இந்து டாக்கீஸ்

ஜேம்ஸ் பாண்ட் நடிகரின் காமெடி ரகசியம்!

ஆர்.சி.ஜெயந்தன்

எவ்வளவு கொடூரமான வில்லனையும் ஒரு கைபார்த்து உலக மக்களைக் காப்பாற்றும் சாகச நாயகன்/நாயகி கதாபாத்திரங்கள் இன்று பெருகிவிட்டன. ஆனால் அவற்றுக்கெல்லாம் ‘ஜித்த’னாக விளங்கிய ஒரு கதாபாத்திரம் ஹாலிவுட் வெகுஜன சினிமாவில் இருக்குமானால் இன்றுவரை அது ஜேம்ஸ் பாண்ட் மட்டும்தான். தோற்றம், உடல் வலிமை, அறிவுக்கூர்மை, தொழில்நுட்பத்தைச் சிறப்பாகப் பயன்படுத்துவது ஆகியவற்றுடன், தங்கு தடையற்ற காதலும் காமமும் நிரம்பி வழியும் மனம் கொண்ட பிரிட்டிஷ் உளவாளியாக கட்டமைக்கப்பட்டக் கதாபாத்திரம். ‘பல்ப் பிக்‌ஷன்’ என்கிற வணிகப் புனைவெழுத்தில் புகழ்பெற்று, திரைக்கும் இடம் பெயர்ந்த ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் தெலுங்கு வணிக சினிமாவின் ‘பாலய்யா’ வகைச் சாகசங்களுக்குச் சற்றும் குறைவில்லாத அதிரடிகளை 60 ஆண்டுகளைக் கடந்து செய்து வருகிறது.

மூன்று தலைமுறைப் பார்வையாளர்களுடன் வசூலில் சாதனை செய்து வந்துள்ள ஜேம்ஸ் பாண்ட், உலகமயமாக்கலுக்குப் பிறகு உலகின் அனைத்து மொழிகளிலும் பேசுகிறார். இதனால் ஒரு சர்வதேச உளவாளிக் கதாபாத்திரத்துக்கு சர்வதேச அளவில் ரசிகர்கள் இருப்பதிலும் வியப்பில்லை. கல்வியில் முன்னேறிய முதல் உலக நாடான இங்கிலாந்தில், பாண்ட் நடிகர்களுக்கு ஐம்பது மாடிக் கட்டிடத்தில் டிஜிட்டல் சைன் வடிவத்தில் கட் அவுட் வைப்பார்களே தவிர, பாலாபிஷேகம் செய்ய மாட்டார்கள். அதற்கு பதிலாக அவரைப் புகழ்ந்து தள்ளுவதில், ஆங்கிலேயர்களும் ஐரோப்பியர்களும் நம்ம ஊர் மாஸ் ரசிகர்களும் ஒரே தடத்தில் பயணிப்பவர்கள்தான். ‘ஒவ்வொரு ஆணும் ஜேம்ஸ் பாண்டாக இருக்க விரும்புகிறான்; ஒவ்வொரு பெண்ணும் பாண்டுடன் இருக்க விரும்புகிறாள்’ என்பது இங்கிலாந்தில் புகழ்பெற்ற ஒரு வாசகம்.

‘டுமாரோ நெவர் டைஸ்’ படத்தில் பாண்ட் கேர்ள் ஆக மைக்கேல் ஃபோ

இத்தனை கவர்ச்சி கொண்ட அக்கதாபாத்திரத்தில் தோன்றியுள்ள நடிகர்களில் பியர்ஸ் பிராஸ்னனுக்கு இன்று 70வது பிறந்த நாள். ஐயர்லாந்தில் பிறந்து வளர்ந்தவர். 16 வயதில் பள்ளிக் கல்வியை முடித்துவிட்டு வெளியே வந்த பிராஸ்னன், இல்லஸ்ட்ரேஷன் ஆர்டிஸ்டாகப் பயிற்சி பெற்று ‘கமர்ஷியல் ஆர்ட்டிஸ்ட்’ ஆகப் பணியில் சேர்ந்தார். வேலையில் தொடர்ந்தபடி லண்டன் ‘டிராம செண்ட’ரில் சேர்ந்து 3 ஆண்டுகள் நடிப்பு பயிற்சி எடுத்துக்கொண்டே நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார்.

பிராஸ்னனுக்கு சிறுவயது முதலே நகைச்சுவை உணர்வு அதிகம். அதை உணர்ந்து கொண்ட அவருடைய நாடகப் பள்ளியின் ஆசிரியர்கள். ‘வெடிப்பு நகைச்சுவை’, ‘ உடல்மொழி நகைச்சுவை’, ரொமாடிக் நகைச்சுவை’ நிறைந்த நாயகக் கதாபாத்திரங்களை அவருக்காக எழுதினார்கள். நாடகங்கள் வழியாகக் கிடைத்த பாராட்டுகள், ‘நகைச்சுவை நாயகனாக புகழ்பெறுவதே சரியாக இருக்கும்’ என்று பிராஸ்னனை எண்ண வைத்தன. அதனால், தனக்கு நகைச்சுவை இல்லாமல் வந்த பல ஹாலிவுட் வாய்ப்புகளை தொடக்கத்தில் பிராஸ்னன் மறுத்தார்.

ஆனால், பிராஸ்னனின் உயரமும் தோற்றமும் அவரது விருப்பத்துக்கு எதிராக ஆக்‌ஷன் நாயகனாக அவரை வார்த்தெடுத்தது ‘ரெமிங்டன் ஸ்டீல்ஸ்’ என்கிற தொலைக்காட்சித் தொடர். அதன்பிறகு ஜான் மெக்கன்ஸி இயக்கிய ‘தி ஃபோர்த் புரொட்டோகால்’ (1980) என்கிற படத்தில் முதன்முதலாக உளவாளி கதாபாத்திரத்தில் நடித்தார். காதல் நகைச்சுவை நாயகனாக புகழ்பெற விருப்பியவருக்கு ‘மிசஸ் டவுட்ஃபயர்’ (1993) படத்தில் ராபின் வில்லியம்ஸுடன் சீரியஸ்ஸான ஸ்டூவர்ட் என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. அந்தப் படத்தின் அதிரடியான வெற்றியால், ஹாலிவுட்டில் மேலும் ஒரு சாக்லேட் பாய் ஆனார்.

2002இல் ‘கோல்டன் ஐ’ படத்தில் முதன் முதலாக ஜேம்ஸ் பாண்டாக நடித்து, பாண்ட் நடிகர்களின் வரிசையில் அழகும் உயரும் ஸ்டைலும் நகைச்சுவை உணர்வும் மிக்க நடிகராகப் புகழ்பெற்றார். அதற்கு முன்னதாக அரசியலும் உளவும் காதலும் கலந்தப் படங்களில் நடித்து வந்த பிராஸ்னன், அதிகார மையத்தின் ‘சாக்லேட் பாய்’ ஆக நடித்த படங்களின் வரிசையில் உலகப் புகழ்பெற்ற இயக்குநரான ரோமன் பொலான்ஸ்கியின் ‘தி கோஸ்ட் ரைட்டர்’ படமும் அடக்கம். அதில் பிராஸ்னனுக்கு பிரிட்டிஷ் பிரதமர் வேடம்.

‘வேல்ட் இஸ் நாட் இனாஃப்’ படத்தில் சோபி மாஸொவின் பிடியில் பிராஸ்னன்

பியர்ஸ் பிராஸ்னன் பாண்டாக தோன்றியப் படங்களில் ‘டுமாரோ நெவர் டைஸ்’, ‘தி வேல்ட் இஸ் நாட் இனஃப்’, ‘டை அனதர் டே’ ஆகிய படங்கள் பாண்ட் ரசிகர்களில் பட்டியலில் நிரந்தரமாக இடம் பிடித்துவிட்டன.

வெல்லவே முடியாதோ என்று நினைக்க வைத்த வில்லன்களையெல்லாம் திரையில் ஜேம்ஸ் பாண்டாக வென்று காட்டிய பிராஸ்னனை கரோனா பெருந்தொற்று கனிவான மனிதராக்கியது.“கரோனா தொற்றுக்கு ஆளாகி என்னுடைய இரண்டு நண்பர்கள் என்னைவிட்டுப் பிரிந்துவிட்டனர். 45 ஆண்டுகால நட்பு எங்களுடையது. இறந்த ஒருவரின் மகனுக்கு நான் தான் ‘காட் ஃபாதர்’. நாம் இப்போது ஒரு போரில் இருக்கிறோம். இந்தப் போர் முடியும்போது நிச்சியமற்ற வாழ்வு பற்றி புரிதல் வந்துவிடும். அப்போது நம் மத்தியில் கனிவும் விழிப்புணர்வும் இன்னும் அதிகமாக இருக்கும் என்று நம்புகிறேன்" என்று கூறியிருந்தார். சாகச நாயகன், சாமானியனாக இருந்த தருணம் அது.

தொடர்புக்கு: jesudoss.c@gmail.com

படங்கள்: ‘தி இந்து’ ஆவணக் காப்பகம்

SCROLL FOR NEXT