இந்து டாக்கீஸ்

கோடம்பாக்கம் சந்திப்பு: ‘இந்தியன் 2’ கதை

செய்திப்பிரிவு

‘இந்தியன் 2’ கதை

சமீபத்தில் முடிந்த ‘பிக் பாஸ்’ கடைசி நாள் நிகழ்ச்சியில் ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவிருப்பதாக அறிவித்தார் இயக்குநர் ஷங்கர். பிரபலத் தயாரிப்பாளரான தில் ராஜு தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார். ‘இந்தியன்’ வெளியாகி 21 ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில் இரண்டாம் பாகத்தில் கமலும் ஷங்கரும் என்ன மாதிரியான கதையைத் தேர்ந்தெடுப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. ‘முதல்வன்’, ‘இந்தியன்’ ஆகிய படங்களில் ஷங்கர் கையாண்ட லஞ்சத்துக்கு எதிரான போராட்டமே இந்தப் படத்திலும் மையமாக இருப்பதாகவும் கதை முழுமையாகத் தயாராகிவிட்டதாகவும் ஷங்கர் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீபத்தில் வெளியான ‘யாகம்’ படத்தின் அசையும் போஸ்டர் சமூக வலைதளங்களில் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இயக்குநர் ஷங்கரின் உதவியாளர் நரசிம்மா இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் கொல்கத்தா பெண்ணான மிஸ்தி சக்ரவர்த்தி. தொலைக்காட்சி விளம்பரங்கள் வழியே பிரபலமாகி, ‘பிதேர் கோன்ஜே ரவீந்திரநாத்’ என்ற வங்க மொழிப் படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்திருக்கிறார். பின்னர் சுபாஷ் கய் இயக்கிய ‘காஞ்சி’ என்ற இந்திப் படத்தில் நடித்தவரின் அடுத்த இலக்கு டோலிவுட்டாக இருந்திருக்கிறது. அங்கே நிதின் நடித்த ‘சின்னடன நீ கோசம்’ படத்தில் நடித்து முடித்த கையோடு ‘யாகம்’ படத்தின் மூலம் தற்போது தமிழுக்கு வந்துவிட்டார். தமிழுக்கு வந்தவேளை தற்போது மிஸ்திக்கு மலையாளப் பட வாய்ப்பும் அமைந்துவிட்டது. கொல்கத்தாவில் தொடங்கி, கொச்சி வரை வந்துவிட்டார் மிஸ்தி.

கடந்த மாதம் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் வெளியாகி பெரிய வெற்றியை ஈட்டிய படம் ‘அர்ஜுன் ரெட்டி’. தெலுங்குப் படத்தில் ‘அர்ஜுன் ரெட்டி’யாக நடித்த விஜய் தேவரகொண்டாவின் நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது. இந்தப் படத்தைத் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் மறுஆக்கம் செய்யும் உரிமையை 4-டி எண்டெர்டெய்ன்மெண்ட் என்ற பட நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது. இதன் தமிழ் மறு ஆக்கத்தின் மூலம் நடிகர் விக்ரம் தன் மகன் துருவ்வைக் கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறார். இந்தப் படத்தை இயக்கித் தரும்படி இயக்குநர் பாலாவிடம் கேட்டுவருகிறாராம் விக்ரம்.

ரகுல் ப்ரீத் சிங், சமந்தா, தமன்னா, ஸ்ருதி ஹாசன் எனத் தெலுங்குப் படவுலகில் கதாநாயகிகளுக்கு மத்தியில் கடும் போட்டி நிலவிவருகிறது. இந்நிலையில் ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் மூலம் அறிமுகமான ஷாலினி பாண்டேவுக்கு அங்கே வாய்ப்புகள் குவிந்துவருகின்றன. ஷாலினியை உடனடியாகத் தமிழுக்கும் அழைத்து வந்துவிட்டார்கள். ஜி.வி.பிரகாஷ் நடித்துவரும் ‘100% காதல்’ படத்தில் அவருக்கு ஜோடியாக லாவண்யா திரிபாதி நடிப்பார் என்று கூறப்பட்டுவந்த நிலையில், தற்போது அவருக்குப் பதிலாக ஷாலினி பாண்டேவை ஒப்பந்தம் செய்து படப்பிடிப்பை நடத்திவருகிறார்கள். இந்தப் படத்தின் பெரும் பகுதி லண்டனில் படமாக்கப்பட்டு வருகிறது.

மலையாள சினிமாவைப் புரட்டிப்போட்ட ‘பிரேமம்’ படத்தின் மூன்று கதாநாயகிகளில் இருவர் ஏற்கெனவே தமிழில் நடித்துவிட்டனர். குறிப்பாக மடோனா செபாஸ்டியன், அனுபமா பரமேஸ்வரன் இருவரும் தனுஷுடன் நடித்துவிட்டார்கள். ‘மலர் டீச்சர்’ கதாபாத்திரத்தால் புகழ்பெற்ற சாய் பல்லவி மட்டும் எஞ்சியிருந்தார். தற்போது அவரும் ‘மாரி 2’ படத்தில் தனுஷுடன் நடிக்கிறார். இதில் தனுஷுக்கு வில்லனாக நடிப்பவர் டோவினோ தாமஸ். இந்த மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

SCROLL FOR NEXT