இயக்குநர் ஹரி வெளிநாட்டுச் சண்டை இயக்குநர்களைப் பெரும்பாலும் நம்புவதில்லை. ‘ஹாலிவுட்டைவிடச் சிறந்த சண்டை இயக்குநர்கள் நம்மிடம் இருக்கிறார்கள். அதை ‘சாமி 2’ படத்தில் நாம் நிரூபிக்க வேண்டும்’ என்று கனல் கண்ணனிடம் கூறியிருக்கிறார். நெகிழ்ந்துபோன அவர், ‘சாமி 2’ படத்தில் இடம்பெற இருக்கும் 6 சண்டைக் காட்சிகளுக்கு இதுவரை 20 விதமான சண்டைக் காட்சிகளை அனிமேஷன் முறையில் வடிவமைத்துக் காட்டி அசத்தியிருக்கிறாராம். விக்ரம் தற்போது ‘துருவ நட்சத்திரம்’, ‘ஸ்கெட்ச்’ ஆகிய படங்களில் நடித்து முடித்துவிட்டு முழு மூச்சாக ‘சாமி 2’-ல் கவனம் செலுத்தி வருகிறார். விக்ரமுடன் த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் நாயகிகளாக நடிக்க, பாபி சிம்ஹா வில்லனாகவும் சூரி, விக்ரமின் நண்பனாகவும் நடித்து வருகிறார்கள்.
ஜீவன் நடித்த ‘அதிபர்’ படத்தைத் தயாரித்த டி.சிவகுமார் அடுத்துத் தயாரிக்கும் படம் ‘பக்கா’. விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்க, பிந்து மாதவி, நிக்கி கல்ராணி என இரண்டு கதாநாயகிகள். “கிராமங்களில் இருந்த வாழ்க்கை மெல்ல மாறி நகரமயமாகி வருவதைக் கிண்டல் செய்யும் கொண்டாட்டமான நகைச்சுவைப் படம் இது. நாயகன் விக்ரம் பிரபு, கிரிக்கெட் வீரர் தோனியின் தீவிர ரசிகராக நடிக்கிறார். ரசிகர் மன்றங்களையும் கிண்டலடிக்கும் இந்தப் படத்தில், விக்ரம் பிரபுவுக்கு நேர் எதிராக ரஜினி ரசிகர் மன்றம் நடத்தும் கிராமத்து இளம்பெண் கதாபாத்திரத்தில் நிக்கி கல்ராணி நடிக்கிறார். இவர்களுக்கு இடையில் வரும் கிராமத் தலைவரின் மகள் பிந்து மாதவி ஆகிய மூன்று பேருக்கு நடுவில் நடக்கும் சம்பவங்களும் திருப்பங்களும்தான் படம்” என்கிறார் படத்தை எழுதி, இயக்கும் எஸ்.எஸ்.சூர்யா.
ஆசியாவின் முதல் பெண் ஒளிப்பதிவாளர் என்று குறிப்பிடப்படும் பி.ஆர்.விஜயலட்சுமி மறைந்த அசோக்குமாருடைய மாணவி. இருபதுக்கும் அதிகமான படங்கள், தொலைக்காட்சித் தொடர்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியிருக்கும் இவர் ‘பாட்டுப் பாடவா’ படத்தின் மூலம் இயக்குநரானார். ஒரு இடைவெளிக்குப் பின் தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளில் இயக்கியிருக்கும் படம் ‘அபியும் அனுவும்’ . பியா பாஜ்பாய், டோவினோ தாமஸ் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கான கதையை லத்தீன் அமெரிக்காவில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எழுதியிருக்கிறார் விஜயலட்சுமி. கைபேசியும் சமூக ஊடகங்களும் இருந்தாலும் வெவ்வேறு ஊர்களில் வசிக்கும் காதலர்கள் சந்திக்கும் சவால்கள்தான் இந்தப் படத்தின் கதை. பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் நிர்வாகத் தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கும் படம் இது.
பிரபல நடிகர்களின் குடும்பங்களிலிருந்து அறிமுகமாகும் வாரிசுகள், முதல் படத்தின் கதை, தலைப்பு ஆகியவற்றைப் பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுப்பார்கள். பிரபல நடிகர் சாய்குமாரின் மகன் ஆதித்யா அப்படியே தலைகீழாக இருக்கிறார். இவர் அறிமுகமாக இருக்கும் படத்தின் தலைப்பு ‘காட்டேரி’. இது என்ன பேய்ப் படமா என்றால் “ ஃபர்ஸ்ட் லுக் வெளியிடும்வரை பொறுத்துக்கொள்ளுங்கள்” என்கிறார் இந்தப் படத்தின் இயக்குநர் டீகே.
இவர் ஏற்கெனவே ‘யாமிருக்க பயமே’, ‘கவலை வேண்டாம்’ ஆகிய பேய்ப் படங்களை இயக்கியவர். ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ படத்தில் பேய் நாயகியாக நடித்த ‘பிக் பாஸ்’ புகழ் ஓவியாதான் இந்தப் படத்தின் கதாநாயகி. படத்தைத் தயாரிப்பவர் ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா.