கு வேறு ஒரு அர்த்தபூர்வமான காரணமும் உள்ளது என்கிறார் பாலா நந்தகுமார்.
“இந்திய அளவில் கோவா சர்வதேசப் பட விழா மிகவும் புகழுடன் விளங்கிவருகிறது. இதற்குக் காரணம் அந்தப் பட விழாவின் படத் தேர்வுகள், கலந்துகொள்ளும் படைப்புகளுக்கான பரிசுத் தொகை, சர்வதேசப் படைப்பாளிகளின் வருகை ஆகியவற்றுடன் கோவா என்ற புகழ்பெற்ற சுற்றுலாத் தலத்துக்கு வந்திருக்கிறோம் என்ற உணர்வும்தான்.
அதைத்தான் ஊட்டியில் நாங்கள் திட்டமிடுகிறோம். ஊட்டி திரைப்பட விழாவையும் இதே சுற்றுலா மனநிலையுடன், தென்னிந்தியாவின் முக்கிய சர்வதேசப் பட விழாவாக மாற்றுவதையும் உலகத் தரம் பேணுவதையும் ஊட்டி திரைப்பட சங்கம் முக்கிய நோக்கங்களாகக் கொண்டிருக்கிறது.”
ஊட்டியைப் பொறுத்தவரை, ‘ஆஃப் சீசன்’ என்று கருதப்படும் நவம்பர் மாதத்தை இந்த விழா நடத்தத் தேர்ந்தெடுத்ததற்கும் ஒரு முக்கியமான காரணம் இருப்பதை விளக்குகிறார் பால நந்தகுமார் . “விடுமுறைக் காலம் என்பதால் எல்லோரும் மே, ஜூன் மாதங்களைக் கொண்டாடப் பழகிவிட்டோம். உண்மையில் குளிரும் வெயிலும் அவ்வப்போது மழையுமெனெ ஊட்டிக்கு அழகு சேர்ப்பதே ஆஃப் சீசன்தான். மக்கள் கூட்டம் இந்த நவம்பரில்தான் குறைவு. பொருட்களின் விலையும் தங்கும் விடுதிகளின் வாடகையும் மிகக் குறைவாக இருக்கும்.
இயற்கையை மிக அருகில் நின்று ரசிக்க முடியும். எனவே, திரைத் துறையைச் சேர்ந்தவர்கள், உலக சினிமா ஆர்வலர்கள், காட்சி மற்றும் ஊடகத் துறை பயிலும் மாணவர்கள், பொதுவான சினிமா ரசிகர்கள் ஆகியோர் குறைந்த செலவில் வந்து செல்லலாம். அவர்களை இலக்காகக் கொண்டே இந்தத் திரைப்பட விழா திட்டமிடப்படுகிறது. இவ்விழாவில் பங்கேற்கும் அனைவரையும் ஊட்டி மலை ரயிலில் அழைத்துச் செல்ல வேண்டும் என்ற திட்டத்தோடு செயல்படுகிறோம்.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் எங்களுக்கு முழுமையான ஒத்துழைப்புக் கொடுப்பதால் இவ்விழா சிறப்பாக நடைபெறும். ஒவ்வோர் ஆண்டும் ‘ஆப் சீசன்’தான் எங்களின் தனித்த அடையாளம்” என்று கூறி சில்லிடவைக்கிறார்.
இந்தக் குறும்படத் திரைவிழாவின் ‘பெஸ்டிவல் டைரக்டராக’ இயக்குநர் மிஷ்கின் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். இந்தத் திரைப்பட விழா வெற்றிகரமாக அமைய வேண்டுமானால் திரையிடப்படும் படங்களின் தேர்வு தரமாக இருக்க வேண்டும். இதில் சமரசம் இல்லாத தேர்வுகளைச் செய்ய இருப்பவர் இயக்குநர் மிஷ்கின். அவருடன் அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலப் பல்கலைக்கழகத்தில் திரைக் கல்வியைப் பயிற்றுவிக்கும் பேராசிரியர் சொர்ணவேல் ஈஸ்வரன் பங்காற்றுகிறார்.
இவர்களுடன் எழுத்தாளர் பவா செல்லதுரை, பதிப்பாளர் வேடியப்பன் ஆகியோரும் இணைத்துள்ளார்கள். தேர்வுக் குழுவில் உலக சினிமா பரிச்சயம் கொண்ட பல முன்னணி இயக்குநர்களும் எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும் திரை ஆர்வலர்களும் இடம்பெற உள்ளனர். திரையிடத் தேர்வுபெறும் குறும்படங்களுக்கு இடையிலான போட்டியில் வெல்லும் படைப்புகளுக்கு வழங்கப்பட இருக்கும் பரிசுத் தொகை உள்ளிட்ட திரைப்பட விழா செலவுகளை ஊட்டி பிலிம் சொஸைட்டி ஏற்று நடத்துகிறது.
குறும்படங்களின் வருகை குறித்து விழாக் குழுவில் அங்கம் வகிக்கும் எழுத்தாளர் பவா.செல்லத்துரையிடம் கேட்டபோது “ஊட்டி குறும்படத் திரைவிழா தெற்காசிய அளவில் நடக்கிறது என்று சமூக வலைத்தளங்களில் அறிவித்த உடன் இந்தியா, பாகிஸ்தான், பூட்டான், நேபாளம், வங்கதேசம், இலங்கை போன்ற நாடுகளிலிருந்து குறும்படங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. தமிழகத்திலிருந்தும் இலங்கையிலிருந்தும் இதுவரை 250 குறும்படங்கள் வந்து குவிந்துள்ளன.
இவற்றிலிருந்து திரையிடத் தகுதிபெறும் குறும்படங்களைத் தேர்வு செய்யும் முதல்கட்ட தேர்வுப் பணி தொடங்கிவிட்டது. பார்வையாளர்களின் ஒரு நிமிடத்தைக்கூட வீணாக்கக் கூடாது என்பதால் நான்கு நாட்களில் குறைந்தது 40 குறும்படங்கள்வரை திரையிடத் திட்டமிடுகிறோம். குறும்படப் போட்டிப் பிரிவில் மொத்தம் ஐந்து பிரிவுகளில் பரிசுகள் வழங்குகிறோம்.
சிறந்த குறும்படம்- ரூ.65,000 (1000 டாலர்கள்), சிறந்த இயக்குநர் -ரூ.32,000 (500 டாலர்கள்), சிறந்த திரைக்கதை- ரூ.32,000 (500 டாலர்கள்) சிறந்த ஒளிப்பதிவு- ரூ.32,000 (500 டாலர்கள்), சிறந்த நடிகர்/நடிகை ரூ.32,000 (500டாலர்கள்) என மொத்தம் 3,000 அமெரிக்க டாலர் மதிப்பில் பரிசுகள் வழங்க முடிவு செய்திருக்கிறார்கள். அடுத்த ஆண்டு ஊட்டி சர்வதேசப் படவிழாவாக விரிவடைய இருப்பதால் அனைத்து உலகப் படங்களுக்கான போட்டி, உலக அளவில் தயாராகும் படங்களின் பிரீமியர் காட்சிகள் என ஊட்டிக்கும் இந்தியத் திரையுலகுக்கும் புதிய அடையாளமாக ‘ஊட்டி திரைப்பட விழா’ மாற இருக்கிறது” என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் பவா.செல்லத்துரை.
பிரம்மாண்டத் திரையரங்கம்
தமிழக அரசு சுமார் 10 கோடி செலவில் பழங்குடியினர் பண்பாட்டு மையம் ஒன்றை ஊட்டியின் மையப் பகுதியான தாவரவியல் பூங்கா (பொட்டானிக்கல் காடர்ன்) அருகில் திறந்துள்ளது. மிக பிரம்மாண்டமான காட்சி அரங்கமாக உள்ள இது, ஒரு முழுமையான திரையரங்கின் தரத்துடன் உள்ளது. இதில் 650 இருக்கைகள் உள்ளன. அதோடு 350 இருக்கைகள் கொண்ட மற்றொரு சிறு அரங்கும் உள்ளது. மொத்தம் 1,000 பார்வையாளர்கள் திரைப்பட விழாவை நவம்பர் 10, 11, 12 ஆகிய மூன்று நாட்கள் 2கே மற்றும் 4கே திரையிடல் தரத்தில் கண்டு ரசிக்கலாம்.
ஊட்டி நான்கு மாநிலங்களுக்கு மத்தியில் அமைந்திருப்பதால் நான்கு மாநிலங்களிலிருந்தும் சினிமா ஆர்வலர்கள் வர வாய்ப்புள்ளது. அதோடு காட்சி ஊடகத் துறை மாணவர்கள், திரைப்பட உதவி இயக்குநர்கள் என மொத்தம் மூவாயிரம் பேர்வரை வரலாம். ஊட்டி திரைப்பட விழாவுக்கு வர ஒப்புக்கொண்டு முன்பதிவு செய்பவர்கள், ஒருநாள் முன்னதாக ஊட்டி வந்து தங்கலாம். அல்லது விழா முடிந்து ஒரு நாள் பின்னதாகத் தங்கியிருந்து ஊட்டியைச் சுற்றிப் பார்த்துவிட்டுத் திரும்பலாம். இதற்காக மூன்று விதமான தங்கும் வசதி மற்றும் உணவுடன் கூடிய பேக்கேஜ்களை ஊட்டி விடுதி மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்துடன் பேசி தள்ளுபடி கட்டணத்துடன் ஏற்பாடு செய்திருக்கிறது ஊட்டி திரைப்படச் சங்கம். கூடுதல் விவரங்களைத் தெரிந்துகொள்ள…
மின்னஞ்சல்: ootyfilmsociety@gmail.com
முகநூல்: www.facebook.com/ootyfilmfestival
இணையதளம் www.offison.org
தொடர்புக்கு : 96001 56650