அ
ந்தப் படத்தை பார்த்திருக்காத தமிழர்கள் கூட அதன் பெயரை அறிந்திருப்பார்கள். முந்தைய தலைமுறை தமிழ் சினிமாப் பார்வையாளர்களின் இளமையைச் சோதித்த அந்தப் பெயர் ‘அவளோட ராவுகள்’. ஒரு இளம்பெண் எதிர்கொள்ளும் வாழ்க்கைச் சிக்கல்களாகவே மலையாளத்தில் அந்தப் படம் பார்க்கப்பட்டது. தமிழகத்தில் அத்திரைப்படம் கிளப்பிய அலை வேறு வகையானது. அதை இயக்கிய இயக்குநர் ஐ.வி. சசியின் மறைவு மீண்டும் ‘அவளோட ராவுகள்’ தலைப்பை ஞாபகப்படுத்துகிறது.
மலையாளத் திரையுலகில் வணிக சினிமாவுக்கும் கலை சினிமாவுக்கும் உள்ள இடைவெளியைத் தகர்த்தெறிந்து 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கிக் குவித்த சாதனை இயக்குநர் ஐ.வி.சசி. அடிப்படையில் ஓவியப் பயிற்சி பெற்றவர் சசி. அதை ஆதாரமாகக் கொண்டு கலை இயக்குநராகச் சினிமாவில் நுழைந்தவர். அவரிடமிருந்த ஓவியப் பின்னணி, அவர் இயக்கிய முழுமையான வர்த்தகப் படங்களின் காட்சி உருவாக்கத்தில் அழகியலுடன் வெளிப்பட்டிருக்கிறது. சசியின் ‘பிரேம்கள்’ மலையாளத் திரைமொழியில் நவீனக் காட்சிமொழியாக ரசிக்கவும் விமர்சிக்கவும்பட்டன. இதனால் மலையாளத்தைக் கடந்து நின்ற கலைஞராக அவர் மாறினார். தமிழ், இந்தியிலும் பல வெற்றிகளைச் சுவைத்தார். தமிழில் பாரதிராஜா எடுத்த ‘டிக் டிக் டிக்’ படத்தின் கதையை அடிப்படையாக வைத்து கமல் ஹாசன் நடிக்க, இந்தியில் பெரிய வெற்றியைப் பெற்ற ‘கரிஷ்மா’ படத்தை இயக்கினார். அந்தப் படத்தின் தலைப்புக்கு ஏற்ப வசூல் சாதனை நிகழ்த்தியது அந்தப் படம்.
கமல் ஹாசன், சக நடிகரான சத்யராஜை வைத்துத் தயாரித்த முதல் படம் ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’. மம்மூட்டி நடிக்க, ஐ.வி.சசி மலையாளத்தில் இயக்கி வெற்றிபெற்ற ‘ஆவனழி’ படத்தின் கதையைத் தழுவியதுதான் இந்தப் படம். வில்லனாக நடித்துக் கொண்டிருந்த சத்யராஜை கதாநாயகனாக நிலைநிறுத்திய படம். தொட்டதெல்லாம் பொன்னாகும் என்பதைப்போல சசி இயக்கிய நட்சத்திரங்கள் மேலும் ஜொலிக்கத் தொடங்கியதை அவரது படைப்புத் திறமையைத் தாண்டிய திரையுலக அதிர்ஷ்டம் எனலாம். அப்படிப்பட்டவர் ரஜினியை கதாநாயகனாக வைத்து ‘காளி’, ‘எல்லாம் உன் கைராசி’ என இரண்டு படங்களை இயக்கியவர்.
மலையாளத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாக்களை இயக்கினாலும் கடைசிவரை சென்னைவாசியாகவே இருந்தவர் ஐ வி சசி. 80கள் காலகட்டத்தில் மலையாளப் படங்களின் பெரும்பாலான படப்பிடிப்புகளும் மற்ற பணிகளும் சென்னையையே மையமாகக் கொண்டு இயங்கியதும் சசி சென்னையிலேயே தங்கிவிட ஒரு காரணம்.
பெரிய நட்சத்திரங்களை உருவாக்குபவர், பெரிய நட்சத்திரங்களைச் சுற்றிக் கதைகளை வலுவாகச் சொல்லத் தெரிந்தவராக ஐ வி சசி இருந்தார். மம்மூட்டி, மோகன்லாலுடன் தனித் தனியாக 30 திரைப்படங்களில் பணியாற்றியிருக்கிறார். மம்மூட்டியின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்குப் பின்னணியாக இருந்த இயக்குநர் இவர்தான். புது யுகக் கேரளத்துக்குத் தேவைப்படும் அறம் வழுவாத ஆண் எப்படியிருக்க வேண்டும் என்பதை மம்மூட்டிக்காக உருவாக்கிய முன்மாதிரிக் கதாபாத்திரங்கள் வழியாக எடுத்துக்காட்டினார். நல்ல பண்பு, பாந்தமான நாயகத்தன்மை, அமைதியான தோற்றம், பண்பாடான நடத்தை என இதுவே ஆண் மையத்தின் ஆளுமை என அந்தக் கதாபாத்திரங்கள் காட்டின. எதிர்மறைக் கதாபாத்திரங்களில் அதுவரை நடித்துக் கொண்டிருந்த மோகன்லாலை உச்ச நட்சத்திரமாக உயர்த்திய ‘தேவாசுரம்’ படத்தை உருவாக்கிய பெருமையும் இவருக்கு உண்டு. ஒட்டுமொத்தமாக சசி சூப்பர் ஸ்டார்களின் இயக்குநராக விளங்கிய காலம் அது.
மலையாளத்தின் சிறந்த திரைக்கதையாளர்கள், எழுத்தாளர்களான பத்மராஜன், ரஞ்சித், எம்.டி.வாசுதேவன் நாயர் ஆகியோரின் கதைகள், திரைக்கதைகளை அருமையான சினிமாக்களாக மாற்றிக் காட்டினார். பாலசந்தருக்கும் பாரதிராஜாவுக்கும் பிறகு ரஜினி- கமலை இணைத்துப் படமெடுக்கும் சூழல் இங்கே அமையவில்லை. ஒரு நட்சத்திரப் பட்டாளத்தையே இறக்கி வலுவாகக் கதைகளையும் சொல்லத் தெரிந்த சசி, மலையாளத்தில் மோகன்லால்-மம்மூட்டி ஆகிய இருவரையும் இணைத்தே ஒரு டஜன் படங்களை இயக்கியிருக்கிறார். நட்சத்திரங்களை ஒரே கதைக்குள் இணைப்பதில் சசிக்கு இணை அவர்தான். கமல் ஹாசன், ரஜினிகாந்த், ஜெமினி கணேசன், அசோகன், ஜெயபாரதி, சீமா, ஸ்ரீப்ரியா போன்ற பல நட்சத்திரங்களை இணைத்து ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’ படத்தை அவர் தந்ததை இப்போது நினைவுகூரலாம்.
ஐ வி சசி இயக்கிய நிறைய படங்களில் கதாநாயகியாக நடித்து அவரையே திருமணமும் செய்துகொண்டவர் சீமா. இவர்கள் ‘மேட் பார் ஈச் அதர்’ என்பதற்கு உதாரணமாக விளங்கிய தம்பதி. அதுவும் ஐ வி சசியின் சிறந்த அடையாளங்களில் அவரது தனிப்பட்ட வாழ்க்கையும் இணைந்துகொண்டுவிட்டது. காட்சிப்படுத்தலிலும், தொழில்நுட்பத்திலும் மலையாள சினிமாவை இன்னொரு உயரத்துக்கு இட்டுச்சென்ற ஐ.வி.சசி ஓய்வறியாக் கலைஞனாக வலம்வந்தவர். பல நட்சத்திரங்களை உருவாக் கிய ஒரு செல்லூல்லாய்ட் தொழிற்சாலையாக அவரது சிறந்த படங்கள் பல தலைமுறைகளுக்கு அவரை நினைவூட்டிக்கொண்டிருக்கும்.