ப
ணத்தின் மீதான பேராசை ஒரு நல்ல நட்பை, அன்பை, உறவை எப்படி சீர்குலைக்கிறது என்பதுதான் இந்த ‘குரங்கு பொம்மை’.
தஞ்சையை சேர்ந்த சிலை கடத்தல்காரர் தேனப்பனிடம் பல ஆண்டுகால சிநேகிதன் என்ற அடிப்படையில் பாரதிராஜா வேலை செய்கிறார். அவரது மகனான விதார்த், சென்னைக்குச் சென்று கால் டாக்ஸி ஓட்டுநராகப் பணிபுரிகிறார். தேனப்பனுடன் தன் தந்தை இருப்பதை விதார்த் விரும்பவில்லை. ஒரு கட்டத்தில் அவர்களது நட்பால் விதார்த்துக்கு பெண் பார்க்கப் போகும்போதும் பிரச்சினை உருவாகிறது. இந்நிலையில், நண்பன் கொடுத்த ‘குரங்கு பொம்மை’ படம் போட்ட டிராவல் பேக்குடன் மகனுக்குத் தெரியாமல் சென்னைக்கு வருகிறார் பாரதிராஜா. அந்தப் பையில் ரூ.5 கோடி மதிப்பிலான கடத்தல் சிலை இருக்கிறது. அதை பாரதிராஜா உரிய இடத்தில் ஒப்படைக்கும்போது நடக்கும் சம்பவங்கள் என்ன? அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன? என்பது மீதிக்கதை.
எதார்த்தமான கதாபாத்திரங்கள், இயல்பான நடிப்பு, நன்கு படமாக்கப்பட்ட பின்னணி இடங்கள் என்று ஆரம்பம் முதலே படம் சுவாரசியமாக நகர்கிறது. பொதுவாக இதுமாதிரி க்ரைம், த்ரில்லர் படங்களைக் கையாளும்போது படத்தின் விறுவிறுப்புக்காக கதை சிதைவதும், கதைக்காக வேகம் குறைவதும் நடக்கும். அப்படி தொய்வு ஏற்படாதவாறு நேர்த்தியாக திரைக்கதை அமைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன். குறும்படங்களால் கவனம் ஈர்த்த பிறகு கோலிவுட்டில் தடம் பதித்துள்ளார். ‘புதிர்’ என்ற அவரது முதல் குறும்படத்தின் தாக்கத்தில் உருவாகியுள்ளது ‘குரங்கு பொம்மை’. படத்தில் மடோன் அஸ்வினின் வசனங்களும் கவனம் ஈர்க்கின்றன.
பல இடங்களில் படத்தை பாரதிராஜா தாங்கிப் பிடிக்கிறார். குறிப்பாக, ‘என் பையனைப் போய் பார்த்துட்டு வந்துடறேன்’ என்று கலங்குகிற இடத்தில் நெகிழ வைத்துவிடுகிறார். பாரதிராஜாவுக்கு இணையான நடிப்பை தயாரிப்பாளர் தேனப்பனும் வெளிப்படுத்தியிருக்கிறார். இளங்கோ குமாரவேல் கதாபாத்திரமும் பிரதான இடம் வகிக்கிறது. விதார்த், அறிமுக நாயகி டெல்னா டேவிஸ், கல்கி போன்றவர்களும் தங்கள் கதாபாத்திரத்தை சிறப்பாகத் திரையில் கொண்டு வந்திருக்கின்றனர். பாலா சிங், கிருஷ்ணமூர்த்தியின் நடிப்பும், அவர்களது கதாபாத்திரங்களும் மனதை நிறைக்கின்றன.
பெரியவர் தவறவிட்ட பணப்பையை ஒப்படைப்பதற்காக விதார்த் செல்லும் காவல் நிலையம், கஞ்சா கருப்பு வீட்டில் மாட்டப்பட்ட கடிகாரம், குமாரவேல் வீட்டில் மீன் தொட்டியில் அமர்ந்து அவரது மகன் விளையாடுவது உள்ளிட்ட பல இடங்களில் சூழலும், பின்னணியும் கவனமாக காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.
பாரதிராஜா - விதார்த் வரும் காட்சிகள் அளவுக்கு, விதார்த் - டெல்னா காதல் காட்சிகள் ஈர்க்கவில்லை. என்.எஸ்.உதயகுமாரின் ஒளிப்பதிவு, அபிநவ் சுந்தர் நாயக்கின் எடிட்டிங், அஜனீஷ் லோக்நாத் இசை ஆகியவை கச்சிதம்.
சண்டையில் தொடங்கும் விதார்த் - டெல்னா அறிமுகம், பின்னாளில் காதல், பாசம் என்று மலர்வதை சரியாக நிறைவு செய்யவில்லை. செல்போன் வைத்த இடத்தைக்கூட மறந்துவிடுகிற பாரதிராஜாவிடம் ரூ.5 கோடி சிலையைக் கொடுத்து அனுப்புவது, அவரைத் தேடி தேனப்பன் சென்னைக்கு வரும்போது நடக்கும் துப்பாக்கி சூடு ஆகியவை காட்சிகளோடு ஒன்றாமல் கடந்து செல்கிறது. சடலத்துடன் கூடிய ‘குரங்கு பொம்மை’ டிராவல் பேக் பேருந்து நிலையம், மருத்துவமனை, குப்பைத் தொட்டி என்று இடம் பெயர்கிறது. ஒரு இடத்தில் கூடவா துர்நாற்றம் வீசாது? விதார்த்திடம் இருக்கும் பாரதிராஜாவின் போன், குமார வேலிடம் சென்றது எப்படி என்ற லாஜிக்கும் மிஸ்ஸாகிறது. இப்படி சில குறைகள் இருந்தாலும், இயல்பாக நகரும் ‘குரங்கு பொம்மை’யின் வித்தை ரசிக்கும்படியாகவே உள்ளது.